Last Updated : 17 May, 2017 09:10 AM

 

Published : 17 May 2017 09:10 AM
Last Updated : 17 May 2017 09:10 AM

தலித் நிலங்கள் களவாடப்பட்டது எப்படி?

செங்கல்பட்டு மாவட்டத்தின் தற்காலிக ஆட்சியாளராக இருந்த ஜே.எச்.ஏ. திரமென்ஹீர், “ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட உடல்களுடனும், அழுக்கும் - கந்தலுமான அரைகுறை ஆடைகளுடனும், கல்வியறிவு ஊட்டப்படாமலும், கவனிக்கப்படாமலும், தொழுநோய் உள்ளிட்ட நோய்களால் சிறுகச் சிறுக தின்னப்பட்டும், பிராணிகளைப் போல வேட்டையாடப்பட்டும், மனிதாபிமானமே சிறிதும் இல்லாமல் புறக்கணிக்கப்பட்ட நிலையில்தான் ஒடுக்கப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர்” என்று 1891-ல் அன்றைய பிரிட்டிஷ் அரசுக்கு ஓர் அறிக்கையை அனுப்பினார். அவர்களுடைய வாழ்க்கைத் தரம் உயரவும், அவர்கள் மனிதர்களாக நடத்தப்படவும், வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் முன்னேற்றம் பெறவும், அவர்களும் நிலவுடைமையாளர்களாக இருப்பது அவசியம் என்று அந்த அறிக்கையில் அவர் வலியுறுத்தியிருந்தார்.

அந்த அறிக்கை பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் 1892 மே 16-ல் விவாதத்துக்கு வந்தது. இங்கிலாந்து அரசில் இந்திய விவகாரங்களுக்கான துணைச் செயலாளராகப் பொறுப்பில் இருந்த ஜார்ஜ் நத்தானியேல் கர்சன், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலை மேம்பட தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு வெளியுறவுத் துறைச் செயலரும் மதறாஸ் மாகாண அரசும் தயாராக இருப்பதாக அறிவித்தார். அடுத்த நடவடிக்கையாக, ‘ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் நிலச் சட்டம் 1892’ நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, 30.09.1892-ல், வருவாய்த் துறை மூலம் 1010/1010A என்ற அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவர்களுக்கு வழங்கப்பட 12 லட்சம் ஏக்கர் நிலங்கள் ஒதுக்கப்பட்டன. இப்போதைய தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கேரளம், கர்நாடகம், தெலங்கானா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு அந்த நிலங்கள் வழங்கப்பட்டன. அவர்களைப் ‘பஞ்சமர்கள்’ என்று சமூகம் அழைத்ததால் அவர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்குப் ‘பஞ்சமி நிலங்கள்’ என்ற பெயர் ஏற்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இப்போதைய மத்திய - மாநில அரசுகள் வெவ்வேறு நலவாழ்வு திட்டங்களின் அடிப்படையில் அளிக்கும் நிலங்களும்கூட பஞ்சமி நிலங்கள் என்றே அழைக்கப்படுகின்றன.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூக, கலாச்சார, கல்வி, பொருளாதாரத் துறைகளில் அதிகாரமளிக்க, திரமென்ஹீர் அளித்த அறிக்கை அடிப்படையாக இருந்துவருகிறது என்கிறார் ‘பஞ்சமி நில உரிமை’ என்ற வெளியீட்டின் ஆசிரியர் வி.அலெக்ஸ். இந்த அறிக்கையைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் ஏ.சுந்தரம். ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை குறித்து அவருக்கு முன்பும் சிலர் அறிக்கைகளைத் தயாரித்து அளித்ததுடன் இலவசமாகக் குடியிருப்பு மனைகளையும், மானிய உதவிகளையும் அளித்துள்ளனர். திரமென்ஹீர் மட்டுமே அவர்களையும் நிலவுடைமையாளராக மாற்ற விரும்பினார். செங்கல்பட்டு மாவட்டத்தில் சார் ஆட்சியராக 1888-ல் பணியாற்றிய சி.எம். முல்லாய் என்பவரும் தாழ்த்தப்பட்ட சாதியினர் மிகவும் மோசமான நிலையில் வாழ்வது குறித்து அறிக்கை தயாரித்து அனுப்பியிருந்தார். ஆனால், மூத்த அதிகாரிகள் அதை ஏற்கவில்லை. சாதி அடுக்குநிலை காரணமாக ஒடுக்கப்பட்ட மக்கள் சாதி இந்துக்களின் அடிமைகளைப் போல நடத்தப்பட்டனர். மிராசு என்ற நிலவுடைமை முறை அதற்குக் காரணமாக இருந்தது. காணியாட்சிக்காரன் என்றும் அழைக்கப்பட்ட அப்போதைய நடைமுறை, அம்மக்களை மண்ணுக்குச் சொந்தமற்றவர்களாக விலக்கியே வைத்திருந்தது. சேரி நிலங்களையும் மிராசுகளே கைப்பற்றிக்கொள்வதையும், நிலங்களை ஏகபோகமாகத் தங்கள் வசத்தில் வைத்துக்கொள்வதையும், ஒடுக்கப்பட்டவர்கள் சாகுபடியாளர்களாக முடியாமல் தடுத்ததையும் திரமென்ஹீர் கடுமையாக எதிர்த்தார்.

“பயிரிடப்படாத நிலங்கள் மீது மிராசி சாதிகளுக்கு இருந்த அதிகாரத்தை வெள்ளைக்கார அரசு விலக்கியது. சாகுபடி செய்ய விரும்பிய இதர சாதிகளுக்கு அதை வழங்கத் தயாரானது. உபரி நிலங்களை மிராசுகளிடமிருந்து கைப்பற்றினாலும், நிலவுடைமைச் சாதிகளிடமிருந்து விலக்கப்பட்ட நிலையிலேயே தீண்டப்படாதவர்கள் வாழ்க்கை தொடர்ந்தது” என்கிறார் புதுச்சேரி பல்கலைக்கழகப் பொருளாதாரத் துறை உதவிப் பேராசிரியர் சி.ஜெரோம் சாம்ராஜ்.

கிறிஸ்துவ மிஷினரிகளின் முன்னோடி முயற்சிகள்

திரமென்ஹீருக்கும் முன்னால் கிறிஸ்துவ மிஷினரிகள், ஒடுக்கப்பட்ட மக்களை முன்னேற்ற புரட்சிகரமான முடிவுகள் எடுக்கப்படக் காரணமாக இருந்தனர். ‘தலித்துகளுக்கு நிலங்கள். தமிழ்நாட்டில் பஞ்சமி நிலப் போராட்டங்கள்’ என்ற தன்னுடைய நூலில், ரெவரண்ட் வில்லியம் கௌடி - ரெவரண்ட் ஆடம் ஆண்ட்ரூ ஆகியோர் - செங்கல்பட்டு திருவள்ளூர் பகுதிகளில் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில் - ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிலவுடைமை கிடைக்கப் போராட நேர்ந்ததை எஸ்.ஆனந்தி விவரித்திருக்கிறார்.

மதறாஸ் மிஷினரி மாநாட்டு அறிக்கை அவர்களின் பரிதாபகரமான வாழ்நிலையைப் படம்பிடித்துக் காட்டியது. அவர்களுடையது மென்மையான அடிமைநிலை வாழ்க்கை என்று சுட்டிக்காட்டியது. அடிமைகளாக மற்றவர்களை நடத்துவது சட்ட விரோதம் என்று பிரிட்டிஷ் அரசு இந்திய தண்டனையியல் சட்டப்படி அறிவித்திருந்தது. நிலத்தை விற்கும்போது அதில் வேலைசெய்த பண்ணையாட்களான ஒடுக்கப்பட்ட மக்களும் புதிய நிலவுடைமையாளருக்கு மாற்றிவிடப்பட்டனர். இந்த நடைமுறை தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில், தாங்களாகவே ‘விரும்பி ஏற்ற’ ஒப்பந்த முறையாகப் பதிவுசெய்யப்பட்டிருந்தது. மிஷினரிகள் அறிக்கைக்குப் பிறகு ஆட்சியர் தானே பல சேரிகளுக்கு சென்று, மக்களின் அவலநிலையைப் பதிவுசெய்தார். ஆனால், அவருடைய அறிக்கையை வருவாய்த் துறை ஆணையம் (ரெவின்யூ போர்டு), ‘மிகைப்படுத்தப்பட்டது’ என்று நிராகரித்தது. காலனி ஆட்சியாளர்களின் முக்கிய நோக்கம் வருவாயை அதிகப்படுத்துவதுதானே தவிர, சமூகச் சீர்திருத்தம் அல்ல என்று இதை விளக்குகிறார் ஜெரோம் சாம்ராஜ். திரமென்ஹீர் தனது அறிக்கைக்குப் பல்வேறு ஆதாரங்களைச் சுட்டிக்காட்டியதுடன் 7.8.1891ல் ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில் வெளியான ‘ஒடுக்கப்பட்ட மக்களின் அவலநிலை’ என்ற தலையங்கத்தையும் சேர்த்திருந்தார்.

சிறு அளவிலான சொந்த நிலம், குடியிருக்க சொந்த வீடு, எழுத்தறிவு பெற சேரிகளில் பள்ளிக்கூடம், அடிமைப்படுத்தாமல் விரும்பிய வேலையைச் செய்ய வாய்ப்பு, சுயமரியாதை, கண்ணியத்துடன் வாழ உதவுவது என்று நடவடிக்கை எடுத்தால் ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கை நிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடும் என்று தனது பரிந்துரைகளை நியாயப்படுத்தினார் திரமென்ஹீர். 1881-ல் ஒடுக்கப்பட்டோர் எண்ணிக்கை 45 லட்சம், 1891-ல் 90 லட்சமாக உயரும் என்று எதிர்பார்ப்பதாக அறிக்கை தெரிவித்தது. 1892-ல் அரசு பிறப்பித்த ஆணையின்படி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்க 12 லட்சம் ஏக்கர் நிலங்கள் ஒதுக்கப்பட்டன.

பஞ்சமி நிலங்களை மற்றவர்கள் வாங்கக் கூடாது

கல்வி அறிவினாலும் வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றதாலும் தலித்துகள் மெதுவாக அதிகாரம் பெறத் தொடங்கினர். நிலத்துக்கான அவர்களுடைய போராட்டம் 18-வது நூற்றாண்டு முதல் தொடர்கிறது. திரமென்ஹீர் அறிக்கை தந்திருக்காவிட்டால், அவர்களின் அவலநிலை வெளியுலகுக்குத் தெரிந்தே இருக்காது என்கிறார் வரலாற்று ஆசிரியர் ரூபா விஸ்வநாத். இவர் ‘The Pariah Problem: Caste, Religion and the Social in Modern India’ என்ற நூலை எழுதியிருக்கிறார். ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு பிரிட்டிஷ் அரசு நிலங்களைத் தருவதற்கு முன்னதாக பிரிட்டிஷ் ராணுவத்திலும் ரயில்வேயிலும் பணிபுரிந்த அப்பிரிவு மக்கள், நிலங்களை வாங்கத் தொடங்கினர் என்று ஜப்பானிய அறிஞர் ஹருகா யானகிசாவா குறிப்பிட்டிருப்பதை மேற்கோள் காட்டுகிறார் ரூபா. மிஷினரிகளும் பிரிட்டிஷ் அரசும் அறிக்கை தருவதற்கு முன்னதாக, 1817 முதல் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அவர்கள் போராடிவருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த ஒடுக்கப்பட்டோர், சாதி இந்துக்களின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடினர். 1858-ல் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மேல்சாதிக்காரர்களுக்கு எதிராக ஒத்துழையாமைப் போராட்டத்தையும் நடத்தினர்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிலங்களை வழங்கிய உத்தரவு பலவகைகளில் முக்கியத்துவமும் சிறப்பும் வாய்ந்தது. அம்மக்களின் வாழ்க்கை நிலை அதில்தான் அதிகாரபூர்வமாக விவரிக்கப்பட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவர்களுடைய நிலங்களை மற்றவர்கள் சூது செய்து பறித்துவிடக் கூடாது என்று ‘நிலை ஆணை 15’, ‘சிறப்புப் படிவம் டி’ என்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அரசிடம் பெற்ற நிலத்தை யாரும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு விற்கக் கூடாது என்பது முதல் நிபந்தனை. அப்படியே 10 ஆண்டுகளுக்குப் பிறகு விற்கும்போது ஒடுக்கப்பட்ட பிரிவினருக்குத்தான் விற்க வேண்டும். எனவே, 1918 முதல் 1933 வரையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நிலங்கள் பட்டியல் இனத்தவருக்கு மட்டும்தான் வழங்கப்பட்டன. அப்படி வேறு யாராவது நிலத்தை வாங்கினால் அந்த நிலத்தை அரசே இழப்பீடு ஏதும் தராமல் கையகப்படுத்திக்கொள்ளலாம் என்றும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படியும் அவர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களின் பெரும்பகுதி, பிற வகுப்பினரின் கைகளில் போய்ச் சேர்ந்தது. சில இடங்களில் ஒரு கூடை கேழ்வரகு, சோளம் போன்றவற்றைக்கூடக் கொடுத்து நிலங்களை வாங்கியிருந்தனர்!

காகிதங்களில் உறங்கும் சட்டங்கள்

சுதந்திரம் அடைந்த பிறகு நிலங்களை ஆவணப்படுத்தத் தமிழக அரசு தீவிர முயற்சிகளை எடுக்கவில்லை. கேரளத்திலும் மேற்கு வங்கத்திலும் அப்படி மேற்கொள்ளப்பட்டது. உழுபவருக்கே நிலம் சொந்தம் என்ற சட்டமும், நில உச்சவரம்புச் சட்டமும் வெறும் காகிதங்களில்தான் இருக்கிறது. சுதந்திரம் அடைந்த முதல் 20 ஆண்டுகளில் தமிழகத்தை ஆண்ட காங்கிரஸ் கட்சி, தனி கூட்டுறவுச் சங்கங்களை அமைத்திருந்தாலும், 1960-ம் ஆண்டு நிலச் சீர்திருத்த சட்டத்தால் அதிகப் பலன் கிடைக்கவில்லை. நிலச் சீர்திருத்தச் சட்டத்துக்குப் பிறகு நிலம் வைத்திருந்த பிராமணர்கள் சென்னை போன்ற நகரங்களில் குடியேறினர். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அவர்களுடைய இடங்களுக்குப் பெயர்ந்து குடிவாரதாரர்களாகவும் நிலவுடைமையாளர்களாகவும் மாறினர். நிலங்கள் கைமாறியும் ஒடுக்கப்பட்டோரின் நிலையில் மாற்றம் ஏற்படவில்லை. விவசாயத் தொழிலாளர்களாகவே நீடித்தனர். அவர்களுக்கு எதிரான பாரபட்ச நடவடிக்கைகள் தீவிரமானதுடன், முடிவில்லாமலும் தொடர்ந்தது.

கடந்த 50 ஆண்டுகளாக மாநிலத்தை ஆளும் திமுக, அஇஅதிமுக கட்சிகள் நிலச் சீர்திருத்தத்தில் ஒப்புக்குச் சில மாற்றங்களைச் செய்ததுடன் திருப்தியடைந்தன. இடதுசாரிகளைத் தவிர, மற்ற கட்சிகள் இதில் ஆர்வம் செலுத்தவில்லை. இதர கட்சிகள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நிலவுடைமையாளர் களையும் பணக்காரர்களையும் நம்பியிருக்கின்றன என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் எழுத்தாளருமான டி.ரவிக்குமார். விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் என்ற இரு கட்சிகளும் பஞ்சமி நிலங்களை மீட்பதற்கு முன்னுரிமை தருகின்றன. தலித்துகளின் நில உரிமையை வலியுறுத்தி 1-10-1941-ல் அரசு ஆணை எண் எம்.எஸ்.2217, 12-12.1946-ல் அரசு ஆணை எண் எம்.எஸ்.3092 பிறப்பிக்கப் பட்டும்கூட பலன் ஏற்படவில்லை. பணக்காரர்கள் அந்த நிலங்கள் மீது தங்களுடைய பிடியை இறுக்கும் விதத்தில் அறக் கட்டளைகளை ஏற்படுத்தியும், பயிர்க்காரர்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பெயர்களுக்கு மாற்றியும் மாற்று நடவடிக்கைகளை எடுக்கின்றனர். தலித் அல்லாதவர்கள் வைத்திருக்கும் பஞ்சமி நிலங்களின் அளவு 3.5 லட்சம் ஏக்கர் என்று தெரியவருகிறது.

“தலித் நிலங்கள் அவர்களுக்குக் கிடைக்கச் செய்யாமல் தடுப்பதில் சாதி அமைப்பு முக்கிய காரணமாகத் திகழ்கிறது. நில ஆவணப் பதிவேடுகளைக் கிராமங்களில் கர்ணம் என்ற பதவிக்காரர்கள்தான் நீண்ட காலமாகப் பராமரித்துவந்தனர். இப்போது கிராம நிர்வாக அலுவலர் என்ற அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்ட பிறகும் நிலைமை முன்னேறவில்லை. ஆட்சியில் இருப்பவர்களுக்கு அதில் உறுதி இல்லாததுதான் இதற்குக் காரணம்” என்கிறார் சாமுவேல் ராஜ். இவர் மார்க்சிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்.

தமிழ்நாட்டில் உள்ள நிலங்களை வகைப்படுத்தி, அடையாளம் கண்டு சர்வே செய்யும் பணியை தமிழக அரசு 1979 ஜூன் 1-ல் தொடங்கி 1987 ஏப்ரல் 30-ல் நிறைவுசெய்தது. அதனால்கூட உருப்படியான பலன் ஏற்படவில்லை. “பஞ்சமி நிலங்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு மீட்டுத் தருவதற்குப் பதிலாக, அவர்களுடைய அறியாமையைப் பயன்படுத்தி நிலங்களைக் கைப்பற்றும் சதிக்கே வழிசெய்தது என்கிறார் சாமுவேல் ராஜ். பஞ்சமி நிலம் என்ற வகைப்பாடு பட்டா நிலம், புறம்போக்கு நிலம் என்றெல்லாம் பல இடங்களில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறுகிறார்.

அரசிடம் ஆவணங்கள் இல்லாததால் புள்ளிவிவரங்கள் நம்பத்தக்கதாக இல்லை. சென்னை பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆய்வுக்கான டாக்டர் அம்பேத்கர் மையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியரும் எழுத்தாளருமான எம்.தங்கராஜ் இந்த வகையில் தலித்துகளுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை விரிவாகத் தனது நூலில் ஆவணப்படுத்தியிருக்கிறார். ‘ஏழைகளுக்கு நில விநியோகத்தில் அரசின் தலையீடு, தமிழகப் பின்னணியில் ஆய்வு’ என்பது அவருடைய நூலின் தலைப்பு. ஒடுக்கப்பட்ட மக்களுடைய நிலம் என்று இதுவரை அடையாளம் காணப் பட்டுள்ள மொத்த நிலத்தின் அளவு 1,16,392.40 ஏக்கர்கள். அதில் 16,018.09 ஏக்கர் மற்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கருப்பன் கூறுவதை அவர் சுட்டிக்காட்டுகிறார். பஞ்சமி நிலங்களை மீட்போம் இயக்கத்தைச் சேர்ந்த கருப்பன், தலித் கூட்டு நடவடிக்கைக் குழுவின் தலைவராகச் செயல்படுகிறார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி 2006-ல் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த நில நிர்வாக ஆணையர் அலுவலகம், பஞ்சமி நிலங்களின் அளவு 1,26,113 ஏக்கர்கள் என்றும் தலித் அல்லாதவர்கள் வசம் 10,619 ஏக்கர்கள் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. 1990-களில் ஒய்.அருள்தாஸ் கேட்டிருந்த கேள்விக்கு, 1,04,494.38 ஏக்கர்கள் பஞ்சமி நிலம் என்றும் அதில் 74,893 ஏக்கர்கள் தலித்துகள் வசம் இருப்பதாகவும் பதில் அளிக்கப்பட்டிருந்தது. மதுரையைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர் கே.மெய்யார் கேட்டிருந்த கேள்விக்கு, மதுரை மாவட்டத்தில் மட்டும் 2015-ல் 2,843 ஏக்கர்கள் பஞ்சமி நிலம் என்றும் அவை அவர்களிடம் இல்லையென்றும் பதில் தரப்பட்டிருந்தது.

நீதித் துறையின் தலையீடு

ஒடுக்கப்பட்ட மக்களின் நில உரிமைக்கு ஆதரவாக நீதித் துறை துடிப்புடன் தலையிட்டு, அவர்களின் உரிமைகளுக்குப் பெரிய பங்காற்றிவருகிறது. உயர் நீதிமன்றங்களின் சில தீர்ப்புகள் அரசு தன் மெத்தனத்தைக் களைந்துவிட்டு செயல்பட்டாக வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பட்டியல் இனத்தவரிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்ட நிலங்களில் வீடுகளைக் கட்டிய கட்டுநரும், அவற்றில் குடியிருப்போரும் தொடுத்த வழக்கில் 2008 நவம்பர் 7-ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தனித்துவம் மிக்கதொரு தீர்ப்பை அளித்தார். “பல்வேறு நீதித் துறை முன்மாதிரிகளையும் தீர்ப்புகளையும் பரிசீலித்ததில் ஒன்று உறுதியாகத் தெரிகிறது; தலித்துகளுக்குத் தரப்பட்ட பஞ்சமி நிலம் நிபந்தனைகளுடன் கூடியது; நிபந்தனை மீறப்பட்டால் அரசு அதைக் கைப்பற்றி அதே சமூகத்தைச் சேர்ந்த வேறொருவருக்கு வழங்கலாம் என்பதே அது. இந்த நிலங்களைப் பெற்றவர் முதல் பத்து ஆண்டுகளுக்கு அதை விற்கவோ அடமானம் வைக்கவோ கூடாது. பத்தாண்டுகளுக்குப் பிறகு அவ்வாறு செய்வதாக இருந்தால், இன்னொரு தலித்துக்குத்தான் அதை விற்கவோ, அடமானம் கொடுக்கவோ முடியும். அப்படி இல்லாவிட்டால் அந்தப் பரிமாற்றமே ரத்து செய்யப்பட்டுவிடும்” என்று கூறி மனுக்களை நிராகரித்தார். இந்த வரலாற்றுச் சிறப்புவாய்ந்த தீர்ப்புதான் தலித்துகள் தங்களுடைய நிலங்களை மீட்க முடியும் என்பதற்குப் பற்றுக்கோடாக இருக்கிறது என்கிறார் தலித் மண்ணுரிமை கூட்டமைப்பைச் சேர்ந்த நிகோலஸ்.

சந்துருவின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் பிரபா தேவன், பி.பி.எஸ். ஜனார்த்தன ராஜா அடங்கிய அமர்வும் 6 ஆண்டுகளுக்கு முன்னால் சந்தேகத்துக்கு இடமில்லாமல் உறுதிசெய்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது. பாப்பய்யா எதிர் கர்நாடக மாநிலம் வழக்கில் உச்ச நீதிமன்றம் 1996-ல் அளித்த தீர்ப்பின் பெரும் பகுதியை நீதிபதி பிரபா தேவன் அப்படியே மேற்கோள் காட்டியிருக்கிறார். அரசியல் சட்டத்தின் 46-வது ஷரத்து குறிப்பிடும் பொருளாதார நீதி அடிப்படையில் தீர்ப்புகள் கூறப்பட்டுள்ளன. அரசியல் சட்டத்தின் 39(பி) ஷரத்து, அரசு தன் வசம் உள்ள நிலம் உள்ளிட்ட வளங்களைப் பொது நன்மை கருதி, தேவைப்படுவோருக்கு வழங்க வேண்டும் என்கிறது. பொருளாதார நீதிக்கான உரிமை என்பது அடிப்படையான உரிமையாகும். சமத்துவம், முன்னேற்றத்துக்கான சமவாய்ப்பு, தளைகளிலிருந்து விடுதலை ஆகியவற்றை ஒடுக்கப்பட்ட மக்கள் பெற இந்தச் சட்ட ஷரத்துகள் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

பயிரிடப்படாத நிலங்கள் மீது மிராசி சாதிகளுக்கு இருந்த அதிகாரத்தை வெள்ளைக்கார அரசு விலக்கியது. சாகுபடி செய்ய விரும்பிய இதர சாதிகளுக்கு அதை வழங்கத் தயாரானது. உபரி நிலங்களை மிராசுகளிடமிருந்து கைப்பற்றினாலும், நிலவுடைமைச் சாதிகளிடமிருந்து விலக்கப்பட்ட நிலையிலேயே தீண்டப்படாதவர்கள் வாழ்க்கை தொடர்ந்தது!

இளங்கோவன் ராஜசேகரன்

© ‘ஃப்ரண்ட்லைன்’ சுருக்கமாகத் தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x