Last Updated : 13 Jun, 2017 09:35 AM

 

Published : 13 Jun 2017 09:35 AM
Last Updated : 13 Jun 2017 09:35 AM

ட்ரம்பை ஆதரிக்க மறுக்கும் பிட்ஸ்பர்க்

“பிட்ஸ்பர்க் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தத்தான் நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன், பாரீஸை அல்ல” என்று பாரீஸ் பருவநிலை உடன்பாட்டிலிருந்து அமெரிக்கா விலகும் என்ற முடிவை அறிவித்தபோது அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியிருந்தார். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், அதில் அமெரிக்க நலனுக்குத்தான் முன்னுரிமை என்ற கருத்தை வலியுறுத்த ட்ரம்ப் அப்படிப் பேசினார். இது உலக அளவில் விவாதமாகிவிட்டது.

திட்டம் என்ன?

“அதிபர் டொனால்டு ட்ரம்ப் எங்களுடைய இரு நகரங்களை மோதவிடும் போக்கில், பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகும் அறிவிப்பில் எங்களுடைய நகரையும் சேர்த்துவிட்டார். முன்பைவிட நாங்கள் ஒற்றுமையாகவும் புவி வெப்பநிலையைக் குறைப்பதில் உறுதியாகவும் இருக்கிறோம் என்று கூட்டாகத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று பாரீஸ் நகர மேயர் ஆன் ஹிடால்கோ, பிட்ஸ்பர்க் மேயர் வில்லியம் பெடுடோ இருவரும் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழின் நடுப் பக்கத்தில் கூட்டாகக் கட்டுரை எழுதியிருக்கின்றனர்.

மிகப் பெரிய நிலக்கரிச் சுரங்கத்துக்கு மேலே அமைந்திருக்கிறது பிட்ஸ்பர்க். நவீன அமெரிக்காவின் தந்தைகளில் ஒருவரான ஆண்ட்ரூ கார்நிகி இந்நகரில்தான் ஸ்காட்லாந்து பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். உருக்கு உற்பத்தியை பிரம்மாண்டமாக மேற்கொண்டு உலக முன்னோடியானார்.

தொழில் மேலாண்மை, கொடைத்தன்மை, தொழிலாளர் ஒடுக்குமுறை, பணம் ஈட்டுவதில் பேராசை என்று அவருக்குப் பல்வேறு முகங்கள். 19-வது 20-வது நூற்றாண்டு அமெரிக்க முதலாளித்துவத்தின் கல்யாண குணங்கள் இவை. இதன் விளைவு, சுற்றுச்சூழல் கேடு. பிட்ஸ்பர்க் நகர உருக்காலைகளில் நிலக்கரிதான் பிரதான எரிபொருள். இரண்டாவது உலகப் போரின் தேவையையொட்டி உருக்காலைகள் முழு வீச்சில் செயல்பட்டதால் நகரமே புகைப் போர்வையில் மறைந்துவிட்டது. 1940-களில் பிட்ஸ்பர்க் நகரத் தெரு விளக்குகள் தொடர்ந்து 24 மணி நேரமும் எரிந்துகொண்டேயிருந்தன.

உலகமயமாக்கல் என்ற கொள்கை ஏற்கப்பட்ட பிறகு, சீனாவிலிருந்து மலிவு விலை உருக்கு வந்தது. ஒவ்வொன்றாக உருக்கு ஆலைகளும் நகரைச் சுற்றியிருந்த நிலக்கரிச் சுரங்கங்களும் மூடப்பட்டன. கடைசி உருக்காலை 1999-ல் மூடப்பட்டது. கைவிடப்பட்ட சுரங்கங்களும் மூடப்பட்ட தொழிற்சாலைகளும்தான் ட்ரம்பின் அரசியல் வெற்றிக்குக் காரணங்கள்.

நகரம் புதுப் பிறவி எடுத்தது எப்படி?

உலகமயமாக்கலால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து பிட்ஸ்பர்க் மீண்டது. ஆனால், நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ள சுற்றுவட்டப் பகுதியைப் பற்றி அப்படிச் சொல்ல முடியாது. கார்நிகி மெலான் பல்கலைக்கழகம் 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஓட்டுநர் இல்லாமல் தானாக ஓடும் கார்களை வடிவமைத்தது. ஆப்பிள், கூகுள், ஃபேஸ்புக் உள்பட 1,600 டிஜிட்டல் நிறுவனங்கள் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள பிட்ஸ்பர்க் இடம் தருகிறது. ஓட்டுநர் இல்லாத கார்களை ஓட்ட, ஊபர் நிறுவனம் தேர்வுசெய்த முதல் நகரம் பிட்ஸ்பர்க்.

கார்நிகி மெலான் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்கள் நகரின் எதிர்காலத்துக்கு ஏற்ற சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கிவருகின்றன. 2035-ல் நகரின் எரிபொருள் தேவை முழுவதையும் புதுப்பிக்கத்தக்க இயற்கை வளங்களிலிருந்தே பெற்றுவிட முடியும் என்று பல்கலைக்கழகங்கள் நம்புகின்றன. புதுப்பிக்கத்தக்க எரிபொருள் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் மட்டும் 13,000 பேர் ஈடுபட்டுள்ளனர்.

பென்சில்வேனியாவில் பிளவு

பிட்ஸ்பர்க் பகுதியில் 75%-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் ஹிலாரி கிளிண்டனைத்தான் ஆதரித்திருந்தனர். ஆனால், பென்சில்வேனியாவின் ஊரகப் பகுதிகளில் ட்ரம்ப் தான் ஆதரிக்கப்பட்டார். 1988-க்குப் பிறகு பென்சில்வேனியா மாநிலத்தைக் கைப்பற்றிய முதல் குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்ப்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x