Published : 25 Nov 2013 12:00 AM
Last Updated : 25 Nov 2013 12:00 AM

கெட்ட சரித்திரம் திரும்புகிறது

சரித்திரம் நல்லவிதமாகத் திரும்பினால் சந்தோஷப்படலாம். கெட்ட சரித்திரம் ரிப்பீட் ஆகும்போதுதான் அடி வயிற்றைக் கலக்கத் தொடங்கிவிடுகிறது.

ஹிட்லர் காலத்தில் ஜெர்மனியில் யூதர்கள் அனுபவித்த அவஸ்தைகளைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருக்கமாட்டார்கள். சித்ரவதைக் கூடங்களில் சிதையுண்டு போன பல்லாயிரக்கணக்கான யூதர்களுக்காக வருத்தப்படாதவர்களும் இருக்கமாட்டார்கள். நியாயமாக அந்தப் பூர்வகதை யூதர்களுக்குக் கனிவையும் கருணையையும் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். மாறாக, இன்றைக்கு சூடானில் இருந்தும் பிற பல ஆப்பிரிக்க தேசங்களில் இருந்தும் இஸ்ரேலுக்கு அகதிகளாக வருவோருக்குத் தாம் பெற்ற துன்பத்தைத் திருப்பிக் கொடுத்துக்கொண்டிருக்கிறது இஸ்ரேல்.

கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரியத் தொடங்கியிருக்கும் இந்த பயங்கரத்தின் வேர் மிகவும் வலுவானது. 1948ல் இஸ்ரேல் விடுதலை அடைந்த நாளாக இன்றைக்கு வரைக்கும் அகதிகள், அடைக்கலம் கோருவோர், கள்ளக் குடியேற்றக்காரர்கள் விஷயத்தில் இஸ்ரேலின் நிலைப்பாடு என்ன என்பது பற்றிய தெளிவான சட்டதிட்ட விவரக் குறிப்புகள் ஒன்றும் கிடையாது.

முன்பெல்லாம் இம்மாதிரி அக்கம்பக்கத்து தேசத்து அகதிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்தால் பிடித்து உள்ளே வைத்துவிடுவார்கள். மூன்று வருட சிறை. சிறைவாசம் முடிந்தால் திருப்பி ஊருக்கு அனுப்பிவிடுவார்கள். இப்போது இந்த முறையைச் சற்று வேறுவிதமாக மாற்றி அமைத்திருக்கிறது இஸ்ரேலிய அரசு.

அகதிகளாக யார் வந்தாலும் ஓராண்டுச் சிறை. அதன்பிறகு மூடிய சிறையிலிருந்து ஒரு பிரத்தியேகத் திறந்த வெளிச் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். வரையறுக்கப்பட்ட எல்லையில் காவல் கட்டுப்பாடுகள் உண்டு. ஓரடி தாண்டிப் போய்விட முடியாது. அதே சமயம், திறந்த வெளி சிறைக்காலத்துக்கான பிரத்தியேக ஒழுக்க நியமங்களையும் அனுஷ்டித்தாக வேண்டும்.

திறந்தவெளி என்று பேர்தான். ஊருக்கு நடுவே கொண்டுபோய் உட்கார வைப்பார்கள் என்று எண்ணிவிடாதீர்கள். கால் பொறுக்காச் சூடுமிக்க பாலைவனத்தில்தான் மேற்படிச் சிறை அமைந்திருக்கும். ஒரு பக்கம் காவல் கெடுபிடிகள். மறுபக்கம் செய்தே தீர்க்க வேண்டிய வேலைகள். என்ன வேலை என்றெல்லாம் யாருக்கும் தெரியாது. சம்பளம் கேட்டுவிட முடியாத கட்டாய உத்தியோக காலம் அது. சுடுகிறது என்று சொல்ல முடியாது. ஓய்வெடுக்க, ஒதுங்க இடம் கிடையாது. மணியடித்தால்தான் சோறு. மணியடித்தால்தான் தண்ணீர்கூட. நடுவே நீ மயங்கி விழுந்தால் மண்மேடு தட்டிவிடும். செத்தே போனாலும் கேட்க நாதி கிடையாது.

இந்த அப்பாவி அகதிகளுக்கு உள்ளூரிலோ வெளியூரிலோ இருந்து உதவிக்கு யாரும் வர இயலாத சூழ்நிலை. ஏனென்றால் இவர்கள் இஸ்ரேலுக்குள் அடைக்கலம் கோரி வந்திருக்கிறார்கள் என்பதுதான் மற்றவர்களுக்குத் தெரியுமே தவிர அரசாங்கம் இவர்களை எங்கே வைத்திருக்கிறது, என்னவாக வைத்திருக்கிறது என்பது யாருக்குமே தெரியாது.

மனித உரிமை ஆர்வலர்கள் என்னவாவது குரலெழுப்பிவிடுவார்களே என்ற அச்சத்தில் பேரைப் பதிவு பண்ணும்போதே எதிரிநாட்டு அழையா விருந்தினர் என்றுதான் அடையாளம் கொடுத்து அனுமதிப்பார்கள். ஒற்றன் என்று சொல்லிவிடலாம். குண்டு வைக்க வந்தவன் என்று சொல்லிவிடலாம். நாசகார நயவஞ்சகன் என்று முத்திரை குத்தி என்னவும் செய்யலாம். எம்பெருமான் துணை இருப்பான்.

உள்நாட்டு யுத்த களேபரங்களில் சிக்கிச் சின்னாபின்னமான அப்பாவிகள்தாம் எல்லை தாண்டி அகதிகளாக அக்கம்பக்கத்து தேசங்களூக்கு ஓடுகிறார்கள். ஒருவேளை சாப்பாடு உத்தரவாதம் என்பது தவிர இஸ்ரேலில் வாழநேரும் இந்த அகதி வாழ்வில் வேறெந்த சௌகரியமும் அவர்களுக்குக் கிடையாது. முற்று முழுதான சித்திரவதைகளை அனுபவித்து முடித்து இவர்கள் தாயகம் திரும்பும்போது அநேகமாக முக்கால்வாசி இறந்திருப்பார்கள்.

இப்போது இவ்வாறு இறந்துகொண்டிருப் போரின் எண்ணிக்கை ஐம்பத்தி நாலாயிரம் என்று முதல் முறையாகத் தெரியவந்திருக்கிறது. அதனாலென்ன? இஸ்ரேலில் அப்படித்தான் என்று கூசாமல் சொல்லிவிட்டார்கள் ஆள்கிற நல்லவர்கள். எங்களுக்கு யூதர்கள் முக்கியம், யூதர்களின் நலன் ஒன்றுதான் முக்கியம். அன்னிய அச்சுறுத்தல்கள் எந்த வடிவத்திலும் வரலாம். எனவே அடைக்கலம் கொடுத்து அவஸ்தைப்பட நாங்கள் தயாராயில்லை என்று க்ளீனாக அறிவித்துவிட்டார்கள்.

உலகம் வேடிக்கைதான் பார்க்கிறது. வேறென்ன செய்வது என்று இனி நல்ல நாள் பார்த்து யோசிக்கத் தொடங்குவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x