Last Updated : 02 Jun, 2017 09:12 AM

 

Published : 02 Jun 2017 09:12 AM
Last Updated : 02 Jun 2017 09:12 AM

பறை இசையைப் பறைசாற்றிய ரெங்கராஜன்!

கலையிலும், கருவியிலும் புதுமையைப் புகுத்திய கலைஞன்

தமிழகத் தோல் இசைக் கருவிகளில் மிக முக்கியமானது பறை. பறை ஆட்டம், தப்பாட்டம் என இரு பெயர் தாங்கிய பறை இசை, வடிவ மாற்றங்களால் உரு மாறினாலும் சங்க காலம் முதல் சம காலம் வரை அழிவின்றி அதிரோசை எழுப்பிக்கொண்டிருக்கிறது. பறை இசையைப் பறைசாற்றிய பெருங்கலைஞன் ரெங்கராஜன், 29.5.17ல் காலமானார். அவரின் புகழுக்கும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கும் பெரும் பங்குண்டு.

தஞ்சையும் பறையிசையும்

தமிழகச் சூழலில் கோயில் திருவிழாக்களிலும் இறப்புச் சடங்காடலிலும் இசைக்கப்படும் வடிவமாக பறை நின்றிருந்த நிலையில், பறை இசையையும் ஆட்டத்தையும் மேடை ஏற்றி நவீன வடிவம் தந்தவர்கள் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத் துறை படைப்பாளிகள் என்றுதான் சொல்ல வேண்டும்.

தனித்திறன் மிக்க பறைக் கலைஞர்களைக் கண்டறிந்து, மேடைக்கு அறிமுகப்படுத்திய பெருமை பேராசிரியர்கள் கு.முருகேசன், கே.ஏ.குணசேகரன், சே.ராமானுஜம், ராசு, மு.ராமசாமி ஆகியோருக்கு உரியது. இதன் பின்னரே, தமிழகத்தில் பெரிய அளவில் பறை இசையின் தாக்கம் மேடை நிகழ்வுகளில் மலரத் தொடங்கிற்று. இம்மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் மற்றும் மூல மையமாக அமைவது மத்திய அரசின் தென்னகக் கலைப் பண்பாட்டு மையம்.

இத்தகு படைப்பு மையங்களின் வழியும் படைப்பாளிகளின் வழியும் கண்டெடுக்கப்பட்ட பறை இசைக் கலைஞனே ரெங்கராஜன். தஞ்சை பெருநகரின் அருகில் அமைந்துள்ள ரெட்டிபாளையம் ரெங்கராசின் ஊர். வெற்றிலையால் சிவந்து நிற்கும் வாயும், வட்டமிட்ட நெற்றிப் பொட்டும், பச்சை நிறம்-காவி நிறம் வீசும் வேட்டியும் இவரின் தனித்த அடையாளங்கள். பறை இசையைப் பாரம்பரியக் கலையாகக் கொண்டிருந்த தமிழர்களைத் தவிர்த்து, பலருக்கும் பறை இசையைக் கற்றுத்தந்த குருவாக இருந்தவர் இவர். தமிழ் நிலம் முழுக்க ஏகலைவனைப் போலப் பல சீடர்களும் உண்டு.

தாய்மாமனிடம் கற்ற கலை

தன் தாய்மாமாவாகிய காமாச்சிபுரம் முருகையனிடம் ரெங்கராஜன் பறை இசையை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தார். இசையின் வேகத்தைவிட ரெங்கராஜன் பறையைக் கற்றுக்கொண்ட வேகம் அதிகமாகவே இருந்தது. கற்றுக்கொண்ட சில ஆண்டுகளிலேயே மாமாவின் ஆசியுடன் பறை இசைக் குழுவினை உருவாக்கினார். கோயில் திருவிழா, இறப்புச் சடங்கு ஆகிய நிகழ்வுகளுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்து வந்த நிலையில், பேராசிரியர்கள் கே.ஏ.குணசேகரன், கு.முருகேசன் ஆகியோரின் கண்களில் சிக்கினார். மண்ணில் அசைந்து ஆடிய கலை மேடைக்கு ஏறியது. பறை இசையை மேடைக்கான கலையாக மாற்றிடும் சரியான பயிற்சியினை மத்திய தென்னக கலைப் பண்பாட்டு மையம் ராமானுஜம் தலைமையில் வழங்கியது. ரெங்கராஜன் மேடைக்கான நவீன ஒருங்கிணைப்பு மற்றும் அடவு முறையினை முழுமையாக ஏற்றுக்கொண்டு புதிய நிகழ்வுகளைக் கட்டமைத்தார்.

‘வீர சோழ தப்பாட்டக் குழு’ என்ற பறையாட்டக் குழுவையும் உருவாக்கினார். இக்குழுவே மேடைக்கான முதல் பறையாட்டக் குழுவாக விளங்குகிறது. இக்குழுவினை கே.ஏ.குணசேகரன் தன் ‘தன்னானே’ குழுவுடன் அழைத்து வந்து பல மேடைக்கான வாய்ப்பினை பெற்றுத்தந்தார். மேடைக்கான பல புதிய ஆடல் வடிவங்களையும் அடவு முறைகளையும் ரெங்கராஜன் கட்டமைத்துக்கொண்டே இருந்தார்.

இக்காலகட்டத்தில் ‘கொங்கைத்தீ’ நாடகத்தை பேராசிரியர் ராமானுஜமும், இந்திரா பார்த்தசாரதியின் ‘நந்தன் கதை’ நாடகத்தை பேராசிரியர் ராசும் இயக்கிக்கொண்டிருந்தனர். இவ்விரண்டு நாடகங்களிலும் பறை இசையின் தேவையும் ஆடலின் தேவையும் மிகுந்திருந்தது. இவ்விரு நாடகங்களிலும் ரெங்கராஜனின் பறை இசையும் ஆடலுமே பிரதானமாக அமைந்தது. அந்த நாடகம் இந்திய அளவில் எடுத்துச் செல்லப்பட்டதால், ரெங்கராஜனின் புகழும் விரிந்தது. தமிழ் நாடகங்களில் பறை இசை தனித்த அடையாளத்தைக்கண்டது.

இசையில் புதுமை

பறை இசையுடன் மிருதங்க நடை, தவில் நடை, பம்பை நடைகளை இணைத்து இசைப்பதிலும் ரெங்கராஜன் வெற்றி கண்டார். இப்புதிய வடிவம் பலருக்கும் பிரமிப்பைத் தந்தது. இதன் விளைவாக நாட்டியக் கலைஞர் தேவிகா அமையாருடன் இணைந்து முட்டுக்காட்டில் பல கலை நிகழ்வுகளை உருவாக்கினார். இங்கு வெளி நாட்டவர்கள் பலருக்கும் பறை ஆடலை இசை அடிப்புடன் கற்றுக்கொடுத்தார். இதன் பின்னர் தொழில் முறை சாராத மாணவர்கள், பெண்கள், பொது நல அமைப்பினர், இயக்கம் சார்ந்தவர்கள் எனப் பலருக்கும் பறை இசையை ஆடலுடன் கற்றுத்தரும் வழிமுறைகளை உருவாக்கி குருவாக விளங்கினார்.

செவ்வியல் ஆடலில் நவீன ஆடலையும் இசையையும் இணைத்து ஆடலை உருவாக்கும் முயற்சியில் இருந்த நாட்டியக் கலைஞர் அனிதா ரத்தினத்துக்கு ரெங்கராஜன் அறிமுகம் ஆனார். செவ்வியல் ஆடலுக்கும் அதன் அடவுக்கும் பறை இசையை இணைத்துத் தந்தார்.

இது ரெங்கராஜனுக்குத் தனித்த புகழைப் பெற்றுத்தந்தது. பறை இசைக் கருவி செய்வதிலும் தனித்துவம் மிக்கவராக விளங்கினார். பறை கட்டையின் வடிவத்தை ஆச்சாரியுடன் சென்று இவரே வடிவமைப்பார். தோலினைப் பதப்படுத்தி இழுவைத்தன்மை, இசைத் தன்மைகளை சோதித்துப் பறையைத் திருத்தியமைப்பார். தன் வாழ்நாளில் சுமார் 7 ஆயிரம் பறைகளைச் செய்து கொடுத்துள்ளார். அவை இந்தியாவைக் கடந்து உலகம் முழுவதும் இசை எழுப்பிக் கொண்டிருக்கின்றன. ரெங்கராஜன் செய்யும் பறை தனித்த ஓசை நயம் மிக்கது என்பார் கேஏஜி.

இசை நிலைத்திருக்கும்

இந்திய அளவில் நடைபெற்ற இசை நிகழ்வுகள் பலவற்றில் பங்கு கொண்ட ரெங்கராஜன், 6 குடியரசு விழாக்களில் தமிழகம் சார்பில் டெல்லி செங்கோட்டையில் பறை முழங்கிய பெருமைக்குரிய கலைஞர்.

இவர் பறை இசை ஆடலுக்காகவும் பறை இசை பயிற்சி தரவும் பயணித்த வெளிநாடுகள் ஏராளம். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, குவைத், ரஷ்யா என்று அந்தப் பட்டியல் நீளும்.

இவரின் குழுவின் சக தோழர்களாக ஜெய்சங்கர், கோவிந்தராஜ், கலியன், கணேசன், குமார், திரைப்பாடப் பாடகி சின்னப்பொண்ணு, இளையவராக து.விஜயகுமார், இவரின் மூத்த மகன் ராஜ்குமார் ஆகியோர் இருந்தனர். இவருக்கும் எனக்குமான உறவு 15 ஆண்டுகால நட்பு. ‘சிறப்பதிகாரம்’ என்ற என் நாடகத்துக்குப் பறை இசை அமைத்துக் கொடுத்தார் ரெங்கராஜன்.

இவருடன் தமிழக அரசு சார்பாக புதுடெல்லி தேசிய கலை நிகழ்வுக்குத் தலைமை ஏற்றுச் சென்றுள்ளேன். ‘சென்னை சங்கம’த்தில் இவரின் குழுவை வழிநடத்தி இருக்கிறேன். இசையாகவும், இசைக் கருவியாகவும் என்றும் நிலைத்திருக்கும் ரெங்கராஜனின் பறை இசை.

- சி.கார்த்திகேயன் உதவிப் பேராசிரியர், திரைப்படம் & நாடகத்துறை , தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம்

தொடர்புக்கு: karthikeyan251973@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x