Published : 01 May 2017 09:06 AM
Last Updated : 01 May 2017 09:06 AM

ஒரு நிமிடக் கட்டுரை: சட்டப்பேரவையில் திமுகவின் 60 ஆண்டுகள்!

அன்றைய சென்னை மாகாணத்தில் 1957-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் திமுக முதன்முதலாகத் தேர்தலில் போட்டியிட்டது. தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சியினரின் முடிவை அறிந்துகொள்ள ஜனநாயக முறைப்படி அண்ணா வாக்கெடுப்பு நடத்தினார். திமுகவின் இரண்டாவது மாநில மாநாடு 1956 மே 17 முதல் நான்கு நாட்கள் திருச்சியில் நடந்தபோது இந்த வாக்கெடுப்பு நடந்தது. தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்புவோர் சிவப்பு நிறப் பெட்டியிலும், வேண்டாம் என்று கருதுவோர் கறுப்பு நிறப் பெட்டியிலும் ஓட்டுப் போட வேண்டும் என்று முடிவாயிற்று.

கொட்டும் மழையில் வாக்கெடுப்பு நடந்தது. மழை காரணமாகப் பலர் ஓட்டுப் போட முடியவில்லை. தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று 56,942 பேரும், போட்டியிடக் கூடாது என்று 4,203 பேரும் வாக்களித்திருந்தனர். பெரும்பாலானோர் அளித்த தீர்ப்பின்படி தேர்தல் களத்தில் இறங்கியது திமுக. தேர்தல் முடிவுகள் 1957 ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாயின. மொத்தம் உள்ள 205 இடங்களில் காங்கிரஸ் கட்சி 151 இடங்களை வென்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. திமுக சார்பில் 15 சட்டமன்ற உறுப்பினர்களும், இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் வெற்றி பெற்றனர்.

கடற்கரையில் நடந்த பாராட்டுக் கூட்டத்தில் பேசிய அண்ணாதுரை, “நாங்கள் பெற்ற வெற்றி குறைவானது என்றாலும், முக்கியத்துவம் வாய்ந்தது. திமுக சார்பில் போட்டியிட ஆளே கிடைக்காது என்று முதலில் கேலி பேசியவர்கள், பிறகு நமக்கு ஒரு இடம்கூடக் கிடைக்காது என்றார்கள். இப்போது 15 இடங்கள்தானே என்கிறார்கள். அவர்களின் கேலி மொழி நமக்கு உற்சாகத்தைத் தரட்டும்” என்றார். “சட்டசபையில் நடைபெறும் விவாதங்கள் நாகரிகத்துடன் இருக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதியின் முன்னேற்றத்துக்குப் பொறுப்புடன் பாடுபட வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

1957 ஏப்ரல் 29-ல் சட்டமன்றம் கூடியது. திமுகவின் முதல் சட்டமன்றப் பிரவேசம் நிகழ்ந்தது அன்றுதான். “நாட்டுமக்களின் எதிர்கால நல்வாழ்வுக்குப் பணியாற்றுவதற்காகச் சட்டமன்றம் செல்லும் திமுகழக சட்டசபை உறுப்பினர்கள் ஏப்ரல் 29 காலை 10 மணி அளவில், ‘அறிவக’த்திலிருந்து புறப்பட்டனர். கழக வரலாற்றில் முதன்முறையாகச் சட்டமன்றப் பணியாற்றச் சென்றும் பொறுப்புணர்வின் ‘சாயல்’, மன்ற உறுப்பினர்களின் முகப் பொலிவில் தெள்ளத்தெளிவாகப் பிரதிபலித்தது” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டது அண்ணா நடத்திய ‘நம்நாடு’ இதழ்.

சட்டப்பேரவைக்குள் நுழைந்தவுடன் அண்ணா தன்னுடைய கன்னிப் பேச்சைப் பேசினார். கருணாநிதி தன்னுடைய கன்னிப் பேச்சை 04.05.1957-ல் பேசினார். இந்த ஆண்டு சட்டப்பேரவையில் திமுகவின் 60-வது ஆண்டு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x