Last Updated : 23 May, 2017 09:12 AM

 

Published : 23 May 2017 09:12 AM
Last Updated : 23 May 2017 09:12 AM

பொதுச் சுகாதார திட்டம் மக்களை சென்றடைய வேண்டாமா?

பொதுச் சுகாதாரக் காப்பீட்டுக்கு நிதிநிலை ஒதுக்கீடு செய்வதில் குறிப்பாக, உலகில் மிகப் பெரிய அளவில் பொது நிதி மூலம் செயல்படுத்தப்படும் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டமான ‘ராஷ்ட்ரிய ஸ்வஸ்த்யா பீமா யோஜனா’வுக்கு (ஆர்.எஸ்.பி.ஒய்.) ஒதுக்கீடு செய்யப்படுவதில் இருக்கும் போதாமை குறித்து நிறையப் பேசியாகிவிட்டது. 2017-18 நிதிநிலை ஒதுக்கீட்டில் கடந்த ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளைவிட சற்று அதிகமாக இதற்கு நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும், கடந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட தொகையில் ரூ.500 கோடி அளவில் குறைக்கப்பட்டிருக்கிறது.

இருப்பினும், கிட்டத்தட்ட மந்தகதியில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்துக்கு எவ்வளவு அதிகமாக நிதி ஒதுக்கினாலும் அது பெரிய பலன் தரப்போவதில்லை. இந்தத் திட்டத்தின்படி, வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கின்ற, ஐந்து பேர் கொண்ட குடும்பம், ஆண்டுக்கு ரூ.30 எனும் கட்டணத்தில், 700-க்கும் மேற்பட்ட சிகிச்சைகளை அரசு நிர்ணயித்த கட்டணத்தில் பெற்றுக்கொள்ள முடியும். எனினும், இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டு ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகும், வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்கும் பல குடும்பங்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. கிட்டத்தட்ட ஐந்தில் மூன்று விகிதத்தினர் இதில் இன்னமும் சேர்க்கப்படவில்லை. இதற்கு நலிந்த பிரிவினருக்கு எதிராக எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கும் பாகுபாடு, அதிக அளவிலான நபர்களைச் சேர்ப்பதில் காப்பீட்டு நிறுவனங்கள் காட்டும் சுணக்கம், இவ்விஷயத்தில் அரசு நிறுவனங்களின் மேற்பார்வை இல்லாதது என்பன உள்ளிட்ட பல காரணங்கள் உண்டு.

அநாவசிய அறுவைச் சிகிச்சைகள்

மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. ஆனால் இன்றுவரை, நியாயமாக அவர்களுக்குச் சேர வேண்டிய, கட்டுப்படியாகாத மருத்துவப் பராமரிப்புகள் அவர்களுக்குக் கிடைக்க இந்தத் திட்டம் வழிவகை செய்கிறதா என்று தெளிவாகத் தெரியவில்லை. பல தருணங்களில், காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக நோயாளிகளுக்குத் தேவையில்லாத அறுவைச் சிகிச்சைகளை மருத்துவர்களும் மருத்துவமனைகளும் மேற்கொள்கிறார்கள். விவரம் அறியாத ஏழைப் பெண்களுக்குக் கருப்பை நீக்க அறுவைச் சிகிச்சை செய்ததற்கு கோடிக்கணக்கில் ஈட்டுத் தொகையை மருத்துவமனைகள் கோரிவருவது ஓர் உதாரணம். தரச் சான்றோ, விதிமுறைகளோ இல்லாததால் இப்படித் தேவையில்லாத அறுவைச் சிகிச்சைகளை மருத்துவமனைகள் மேற்கொள்வதற்கு ஊக்கத் தொகைகள் வேறு வழங்கப்படுகின்றன. இந்தச் சூழலில், சுகாதாரத் துறையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான சான்றுகள் இல்லாததில் ஆச்சரியம் ஏதுமில்லை.

பொருளாதார அடிப்படையிலான பாதுகாப்பு ஏற்பட்டிருப்பதற்கான வலுவான சான்றுகளும் இல்லை. ‘ராஷ்ட்ரிய ஸ்வஸ்த்யா பீமா யோஜனா’ திட்டத்தையோ, பிற சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களையோ அறிந்திராத ஏழைக் குடும்பங்கள் பல, தங்கள் சக்திக்கு மீறிச் செலவு செய்ய வேண்டியிருப்பதாக ஓர் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. சொல்லப்போனால், ‘ராஷ்ட்ரிய ஸ்வஸ்த்யா பீமா யோஜனா’ திட்டத்தின் காரணமாக, நோயாளிகள் தங்கள் சக்திக்கு மீறிச் செலவுசெய்வது அதிகரிக்கிறது என்றே சொல்ல வேண்டும். சிகிச்சைக்குப் பணம் செலுத்தத் தேவையில்லாத திட்டம் என்றாலும், நேர்மையற்ற மருத்துவமனை ஊழியர்களால் பல நோயாளிகள் சுரண்டலுக்கு ஆளாகிறார்கள்.

சரி, என்னதான் தீர்வு? இன்றைய மோசமான சூழலை வெளிக்கொணர, பொதுச் சுகாதாரம் தொடர்பான விவாதங்களில் பொதுமக்களையும் பங்கேற்கச் செய்வது அவசியம். நிதிநிலை ஒதுக்கீடு, நிர்வாகத் திறன், தொழில்நுட்பத் திறன் ஆகியவற்றைக் குறிக்கும், முழுமையான உரையாடலாக அது அமைய வேண்டும்.

பல்வேறு சுகாதாரத் துறை நடைமுறைகள், கொள்கைகளைப் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த விவாதம் அமைய வேண்டும்.

அட்டைக்கு மதிப்பில்லை

கலபுர்கி, மைசூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் 2014 முதல் 2016 வரை நான் நடத்திய இனக் குழு அடிப்படையிலான ஆய்வில், நிதி ஒதுக்கீட்டிலும், காப்பீடு பலருக்குச் சென்று சேர்வதிலும் முழுமையான அணுகுமுறை முக்கியம் என்பது தெரியவந்தது. எனினும், அந்த ஆய்வு முடிவின் மூலம், எதிர்பார்த்த பலன்கள் கிடைத்துவிடவில்லை. இப்போது இருக்கும் சுகாதாரக் காப்பீட்டுக் கலாச்சாரம் எப்படிக் கட்டமைக்கப்பட்டது, அன்றாடம் எப்படிக் கையாளப்படுகிறது என்பதும் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை என்று தோன்றியது. இதில் கிடைக்கும் பணம், எத்தனை விதமான நோய்களுக்குக் காப்பீடு வழங்கப்படுகிறது என்பனவற்றின் அடிப்படையில் சுகாதாரக் காப்பீட்டின் மதிப்பைக் கணக்கிடலாம். எனினும், சுகாதாரக் காப்பீடு என்பது மருத்துவர்கள், உள்ளூர் அதிகாரிகள், நோயாளிகளின் அண்டை வீட்டுக்காரர்கள், சில சமயங்களில் அவர்களது உறவினர்களால்கூட பாதிப்புகளைச் சந்திக்கிறது.

ஆர்.எஸ்.பி.ஒய். திட்டத்தின்கீழ் வழங்கப்படும் பிளாஸ்டிக் அட்டையைப் பெற்றவர்களில் ஒருவரான சாவித்ரி, “இந்த அட்டையை எப்படிப் பயன்படுத்துவது என்றே சொல்லாமல் அதிகாரிகள் வழங்கினால், எங்களுக்கு இது வெறும் பிளாஸ்டிக் பொருள்தான். சில சமயங்களில், இது தொடர்பான தகவல்களும் சரியானதாக இல்லை. இதனால், இந்த அட்டைக்கு எந்த மதிப்பும் இல்லை என்றே தோன்றுகிறது” என்கிறார். மேலும், பல மருத்துவமனைகள் இந்த அட்டையின் மதிப்பை அங்கீகரிக்க மறுத்துவிடுகின்றன. “இந்த அட்டையுடன் மருத்துவமனைக்குச் சென்றோம். இதை அங்கு பயன்படுத்தவும் முடியவில்லை. மருத்துவர்கள் எங்களை நோயாளிகளாகவும் அங்கீகரிக்கவில்லை. அந்த அட்டையை வீட்டுப் பரணில் வீசியெறிந்துவிட்டோம்” என்கிறார், இந்த அட்டையைப் பெற்றவர்களில் ஒருவரான சிவகுமார். சுகாதாரப் பிரச்சினைகள், ஆர்.எஸ்.பி.ஒய். அட்டைகள் தொடர்பாகப் பொதுவெளியில் எந்த விவாதமும் நடத்தப்படவில்லை என்று பலர் வருத்தம் தெரிவிக்கிறார்கள். “இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்கப்படவில்லை என்றால், நாம் கவனம் செலுத்த வேண்டிய அளவுக்கு இத்திட்டத்துக்குப் பெரிய மதிப்பு இல்லை என்றே கருத முடியும்” என்கிறார் மற்றொரு நோயாளியான தேவா.

கெட்ட சகுனம்

பல குடும்பங்கள் இத்திட்டத்தின் பொருளாதார மதிப்பையும் சமூக மதிப்பையும் பிரித்துப் பார்க்கின்றன. சிலர், சுகாதாரத் திட்டம் என்பது கெட்ட சகுனம் என்றும், தங்களுக்கு நோய் வரும் என்பதை அறிவிக்கும் விஷயம் என்றும் நம்புகிறார்கள். “இந்த அட்டை ஒன்றும் நோய்க்குத் தீர்வல்ல. நோய்க்குக் காரணமே இதுதான். அதிகாரிகள் கதவைத் தட்டி இந்த அட்டையைக் கொடுக்கும்போது, நோயே நேரடியாக வந்து கதவைத் தட்டுவதுபோல் தோன்றுகிறது. இந்த அட்டையிலிருந்து எவ்வளவு தூரம் விலகியிருக்கிறோமோ, அவ்வளவு தூரம் சுகாதாரப் பிரச்சினைகளிலிருந்து விலகியிருப்போம்” என்கிறார், சுகாதாரக் காப்பீட்டுத் திட்ட அட்டையைப் பெற மறுக்கும் ராகேஷ் குமார்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஆர்.எஸ்.பி.ஒய். திட்டத்துக்குப் பெருமளவில் நிதி ஒதுக்கப்படுவது தொடர்பாகவும், செலுத்தப்படும் சந்தா தொகைக்குப் பொருத்தமான பலன்கள் கிடைக்கப்பெறுவதை விரிவுபடுத்துவது தொடர்பாகவும் விவாதங்கள் தேவை. அதேபோல், பொதுச் சுகாதாரத் திட்டத்தின்கீழ் பொதுமக்கள் உண்மையாகவே கொண்டுவரப்பட வேண்டும் என்பது மிக முக்கியமானது!

© ‘தி இந்து’ ஆங்கிலம்,

தமிழில்: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x