Last Updated : 01 Sep, 2016 10:11 AM

 

Published : 01 Sep 2016 10:11 AM
Last Updated : 01 Sep 2016 10:11 AM

காங்கிரஸ் போடும் சாதிக்கணக்கு!

உத்தரப் பிரதேசத்தில் சாதி, மத அடிப்படையிலான அரசியல் கொடிகட்டிப் பறப்பது தெரிந்த விஷயம்தான். அம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இப்போதே சாதிக் கணக்குப் போட ஆரம்பித்திருக்கிறது காங்கிரஸ் கட்சி.

மக்களவைத் தேர்தலின்போது நரேந்திர மோடியின் தேர்தல் பிரச்சார வியூகங்களை வெற்றிகரமாக அமைத்துத் தந்த பிரஷாந்த் கிஷோர்தான், இம்முறை பஞ்சாப், உ.பி. தேர்தல்களில் காங்கிரஸின் வியூகங்களை வடிவமைக்கிறார். பிஹாரில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் நிதீஷ்குமாரின் மெகா கூட்டணியின் வெற்றிக்குப் பின்னர், இவரது மவுசு இன்னும் கூடிவிட்டது. உ.பி.யில் காங்கிரஸின் நிலை மற்றும் மற்ற கட்சிகளின் செல்வாக்கு ஆகியவற்றை அலசி ஆராய்ந்த பிரஷாந்த் கிஷோர், வாக்காளர்களில் 11% ஆக உள்ள பிராமணர் வாக்குகளை அள்ளுவதே காங்கிரஸின் வெற்றிக்கு ஒரே வழி என்று யோசனை தெரிவித்தார். காரணம், அம்மாநிலத்தைப் பொறுத்தவரையில் முஸ்லிம்களைப் போல், பிராமணர்களின் வாக்குகளும் வெற்றிக்கு உதவும்.

ஆளும் கட்சியான முலாயம் சிங்கின் சமாஜ்வாடி 9% யாதவர்களை நம்பியிருக்கிறது என்றால், எதிர்க்கட்சியான மாயாவதியின் பகுஜன் சமாஜ் சுமார் 20% தலித்துகளை நம்பியிருக்கிறது. 14% முஸ்லிம் வாக்குகளை சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் என மூன்று கட்சிகளுமே பங்கிட்டுக்கொள்கின்றன.

இம்மூன்று கட்சிகளிலும் பிராமணர்கள் இருக்கி றார்கள் என்றாலும், பெரும்பாலானவர்கள் ஆதரவு இயல்பாகவே பாஜகவுக்குக் கிடைக்கிறது. அது மட்டு மின்றி, மற்ற உயர் சமூகங்களான 9% தாக்கூர் மற்றும் 6% பனியாவின் வாக்குகளையும் நம்பி உள்ளது அக்கட்சி. அதேசமயம், கடந்த 2002 தேர்தல் முதலே பிராம ணர்கள் பாஜகவை விட்டு ஒதுங்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அக்கட்சியின் பிராமண வாக்கு வங்கி, 2007 முதல் படிப் படியாகக் குறைந்து, 2012-ல் வெறும் 38% ஆகிவிட்டது.

பாஜக நழுவவிட்ட பிராமணர் வாக்குகளுடன், முஸ்லிம்களின் வாக்குகளையும் கணிசமாகப் பெற்றதால்தான் சமாஜ்வாடியும் பகுஜன் சமாஜ் கட்சியும் மாறி மாறி ஆட்சி நடத்திவருகிறார்கள் என்பது பிரஷாந்த் கிஷோரின் கணிப்பு. இதையெல்லாம் சுட்டிக்காட்டி, “வரும் தேர்தலில் முஸ்லிம்களுடன் பிராமணர்களின் வாக்குகளையும் கவர்ந்தால் கட்டாயம் ஆட்சியைப் பிடிக்க முடியும்” என்று அவர் அறிவுறுத்தியிருப்பதை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது.

ஒரு பிராமண முகம் தேவை என்று, டெல்லியின் முன்னாள் முதல்வரும் உ.பி.யின் மருமகளுமான ஷீலா தீட்சித்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது காங்கிரஸ். அடுத்த கட்டமாக மாயாவதி பாணியில், உ.பி.யில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில், குறைந்தது 100 தொகுதிகளில் பிராமணர்களை வேட்பாளராக நிறுத்தவும் அக்கட்சி திட்டமிட்டுள்ளது. 2007 சட்டப்பேரவைத் தேர்தலில் 89 பிராமணர்களை வேட்பாளராக்கி, மாயாவதி ஆட்சியைப் பிடித்தது குறிப்பிடத் தக்கது.

தேர்தலுக்காக வந்த திடீர்ப் பாசமல்ல இது என்று பிராமணர்களை நம்ப வைப்பதற்காக, “உ.பி.யை ஆண்ட காங்கிரஸ் முதல்வர்களில் கோவிந்த் வல்லப பந்த், கமலாபதி திரிபாடி, சந்திர பானு குப்தா, என்.டி.திவாரி என பெரும்பாலானவர்கள் பிராமணர்களே” என்று தன் பிரச்சாரத்தில் முன்வைக்கவிருக்கிறது காங்கிரஸ். இதற்காக, கோரக்பூரில் செப்டம்பர் 2 முதல், ‘பிராமணர் சம்மேளனம்’எனும் பெயரில் பிரச்சாரக் கூட்டங்களைத் தொடங்குகிறது காங்கிரஸ்.

என்னதான் வியூகங்கள் வகுக்கப்பட்டாலும், களநிலவரத்தைப் பார்க்கும்போது, காங்கிரஸ் தனக்குள்ள 28 எம்எல்ஏக்கள் என்ற எண்ணிக்கையைக் கொஞ்சம் உயர்த்தினாலே பெரிய விஷயம்தான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

தொடர்புக்கு: shaffimunna.r@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x