Last Updated : 06 Jan, 2017 09:05 AM

 

Published : 06 Jan 2017 09:05 AM
Last Updated : 06 Jan 2017 09:05 AM

இணைய களம்: காந்தியைப் பிடித்தல்...

அரிசிக் கடை, மளிகைக் கடை, பேங்க் போன்ற அன்றாட அல்லது மாதப் பயன்பாட்டில் இருக்கும் நிறுவனங்களிலிருந்து வருட ஆரம்பத்தில் எங்கள் வீட்டுக்கு காலண்டர்கள் வந்துவிடும். தின காலண்டர், மாத காலண்டர் என்று இருவகையிலும் அளிப்பார்கள். இந்த ஆண்டு ஒரு தின காலண்டர் எனக்காக என் குடும்பத்தார் தனியே எடுத்து வைத்திருந்தார்கள். காந்தி படம் போட்ட பெரிய காலண்டர் அது. உங்கள் அறையில் மேஜைக்குப் பக்கத்தில் வைத்துக்கொள்ள எனக்காகவே எடுத்து வைத்தார்கள். வேண்டாம் என்றபோது, உங்களுக்குத்தான் காந்தி பிடிக்குமே என்று சிரித்தபடி என்னிடமே கொடுத்துவிட்டார்கள். எனக்கு காந்தியைப் பிடிக்கும் என்பது சரிதான். மற்றவர்களுக்குப் பிடிக்காது என்று எடுத்துக்கொள்வதா? அவர்களுக்கு ஏன் சிரிப்பு வருகிறது?

மற்றவர்களைவிட அதிகம் பிடிக்கும் என எடுத்துக்கொள்ளலாம். எனக்கு காந்தியைப் பிடிக்கும் என்பதில் அவர்களுக்கு ஒரு பெருமை இருக்கிறது. காந்தியை அவர்கள் அறிந்ததைவிட சற்றுக் கூடுதலாக அறிந்திருக்கிறேன் என்பது அவர்களின் நினைப்பாக இருக்கலாம்.

ஒருவகையில் காந்தியை எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. ஆனால், அதைச் சொல்வது வெட்கப்படும்படியான விஷயமாக எண்ணிக்கொள்கிறார்கள். தலைவர் என்பவர் வெற்றி பெற்றவராக இருக்க வேண்டும். பெறப்போகும் வெற்றிக்காகத் துணிச்சலுடன் பேசுபவராக இருக்க வேண்டும். அது மாயா ஜால வார்த்தைகள் நிறைந்த முடியவே முடியாத இலக்காகவும் இருக்கலாம். ஆனால் காந்தி தோல்வியடைந்த தலைவர். அவர் எந்தப் பதவியிலும் இருந்ததில்லை. வெற்றாகப் பேசி எளிய உடை, வாழ்க்கை என்று வாழ்ந்தவர். ஆகவே, அவரை ஏற்றுக்கொண்டால் நமக்கு இருக்கும் படாடோபங்களை இழக்க வேண்டியிருக்கும். முடிந்தவரை அவரை எதிர்ப்பதுதான் சிறந்தது என நினைக்கிறார்கள்.

ஒருமுறை காந்தி படத்தை முகநூல் ஸ்டேடஸில் போட்டபோது, ஒருவர் வந்து ‘சாதி வெறியனே’ என்றார். என்னைத்தான் சொல்கிறார் என்று நினைத்துக் கேட்டபோது, ‘இல்லை... காந்தியைச் சொல்கிறேன்’ என்றார். விளக்கம் கேட்டபோது, அவர் சொன்னவை எதுவும் உண்மையில் இல்லை. அங்கே இங்கே கேட்டவற்றைத் தொகுத்துச் செய்தியாக எழுதிக்கொண்டிருப்பவர்களில் அவரும் ஒருவர்.

ஒரு தலைவராக அவர் என்ன செய்தார், அதுவும் எனக்கு, என் சமுதாயத்துக்கு, நான் கொண்ட என் கொள்கைக்கு என்ன செய்தார் என்கிற கேள்வியோடுதான் மக்கள் அவரைப் பார்க்கிறார்கள். இந்த சமூகத்தின் ஒவ்வொரு கீழ்மைக்கும் அவரே காரணம் என நினைக்கிறார்கள். அவர் தலையிடாது இருந்திருந்தால் மேன்மை அடைந்திருக்கும் எனவும் நினைக்கிறார்கள்.

என் நண்பர் ஒருவர் ‘காந்தி எழுதிய சத்திய சோதனைய முழுசா படிச்சிட்டேன். நீங்க எல்லாம் நினைக்கிற மாதிரி, அவர் ஒண்ணும் பெரிய ஆளு மாதிரி எனக்குத் தெரியல’ என்றார். உண்மையில், அவரைப் பற்றி நண்பர் படித்திருப்பது அந்த ஒரு புத்தகமாக இருக்கும். உணர்ச்சிப்பிரவாகமாக எழுதப்பட்டிருக்கும் வீர வரலாற்று நூலோ, எதாவது ஒரு கட்டுரையோ, அல்லது சுயஉதவிப் புத்தகங்களோ எப்படி இருக்குமோ அதை எதிர்பார்த்துதான் அதைப் படித்திருக்க வேண்டும். சவசவ என்று வெறும் சம்பவங்களை அடுக்கிச் சென்றிருப்பது அவருக்குப் பிடிக்காமல் இருந்திருக்க வேண்டும். காந்தியிடம் மக்கள் எதிர்பார்ப்பதும் இதுதான். கோபாவேசம் கொண்ட ஒரு தலைவராக இல்லாமல் சொங்கியாக இருக்கும் ஒருவரைத் தலைவராக ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

எதிராளியிடம், சக நண்பர்களிடம், சக ஊழியர்களிடம், குடும்ப உறுப்பினர்களிடம் என்று மற்றவர்களுடன் பிணக்கம் கொள்ளும் போது நாம் எவ்வளவு முயற்சித்தும் பொறுமையைக் கடைப்பிடிக்க முடியாமல் திணறுவதை, கோபப்படுவதைப் பலமுறை கண்டிருப்போம். ஆனால், காந்தி ஒரு தேசத்தின் முன், மிகப்பெரிய பன்முகம் கொண்ட தேச மக்கள் முன் எவ்வளவு அசாத்தியமான பொறுமையுடன் நடந்திருக்கிறார் என்பதை நாம் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை.

மதம் கொண்ட யானையை அடக்க முன்நிற்கும் பாகனைப் போன்று நின்றிருக்கிறார் காந்தி. சுற்றி நிற்கும் மக்கள் முன்னால் கொஞ்சம் சஞ்சலப்பட்டோ, வெட்கப்பட்டோ சற்றுச் சுணங்கினாலும் யானை அவரைக் குத்திக் கொன்றுவிடும். அந்த இடத்தில்தான் இருந்தார் காந்தி. அந்த யானையிடமிருந்து மக்களைப் பாதுகாத்துவிட்டு, யானை குத்திக் கொல்லப்பட்டு இறந்தார். (வேறு இயக்கங் களாலும் அவர் கொல்லப்பட்டிருப்பார் என்றே நினைக்கிறேன்.)

பொதுவெளியில், இணையத்தில் முக்கிய சண்டைகள் எல்லாமே காந்தியை முன்னிறுத்திய தாக இருக்கும். அப்படி இல்லா ஒன்றில், ‘இது காந்தி தேசங்க.. நமக்குள் எதற்குச் சண்டை’ என்று முடித்துவிடுவார்கள். எதிரிகளை வெல்வதில் காந்தி எப்போதும் கடைசியில் வந்துவிடுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x