Published : 06 Dec 2013 12:00 AM
Last Updated : 06 Dec 2013 12:00 AM

அம்பேத்கரின் சமூக ஜனநாயகம்

இங்கு அம்பேத்கர்பற்றி யார் பேசினாலும் அவரை ஒடுக்கப்பட்டோரின் பிம்பமாகக் கருதிப் பேசுவதிலிருந்து விலக முடிவதில்லை. அம்பேத்கரை சாதிய அடையாளத்தோடு மட்டும் நிறுத்திவிடும் இந்த நிலை கருதி, அவருடைய பிற கருத்துக்களை மட்டும் பேச விரும்பும் அம்பேத்கர் ஆர்வலர்களும் உண்டு. ஆனால், சாதி பற்றிய அவருடைய முழுமையான பார்வை நமக்கு அறிமுகமாகவில்லை என்பதே உண்மை. தமிழ்நாட்டில் பிராமணர் அல்லாத அரசியல் சட்டகத்துக்குட்பட்டே எல்லோரும் அவரைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், அம்பேத்கரின் பார்வை இந்தச் சட்டகத்தையும் தாண்டியது. சாதிப் பெரும்பான்மைவாதமும் தலித் அல்லாத சாதிகளின் கூட்டியக்கமும் எழுச்சி பெற்றுள்ள இவ்வேளையில், அவருடைய பார்வையில் இச்சூழலைப் புரிந்துகொள்வது அவசியம்.

நவீன அணுகுமுறை

ஒடுக்கப்பட்ட சமூகத்தைப் பற்றி மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சாதியமைப்பைப் பற்றியும் அவர் ஆராய்ந்திருக்கிறார். இது தொடர்பாக அவர் எழுதியிருப்பவை இந்திய சமூகத்தின் பிரதான பிரச்சினையான சாதியை நவீன ஆய்வு அணுகுமுறையோடு ஆராய்ந்துபார்க்கும் வகையில் இருக்கின்றன. சாதிபற்றி நாம் தொடர்ந்து பேசியும் விவாதித்தும் வந்திருந்தாலும்கூட, அதுபற்றி விளக்கம் தர முயன்றது கிடையாது. அதன் வேரையும் வளர்ச்சியையும் அறியாமல் நிகழ்காலத்தை வைத்து மட்டுமே அணுகிவருகிறோம். இந்தப் போக்கு, சாதியமைப்பு பற்றிய எளிமைப்படுத்தப்பட்ட எதிர்ப்புணர்வுக்கும், குறுகிய கண்ணோட்டத்துக்கும் மட்டும் வழியமைத்திருக்கிறது.

இந்தியாவில் சாதிகள்

அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோது அங்கு நடந்த மானுடவியல் கருத்தரங்கில் ‘இந்தியாவில் சாதிகள் அவற்றின் அமைப்பியக்கம், தோற்றம் மற்றும் வளர்ச்சி’ என்னும் ஆய்வுக் கட்டுரையை (1916) வாசித்தார். இந்திய சாதியமைப்பு பற்றிய குறிப்பிடத்தக்க ஆய்வாக அது இன்றுவரையிலும் விளங்குகிறது. சாதியமைப்பு பற்றிய அம்பேத்கரின் பிற்காலக் கருத்துகளுக்கான தொடக்க கால முடிவுகளைக் கொண்டிருந்த அந்நூல், அவரது முக்கியமான படைப்புகளுள் ஒன்று. உடனடி அரசியல் திட்டங்களால் கட்டுப்படுத்தப்படாமல் ஒரு ஆய்வு மாணவராக இருந்து, சாதியமைப்பு பற்றிய பல்வேறு பார்வைகளை அவர் அதில் விவாதித்திருப்பார். இத்தகைய அரசியல் கட்டுப்பாடின்மையே அந்த நூலின் பலம். சாதியமைப்பின் தோற்றம் அதன் பரவல் வளர்ச்சிபற்றி மட்டுமே அதில் ஆராய்ந்தார். சாதி எதிர்ப்பு அரசியலில் நீண்ட வரலாற்றைக் கொண்ட தமிழகத்தில் சாதியின் அமைப்பியக்கம்பற்றி எழுதப்பட்ட அதுபோன்ற ஆய்வு நூல் ஒன்றுகூட இல்லை.

அகமண முறை: சாதியின் வேர்

இந்தியாவில் சாதிகள் என்ற இந்த ஆய்வில்தான், ஒரே சாதிக்குள் நடைபெறும் அகமண முறையே சாதியின் தோற்றத்துக்குக் காரணம் என்று அவர் அறிவித்தார். மேலும், சாதியின் பரவலாக்கம்பற்றிப் பேசும்போது, ஒரு சாதி தனக்குள்ளே ‘கதவடைப்பு செய்துகொள்ளுதல்’, ‘ஆதிக்க சாதியின் பழக்கவழக்கங்களை மற்ற சாதிகள் பின்பற்றுதல்’ போன்ற அம்சங்களை அவர் முன்வைத்தார். அம்பேத்கர் பின்னாளில் எழுதிய ‘சூத்திரர்கள் யார்?’ (1947), ‘தீண்டப்படாதோர் யார்?’ (1948) ஆகிய இரண்டு நூல்களும் சாதிபற்றிய அவருடைய தொடர்ச்சியான ஆராய்ச்சிகளாகும். அகமண முறை பற்றிய விளக்கம் மட்டுமல்லாது, இந்திய சாதியமைப்பானது படிநிலைகொண்ட சமத்துவமற்ற அமைப்பு என்ற அவருடைய கருத்தும் மிக முக்கியமான ஒன்று. சாதி முறைபற்றிய இத்தகைய ஆய்வுமுறையே சாதி ஒழிப்பு எனும் சிந்தனைப் பங்களிப்புக்கு அவரைக் கூட்டிச்சென்றது.

சமூக, அரசியல் பிரச்சினை

ஆனால், சாதிபற்றிய அம்பேத்கருடைய பார்வையைச் சரியாகப் புரிந்துகொள்ளாத, தெளிவற்ற சித்திரிப்புதான் நம்மிடையே இருக்கிறது. இன்றைக்கும் ஒட்டுமொத்தச் சமூக மேம்பாடுபற்றிப் பேசும்போது, அதில் சாதிக்கான தாக்கம்பற்றி யாரும் பேசுவதில்லை. சாதிபற்றிப் பேச நேரும்போது மட்டும் அதை ஒரு பிரச்சினையாகப் பேச முற்படுகிறோம். இந்தியாவில் சாதிகள் என்ற ஆய்வில் சாதி என்பதைத் தனித்த அம்சமாகப் பார்க்க மறுக்கும் அம்பேத்கர், சாதி என்பது சாதிய முறையின் அங்கம் என்கிறார். சாதியை ஒட்டுமொத்த சமூகப் பிரச்சனையாக பார்த்தார்.

பிற்காலத்தில் காந்தியோடு விவாதிக்கும்போது அது சமூகப் பிரச்சினை மட்டுமல்ல. அரசியல் பிரச்சினையும் கூட என்றார். அதாவது, அரசியல் அதிகாரம் தொடர்புடையது என்பதே அது. அதனால்தான், நவீன இந்தியா பற்றிய பேச்சு எழும்போது சாதியை முக்கிய பேசுபொருளாக அம்பேத்கர் அணுகினார். அந்த வகையில், பிற இந்தியத் தலைவர்களின் சிந்தனைகளிலிருந்து மாறுபட்ட விதத்தில் சாதியமைப்பை அவர் புரிந்து வைத்திருந்தார்.

சாதி உயிர்பெறும் காரணங்கள்

இன அடிப்படையில் இந்திய வரலாற்றை அணுகுவதை ‘இந்தியாவில் சாதிகள்’நூலில் அவர் மறுத்தார். சாதியைப் பிராமணர்களோடு இணைத்து விளக்கினாலும் அதில் அவர்களுக்கு மட்டுமே பங்கில்லை என்பதையும் சாதியின் பெயரால் பலன் அடையும் பல்வேறு சாதிகளுக்கும் அதில் பங்கிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். அதனால்தான், பிராமணர், பிராமணர் அல்லாதார் என்கிற எதிர் நிலையைக் கைக்கொள்ளாமல் ‘தீண்டப்படுகிற’, ‘தீண்டப்படாத’ என்கிற எதிர் நிலையை அவர் கைக்கொண்டிருந்தார்.

பிராமணியம் என்று அவர் கூறுவது பிராமணர்கள் ஒரு சாதியாக இருந்து பெறும் நலன், செலுத்தும் அதிகாரம் ஆகியவற்றை மட்டுமே அல்ல. சமத்துவத்துக்கு எதிரான எந்தக் கூறுகளையும் அப்பெயராலேயே தான் குறிப்பிடுவதாகக் கூறினார். அந்த வகையில் பிராமணியப் பண்பு தலித் மக்கள் யாரிடமேனும் இருந்தாலும், அவற்றையும் ஆதிக்க குணமாகவே கருத வேண்டும் என்கிறார். ஏனெனில், சாதி எந்த வகைகளிளெல்லாம் உயிர்பெறும் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். அதனால்தான், தற்கால நவசாதியவாதத்தின் முக்கிய அங்கமான ‘சாதிப் பெரும்பான்மைவாதம்’பற்றி இந்தியத் தலைவர்களிலேயே அம்பேத்கர் மட்டுமே பேசியிருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்திய ஜனநாயகத்தின் பெரும் அச்சுறுத்தலாக ‘எண்ணிக்கை பெரும்பான்மைவாதம்’ அமையும் என்கிற சிந்தனை அவரிடம் கடைசிக் காலத்தில் அழுத்தம் பெற்றிருந்தது.

சாதி ஒழிப்பின் ஜனநாயக வடிவம்

சாதியமைப்பை விரிவாக ஆராய்ந்த காரணத்தால்தான், சாதி ஒழிப்பு என்கிற கருத்தியல் எந்த ஒற்றைச் சாதிக்கும் எதிரான வெறுப்பாகச் சுருங்கிவிடாமல், அதனை ஒரு பரந்துவிரிந்த தளத்தில் ஜனநாயக வடிவமாக மறுஆக்கம் செய்வதில் அவர் ஆர்வம் காட்டினார். சாதியமைப்பு ஒரு சாதி சார்ந்ததாக இல்லையென்பதைப் போலவே அது ஒழிக்கப்படுவதும்கூட ஒற்றைச் சாதிக்கான பொறுப்பாக இருக்க முடியாது என்றும் கருதினார். தீண்டாமையைப் பிரயோகிக்கும் ‘தீண்டப்படும்’ எல்லா சாதிகளுக்கும் சாதி ஒழிப்பில் பொறுப்பு இருக்கிறது என்பதே அவர் கருத்து. இந்த வகையில் அனைவரும் இணைந்து வாழும் சமூக ஜனநாயகத்தை அவர் வலியுறுத்தினார்.

அவருடைய கருத்துகளின் மையம் ஜனநாயகம் என்ற கருத்தாக்கம்தான். பௌத்தத்தைக்கூட அதன் ஜனநாயகப் பண்பு சார்ந்தே விளங்கிக்கொண்டார். ஜனநாயகம் என்பது ஒரு சமூக அமைப்பு. அது ஒரு வாழ்க்கைத் தத்துவம் என்றார். இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையும் இதுதான். அதனால்தான் அவர் ஜனநாயக அரசின் வடிவத்தைவிட, அதன் பண்புக்கு அதிக முக்கியத்துவம் தந்தார். மக்களின் சமூக, பொருளாதார வாழ்வில் புரட்சிகரமான மாற்றங்களை ரத்தம் சிந்தாமல் ஏற்படுத்தும் அரசு வடிவம்தான் ஜனநாயகம் என்று வரையறுத்தார். இவ்வாறு சாதிமுறைபற்றிய விரிந்த ஆய்வு, சாதி ஒழிப்பு என்கிற கருத்தியல் ஆகியவற்றின் வழியாக சமூக ஜனநாயகம் என்கிற நோக்கத்தினை முன்வைத்தார்.

நாகரிகமற்ற பழங்காலத்தின் எச்சம்

பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்ட சாதியமைப்புக்கு மாற்றாக அனைவரும் சேர்ந்து வாழும் ஜனநாயக அமைப்பை அவர் வலியுறுத்தினார். சாதியமைப்பு நாகரிகமற்றிருந்த பழமையான சமூகத்தின் அடையாளம் என்றும் இந்தியா நவீன சமூகமாக மாற வேண்டுமானால் ஜனநாயக வடிவத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் கருதினார். தொன்மைக் காலச் சமுதாயத்தையும் தற்காலச் சமுதாயத்தையும் ஒப்பிட்டுப் பேசும் இந்த அணுகுமுறைதான் அவருடைய எழுத்து முழுவதும் விரவி நிற்கிறது. இந்தியாவில் சாதிகள் என்ற அவருடைய தொடக்க கால ஆய்வில், இந்திய சமுதாயத்தைத் தவிர, வேறெந்த நாகரிக சமுதாயத்திலும் நாகரிகமற்றிருந்த பழங்காலத்துக்குரிய மிச்சசொச்சங்கள் நிலவிவருவதைப் பார்க்க முடியாது என்று எழுதும் அவருடைய பிற்கால ஆய்வுகளில் இதன் தாக்கம் தொடர்வதைப் பார்க்க முடிகிறது.

1945-ல் காந்தி பற்றி விமர்சித்து அவர் எழுதிய நூலின் சமர்ப்பண உரை, ‘தீண்டப்படாதார் யார்’ என்கிற நூல் போன்ற வற்றிலும் இந்தக் கருத்தைக் குறிப்பிடுவதைப் பார்க்கலாம். இதைப் புரிந்துகொள்ளாத வரையில் சாதியமைப்புக்கு மாற்றாக ஜனநாயக வடிவத்துக்கு அவர் தந்த முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியாது. இந்த வகையில், சாதி மற்றும் சாதி மறுப்புபற்றிய அம்பேத்கரின் சிந்தனை நம்முடைய அரசியல் துறையிலோ, அறிவுத் துறையிலோ கணக்கில் கொள்ளப்படவில்லை என்பதே சோகம்.

- ஸ்டாலின் ராஜாங்கம், சமூக விமர்சகர், தொடர்புக்கு: stalinrajangam@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x