Last Updated : 10 Nov, 2013 04:04 PM

 

Published : 10 Nov 2013 04:04 PM
Last Updated : 10 Nov 2013 04:04 PM

எல்லோருமே அரசியல்வாதிகள்தான்: ஃபாத்திமா புட்டோ பேட்டி

ஃபாத்திமா புட்டோவுக்கு நிறைய அடையாளங்கள் உண்டு. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் சுல்பிகர் அலி புட்டோவின் பேத்தி, பிறகு பிரதமரான பேநசீர் புட்டோவின் சகோதரி மகள். தன்னுடைய தகப்பனார் மிர் முர்துஸா புட்டோ படுகொலை செய்யப்பட்டதை விவரிக்கும் 'கத்தி ரத்தத்தின் பாடல்கள்' நினைவு நூலின் ஆசிரியை… இப்படி நிறைய.

அடிப்படையில் கவிஞரான பாத்திமா புட்டோவின் சமீபத்திய நாவல் 'தி ஷேடோ ஆஃப் த கிரசென்ட் மூன்'. பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புறத்தில் ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டி, வசீரிஸ்தான் பகுதியில் மிர் அலி என்ற கிராமத்தைக் களமாகக் கொண்டு நாவல் இது.

மூன்று சகோதரர்கள் அவர்களுடைய எதிர்காலத்தையே மாற்றி அமைக்கக்கூடிய மூன்று தருணங்களைப் பற்றியது. ஒரு நாள் காலை மூன்று சகோதரர்களும் தேநீர் அருந்திவிட்டு, தனித்தனியாகப் பிரிவதிலிருந்து தொடங்குகிறது நாவல். நிகழ்காலத்தையும் கடந்த காலத்தையும் கதையில் வெகு நேர்த்தியாகப் பின்னியிருக்கிறார்.

இப்போதும் தொடர்ந்து அமைதியற்ற வாழ்க்கையும் மோதல்களும் பூசல்களும் நிறைந்த அந்தப் பகுதியில் நிலவும் காதல், வேலை, வாழ்நிலை வெவ்வேறு நிழல்களில் எப்படி வளர்கின்றன என்பதை நாவலில் பேசுகிறார் ஃபாத்திமா. கூடவே, தலிபான்களின் இருப்பு, அமெரிக்காவின் 'டுரோன்கள்' எப்போது வேண்டுமானாலும் தாக்கக்கூடும் என்ற யதார்த்தப் பின்னணி, எதைக் கண்டாலும் சந்தேகப்படும் ராணுவ உளவுப் பிரிவு தாங்கள் சந்தேகிக்கும் எவரையும் சுவடே தெரியாமல் காணாமல் போக்கடிக்கும் அதன் செயல்பாடு, எதையும் சகித்துக்கொள்ளாத பாகிஸ்தான் அரசு ஆகியவற்றைப் பற்றியும் பேசுகிறார்.

நட்பு, நம்பிக்கை, காதல் என்ற அனைத்தையுமே ஒருகட்டத்தில் கைவிட நேர்கிறது நினைவுகளைத் தவிர. இந்தக் கதையில் வரும் இரு பெண் பாத்திரங்கள் வாயிலாக இது பெரிதாகச் சொல்லப்படுகிறது. மூன்று சகோதரர்களில் ஒருவரின் மனைவியான மினா என்ற கதாபாத்திரமும் சமாரா என்ற கதாபாத்திரமும் வாசகர்களின் நெஞ்சங்களைவிட்டு நீங்காதவை. பயங்கரவாதிகளின் தாக்குதலில் தனது மகன் இறந்த சோகத்தை மறக்க முடியாதவர் மினா. சமாராவோ துடிப்பானவர், சுதந்திரமான போக்கு கொண்டவர், தான் நினைப்பதே சரி என்று கருதுபவர். சுகமாக எங்கு வேண்டுமானாலும் வாழலாம் அங்கே போகவே கூடாது என்று தன்னுடைய காதலரைத் தடுத்து நிறுத்துபவர் சமாரா. "வாழ்க்கையின் கடந்த காலங்களை நினைவுபடுத்தாத வீதிகளில் நடக்கவே நான் விரும்பவில்லை" என்கிறார் பாத்திமா.

* முதலில் ஒரு கவிதைத் தொகுப்பு, அப்புறம் புனைவு சாராத நூல், இப்போது ஒரு நாவல் - உங்களுக்கேற்ற எழுத்து வடிவம் இதுவென்று முடிவெடுத்துவிட்டீர்களா?

நாவல் எழுதுவதை நான் மிகவும் ரசிக்கிறேன். இது கடினமானதும் சவாலானதும் மட்டுமல்ல; சுதந்திரமானது. புனைவு அல்லாத புத்தகத்தை எழுதும்போது நீங்கள் ஏதாவது ஒன்றைச் சார்ந்து எழுத வேண்டி இருக்கிறது. புத்தக விமர்சனம் எழுதும்போதுகூட புத்தகத்தை நீங்கள் விரும்புகிறீர்களா, இல்லையா என்று சொல்ல வேண்டி இருக்கிறது. நாவலில் இதை நீங்கள் செய்யக் கூடாது என்பது கட்டாயம். எத்தனை விதமான கருத்துகள் சாத்தியம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள நாவல் என்பது நல்ல களம்.

* உண்மை, நாவல் என்பது நன்மையும் தீமையும் கலந்தது. உங்களுடைய நாவல் அரசியலையே ஒற்றை இலக்காகக் கொண்டு இருக்கிறது?

நிச்சயமாக, கொந்தளிப்பான சூழலில் வாழ்க்கையின் மூன்று வெவ்வேறு நிறங்களைப் பார்ப்பது என்ற பக்குவம் நாவலில் மட்டுமே சாத்தியம். ஒன்றுக்கும் மேற்பட்ட குரலில் பெண்ணைப் பற்றிப் பேசுவது முக்கியம் என்று கருதினேன். கதையல்லாத நூலில், அது உங்களுடைய குரலாக மட்டும் இருக்கும். தெற்காசியாவில் உள்ள லட்சக் கணக்கான பெண்களின் குரல்களையும் அவர்களுடைய பிரச்சினைகளையும் புனைவு அல்லாத நூலில் உங்களால் ஆராயவே முடியாது. இதில் வரும் கதாபாத்திரங்களின் செயல்களோடு உங்களால் அனுசரித்துப்போக முடியாது ஆனால், தவறென்று கண்டிக்கவும் முடியாது. நீங்கள் ஒரு பார்வையாளராகவோ சாட்சியாகவோ தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கலாமே தவிர, நீங்களே நீதிபதியாக இருந்துவிட முடியாது.

* நீங்கள் பிறந்தது முதலே இங்கிலாந்தின் ஓல்டு கிளிப்டன் நகரிலும், பாகிஸ்தான் திரும்பிய பிறகு கராச்சி நகரிலும்தான் வாழ்ந்திருக்கிறீர்கள். இந்த நாவலை வசீரிஸ்தான் பின்னணியில் ஏன் எழுதினீர்கள்? இயற்கையிலேயே அது மோதல்கள் நிரம்பிய இடம் என்பதாலா?

பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, நான் கேள்விப்பட்டதற்கும் நினைத்திருந்த தற்கும் மாறாக அது இருந்தது கண்டு துணுக்குற்றேன். வடக்குப் பகுதி மிகவும் ஆபத்தானது, அங்கே பெண்கள் வெளியே வர மாட்டார்கள், அவர்களுக்கு அங்கே உரிமைகள் ஏதும் கிடையாது, அங்குள்ளவர்கள் எல்லாம் ஆபத்தானவர்கள் என்றே கேள்விப்பட்டிருந்தேன். ஆனால், நான் போன இடங்களில் கிடைத்த அனுபவங்கள் எல்லாம் நான் தவறாக நினைத்திருந்தேன்; தவறாக வழிகாட்டப்பட்டேன் என்பது புரியவைத்தது. 2007-ல் கலாஷ் பள்ளத்தாக்குக்குச் சென்றிருந்தோம்.

ஒரு ஆணும் அவருடைய பெண்ணும் நிர்வகித்துவந்த சிறிய விருந்தினர் இல்லத்தில் தங்கினோம். மாலை நேரத்தில் அந்த அறைக்குள் சென்று பார்த்தபோது, கதவில் தாழ்ப்பாள் இல்லாமலிருந்தது. இப்படி இருந்தால் கதவை எப்படித் தாள் போடுவது என்று அந்தப் பெண்ணிடம் கேட்டேன். 'எதற்குத் தாழ்ப்பாள், நீங்கள் எதைப் பார்த்துப் பயப்படுகிறீர்கள்?' என்று அந்தப் பெண் பதிலுக்குக் கேட்டாள். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து அச்சப்படுவதில்லை என்பதை அறிந்ததும் எனக்கு அவர்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. அங்கு சில பகுதிகள் தாய்வழிச் சமுதாய வாழ்க்கை முறையைக் கொண்டது. கலாஷ் பள்ளத்தாக்கு அப்படிப்பட்டது. அங்கே ஆண்கள் எல்லாம் வீட்டு மரச் சாமான்கள்போல. வீட்டின் பின்பக்கத்தில்தான் பெரும்பாலும் அவர்களைப் பார்க்க முடியும். வீட்டுக்கு வரும் யாரும் அவர்களிடம் பேசுவதில்லை. எதுவாக இருந்தாலும், வீட்டிலிருக்கும் பெண்கள்தான் பேசி முடிவெடுக்கிறார்கள். அந்த அம்சம் என்னை அப்படியே ஈர்த்தது. அதைப் பற்றி எழுத விரும்பினேன். நம்மை அசௌகரியப்படுத்தும் ஓரிடத்தைக் கதைக்களமாகக் கொள்ள வேண்டும், அது ஏன் என்று எல்லோரும் கேட்க வேண்டும் என்று திட்டமிட்டே அப்படி எழுதினேன்.

* எல்லோரும், 'இந்த இடம் என்றால் இப்படித்தான்'என்று நினைத்திருப்பதை உடைக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறீர்கள், சரிதானே?

ஆப்கானி்ஸ்தானை ஒட்டி வசீரிஸ்தான் என்றால் தலிபான்களின் ஆதிக்கத்தில் இருக்கும் அமைதியற்ற வன்முறைப் பிரதேசம் என்றே மேற்கத்திய பத்திரிகைகள் தொடர்ந்து சித்தரிக்கின்றன. சமாரா போன்ற எண்ணத்தில் வலுவான, சுயமாக சிந்திக்கக்கூடிய பெண்களும் அங்கு வாழ்கிறார்கள் என்பது படிக்கவே வியப்பாக இருக்கிறது.

* பத்திரிகைகள் - அதிலும் குறிப்பாக, மேற்கத்தியப் பத்திரிகைகள் பாகிஸ்தானைப் பார்ப்பது ஒரே கண்ணோட்டத்தில்தான். இந்தப் படைகள் இங்கே ஏன் என்பதற்கு விளக்கமே கிடையாது. எந்தப் பின்னணியில் அவை வளர்ந்தன?

சமாரா போன்ற பெண்கள் பாகிஸ்தான் முழுக்க இருக்கிறார்கள். ஆனால், அவர்களை நான் வெகுஜன ஊடகங்களில் பார்த்ததே இல்லை. பாகிஸ்தான் பெண்களைப் பற்றிய குறிப்பு ஏதாவது உண்டு என்றால், அது அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்பதே அல்லது சலுகைகளும் உரிமைகளும் படைத்தவர்கள் என்பது. தங்கள் நாட்டின் மோதல்களாலும் கொந்தளிப்புகளாலும் ஏற்படும் துன்ப துயரங்களைத் தாங்கிக்கொண்டு, தங்களுடைய கிராமங்களுக்கும் சமூகத்துக்கும் ஏற்படும் சோதனைகளையும் எதிர்கொண்டு தீரத்துடன் வாழ்கிறவர்கள்குறித்து ஊடகங்கள் மூலம் நான் அறிந்ததே இல்லை.

எனவே, அவர்களைப் பற்றிக் குறிப்பாக எழுத முனைந்தேன். நாட்டின் எந்தப் பகுதியிலும் வன்செயல்களால் ஏற்படும் விளைவுகளை முதலில் சந்திப்பவர்கள் பெண்களே. பாகிஸ்தான் பெண்களும் இப்படி எதிர்கொண்டுவருகிறார்கள். ஒடுக்குமுறைகளையும் வன்செயல்களை யும் சந்தித்துச் சந்தித்து, அவர்கள் மேலும் மேலும் துணிச்சல் மிக்கவர்களாகவும் வலுவுள்ளவர்களாகவும் அச்சமற்றவர்களாகவும் மாறிவிட்டனர். கொடுமை கண்டு வாளாவிருக்காமல் தங்களுக்குச் சரியென்று தோன்றுவதைச் செய்கின்றனர். இம்மாதிரி எல்லாம் நடப்பதற்கு முன்னர் செல்வாக்குள்ள பின்னணி தேவைப்பட்டது. இப்போது அப்படி அல்ல. முக்தார் மாய் அல்லது மலாலாவைப் பாருங்கள். இந்தியாவிலும் அதேபோலவே பெண்கள் எதற்கும் அச்சப்படாமல் குடும்பப் பாரங்களைச் சுமக்கின்றனர் என்பதைச் செய்திகள் மூலம் தெரிந்துகொள்ளும்போது, அதே உணர்வைப் பெறுகிறேன். அடக்குமுறைக்கு எதிராகப் போராட உங்களுக்கு ஆங்கில அறிவோ, நகர்ப்புற வாழ்க்கைப் பின்னணியோ, நீங்கள் பிறந்தது மத்திய தரக் குடும்பமாகவோ இருக்க வேண்டும் என்பது அவசியமே இல்லை. இந்தப் பிராந்தியத்தில் பெண்கள் எல்லா பிரதேசங்களிலும் போராடிவருகிறார்கள்.

* பாகிஸ்தான் அரசிடமிருந்து இந்த நூலுக்கு எந்தவிதமான வரவேற்பு கிடைக்கும் என்று கருதுகிறீர்கள்?

(சிரிக்கிறார்…) நாம் கண்டுபிடிப்போம் என்று நினைக்கிறேன். எனக்கு இப்போது உண்மையாகவே தெரியாது. இந்தியாவில் எனக்கு ஏற்பட்ட குறுகிய அனுபவத்திலிருந்து நான் தெரிந்துகொண்டது இது அரசியல் சார்ந்த புனைவாக இருந்தாலும் பாடுபடும் மக்கள் தங்களைப் போலவே பாடுபடும் மற்றொரு நாட்டு மக்களைப் புரிந்துகொள்கிறார்கள். என்னைச் சந்திக்க வந்தவர்கள் மினாவைப் பற்றியும் சமாராவைப் பற்றியுமே பேசினார்கள் அனைவரும் பெண்கள். பாதிக்கப்பட்டவர்கள்குறித்து அவர்கள் கவலைப்படுகிறார்கள்; அனுதாபப்படுகிறார்கள்.

நாவலில் வரும் கதாபாத்திரங்கள் அவர்களை மிகவும் பாதித்துள்ளன. நாவலில் வரும் மாந்தர்கள் இந்தக் கவலைகளையும் அரசியலையும் வெற்றிகொள்வார்கள். இந்த நாவலில் சில செய்திகளும் இருக்கின்றன. வசதியாக வாழ்வோரும் அது இல்லாதோரும் அந்தச் செய்தியை உணர்வார்கள் என்று நம்புகிறேன். வன்செயல்கள் பாகிஸ்தானை அழிக்கவே உதவும் என்பது அந்தச் செய்திகளில் ஒன்று. நீங்கள் யார், எதற்காக வன்முறையைக் கையாள்கிறீர்கள் என்பதெல்லாம் முக்கியம் இல்லை.

* உங்களை மதச்சார்பற்றவர் என்று நீங்கள் குறிப்பிட்டுக்கொள்கிறீர்கள். பாகிஸ்தானின் இன்றைய அரசியலில் இதற்கெல்லாம் இடம் இருக்கிறதா?

தெற்காசிய நாடுகளில் மதச்சார்பின்மை என்று கூறப்படுவது மேற்கத்திய நாடுகளில் கூறப்படுவதற்கு ஒப்பானது அல்ல. மேற்கத்திய நாடுகளில் மதம் என்றாலே ஒருவித அச்சம் அல்லது சந்தேகம் இருக்கிறது. மக்களுடைய வாழ்க்கையில் ஆன்மிகம் அல்லது மதம் இருப்பதை ஏற்க முடியாத ஒவ்வாமை அவர்களுக்கு உண்டு. நாம் எப்படி இருக்கிறோம், யாராக இருக்கிறோம் என்பது நம்முடைய அன்றாடச் சடங்குகளுக்கு மிகவும் முக்கியம். இந்தப் பகுதிகளில் மதச்சார்பின்மை என்றால் சகிப்புத்தன்மை என்பதே பொருள்.

பல்வேறுபட்ட கருத்துகளுக்கும் இடம்தரும் அனைத்தையும் உள்ளடக்கிய தத்துவமே மதச்சார்பின்மை. சிந்து மாகாணத்தில் என்னுடைய சொந்த ஊரான லார்கானாவில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் பிரார்த்தனைக்கு வரும் மக்கள் உட்கார மர பெஞ்சுகள் கிடையாது. அனைவருமே தரையில் காலை மடித்துக்கொண்டுதான் உட்காருகிறார்கள். அவர்கள் மெழுகுவத்திகளை ஏற்றுவதில்லை; அகல் விளக்குகளைத்தான் ஏற்றுகின்றனர். கன்னி மேரி படத்தின் மீது ரோஜா மலர்களை வைத்து வழிபடுகின்றனர். சிந்து மாகாணத்தில் ஜூலேலால் என்ற மகான் மீது பக்திகொண்டவர்கள் அதிகம். அவரை முஸ்லிம்களும் இந்துக்களும் ஒரே நேரத்தில் வழிபடுகின்றனர். பாரம்பரியமும் புதுமையும் கலந்த பகுதிகளிலிருந்தே நாம் வந்திருக்கிறோம்.

* ஆக, அரசிலிருந்து மதத்தை விலக்குவது கூடாது என்கிறீர்கள்?

நாம் இருக்கும் உலகத்தில் மதமும் உடன் சேர்க்கப்பட்டிருக்கிறது, அதற்கென்று நம்மிடையே ஓரிடம் இருக்கிறது. அதை நாம் அகற்றிவிட முடியாது. எவரையும் புறந்தள்ளாத அனைவரையும் அரவணைத்துச் செல்கிற மதச்சார்பின்மையை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

* அரசியலுக்கு வர மாட்டேன் என்கிறீர்கள். ஆனால், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆதரவாளராக இருக்கிறீர்கள். கட்சி உறுப்பினராக உங்களைப் பார்க்கிறீர்களா அல்லது உங்களுடைய தொடர்பு அவ்வளவு வலுவற்றதா?

(சிரிக்கிறார்) நல்ல கேள்வி. பாகிஸ்தானில் பல அரசியல் குரல்கள் இல்லை. இரண்டு அல்லது மூன்றுதான். அவர்களும் பெரும்பாலான கொள்கைகளில் ஒருமித்த கருத்துடையவர்கள். அவர்கள் பயன்படுத்தும் வாக்கியங்கள்தான் வித்தியாசமானவை. உங்களைச் சுற்றி உள்ளவர்கள் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால், அவர்களுக்காக நீங்கள் பாடுபடுவது உண்மையாக இருந்தால், அரசியல்வாதியாக இருந்தால்தான் முடியும். அந்த வகையில் நாம் அனைவருமே அரசியல்வாதிகள்தான், இல்லையா?

* பிறந்தது முதல் 11 வயது வரை பாகிஸ்தானுக்கு வெளியிலேயே இருந்திருக்கிறீர்கள். பாகிஸ்தானை மையமாகக் கொண்ட நாவலாசிரியராக உங்களை இனி காண முடியுமா?

கதை எழுதுவது பிடிக்கும் என்பதால், ஆம் என்று சொல்லவே விரும்புகிறேன். ஆம் என்று சொல்லிவிட்டால், கதையும் பாட்டும் கலந்த நாட்டிய நாடகமாகத் தொடர்ந்து எழுத நேருமோ என்றும் அஞ்சுகிறேன் (சிரிக்கிறார்). நான் நிறைய எழுதவே விரும்புகிறேன். மேலும் பல கதைகளை எழுதவே விரும்புகிறேன். கதைகளைச் சொல்லி, அவற்றின் மூலம் மக்களை நெருங்குவதிலும் ஒரு தொடர்பு ஏற்படுகிறது.

தமிழில்:சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x