Last Updated : 09 Jun, 2017 09:55 AM

 

Published : 09 Jun 2017 09:55 AM
Last Updated : 09 Jun 2017 09:55 AM

சாதிப்பதற்கு வயது ஒரு தடையா?

இயற்பியல் படிக்கும் கனவுடன் சிகாகோ பல்கலைக்கழகத்துக்கு, முன்னாள் ராணுவ வீரர் ஜான் குடினஃப் 1946-ல் சென்றபோது அவருக்கு வயது 25. அப்போது, “இயற்பியல் துறையில் சாதிப்பதற்கான வயதையெல்லாம் தாண்டிவிட்டீர்கள்” என்று அவரிடம் ஒரு பேராசிரியர் அலட்சியமாகச் சொன்னார்.

சமீபத்தில் அந்தச் சம்பவத்தை என்னிடம் சொல்லிவிட்டு உரக்கச் சிரித்தார் முனைவர் குடினஃப். அந்தப் பேராசிரியரின் ‘அறிவுரையை’ப் புறக்கணித்த குடினஃபுக்கு இன்றைக்கு வயது 94. தனது அற்புதமான படைப்பாற்றலுடன் தொழில்நுட்பத் துறையில் பெரும் பரபரப்பை உருவாக்கியவர் அவர். புதிய வகை பேட்டரி ஒன்றுக்கான காப்புரிமை கோரி அவரும், டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அவரது குழுவினரும் விண்ணப்பித்திருக்கிறார்கள். சொன்னதுபோல் இது வேலை செய்தால் மிக மலிவான, எடை குறைந்த பாதுகாப்பான பேட்டரியாக அது இருக்கும். மின்சக்தியில் இயங்கும் கார்களில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தும். பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களில் இயங்கும் கார்களுக்கு முடிவுகட்டும் என்று உறுதியளித்திருக்கிறார்கள். 1980-ல் தனது 57-வது வயதில், மின்சாரத்தைச் சிறிய அளவில் அடக்கும் லித்தியம் அயன் பேட்டரியைக் கண்டுபிடித்தவர் அவர்.

வயது ஏற ஏற படைப்பாற்றல் குறையும் என்று நாம் கருதிக்கொள்கிறோம். ஆனால், வயதான பின்னர் சிலரின் படைப்பாற்றல் மேலும் அதிகரிக்கிறது என்பதை உணர்த்துகிறது டாக்டர் குடினஃபின் கதை. துரதிர்ஷ்டவசமாக, அதுபோன்ற அறிவுஜீவிகள் பெரிய அளவிலான புறக்கணிப்பை எதிர்கொள்ள நேர்வதுதான் துயரம்.

வயது ஒரு காரணியா?

2007-ல் ஸ்டான்ஃபோர்டில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், “இளைஞர்கள் சூட்டிகையானவர்கள்” என்றார். அப்போது அவருக்கு வயது 22. தன்னிடம் ஒரே ஒரு படுக்கைதான் இருக்கிறது என்று சொன்ன அவர், இளம் வயதுக்கும் படைப்பு சக்திக்கும் இடையில் பொருத்தமான உறவு இருப்பதாகக் கூறியதாகத் தொழில்நுட்ப இணையதளமான வெஞ்சர்பீட் செய்தியாளர் குறிப்பிடுகிறார். மார்க் ஸக்கர்பெர்கின் தர்க்கம் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. அதற்காக அவர் பின்னர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது வேறு விஷயம். ஆனால், அவரது வார்த்தைகளின் அர்த்தம் இதுதான்: நடுத்தர வயதுக்காரர்கள் சோம்பலூட்டும் பொருட்களைப் பயன்படுத்துபவர்கள். தேங்கிப்போன சிந்தனையைக் கொண்டவர்கள்.

மார்க்கின் அந்தப் பேச்சுக்குப் பின்னர், இளைஞர் சக்தியை வழிபடும் பழக்கம் அமெரிக்கத் தொழில்நுட்பத் துறையை ஒரு ஜுரம்போல் பற்றியிருக்கிறது. சமீபத்தில், ஷுப்னாம் பேனர்ஜி எனும் 12 வயதுக் கண்டுபிடிப்பாளர் தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்க இன்டெல் நிறுவனம் முதலீடு அளித்து உதவியிருக்கிறது. இந்தச் சூழலில், நடுத்தர வயதுக்காரர்கள் கற்பனை எல்லைகளைக் கடந்துவந்துவிட்டவர்கள் என்றும் புத்தாக்கக் கருத்துருவாக்கம் எல்லாம் இளம் வயதினருக்கே சொந்தம் என்றும் நடுத்தர வயதினரே நம்பும் நிலைமை உருவாகிவிட்டது.

ஆனால், நடுத்தர வயதுக்குப் பின்னர், புத்துணர்வுடன் செயலாற்றுவது ஒன்றும் வித்தியாசமான விஷயமல்ல என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. கண்டுபிடிப்பாளர்கள் தங்கள் 40-களில் செயல்பாடுகளில் உச்சத்தை அடைகிறார்கள் என்றும் தங்கள் கடைசிப் பாதி வயதுகளில் மிகுந்த படைப்பாற்றலுடன் இருக்க முனைகிறார்கள் என்றும் 2016-ல் வெளியான தகவல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

அதேபோல், காப்புரிமை பெற்றவர்கள் தொடர்பாக ஆய்வு நடத்திய ஜியார்ஜியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பானின் ஹிடோட்சுபாஷி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், அமெரிக்காவில் காப்புரிமைக்கு விண்ணப்பிக்கும் கண்டுபிடிப்பாளர்களின் சராசரி வயது 47 என்று கண்டறிந்திருக்கிறார்கள். குறிப்பாக, பெரும் மதிப்பு கொண்ட காப்புரிமை கேட்டு விண்ணப்பிப்பவர்களில் பெரும்பாலானோர் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் அந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

காத்திருக்கும் விருது

1980-கள் முதல், இயற்பியலுக்காக நோபல் விருது பெற்றவர்கள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், அவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய சராசரி வயது 50 என்று தெரியவந்திருக்கிறது. நோபல் பரிசு வெல்பவர்களின் படைப்பூக்கத்தின் உச்சம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்றும் அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. டாக்டர் குடினஃபுக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்று பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அது இது வரை நடக்கவில்லை. ஒருவேளை அவர் நோபல் பரிசை வென்றால், அவர்தான் அந்த விருதைப் பெறும் மிக வயதான நபராக இருப்பார்.

அவருடன் பேசப் பேச, அவரது வயதுக்கும் அறிவுத் திறமைக்கும் நேரடித் தொடர்பு இருக்குமோ என்றே எனக்குத் தோன்றியது. எரிசக்தி, மின்சாரப் பிரச்சினைகள் தொடர்பாக இத்தனை ஆண்டுகளாகப் பேசிவரும் ஒரே நபர் அவராகத்தான் இருப்பார்.

இளம் வயதில் பெட்ரோலிய யுகத்தின் தொடக்க நாட்களைப் பார்த்த அவர், கனடிகட் மாகாணத்தின் பண்ணை வீடு ஒன்றில் மண்ணெண்ணெய் அடுப்பில் சமைத்து வாழ்ந்தவர். கார் தயாரிப்பில் முன்னோடியான ஹென்றி ஃபோர்டு தயாரித்த ஆரம்பகால கார்களில் சிறுவனாக இருந்தபோது பயணித்திருக்கிறார். “என் குடும்பத்தினர் வைத்திருந்த முதல் கார் ‘மாடல்-ஏ’ வகை கார்” என்று என்னிடம் சொன்னார். ஈய-அமில பேட்டரி பொருத்தப்பட்ட கார் அது.

1970-களில் நிலவிய எரிசக்தித் தட்டுப்பாடு, சிறிய அளவிலான சாதனத்தில் மின்சாரத்தைச் சேமிப்பது எப்படி என்று அவரைச் சிந்திக்கத் தூண்டியது. இன்றைக்கு, அவர் கண்டுபிடித்த லித்தியம் - அயன் பேட்டரியைத்தான் நமது மடிக்கணினிகள், தொலைபேசிகள், மின்சார கார்களில் பயன்படுத்துகிறோம். ஆனால், தனது கண்டுபிடிப்பில் உள்ள குறைகள் பற்றி அவருக்கு நீண்டகாலமாக வருத்தம் உண்டு. அவற்றைச் சரிசெய்யும் முனைப்பில் உள்ளார்.

“புதைபடிம எரிபொருட்களையே சார்ந்திருக்கும் பழக்கத்திலிருந்து நாம் வெளிவருவது மிக முக்கியமான விஷயம். வசதிகள் நிறைந்ததாகவும் ‘உள் எரி பொறி’ சாதனத்தைப் போல் மலிவானதாகவும் ஒரு மின்சார காரை உருவாக்க முடிந்தால், சாலைகளில் கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தலாம்” என்கிறார். லித்தியம் - அயன் பேட்டரி வெடிக்காது என்று உறுதியாக நம்ப முடியாது என்று நம்பும் அவர், அது விலை உயர்ந்தது என்றும், சாலைகளில் கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தும் திறன் இல்லாதது என்றும் கருதுகிறார்.

முடிவிலாப் பயணம்

பல ஆண்டுகளுக்கு முன்னரே, பாதுகாப்பான ஒரு திட பேட்டரியை உருவாக்க அவர் முடிவுசெய்தார். இந்த வகை பேட்டரிகள்தான் இன்றைய உலகில் விலை மலிவானவையாகவும், குறைந்த எடை கொண்டவையாகவும் இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், மரியா ஹெலெனா பிராகா எனும் போர்த்துக்கீசிய இயற்பியலாளர் தனது சக விஞ்ஞானியுடன் இணைந்து உருவாக்கிய ஒருவகைக் கண்ணாடியைப் பற்றி குடினஃபுக்குத் தெரியவந்தது. பேட்டரிகளுக்குள் திரவ எலக்ட்ரோலைட்ஸுக்குப் பதிலாகப் பயன்படுத்தக்கூடிய கண்ணாடி அது.

உடனே, ஆஸ்டின் நகரில் உள்ள தனது ஆய்வகத்துக்கு வந்து பணிபுரியுமாறு அவரை வற்புறுத்தினார். “மரியா ஹெலெனா பிராகா உருவாக்கிய கண்ணாடி உலர்வாக இருப்பதை உறுதிசெய்ய சில பரிசோதனைகளைச் செய்தோம்” என்கிறார் குடினஃப்.

தனது முயற்சிகளில் குடினஃப் வெற்றிபெறுவாரா என்று சக விஞ்ஞானிகளே சந்தேகப்பட்டனர். ஆனால், அவர் நம்பிக்கை இழக்கவில்லை. “புதிய கருத்தாக்கங்கள் உருவாகாத வகையில், உங்கள் சிந்தனையை மூடிவைக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு நான் முதிர்ச்சி அடைந்தவன். புதிய விஷயங்கள் வேண்டும் என்றால், ஒவ்வொரு சாத்தியக்கூறையும் நீங்கள் பரிசோதித்தாக வேண்டும்” என்கிறார் அவர்.

முதிய வயதில் அவர் பெற்ற வெற்றி பற்றிக் கேட்டபோது அவர் சொன்னார்: “நம்மில் சிலர் ஆமைகள் போன்றவர்கள்; நாம் தொடர்ந்து போராடி முன்னேறுகிறோம். நமக்கு 30 வயதாகும் வரைகூட அது நமக்குப் புரியாது. ஆனால், ஆமைகள் தொடர்ந்து நடந்தாக வேண்டும்”. “வாழ்க்கை முழுவதும் தொடரும் இந்தப் பயணம் அனுகூலம் தரும்; குறிப்பாக, வெவ்வேறு விஷயங்களைக் கடந்துவரும்போது, அவற்றிலிருந்து புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் அளவு நெளிவுசுளிவுடன் இருந்தால்” என்கிறார். தனது பயணத்தை இயற்பியலில் தொடங்கிய அவர், வேதியியலிலும் பொருளறிவியலிலும் கவனம் செலுத்தினார். அத்துடன், பசுமைப் பொருளாதாரத்தை நோக்கிய சமூக, அரசியல் போக்குகளையும் கவனித்துவந்தார்.

தனது நோக்கத்தில் காட்டிய உறுதிக்கு, சுற்றுச்சூழல் சீர்கேட்டைக் குறைப்பத்திலும், பெட்ரோலியப் பயன்பாட்டிலிருந்து விடுபடுவதிலும் தான் கொண்டிருந்த நம்பிக்கை கைகொடுத்ததாகச் சொல்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, தனது முதுமைதான் அறிவுசார் சுதந்திரத்தன்மைக்கு முக்கியக் காரணம் என்றும் குறிப்பிடுகிறார் குடினஃப். 94 வயதில் வேலை நீடிக்குமா என்றெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டிருக்க வேண்டியதில்லை என்கிறார் புன்னகையுடன்!

- பாகன் கென்னடி,
‘இன்வென்டாலஜி: ஹவ் வி ட்ரீம் அப் திங்ஸ் தட் சேஞ்ச் தி வேர்ல்டு’ எனும் புத்தகத்தின் ஆசிரியர்.
©‘தி நியூயார்க் டைம்ஸ்’
தமிழில்: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x