Last Updated : 09 Nov, 2014 10:42 AM

 

Published : 09 Nov 2014 10:42 AM
Last Updated : 09 Nov 2014 10:42 AM

எங்கள் நிலைக்கு இந்தியாவும் ஒரு காரணம்!

நிலச்சரிவால் நிலைகுலைந்திருக்கும் இலங்கையின் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் அமைச்சர் செந்தில் தொண்டமான் பேட்டி

இலங்கையின் ஊவா மாகாணத்தில் பதுளை அருகே கொஸ்லந்த, நீரியபத்த பகுதியில் கடந்த 29-ம் தேதி ஏற்பட்ட கடும் மண்சரிவு, மலையகத் தமிழர்களின் வாழ்க்கையைச் சீர்குலைத்துவிட்டிருக்கிறது. 10 நாட்கள் ஆகியும் இதுவரை மீட்புப் பணிகளை முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை. இந்தச் சூழலில், கள நிலவரங்களை ‘தி இந்து’வுடன் பகிர்ந்து கொள்கிறார் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணித் தலைவரும் அமைச்சருமான எம். செந்தில் தொண்டமான்.

மலையகத்தில் ஏற்பட்ட மண் சரிவு எப்படிப்பட்டது?

முழுக்க முழுக்க இந்திய வம்சாவளித் தமிழர்கள் வாழும் கிராமத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஒன்றரை கிலோ மீட்டர் நீளம், அரை கிலோ மீட்டர் அகலத்துக்கு ஏற்பட்ட இந்த கடும் நிலச்சரிவால், சில பகுதிகள் 100 அடி உயரத்துக்கும், சில இடங்களில் 50 அடி உயரத்துக்கும் மண் குவிந்து மேடாகக் கிடக்கின்றன. 76 குடும்பங்கள் இதற்குள் புதைந்துவிட்டன. வி.ஏ.ஓ. அலுவலகம், தேயிலைத் தோட்ட எஸ்டேட் அலுவலகம் போன்றவையும் புதைந்துவிட்டதால், அங்கு வசித்தவர்கள் குறித்த ஆவணங்களும் அழிந்துவிட்டன. இந்த ஊரில் 30 அடி உயரத்தில் முனீஸ்வரன் சாமிக்குச் சிலை எழுப்பப் பட்டிருந்தது. இன்று அந்த சாமி முற்றிலும் மண்ணுக்குள் புதைந்ததோடு மட்டுமல்லாமல், அதன்மேல் 20 அடி உயரத்துக்கு மண் குவிந்துகிடக்கிறது. பாதிப்பின் ஆழத்தை உணர இது ஒன்றே போதும்.

மண்ணுக்குள் புதைந்தவர்களில் எத்தனை பேர் உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறார்கள்?

மண் உள்வாங்கியதால் மீட்புப் பணிகளை மேற்கொள் வதில் சிரமம் ஏற்பட்டாலும் 200 பேரை உயிருடன் மீட்டுள் ளோம். இதுதவிர, ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை, 6 பெண்கள், 3 ஆண்கள் என 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 26 பேரின் உடல்களை மீட்க முடியவில்லை.

நிலச்சரிவு குறித்து மக்களுக்கு முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டதா?

நிலச்சரிவு ஏற்படுவதற்கு முதல் நாளே, வி.ஏ.ஓ. மூலம் இதுபற்றி அந்தப் பகுதி மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. கடற்கரையில் வாழ்பவர்களுக்கு அலையின் சீற்றம் சாதாரணம் என்பதுபோல, நிலச்சரிவு என்பது மலைப் பகுதியில் வழக்கமான ஒன்றுதான். எனவே, மக்கள் அந்த எச்சரிக்கையைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், இந்த நிலச்சரிவின்போது இந்த அளவுக்குப் பாதிப்பு இருக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. கடந்த 150 ஆண்டுகளில் இதுபோன்ற சரிவு ஏற்பட்டதில்லை. நிலச்சரிவைக் கண்டதும் மக்கள் வீடுகளைவிட்டு வேக மாக வெளியேறினார்கள். ஆண்களும் வேகமாக ஓடியவர் களும் தப்பிவிட்டார்கள். உடல்நலமில்லாதவர்கள், வய தானவர்கள், பெண்கள், குழந்தைகள் அதிக அளவில் மண்ணுக்குள் சிக்கிக்கொண்டார்கள்.

ராஜபட்ச அரசின் மீட்புப் பணிகள் திருப்தி அளிக்கின்றனவா?

நிலச்சரிவு ஏற்பட்டதும் மத்திய அமைச்சர் ஆறுமுக தொண்டமான், அதிபர் ராஜபட்சவிடம் பேசினார். அதைத் தொடர்ந்து வான்படை, ராணுவம், அதிரடிப்படை என்று 1,000-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு, பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மோப்ப நாய், செயற்கைக்கோள் படங்களின் உதவியுடன் வீடு இருந்த இடங்களை அடையாளம் கண்டு 50 அடி ஆழத்துக்கும் மேல் தோண்டி, மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. மண்ணைத் தோண்டுவதை வேகப்படுத்தினால், அவை மீண்டும் சரிந்து சுமார் 5,000 பேர் வசிக்கும் கொஸ்லந்தாவை மூடும் அபாயம் வேறு.

பாதிக்கப்பட்டவர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள்?

நிலச்சரிவில் சிக்கியவர்கள் மட்டுமன்றி, அந்தப் பகுதியில் வசித்த பிற குடும்பத்தினரையும் அங்கிருந்து வெளி யேற்றி சுமார் 5 கி.மீ. தொலைவிலுள்ள பாடசாலையில் தங்கவைத்திருக்கிறோம். உணவு, மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டுவருகின்றன. இதற்கிடையே, நிலச்சரிவினால் வீடுகளை இழந்த 76 குடும்பங்களுக்கு அரசு சார்பில் தலா 10 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய வீடுகள் கட்டித்தரப் படவுள்ளன.

மலையகத் தமிழர்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது?

தோட்டத் தொழிலுக்காக தமிழ்நாட்டின் சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டங்களிலிருந்து முன்பு அழைத்துவரப்பட்டவர்கள்தான் அவர்கள். போதுமான அடிப்படை வசதிகள், வெளியுலகத் தொடர்பு என்று எதுவும் கிடையாது. இந்தக் குடும்பங்களிலிருந்து படித்து, பெரிய ஆளாக வருவது மிகப் பெரிய சவால். எங்களின் முயற்சியால் தற்போது 25,000 குடும்பங்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. இன்னும் 2 லட்சத்துக்கும் மேலான குடும்பங்கள், பத்துக்குப் பத்து என்ற அளவில் குதிரைக் கொட்டடி போன்ற சிறிய வீடுகளில்தான் வசித்துவருகிறார்கள். இந்தப் பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ஒவ்வொரு பகுதியிலும் மண் மாதிரி எடுத்து ஆய்வு செய்யும் பணி நடந்துவருகிறது. இங்குள்ள 12 லட்சம் இந்திய வம்சாவளி தமிழர்களின் வாழ்க்கையை மேம்படுத்த இந்தியா உதவ வேண்டும்.

மலையகத் தமிழர்களின் பிரச்சினைகள் வெளியுலகுக்கு அதிகம் தெரிவதில்லையே ஏன்?

200 தமிழர்கள் மண்ணில் புதைந்து இப்படியொரு துயரச் சம்பவம் நிகழ்ந்த பிறகுதான் தமிழகத்திலுள்ள தமிழர்கள் எங்களைப் பற்றிப் பேசவே தொடங்கியிருக்கிறார்கள். லட்சக் கணக்கான தமிழர்கள் எந்த வசதியுமின்றிப் பல ஆண்டுகளாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இலங்கை யில் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்களுக்குப் பிரச்சினை என்றால், தமிழகம் கொதித்து எழும். ஆனால், தமிழ்நாட்டில் அவர்களின் சொந்தபந்தங்களாக இருந்து, பிழைப்புக்காக இங்கே வந்து தவித்துக்கொண்டிருக்கும் எங்களுக்காகக் குரல்கொடுக்க யாருமே இல்லை. ஒருசில விதிவிலக்குகளைத் தவிர, தமிழ்நாட்டுத் தலைவர்களும் சரி, ஈழத் தமிழர் தலைவர்களும் சரி அமைதிதான் காக்கிறார்கள்.

தமிழீழப் பகுதியிலுள்ள அரசியல் கட்சிகளுடன் உங்கள் உறவு எப்படி?

அனைவருமே தமிழ்ச் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்றாலும் பூர்விகத் தமிழர், இந்தியத் தமிழர் என்ற நிலைப்பாட்டினால் இரு தரப்புக்கும் இடையேயான நெருங்கிய உறவில் நீண்ட இடைவெளி உள்ளது. முந்தைய காலகட்டத்தில் நடந்த பல பிரச்சினைகள்தான் இதற்குக் காரணம். நாங்கள் சிங்களர்களின் குடியிருப்புகளுக்கு மத்தியில் வசித்துவருகிறோம். எனவே, முன்பு இலங்கை யின் வடக்கு, கிழக்கில் தமிழர்கள் ராணுவத்தைத் தாக்கும் போதும், தமிழர்களுக்காகத் தமிழகத்தில் போராட்டங்கள் நடக்கும்போதும் சிங்களர்களால் மலையகத் தமிழர்கள் அச்சுறுத்தப்பட்டும் தாக்குதலுக்கு ஆளாகியும் வந்துள்ளார்கள். இவ்வளவும் போதாது என்று இப்போது நிலச்சரிவு வேறு. இந்த நிலையில், முரண்பாடுகளைக் களைந்து மற்ற தமிழர்களுடன் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம். முடிவு அவர்கள் கையில் தான் இருக்கிறது.

தமிழர்களுக்காகக் கட்சி நடத்தும் நீங்கள், ராஜபட்சவுடன் கூட்டணி அமைத்திருப்பது ஏன்?

எதிர்க் கட்சியாக இருந்தால் எங்களால் எதுவுமே செய்ய முடியாது. எங்களைச் சுற்றிலும் சிங்களர்கள் இருப்பதால் அரசுக்கு ஆதரவாக இருந்தால் மட்டுமே சலுகைகளையும் உரிமைகளையும் பெற முடியும். எனவே, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நாங்கள் அவர்களைச் சார்ந்தே இருப்போம். அரசை எதிர்த்துச் செயல்பட்டால், எங்கள் மக்களுக்கு எந்த வசதிகளையும் பெற்றுத்தர முடியாமல் போய்விடும். எனவேதான், ராஜபட்ச கட்சியுடன் கூட்டணி வைத்து மத்திய, மாநில அரசுகளிலும் பங்குவகிக்கிறோம். இதில் தவறு இருப்பதாக நானோ, எம் மக்களோ நினைக்கவில்லை.

இந்திய அரசை மலையகத் தமிழர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?

எங்களுக்கு இந்த நிலை ஏற்பட இந்தியாவும் ஒரு காரணம். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய வம்சாவளித் தமிழர்கள் 10 லட்சம் பேரைக் குடியுரிமையற்றவர்களாக்கி, இந்தியாவுக்கே திருப்பி அனுப்பும் முயற்சியை இலங்கை அரசு மேற்கொண்டது. இதற்கு ஈழத்தைச் சேர்ந்த தமிழ் எம்.பி-க்கள் சிலரும் ஆதரவளித்தனர். சிறிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தம் கையெழுத்தாகி, அதன்படி இங்கிருந்து சுமார் 5 லட்சம் தமிழர்கள் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்கள். அதற்குப் பதிலாக கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்பட்டது. இது நடைபெறாமல் இருந்திருந்தால் 10 லட்சம் பேரும் சேர்ந்து போராடி, இலங்கையில் எங்களுக்கான வாக்குரிமையைப் பெற்றிருப்போம்; அரசியல் முக்கியத்து வத்தையும் பெற்றிருப்போம். ஆனால், எல்லாம் முடிந்து விட்டது. இன்று, தமிழ்நாட்டிலுள்ள உறவுகளைக்கூட அடையாளம் காண முடியாத அளவுக்குத் தொடர்பின்றி, தனிமைப்படுத்தப்பட்டுவிட்டோம். இனியாவது, எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்தியா ஏதாவது செய்ய முன்வந்தால், அதை இங்குள்ள ஒவ்வொரு தமிழரும் மனதார வரவேற்போம்.

- அ. வேலுச்சாமி,தொடர்புக்கு: velusamy.a@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x