Published : 01 Jan 2015 09:50 AM
Last Updated : 01 Jan 2015 09:50 AM

2015-ன் சவால்கள்

நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் இன்னொரு ஆண்டுக்குள் நுழைந்திருக்கிறோம். கடந்த ஆண்டு மனித குலம் செய்த சாதனைகள், சந்தித்த துயரங்கள் இரண்டின் தடங்களையும் மனதில் சுமந்துகொண்டு, 2015-ல் அடியெடுத்து வைத்திருக்கிறோம்.

இந்த ஆண்டில் உலகமும் இந்தியாவும் தமிழகமும் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் ஏராளமாக இருக்கின்றன. கடந்த ஆண்டின் சவால்களில் பெற்ற வெற்றி - தோல்விகளில் கிடைத்த பாடங்களைக் கொண்டுதான் புதிய ஆண்டின் சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டும்.

உலக அளவில் எதிர்கொள்ள வேண்டிய சவால்களில் முக்கிய மானவையாக நான்கைக் குறிப்பிடலாம்: 1. ஏகாதிபத்தியச் சுரண்டல், 2. அடிப்படைவாதம், 3. எபோலா, 4. புவிவெப்பமாதல். இந்த நான்கும் ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாதவை. மற்றவற்றின் எதிர் விளைவாகவோ துணைவிளைவாகவோ எழுந்தவை. இந்த நான்கு பிரச்சினைகளில் எபோலா மட்டும் சற்றுப் புதியது. புதிய பிரச்சினை என்றாலும் உடனடியாக எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினையாக எபோலா இருக்கிறது.

இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் சவால்களும் நிறைய. உலக அளவில் நாம் எதிர்கொள்ளும் மேற்கண்ட நான்கு சவால்களையும் இந்தியாவும் தனக்கே உரித்தான வடிவங்களில் எதிர்கொள்கிறது. இது தவிரவும் முக்கியமான சில சவால்கள் இருக்கின்றன. மாற்றமும் வளர்ச்சியும் வேண்டும் என்று 10 ஆண்டு கால காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியைத் தூக்கியெறிந்துவிட்டு, மோடி தலைமையிலான பாஜகவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் மக்கள். ஆனால், மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் திசையை நோக்கிக் கடந்த ஆறு மாதங்களில் எதிர்பார்த்த வேகத்தில் மோடி அரசு செயல்படவில்லை என்பதுதான் உண்மை. பிரிவினைவாத அரசியலைத் தவிர்த்துவிட்டு, மக்களுக்கான உண்மையான வளர்ச்சியை மேற்கொள்ள வேண்டியதே மோடி அரசுக்கு உள்ள சவால்.

இந்தியாவுக்குப் பழைய பிரச்சினைகள்தான் இன்னும் தீவிரத்துடன் தொடர்கின்றன. காஷ்மீர் பிரச்சினை, மாவோயிஸ்ட்டுகள் பிரச்சினை, அதற்கு அடிப்படையான பூர்வகுடி மக்களின் மீதான சுரண்டல், வடகிழக்கு மாநிலங்களின் பிரச்சினை என்று சொல்லிக்கொண்டே போகலாம். இந்தப் பிரச்சினைகளை இதுவரை முழுக்க முழுக்க ராணுவரீதியில் அணுகியதே தீர்வுகள் எட்டப்படாததற்குக் காரணம். சம்பந்தப்பட்ட மக்கள் மற்றும் பிராந்தியங்களின் அடிப்படை உரிமைகளுக்கும் நலன்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இந்தப் பிரச்சினைகளை அணுக வேண்டியது அவசியம்.

தமிழகம் ஒரு வகையில் ஸ்தம்பித்துப்போயிருக்கிறது. செயல்படாத நிர்வாகம் மக்களுக்கு மட்டுமல்ல, அதிமுகவின் எதிர்காலத்துக்குமே பெரும் அபாயமாக உருவாகியிருக்கிறது. அரசின் செயல்பாடுகளில் விழுந்த விரிசலுக்கு ஓர் உதாரணமாக ஆண்டின் தொடக்கத்திலேயே போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்சினை உருவாகியிருக்கிறது. தொழிலாளர்களை அடக்கி ஒடுக்க முற்படுவதைவிட, போராட்டத்தின் பின்னுள்ள நியாயங்களை அரசு பரிசீலிக்க வேண்டும். அரசு இதுபோன்ற விஷயங்களில் உடனடியாகச் செயல்பட வேண்டும்.

எல்லாவற்றுக்கும் நடுவே சாதாரண மக்கள்தான் ஆச்சரியங்களைத் தருகிறார்கள். அனைத்துப் பிரச்சினைகளின் சுமைகளையும் அதிகமாகச் சுமப்பவர்கள் அவர்கள்தான் என்றாலும் வாழ்க்கையின் மீது அவர்கள் கொண்டிருக்கும் பிடிப்பும் வெகுண்டெழுந்து போராடும் குணமும்தான் எந்தச் சவால்களையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை நமக்குத் தொடர்ந்து அளிக்கின்றன. இந்தத் தன்னம்பிக்கைதான் மனித குலத்துக்கு ஆதாரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x