Last Updated : 14 Feb, 2017 09:16 AM

 

Published : 14 Feb 2017 09:16 AM
Last Updated : 14 Feb 2017 09:16 AM

இதயம் காக்கும் பேஸ்மேக்கரில் புதிய தொழில்நுட்பம்!

பேஸ்மேக்கர் போன்ற உயிர் காக்கும் கருவிகளை அரசே தயாரிக்க முன்வர வேண்டும்

மருத்துவத்தின் அதிவேக வளர்ச்சியின் வெளிப்பாடாகவும் புதிய தொழில்நுட்பத்தின் பலனாகவும் சமீபத்தில் வந்துள்ளது, கேப்சூல் பேஸ்மேக்கர். இது சற்றே பெரிய கேப்சூல் வடிவில் இருக்கிறது. இதன் எடை மொத்தமே 2 கிராம்தான். இதை இதயத்தில் பொருத்துவதற்கு அறுவைச் சிகிச்சை தேவை இல்லை!

என் நண்பர் ஒரு பத்திரிகையாளர். “அப்பாவுக்கு அடிக்கடி மயக்கம் வருகிறது” என்று என்னிடம் அழைத்துவந்தார். பரிசோதித்ததில் அவருடைய நாடித்துடிப்பு 50-க்கும் குறைவாக இருந்தது. அவசர சிகிச்சையை மேற்கொண்டு நாடித்துடிப்பைச் சரிசெய்தேன். பின்னர் அவரிடம், “இதற்குப் பெயர் பிராடிகார்டியா (Bradycardia). நாடித்துடிப்பு குறைவாக இருக்கும் நிலைமை இது. இதயம் துடிக்கச் சிரமப்படுவதால் மூளைக்கு ரத்த ஓட்டம் குறைந்து மயக்கம் வருகிறது. இதற்கு ‘பேஸ்மேக்கர்’(Pacemaker) பொருத்திக்கொள்வதுதான் நிரந்தரத் தீர்வு” என்று சொல்லி, அடுத்தகட்ட சிகிச்சைக்கு அனுப்பிவைத்தேன்.

நண்பர், “இது என்ன மாதிரியான சிகிச்சை? எவ்வளவு செலவாகும்?” என விசாரித்தார். “குறைந்தது இரண்டு லட்சம் ரூபாய் ஆகும்” என்றேன். செலவை நினைத்து முதலில் மலைத்தார். “காப்பீட்டுத் திட்டத்தில் இந்தச் செலவைத் திரும்பப் பெற முடியுமா?” என்று கேட்டார். “முடியும்” என்றதும், சிகிச்சைக்குச் சம்மதித்தார். சரி, இதயத்தில் பொருத்தப்படும் ‘ஸ்டென்ட்’ மாதிரி பேஸ்மேக்கரிலும் பல வகைகள் உண்டா? விலை வித்தியாசம் இருக்குமா?

பேஸ்மேக்கர் என்றால் என்ன?

நம் இதயத்தின் வலது மேலறையில் ஒரு சிறிய ஜெனரேட்டர் மாதிரியான பயன்பாட்டில் ‘மின் கணு’(SA Node) உள்ளது. இதுதான் மின்சாரத்தை உற்பத்திசெய்து இதயத்தைத் துடிக்கச் செய்கிறது. சிலருக்கு இந்த இயற்கை மின்னோட்டம் உற்பத்தி ஆவதிலும், இதைத் இதயத் தசைகளுக்குக் கொண்டுசெல்வதிலும் சிரமங்கள் ஏற்படும். அப்போது அவர்களுக்கு நாடித்துடிப்பு குறைந்துவிடும். அதனால், அடிக்கடி நெஞ்சில் படபடப்பு ஏற்படும். அதிகம் வியர்க்கும். தலை சுற்றி, மயக்கம் வந்து விழுந்துவிடுவார்கள். முக்கியமாக, 50 வயதைக் கடந்தவர்களுக்கு இந்தப் பிரச்சினை அதிகம்.

இவர்களுக்கு மாத்திரை, மருந்துகளில் சரிசெய்ய முடியவில்லை என்றால், இதயத்தைச் செயற்கை முறையில் தூண்டி, சரியான எண்ணிக்கையில் துடிக்கச் செய்யும் கருவிக்கு ‘பேஸ்மேக்கர்’ என்று பெயர். இது ஒரு சிறிய தீப்பெட்டி அளவில் இருக்கும். 30 கிராம் எடை கொண்ட இக்கருவியில் பேட்டரி, மின் தூண்டல்களை உற்பத்திசெய்யும் ஜெனரேட்டர், சிறிய எலெக்ட்ரானிக் சர்க்யூட், இதயத்தின் அறைகளுக்கு மின்சாரத்தைக் கொண்டுசெல்லும் வயர்கள் ஆகியவை இருக்கும். நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்து, சிறிய அறுவைச் சிகிச்சை செய்து, மார்பில் வலது காரை எலும்புக்கு (Clavicle) அருகில் புதைத்து, தோலைத் தையல் போட்டு மூடிவிடுவார்கள். இதயத்தை இணைக்கும் கழுத்துச்சிரை (Carotid Vein) எனும் ரத்தக்குழாய் வழியாக இதன் வயரை இதய அறைக்குள் கொண்டுசென்று பொருத்திவிடுவார்கள்.

இது ஒரு கடிகாரத்தைப் போல் இயங்குகிறது. இதில் இதயம் எத்தனை முறை துடிக்க வேண்டும் என முறைப் படுத்தப்பட்டிருக்கும். கருவி இயங்கத் தொடங்கியதும், குறிப்பிட்ட இடைவெளியில் மின்தூண்டல்கள் கிளம்பி இதயத்தைத் துடிக்க வைக்கும். பேஸ்மேக்கரிலிருந்து குறிப்பிட்ட அளவில் மின்தூண்டல்கள் இதயத்துக்குச் சென்றுகொண்டே இருப்பதால், இதயம் தொடர்ந்து துடிக்கிறது. நோயாளியின் தேவைக்கேற்ப இதயத் துடிப்பின் வேகத்தை வெளியிலிருந்தே மாற்றியமைக்கவும் இக்கருவியில் வசதியுள்ளது. ஒருமுறை பொருத்தப்படும் இக்கருவி, குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு நல்ல நிலையில் இயங்கும். அதற்குப் பிறகு, புதிய கருவியைப் பொருத்திக்கொள்ள வேண்டும். இதன் விலை ரூ. 1.5 லட்சம். தற்போது வயர் இல்லாத பேஸ்மேக்கர் கருவி வந்துள்ளது. நோயாளிக்கு அறுவைச் சிகிச்சை செய்யாமல் இது பொருத்தப்படுவதால் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் விலை ரூ. 3 லட்சம். இம்மாதிரியான பேஸ்மேக்கர் பொருத்திக்கொண்டவர்களால் அடுத்தபடியாக எந்தச் சந்தர்ப்பத்திலும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க முடியாது என்பது ஒரு பெரும் குறை.

கேப்சூல் பேஸ்மேக்கர்

மருத்துவத்தின் அதிவேக வளர்ச்சியின் வெளிப்பாடாகவும் புதிய தொழில்நுட்பத்தின் பலனாகவும் சமீபத்தில் வந்துள்ளது, கேப்சூல் பேஸ்மேக்கர். இது சற்றே பெரிய கேப்சூல் வடிவில் இருக்கிறது. இதன் எடை மொத்தமே 2 கிராம்தான். இதில் ஜெனரேட்டர் மட்டுமே உள்ளது; மின்சார வயர்கள் இல்லை. இதை இதயத்தில் பொருத்துவதற்கு அறுவைச் சிகிச்சை தேவை இல்லை. தொடையில் உள்ள ரத்தக்குழாய் வழியாக இதைக் கொண்டுசென்று, நேரடியாக இதயத்தின் வலது கீழறைக்குள் பொருத்திவிடுகிறார்கள். இதிலுள்ள கால்கள் போன்ற அமைப்பு இதயத்தைக் கவ்விப் பிடித்துக்கொள்கிறது. குறைந்தது 10 ஆண்டுகளுக்குப் பலன் தருகிறது. முதியவர்களுக்கு மிகவும் ஏற்றது. இதைப் பொருத்திக்கொண்டவர்கள் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்க்க முடியும் என்பது இதன் மிகப் பெரிய பலன். இதன் விலை ரூ. 8 லட்சம். தற்போது பயன்பாட்டில் உள்ள பேஸ்மேக்கர்கள் பெரும்பாலும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவை என்பதால் விலை அதிகம்.

அரசு என்ன செய்யலாம்?

கடந்த ஐந்து ஆண்டுகளில் பேஸ்மேக்கர் பொருத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகமாகியுள்ளது என்கிறது மருத்துவ ஆய்வு ஒன்று. இது தருகிற தரவுகளின்படி, நாட்டில் ஆண்டுதோறும் இதயத்துடிப்புக் கோளாறு ஏற்பட்டவர்களில் சுமார் 60 ஆயிரம் பேர் பேஸ்மேக்கரைப் பொருத்திக்கொள்கிறார்கள் என்பதும், சுமார் 60% பேர் பணம் செலவழிக்க வழியில்லாமல் மாத்திரைகளைச் சாப்பிட்டுச் சமாளிக்கிறார்கள் என்பதும் உறுதியாகி உள்ளது. இவர்களுக்கும் பேஸ்மேக்கரைப் பொருத்திக்கொள்ள வாய்ப்பு கிடைத்தால், இன்னும் கூடுதலாக 10 ஆண்டுகள் வரை உயிர் வாழலாம் என்றும் இந்த ஆய்வு பரிந்துரை செய்கிறது.

‘அனைவருக்கும் நலவாழ்வு’ என்ற பெயரில், தேசிய அளவிலான திட்டம் ஒன்று உள்ளது. மருத்துவக் கருவிகள், புதிய தொழில்நுட்ப வசதிகள் ஆகியவை பொருளாதாரத்தில் கடைக்கோடியில் உள்ளவர்களுக்கும் கிடைக்க வழிசெய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கம். இது சரியானபடி செயலுக்கு வரவேண்டுமானால், பேஸ்மேக்கர் போன்ற உயிர் காக்கும் கருவிகளை அரசே தயாரிக்க முன்வர வேண்டும். இவை உள்நாட்டில் தயாரிக்கப்படுவதை ஊக்குவிக்க வேண்டும். அதற்கான மருத்துவக் கட்டமைப்புகள், மருத்துவர்களுக்குத் தேவையான பயிற்சிகள் மற்றும் நிதி ஒதுக்கீடு போன்றவற்றை வளர்த்தெடுப்பதிலும் அக்கறை காட்ட வேண்டும். ‘உயிர் காக்கும் சிகிச்சைகள் அனைத்துத் தரப்பினருக்கும் சென்றடைய வேண்டும்’ என்ற தேசிய நலவாழ்வுக் கொள்கையை முறைப்படி நடைமுறைப்படுத்த வேண்டியது அரசின் கடமைதானே!

- கு.கணேசன், பொதுநல மருத்துவர்,

தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x