Last Updated : 26 May, 2017 10:06 AM

 

Published : 26 May 2017 10:06 AM
Last Updated : 26 May 2017 10:06 AM

ரூஹானி முன்னே உள்ள சவால்கள்!

ஈரானில் மே 19 அன்று நடந்த தேர்தலில், கடும் போட்டிக்கு நடுவில் வெற்றிபெற்று இரண்டாம் முறையாக அதிபராகியிருக்கிறார் ஹஸன் ரூஹானி. இந்தத் தேர்தலில் 73% வாக்குகள் பதிவானது, முதல் சுற்றிலேயே அவரது வெற்றியை உறுதிசெய்ய உதவியது. அவருக்கு மொத்தம் 57% வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட, அடிப்படைவாத மதகுருவான இப்ராஹிம் ரெய்ஸிக்கு 38.5% வாக்குகளே கிடைத்தன.

2013 தேர்தலின்போது ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த வாக்குறுதியே அவரது பிரச்சாரத்தில் பிரதான இடம்பிடித்தது. அதில் அவருக்கு வெற்றியும் கிடைத்தது. 2015 ஜூலையில் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஜெர்மனி (பி5+1) ஆகிய நாடுகளுடன் ஏற்படுத்திக்கொண்ட அணுசக்தி தொடர்பான விரிவான கூட்டுச் செயல் திட்டத்தின் (ஜே.சி.பி.ஓ.ஏ.) மூலம் அதை அவர் நிறைவேற்றிக் காட்ட முடிந்தது. ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டது, ஈரான் பொருளாதாரத்தில் ஆக்கபூர்வமான மாற்றங்களை ஏற்படுத்தியது.

அதிகாரத்தின் அழுத்தம்

சிக்கலான நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்ட ஈரானில், அதிபரின் அதிகாரங்களும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 290 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றமும், நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரவர்க்கத்தால் கட்டுப்படுத்தப்படும் சூழலில், ரூஹானி மிகக் கவனமாகவே செயல்பட வேண்டியிருக்கும். ஈரானின் உச்ச அதிகார மையம், நிபுணர்களின் அவையால் தேர்ந்தெடுக்கப்படும் உயர் தலைவர் வசம் உள்ளது. அரசு வானொலி, தொலைக்காட்சி, ஆயுதப் படைகள், இஸ்லாமியப் புரட்சிக் காவல் படை, தேசிய பாதுகாப்பு உயர் கவுன்சில், 51 உறுப்பினர்கள் பேரவை, உயர் நீதித் துறையின் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பது உயர் தலைவர்தான். வலிமைவாய்ந்த காப்பாளர் பேரவையின் ஆறு உறுப்பினர்கள் அவரால்தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மீதம் உள்ள ஆறு உறுப்பினர்கள் நீதித் துறையால் நியமிக்கப்படுகிறார்கள்.

பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைப்பதும், வேலைவாய்ப்பின்மையை எதிர்கொள்ளும் வகையில் சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் ரூஹானிக்கு இருக்கும் பிரதான சவால்கள். தனிமனித உரிமைகள், அரசியல் உரிமைகளை விஸ்தரிப்பதாகவும், பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதாகவும், பெரிய அளவில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதாகவும் உறுதியளித்திருக்கிறார். இவற்றில் சில விஷயங்களுக்கு எதிர்ப்பு உருவாகலாம். அவரது வாக்கு விகிதம் அதிகம் என்பது சீர்திருத்த நடவடிக்கைகளுக்குக் கிடைத்திருக்கும் ஆதரவு என்பதால், உயர் தலைவர் நடுநிலையுடன் நடந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவுடனான உறவு

வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை, மிதவாதப் போக்கையும், வெளிநாட்டு உறவில் மேலும் முனைப்பையும் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரிவான கூட்டுச் செயல் திட்டம் விஷயத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் போக்கையும், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் விரோதப் போக்கையும் எதிர்கொள்ள வேண்டிய சவாலும் ரூஹானிக்கு இருக்கிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம்தான் மிக மோசமான ஒப்பந்தம்’ என்று பேசிய ட்ரம்ப், தான் வெற்றிபெற்றதும் விரைவில் அந்த ஒப்பந்தத்தை ரத்துசெய்துவிடுவதாகவும் அச்சுறுத்தியிருந்தார். எனினும், தனது நிலைப்பாட்டை ட்ரம்ப் மாற்றிக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இது இருதரப்பு ஒப்பந்தம் அல்ல; ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் இதில் பங்கேற்றிருக்கின்றன என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும். ஈரான் தனது பொறுப்புகளை நிறைவேற்றிவருவதாக ஏப்ரலில் ட்ரம்ப் அரசு கூறியிருந்தது. எனினும், ஈரானின் சமீபத்திய பதற்றமூட்டும் நடவடிக்கைகள் காரணமாக, அந்நாட்டுடனான கொள்கை தொடர்பாக 90 நாட்கள் மறுஆய்வு செய்யப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டெல்லர்சன் கூறியிருக்கிறார்.

மே 17-ல், ஈரான் மீதான பொருளாதாரத் தடை விலக்கத்தை நீட்டித்தது அமெரிக்கா. 120 நாட்களுக்கு ஒரு முறை இந்தத் தடை நீக்கத்தை நீட்டிப்பது என்று ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் முடிவுசெய்யப்பட்டது. மனித உரிமை மீறல் தொடர்பாக ஏப்ரலில் ஈரான் மீது மேலும் ஒரு பொருளாதாரத் தடையை விதித்தது. ஜூன் மாதத்தில் இன்னொரு பொருளாதாரத் தடை நீக்கம் வழங்கப்படுகிறது, இந்த முறை ‘ஈரான் சுதந்திரம் மற்றும் ஆயுதப் பரவல் தடைச் சட்ட’த்தின் கீழ் இது வழங்கப்படுகிறது. விரிவான கூட்டுச் செயல் திட்டம் தொடர்வதைப் பொறுத்து இந்தத் தடை விலக்கம் புதுப்பிக்கப்படும். குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் பெரும்பான்மையாக உள்ள அமெரிக்க நாடாளுமன்றம், விரிவான கூட்டுச் செயல் திட்டத்தை நிராகரித்தது. எனவே, நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஈரான் மீதான பொருளாதாரத் தடை விலக்கத்தை ஒபாமா கொண்டுவந்தார். இந்தத் தடை விலக்கம் குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பிக்கப்பட வேண்டும்.

அணு ஒப்பந்தத்தின் நிலை

விரிவான கூட்டுச் செயல் திட்டம் என்பது பத்தாண்டுகளுக்கும் மேல் நடந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில் எட்டப்பட்ட ஒப்பந்தம். இந்தக் காலகட்டத்தில் அணுசக்தி உற்பத்தியை ஈரான் பெருக்கியிருந்தது. 2015-ல், இன்னும் சில மாதங்களில் கிட்டத்தட்ட 25 கிலோ எடை கொண்ட அணு சாதனத்தைத் தயாரிக்கும் அளவுக்கு மிகவும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைப் பெற்றிருந்தது. இத்தனைக்கும் அணுசக்தித் திட்டங்கள் அமைதி நோக்கங்களுக்காகவென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டவை என்று ஈரான் தொடர்ந்து சாதித்துவந்தது.

எனினும் பலத்த சந்தேகங்கள் எழுந்த நிலையில், விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்கும் கடமை, விரிவான கூட்டுச் செயல் திட்டத்துடன் இணைக்கப்பட்டது. இதன் மூலம் அடுத்த 10-15 ஆண்டுகளுக்கு ராணுவத் தேவைக்கான அணுசக்தித் திறனை ஈரான் பெறுவதைத் தடுக்க வழிவகை செய்யப்பட்டது. இவ்விஷயத்தில் ஏமாற்று வேலைக்கு வாய்ப்பில்லை என்றாலும், இந்த 10-15 ஆண்டுகாலக் கண்காணிப்பு முடிந்த பின்னர், ஈரான் மீண்டும் தனது அணு ஆயுத நடவடிக்கைகளைத் தொடங்கலாம் என்று இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள் கூறுகிறார்கள்.

சமீபத்தில் ட்ரம்ப் சவுதி அரேபியா சென்ற நிலையில், அந்நாட்டுடன் அமெரிக்கா காட்டும் நெருக்கத்தைப் பார்க்கும்போது யேமனில் சவுதி அரேபியா நடத்திவரும் போரில் அமெரிக்காவும் தீவிரமாகப் பங்கெடுக்கும் என்று கருதப்படுகிறது. இது, ஈரானுடனான உறவில் சிக்கலை ஏற்படுத்தலாம். 2016-ல் பாரசீக வளைகுடாவில் அமெரிக்கக் கப்பல்களுக்கும் ஈரான் கப்பல்களுக்கும் இடையில் 19 மோதல் சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

2016 ஜனவரியில் ஈரான் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக, அமெரிக்காவின் இரண்டு கப்பல்களையும், கப்பல் ஊழியர்கள் 10 பேரையும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படை பிடித்துவைத்துக்கொண்டது மிக முக்கியமான சம்பவம். எனினும், அப்போதைய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரிக்கும், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவேத் ஷெரீஃபுக்கும் இடையில் உடனடியாக நடந்த தொலைபேசி உரையாடலுக்குப் பின்னர், சில மணி நேரங்களிலேயே இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்தது. இன்றைக்கு அப்படியான சூழல் இல்லை.

சவுதியுடனான உறவில் அமெரிக்கா அதிக நெருக்கம் காட்டுவது மேலும் பதற்றத்தை அதிகரிப்பதுடன், விரிவான கூட்டுச் செயல் திட்டத்தைத் தோல்வியடையவும் செய்யும். இது அணுசக்தி விஷயத்தில் ஈரான் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வழிவகுக்கும். பிராந்தியரீதியான பின்விளைவுகள் ஏற்படலாம். ஹஸன் ரூஹானியின் முன்னே இருக்கும் இந்தச் சவால்கள், ஒரு தொடக்கம்தான்!

© ‘தி இந்து’(ஆங்கிலம்), தமிழில்: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x