Published : 28 Apr 2014 12:00 AM
Last Updated : 28 Apr 2014 12:00 AM

மக்கள் என்ன இளிச்சவாயர்களா?

தேர்தல் முடிந்ததும் அடி விழ ஆரம்பித்துவிட்டது. தமிழக மின் வாரியத்துக்கு ரூ.75 ஆயிரம் கோடி இழப்புச் செய்தியை வேறு எப்படிப் பார்ப்பது?

கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தொடங்கி மின்வெட்டுத் துயரத்தைத் தமிழக மக்கள் எதிர்கொள்கிறார்கள். மின்வெட்டுப் பிரச்சினைதான் தி.மு.க-வை ஆட்சியிலிருந்து விரட்டியது. ஆட்சிக்கு வந்தவுடன் மின்வெட்டுப் பிரச்சினைக்கு முடிவுகட்டப்படும் என்று ஊருக்கு ஊர், மேடைக்கு மேடை உறுதியளித்த அ.தி.மு.க. தலைமையால், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அதை நிறைவேற்ற முடியவில்லை. ஆனால், மின்கட்டணம் உயர்த்தப்பட்டது.

“ஐந்தாண்டுகளாக மின்கட்டணம் உயர்த்தப்படாததால், மின்வாரியத்துக்கு 45,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு, மின்வாரியம் திவாலாகும் நிலையில் இருக்கிறது. வங்கிகளின் கடனை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை” என்றெல்லாம் அப்போது காரணங்கள் சொல்லப்பட்டன. இந்தக் கட்டண உயர்வு மிக அதிகம் என்று மக்கள் கூக்குரலிட்டபோது, “இனி மின்கட்டண உயர்வு இருக்காது, மின்வெட்டும் நீங்கி மின்மிகை மாநிலமாகத் தமிழ்நாடு மாற்றப்படும்” என்று ஆட்சியாளர்கள் அப்போது உறுதியளித்ததாக நினைவு.

இன்றைய நிலை என்ன? மூன்றாண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் வட்டத்தின் அதே புள்ளியில் அரசும் மின்வாரியமும் சந்திக்கின்றன. பிரச்சினை ஒன்றுதான். மாற்றுப் பாதையை யோசிக்காத வரை தீர்வுகளையும் யோசிக்க முடியாது. தி.மு.க. அரசு எங்கே தவறிழைத்தது? கூவிக்கூவி பெருநிறுவனங்களை அழைத்தது. ஏராளமான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டது. தொழிற்சாலைகள் பெருகிய நிலையில், அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்தாமல், தேவைக்கேற்ப உற்பத்திக்குத் திட்டமிடாமல் மக்கள் தலையிலும் விவசாயிகள் - சிறு குறுந்தொழிலகங்கள் தலையிலும் கை வைத்தது. அ.தி.மு.க. அரசும் அதே தவறைத்தான் செய்கிறது. தேவைக்கேற்ப உற்பத்தி பெருக்கப்படாத நிலையில், தேவையை மேலும் பெருக்குகிறது; மின்நுகர்வில் கட்டுப்பாடும் இல்லை. ஆக, அதே பாதை, அதே பிரச்சினை.

தேசிய அளவிலேயே மின் உற்பத்தி பெரும் சவாலாக மாறிக்கொண்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடி, நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கீட்டிலும் நிலக்கரி உற்பத்தியிலும் நிலவும் குளறுபடிகள், நிலக்கரி மற்றும் நாப்தா போன்ற இடுபொருள்கள் விலை உயர்வு, வெளிநாடுகளிலிருந்து நிலக்கரி இறக்குமதிசெய்ய ஆகும் கூடுதல் செலவு, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு, நிலக்கரியை அனல் மின்நிலையங்களுக்குக் கொண்டுசெல்லும் போக்குவரத்துச் செலவு உயர்வு என்று ஏகப்பட்ட பிரச்சினைகளால் மின்மிகை மாநிலங்களே கலங்கி நிற்கின்றன.

இந்நிலையில், மின் பற்றாக்குறை மாநிலமான தமிழகம் இந்த விஷயத்தில் காட்ட வேண்டிய கவனமும் அக்கறையும் அதிகம். மக்கள் காரணங்களை அல்ல; தீர்வுகளை எதிர்பார்க்கிறார்கள் என்பதை அரசு உணர வேண்டும்!​

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x