Published : 25 Aug 2016 10:21 AM
Last Updated : 25 Aug 2016 10:21 AM

எறும்புக்குக் கண் உண்டு!

சில வகை எறும்புகளுக்குப் பார்வைத் திறன் உள்ளதாகச் சோதனைகள் காட்டுகின்றன

ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் ஒரு நிலைக் கண்ணாடியைக் கடந்து போக நேரிட்டால், ஒரு கணம் நின்று தனது பிம்பத்தை ரசிக்காமல் போவது அரிது. தலை கலைந்திருந்தாலும் ஆடை சரிந்திருந்தாலும் கூடுதலாகச் சில கணங்கள் நின்று சரிசெய்துகொள்வதும் இயல்பு.

தினமும் காலையில் கண்ணாடியின் முன்னால் செய்ய வேண்டியிருக்கிற கடமைகள் பல. தலைவாரிக்கொள்வது, ஒப்பனை செய்துகொள்வது போன்றவை பெண்களுக்கு. அவற்றுடன் ஆண்களுக்கு மழித்தலும் நீட்டலும் கூடுதல் பணிகள். திருமண மண்டபங்களின் உள்ளே ஆங்காங்கே பெரிய பெரிய நிலைக் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருப்பது அரங்குக்குள் வரும் வெளிச்சத்தைப் பரவலாக நாலா திசைகளிலும் பிரதிபலிப்பதற்காகவே என்றாலும், விருந்தினர்கள் அவ்வப்போது தலையையும் உடையையும் சரிசெய்துகொள்ளவும் உதவும். நிலைக் கண்ணாடி இல்லாதபோது அதன் இன்றியமையாமை அதிகமாக உணரப்படுகிறது. குழந்தைகள் கண்ணாடியில் தமது பிம்பங்களைப் பார்த்து வியந்து சிரிக்கும். சில தொட்டுப் பார்க்கும்.

சாயக்குறி சோதனை

பிராணிகளும் ஒரு நிலைக் கண்ணாடியில் தமது பிம்பங்களைப் பார்க்கிறபோது பல விதமாக எதிர்வினைகள் புரிகின்றன. நாய்களுக்கு முன்னால் ஒரு நிலைக் கண்ணாடியை வைத்தால், அவை கோபமடைந்து உறுமவும் தனது பிம்பத்தைப் பாய்ந்து பிறாண்டவும் முயலும். குருவி, புறா, காக்கை போன்ற பறவைகள் கண்ணாடியில் தமது பிம்பங்களைக் கண்டால் கொத்த வரும்.

1970-ம் ஆண்டில் கோர்டன் காலப் என்ற விஞ்ஞானி, பறவைகளும் பிராணிகளும் நிலைக் கண்ணாடிகளில் தமது பிம்பத்தைக் காணும்போது நடந்துகொள்கிற விதத்தை ஆய்வுசெய்தார். நீண்ட காலமாகவே பிராணிகளின் நடத்தைகளைப் பகுப்பாய்வு செய்ய நிலைக் கண்ணாடிகளை விஞ்ஞானிகள் பயன்படுத்தி வருகிறார்கள். காலப் சிம்பன்சிகள் தமது பிம்பங்களை நிலைக் கண்ணாடியில் பார்க்கிறபோது அவை தமது பிம்பங்கள்தான் என்பதைப் புரிந்துகொள்கின்றன என்று கண்டுபிடித்தார். அவர், வாசனையற்ற ஒரு சிவப்புச் சாயத்தைச் சிம்பன்சிகளின் புருவ மேட்டிலும் காதுக்கு அருகிலும் பூசினார். பிறகு, அவற்றைக் கூண்டுகளில் அடைத்தார். அவை சாயம் பூசிய இடங்களை தாமாகவே எவ்வளவு முறை தொட்டுப் பார்க்கின்றன என்று சில நாட்களுக்குப் பதிவுசெய்தார்.

அடுத்து அவர் கூண்டுக்குள் ஒரு நிலைக் கண்ணாடியை வைத்தார். நிலைக் கண்ணாடியில் தமது பிம்பத்தைப் பார்த்த சிம்பன்சிகள் நான்கு முதல் பத்து முறைகள்வரை சிவப்புச் சாயம் பூசிய இடங்களைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தன. கண்ணாடியை வைப்பதற்கு முன் அவை அந்த இடங்களைத் தொட்டுப் பார்க்கவேயில்லை. எனவே, அந்தச் சாயங்கள் எரிச்சலையோ உறுத்தலையோ தரவில்லை என அவர் ஊகித்தார். கண்ணாடியில் தெரிந்த பிம்பம் தமதுதான், சிவப்புச் சாயம் தமது முகத்தில்தான் இருக்கிறது என்பதை அவற்றால் புரிந்துகொள்ள முடிகிறது என்பது உறுதியானது. அவர் வேறு பல பிராணிகளையும் பறவைகளையும் பூச்சிகளையும் வைத்து இதே போலச் சோதித்தார். பாலூட்டி பிராணிகளுக்கும், சில பறவைகளுக்கும், எறும்புகளுக்கும் கூட கண்ணாடிகளில் தமது பிரதிபலிப்புப் பிம்பங்களை அடையாளம் காண முடிகிறது என அவர் முடிவுசெய்தார். ‘ஆடியில் தன் உருவத்தைக் காணும் சோதனை’ என அவர் குறிப்பிட்டார். ‘சுய பிம்பப் புரிதல்’ என்று விஞ்ஞானிகள் அந்தப் பண்பை அழைக்கிறார்கள். அவருடைய சோதனை முறை, ‘சாயக்குறி சோதனை’ எனப்படுகிறது.

டார்வின் பரிசோதனை

எறும்புகள் சமூகங்களாகக் கூடி வாழ்பவை. ஒரு புற்றிலுள்ள எறும்புகள் தமது கூட்டத்தின் மற்ற எறும்புகளை எளிதாக அடையாளம் கண்டுகொள்கின்றன. அதற்கு வாசனை உணர்வு பெரிதும் உதவுகிறது. தொழிலாளி எறும்புகளுக்குக் கண்ணில்லை என்றுதான் பொதுவான கருத்து. ஆனால், சில வகை எறும்புகளுக்குப் பார்வைத் திறன் உள்ளதாகச் சோதனைகள் காட்டுகின்றன. சிறகு உதிராத ஆண் எறும்புகளின் நெற்றியில் நீல நிறப் புள்ளியை வைத்துவிட்டு, அவற்றை ஒரு நிலைக் கண்ணாடியின் மேல் வைத்தபோது, அவை தமது பிம்பத்தைப் பார்த்த பின் தமது நெற்றியிலிருந்த நீலப் புள்ளியைக் கால்களால் தேய்த்து அழித்துக்கொண்டன. ஆனால், அவற்றின் உடல் நிறத்திலேயே உள்ள ஒரு பழுப்புப் புள்ளியை வைத்தபோது அவை துடைத்துக்கொள்ளவில்லை. அதே போலத் தம் தலையின் பிடரிப் பரப்பில் வைக்கப்பட்ட நீல நிறப் புள்ளியை அவற்றால் பார்க்க முடியாததால், அதையும் அவை துடைக்க முயலவில்லை. முட்டைகளிலிருந்து புதிதாக வெளிப்பட்ட எறும்புக் குஞ்சுகளை வைத்து இதே போலச் சோதனை செய்தபோது, அவை இவ்வாறு முகத்தைத் துடைத்துக்கொள்ளவில்லை. இதிலிருந்து, முகத்தைத் துடைத்துக்கொள்ளும் பழக்கம் பெரியவர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளப்படுவதாகத் தோன்றுகிறது. ஆடியில் தெரியும் பிம்பம் தான்தான் என்ற புரிதலும் வளர வளரத்தான் எறும்புக் குஞ்சுகளுக்கு ஏற்படுகிறது.

பறவைகளில் ஐரோப்பிய மாக்பை (குண்டு கரிச்சான்) மட்டுமே கண்ணாடியில் தெரிவது தன்னுடைய பிம்பம்தான் என்பதைப் புரிந்துகொள்வதாகத் தோன்றுகிறது. ஆய்வர்கள் அவற்றின் தொண்டைப் பகுதியில் சிறிய சிவப்பு, மஞ்சள், கருப்பு நிறமுள்ள பொட்டுகளை ஒட்டினார்கள். அந்தப் பொட்டுகளைப் பறவையால் நேரடியாகப் பார்க்க முடியாது. கண்ணாடியில் பார்த்தால் மட்டுமே தெரியும்படி அவை ஒட்டப்பட்டன. அவை ஒட்டப்பட்டிருப்பதைப் பறவைகள் முதலில் உணரவில்லை. ஆனால், அவற்றின் முன்னால் ஆடிகளை வைத்தபோது தமது கழுத்தில் ஏதோ வித்தியாசமாகத் தெரிவதைக் கண்டு அதைக் கால்களால் சொறிந்து நீக்க முயன்றன. ஆடியில் தெரிவது தமது பிம்பம்தான் என்பதைப் பறவைகள் புரிந்துகொள்கின்றன என்பதை இது நிரூபித்தது. அப்பறவைகளின் உடல் நிறமான கருப்பு நிறத்திலான பொட்டுகளை அவற்றின் கழுத்தில் ஒட்டியபோது அப்பொட்டுகளைப் பிரித்துக் காண முடியாமல் பறவைகள் சும்மா இருந்துவிட்டன.

ஒராங்குட்டான் குரங்குகள் நிலைக் கண்ணாடிகளில் தெரிவது தமது பிம்பம்தான் என்று புரிந்துகொள்வதாக டார்வின் தனது பரிசோதனைகளின்போது கண்டுபிடித்தார். தமது முகத்தில் வந்தமர்ந்த பூச்சிகளைக் கண்ணாடியில் பார்த்துப் பிடித்துத் தூக்கி எறிகின்ற சம்பவத்தை அவர் விவரித்திருக்கிறார். அத்துடன் வாலிபப் பருவத்திலுள்ள ஒராங்குட்டான்கள் மட்டுமே கண்ணாடியில் தம் பிம்பத்தை அடையாளம் காண்கின்றன. மிக இளம் குரங்குகளும், மிக வயதான குரங்குகளும் அவ்வாறான ஆர்வமின்றிக் கண்ணாடிகளைப் புறக்கணிக்கின்றன. மனிதர்களிலும் அப்படித்தானே நடக்கிறது!

மேலும் ஒரு நிரூபணம்

கொரில்லாக்கள், குரங்குகளின் பல வகைகள், பாண்டா கரடிகள், நாய்கள், புறாக்கள், கடல் சிங்கங்கள் போன்றவை ஆடியில் தெரிவது தமது பிம்பமே என்பதைப் புரிந்துகொள்வதில்லை. அது ஏதோ விரோதி என எண்ணித் தாக்கவும் முனையும். தன்னைத் தானே கண்ணாடியில் அடையாளம் காண்கிற திறமை மனிதக் குழந்தைகளுக்கே ஒன்றரை வயதுக்கு மேல்தான் ஏற்படுகிறது. தான் சிரித்தால் பிம்பமும் சிரிப்பதையும், தான் அழுத்தால் பிம்பமும் அழுவதையும், தான் கை கால்களை ஆட்டினால் பிம்பமும் அவ்வாறே செய்வதையும் பல நாட்களுக்குப் பார்த்த பிறகே அந்தத் திறமை முழுமையடைகிறது. தனது முதுகைக் கண்ணாடியில் பார்க்க முயல்வது சற்று வளர்ந்த பின்னரே நிகழ்கிறது.

எறும்புகள் கண்ணாடியில் பார்த்துத் தமது முகத்தில் ஏதாவது ஒட்டியிருப்பதைத் தெரிந்துகொண்டால் கால்களால் முகத்தைத் துடைத்துக்கொள்கின்றன. யானைகள் கண்ணாடியின் மீது துதிக்கையை விட்டுத் தடவி, வேறு ஏதாவது ஒரு யானை அங்கிருக்கிறதா என்று சோதிக்கின்றன. டால்பின்கள் பல கோணங்களில் உடலைத் திருப்பி ஆடியில் தெரியும் பிம்பங்களைப் பார்த்து ரசிக்கின்றன.

எறும்பு முதல் மனிதன் வரையிலான உயிரின ஏணியி லுள்ள எல்லா ஜீவராசிகளும் கண்ணாடிகளின் முன்னால் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான நடத்தைப் பண்புகளை வெளிப்படுத்துவதிலிருந்து டார்வின் கண்டுபிடித்த பரிணாமக் கொள்கைக்கு மேலும் ஒரு நிரூபணம் கிடைக்கிறது. உலகின் எல்லா உயிரினங்களும் ஒரே ஒரு முதல் நிலை உயிரினத்தின் பரிணாம வளர்ச்சியின் பல்வேறு கட்ட நிலைகளே என்பது உறுதியாகிறது.

-கே.என். ராமசந்திரன், அறிவியல் கட்டுரையாளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x