Published : 29 Nov 2013 12:00 AM
Last Updated : 29 Nov 2013 12:00 AM

பெண்களின் குற்றமா பாலியல் வன்முறை?

பாலியல் வன்முறைச் செய்திகள் வெளிவரும் போதெல்லாம் கூடவே சமூகத்தின் இன்னொரு முகமும் வெளிப்படுகிறது. இந்த முறை அதிகம் பேசப்படுவது பாதிக்கப்பட்டவரின் ‘அந்தரங்கம்’ பற்றியது. கோவாவில் நடந்த பாலியல் வன்முறைச் சம்பவம் தொடர்பாகப் பேசும்போது எல்லோரும் அவரவர் மனதுக்குத் தோன்றிய நியாயங்களையும் சேர்த்தே பேசுகின்றனர். இந்த முறை இந்தச் சம்பவத்தை வெளிக்கொணர்ந்தவை சமூக ஊடகங்கள். வெளிக்கொணர்ந்தது மட்டுமல்லாமல், அதை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்றவையும் அவைதாம்.

வலையுலக விதண்டாவாதிகள், வெறியர்கள், அறிவிலிகள் என்று எல்லோரையும் ஒரு தளத்தில் ஒன்றுசேர்ப்பவை சமூக ஊடகங்கள்தான். முக்கியமான ஒரு சம்பவத்தையோ அறிவிப்பையோ அனைவருக்கும் விரைவாகக் கொண்டுசெல்ல வேண்டுமென்றால், சமூக ஊடகங்கள்தான் ஏற்றவை.

தேஜ்பால் விவகாரத்திலும் சம்பவம் வெளியான சில மணி நேரங்களுக்கெல்லாம் அந்தச் செயல் தொடர்பாக ஏராளமான மின்னஞ்சல்கள் வெளியாகின. ஒவ்வொன்றும் மக்கள் பார்வைக்கு வரவர ஏராளமான தகவல்கள் தெரிந்துவிட்டன. இப்படி விவரமாக எல்லாவற்றையும் சொல்லத் தொடங்கினால், சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தீங்கு ஏற்படலாம் என்ற எண்ணமும் அனைவருக்கும் தோன்றியிருக்கிறது. எனவே, தெஹல்காவின் நிர்வாக ஆசிரியர் ஷோமா சௌத்ரிக்கு அந்தப் பெண் எழுதிய கடித நகல், மக்களுடைய பார்வையிலிருந்து நீக்கப்பட்டது. இப்போதுதான் முதல்முறையாக, சமூக ஊடகங்கள் தாங்களாகவே தணிக்கை செய்துகொண்டிருக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்ணின் எதிர்காலம் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

பாலியல் சம்பவங்களை எப்படிச் சொல்வது?

பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான தகவல்களை எப்படி வெளியிடுவது, எப்படிச் சொல்வது என்ற கேள்விகளை இது எழுப்பியிருக்கிறது. இம் மாதிரி சம்பவங்களை விவரமாக எழுதும்போது அல்லது சொல்லும்போது பாதிக்கப் பட்ட பெண்ணும் அவருடைய குடும்பத்தாரும்தான் தீராத பழிக்கும் அவமானத்துக்கும் உள்ளாகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணின் திருமணம், வேலை, எதிர்காலம் எல்லாமே இதனால் பாதிப்புக்குள்ளாகிறது. அனுதாபத்துக்கு உரிய பெண் கேலிக்கும் ஊர் வம்புக்கும் ஆளாகிறாள்.

“ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையுமா, இந்தப் பெண் ஏன் அந்த நேரத்தில் அங்கே போனாள், இப்படியெல்லாம் ஆடை அணிந்து சென்றால் சும்மா இருப்பார்களா, பெண்களை அதிகம் படிக்கவைத்தாலே இப்படித்தான்” என்றெல்லாம் வம்புமடங்கள் வாய்பிளந்து பேசி மகிழும் நிலை ஏற்படுகிறது. நடந்தது ஒன்றாக இருக்க, அதற்கு கண், காது, மூக்கு வைத்துப் பேசி, சம்பவத்துக்கு அந்தப் பெண்ணும் காரணம் அல்லது உடந்தை என்கிற மாதிரி முடிப்பதும் உண்டு. இப்படியெல்லாம் நடக்கும் என்பதால்தான் நடந்துவிட்ட மோசமான சம்பவத்தை மூடி மறைப்பதும், குறைத்துச் சொல்வதும் நடக்கிறது.

மின்னஞ்சல்தான் தெரிவித்தது

நடந்த சம்பவம் குறித்து தெஹல்கா நிர்வாக ஆசிரியர் ஷோமா சௌத்ரிக்கு தலைமை ஆசிரியர் தருண் தேஜ்பால் அனுப்பிய மின்னஞ்சலும், பிறகு ஷோமா சௌத்ரி தனது அலுவலகத்தின் பிற ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலும்தான் நடந்த சம்பவத்தை முழுமையாகத் தெரிவிக்கின்றன.

‘ஜாடையைத் தவறாகப் புரிந்துகொண்டது’, ‘துரதிர்ஷ்டவசமான சம்பவம்’, ‘தவறான நடத்தை’ என்றெல்லாம் தேஜ்பால் தன்னுடைய மின்னஞ்சலில் கூறியிருக்கிறார். இருவரும் பேசி ஒப்புக்கொண்டே எல்லாம் நடக்கத் தொடங்கிய தொனி இதில் ஒலிக்கிறது.

“நடந்த சம்பவத்துக்காக எனக்கு நானே தண்டனை கொடுத்துக்கொள்ளும் வகையில் அடுத்த ஆறு மாதங்களுக்கு அலுவலகம் வர மாட்டேன்” என்று தேஜ்பால் அனுப்பிய மின்னஞ்சலைப் படித்துவிட்டு, அவரை ஆஹா… ஓஹோ என்று பாராட்டினார் மும்பை திரைப்படப் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர். உடனே, அவரை மற்றவர்களெல்லாம் பிலுபிலுவெனப் பிடித்த பிறகே, “நடந்தது என்ன என்ற முழு விவரம் தெரியாது, குடிபோதையில் ஏதோ செய்திருக்கிறார் என்று நினைத்துச் சொல்லிவிட்டேன்” என்று மன்னிப்புக் கேட்டார் அக்தர்.

இப்படி ஒரு சம்பவம் நடந்ததுகுறித்து முதல்முறை யாகக் கேள்விப்பட்டவுடனேயே ஒரு முடிவுக்கு வந்துவிடுவோர்தான் அதிகம். “வயது வந்த இருவர் குடித்திருக்கிறார்கள், குடிபோதையில் ஏதோ நடந்திருக்கிறது” என்றே இந்த விவகாரம்குறித்து முதலில் அறிந்தவர்களில் பலர் முடிவுக்கு வந்துள்ளனர். அடுத்தடுத்து மின்னஞ்சல்களில் வந்த தகவல்களைப் படித்த பிறகே, அது எவ்வளவு கொடூரமானது என்று தெளிவுபெற்றனர்.

முட்டாள்தனமானது

இந்தச் சம்பவங்களிலேயே முட்டாள்தனமானது, மன்னிக்க முடியாத குற்றம் எதுவென்று கேட்டால், அந்தப் பெண் நிருபரின் பெயர், அந்தப் பெண்ணின் தந்தை குறித்த விவரங்கள், தேஜ்பாலின் மகளுடைய பெயர், கோவாவில் உள்ள அந்த ஹோட்டலின் பெயர் ஆகிய எல்லாவற்றையும் மறைக்காமல் அப்படியே வெளியிட்டதுதான். இவற்றைக் கொண்டு அந்தப் பெண் யார் என்பதை நெருங்கியவர்கள் தெரிந்துகொண்டுவிட முடியும். நடந்த குற்றச் சம்பவத்தை மறைக்காமல் இந்தப் பெயர்களையெல்லாம் மறைத்திருக்க முடியும். துரதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. அதனால்தான், பாலியல் செய்திகளை அறிந்துகொள்ளும் ஆர்வம் சமூக ஊடகங்களுக்கு அதிகம் என்று குற்றம் சாட்டுகின்றனர்.

ஏதோ குற்றம் நடந்திருக்கிறது என்றதும் ஆர்வம் மேலிடத்தான் மக்கள் அதிகம் இதைத் தெரிந்துகொள்ள முற்பட்டனர். இதைத் தெரி்ந்துகொள்ள முயன்ற அனைவருமே பாலியல் வன்முறையைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் மிக்கவர்கள் என்று கூறுவது தவறான குற்றச்சாட்டு. உண்மையில், இதைத் தெரிந்துகொண்டதும் அறச் சீற்றம் கொண்டவர்களே அதிகம். இந்தச் சம்பவத்தில் மட்டுமல்ல, இதைப் போன்ற இதர துரதிர்ஷ்டவசமான சம்பவங்களிலும் தவறுகளைக் கண்டித்ததும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நின்றவர்களும் அவர்கள்தான்.

பாதிக்கப்பட்டவருக்கு இரட்டைச் சுமை

பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண் காலமெல்லாம் இந்தச் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப் படாமல் விலக்கப்படுகிறார். இந்தக் கண்ணோட்டத்தை மாற்றியே தீர வேண்டும். முறையற்ற செயல்குறித்து புகார்செய்த அவருடைய துணிச்சலைப் பாராட்டும் அதே வேளையில், என்ன நடந்தது என்று அவர் அடுத்தடுத்து ஆவணப்படுத்தியிருக்கும் அச்சமற்ற தன்மைதான் இந்தச் சம்பவத்தில் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. நடந்ததை வெளியே சொன்னால், நமக்குத்தான் அவமானம் என்ற காரணத்தாலேயே பாதிக்கப்பட்டவர்கள் கூசிக் குறுகி மௌனம் சாதிப்பது, குற்றமிழைத்தவர்களுக்குச் சாதகமாகப் போய்விடுகிறது. பாதிக்கப்பட்ட பெண் தலைகுனிந்துவர, குற்றமிழைத்தவருக்கோ தலைநிமிர்ந்து நடக்கும் துணிவு ஏற்பட்டுவிடுகிறது. வன்முறைக்கு ஆளான சுமை ஒரு பக்கம், மான அவமானத்துக்கு அஞ்சி எதையும் வெளியே சொல்ல முடியாமல் உள்ளுக்குள்ளேயே மறுகுவது மறுபக்கம் என்று இரட்டைச் சுமைக்கு ஆளாகிறார்கள். இதனால், குற்றமிழைத்த ஆண்கள் - பொய்கள், அரை உண்மைகள், நியாயப்படுத்தல்கள், பெண்ணின் மீதே பழியைச் சுமத்துதல்கள் ஆகியவற்றைக் கையாண்டு - நடத்தை கெட்டவள் என்று பழிபோட்டுத் தப்பிக்க முடிகிறது.

பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்ணால் அதுகுறித்து விவாதிக்க முடியாது. சமூகமும் சட்ட அமைப்புகளும்தான் அதை அவளுக்கு எளிதாக்க வேண்டும். பாரபட்சமில்லாமல் துல்லியமாக நடந்த சம்பவத்தைத் தெரிவிப்பதன்மூலம்தான் சமூக ஊடகங்கள் அந்தப் பெண்ணுக்கு உதவ முடியும். நகை, பணத்துக்காக வீட்டு உரிமையாளரைக் கூர்மையான கத்தியால் குத்திவிட்டுத் தப்பியோடும் கொள்ளைக்காரனின் செயலைப் போன்றதுதான் பாலியல் வன்முறையும். முதலில் கூறிய சம்பவத்தில் கத்திக்குத்து பட்டவர்மீது சந்தேகப்படுவதோ, அவர்தான் காரணம் என்று குற்றம்சுமத்துவதோ இல்லை; அவர்மீது அனுதாபமே காட்டப்படுகிறது. கத்தியால் குத்திவிட்டுக் கொள்ளையடித்தவனைக் கண்டுபிடித்துத் தண்டிக்க வேண்டும் என்பதே கோரிக்கையாக இருக்கிறது. அதே நிலை பாலியல் வன்முறைச் சம்பவங்களிலும் எடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணை அவமானப்படுத்துவதை விட்டுவிட்டு, கோழைத்தனமும் ஈனத்தனமும் மிக்க இந்தச் செயலைச் செய்தவர்கள் சமூகத்தில் நடமாடவே முடியாத நிலைமை ஏற்பட வேண்டும். அப்படியொரு நிலைமை வந்தால்தான், அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறுகளைச் செய்துவிட்டு, அதை மூடிமறைக்கும் நிலைமை மாறும். பாலியல் வன்முறை என்பது கொடிய நோய்க்கிருமி. அதை மூடி மறைக்காமல் பகிரங்கம் என்கிற சூரிய வெளிச்சம் படுமாறு அம்பலப்படுத்தினால்தான் அது ஒழியும்.

தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x