Last Updated : 20 Aug, 2016 09:36 AM

 

Published : 20 Aug 2016 09:36 AM
Last Updated : 20 Aug 2016 09:36 AM

கோமாளியின் கோபம்!

கோமாளியாகச் சித்திரிக்கப்படுபவரையே நாயகனாக்கிப் புரட்சிசெய்திருக்கிறார் ராஜு முருகன்



அது நடந்து 18 ஆண்டுகள் இருக்கலாம். உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு நானும் என் மனைவியும் திரும்பிக்கொண்டிருந்தோம். நேரம் இரவு 10 மணிக்கு மேல் இருக்கும். என் மனைவிக்கு அமெரிக்காவில் இருக்கும் தன் அண்ணனிடம் பேச வேண்டியிருந்தது. அலைபேசிகள் இல்லாத காலம். வீட்டுத் தொலைபேசியில் வெளிநாட்டுக்குப் பேசும் வசதி இல்லை. பொதுத் தொலைபேசி மையங்களில் 10 மணிக்கு மேல் பேசினால் கட்டணச் சலுகை இருந்த காலம் அது. சாலையின் திருப்பத்தில் இருந்த பொதுத் தொலைபேசி மையத்துக்குச் சென்று பேசினார். நான் வெளியில் காத்திருந்தேன்.

சாலை காலியாகவும் அமைதியாகவும் இருந்தது. வீடுகள் உறங்கியிருந்தன. சூழலின் அமைதியைக் கிழித்துக்கொண்டு ஒரு ஹாரன் ஒலி கிளம்பியது. எனக்குச் சுரீரென்று கோபம் வந்தது. சில அடிகள் தூரத்தில் ஒரு பைக்கில் அமர்ந்திருந்த ஒருவர் எழுப்பிய ஒலி அது. அவர் நின்றிருந்த இடத்தில் அமைந்த வீட்டின் மாடியைப் பார்த்தவாறே மீண்டும் அவர் ஒலி எழுப்பினார். என் கோபம் அதிகரித்தது. மக்கள் தூங்கும் நேரத்தில் இப்படிச் சத்தம் எழுப்ப இவருக்கு என்ன உரிமை என்ற கோபம். மீண்டும் அவர் ஒலி எழுப்பினார். அடுத்தடுத்துப் பல முறை எழுப்பினார். என்னால் பொறுக்க முடியவில்லை. “ஏன் இந்த ராத்திரி நேரத்துல ஹாரன் அடிக்குறீங்க? தூங்குறவங்களுக்குத் தொல்லையா இருக்கும்ல?” என்றேன்.

ஞானியான கணம்

அவர் என்னைத் திரும்பிப் பார்த்தார். பார்த்த தோரணையே வித்தியாசமாக இருந்தது. பைக்கிலிருந்து இறங்கி என்னை நெருங்கினார். அவரது நடவடிக்கைகளைப் பார்த்ததும் என் உடல் ஒரு கணம் சில்லிட்டது. அவருடைய உடல் மொழியும் பார்வையும் அவர் அந்தப் பகுதியின் வலிமை வாய்ந்த ரெளடிகளில் ஒருவர் என்பதைத் தெளிவுபடுத்தின. அவர் என்னை நெருங்கியபோது செய்வதறியாமல் நின்றேன். தெருவில் ஆள் அரவம் இல்லை. சட்டென்று வண்டியைக் கிளப்பிக்கொண்டு போக முடியாது. என் மனைவி இன்னும் பேசி முடிக்கவில்லை. கண்ணாடி அறைக்குள் இருந்த அவருக்கு இது எதுவும் தெரியாது. அப்போது அவர் கருவுற்றிருந்தார் என்பதும் என் அச்சத்தை அதிகரிக்கச்செய்தது.

சீண்டப்பட்ட புலிபோல வந்தவர் என்னைப் பார்த்ததும் ஏனோ தன் வேகத்தைக் குறைத்துக்கொண்டார். என்னை உற்றுப் பார்த்தார். “நீ என்ன காந்தியா? காந்தியாவலாம்னு பாக்கறியா?” என்றார். நான் அமைதியாக இருந்தேன். என்ன காரணத்தினாலோ அவர் என்னைத் தாக்கவில்லை. அவர் ஒலியெழுப்பி அழைத்த நபர் வந்துவிடவே இருவரும் கிளம்பிச் சென்றார்கள்.

அவர் என்னை நோக்கி வந்த அந்தத் தருணம், வழக்கமாகத் தமிழ் சினிமாவில் நாயகன் உருவாகும் தருணம். ஆனால் அன்று உருவானது ஒரு ‘ஞானி’. எங்கே, யாருக்கு எதிராக, எப்போது, எவ்வளவு குரல் கொடுக்க வேண்டும் என்னும் பாடத்தைப் படித்த ‘ஞானி’.

நம்மில் பலரும் இப்படிப் பல சமயங்களில் பல ‘பாட’ங்களைப் பயின்றிருப்போம். பொது இடங்களில் நடக்கும் மீறல்களை, அமைப்பு சார்ந்த அநீதிகளை எதிர்த்துக் குரல்கொடுக்க முயன்றபோது நமக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய கசப்பான அல்லது பயங்கரமான அனுபவங்கள் நமக்கு அந்த ‘ஞான’த்தைத் தந்திருக்கும். பிறருக்கு நடக்கும் அனுபவங்களைப் பார்த்தும் நமக்குப் ‘புத்தி’ வந்திருக்கும்.

காந்தியும் லூசும்

ஆனால், ஒரு சிலருக்கு இப்படியெல்லாம் ‘புத்தி’வருவதே இல்லை. அவர்களுக்கும் இந்த அமைப்பின் தடித்தனம் தெரியும். சமூக விரோதிகளின் வலிமை தெரியும். களத்தில் இறங்கினால் என்ன நடக்கும் என்பது தெரியும். ஆனாலும், அவர்கள் களத்தில் இறங்குகிறார்கள். போராடுகிறார்கள். சில சமயங்களில் சிலருக்கு இதனால் பெரும் நஷ்டங்கள் ஏற்பட்டாலும் சிலர் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். அவர்களை நாம் உள்ளூரப் பாராட்டுவோம். ஆனால், நடைமுறை அறிவு இல்லாத பைத்தியம் என்று சொல்லுவோம். “நீ என்ன லூசா?” என்று கேட்போம். “நீ என்ன காந்தியா?” என்ற கேள்விக்கும் இதற்கும் அதிக வித்தியாசம் இல்லை.

சமூகத் தீமைகளை, அவற்றுக்குக் காரணமாக அமையும் சக்திகளை எதிர்த்துக் குரல் கொடுப்பது என்பது சற்றே மனப் பிறழ்வு கொண்ட நடவடிக்கையாகவே இந்தியச் சமூகத்தின் பொதுப் புத்தியில் படிந்திருக்கிறது. ‘தெளி’வான சிந்தனையும் ‘நடைமுறைசார் அறி’வும் கொண்டவர்களால் துணிச்சலாகக் களத்தில் இறங்கிவிட முடிவதில்லை. அதற்குக் கொஞ்சமாவது ‘கிறுக்கு’த்தனம் தேவைப்படுகிறது. இத்தகைய ‘கிறுக்கு’மனிதர் ஒருவரை நாயகனாகச் சித்தரித்து, இந்த யதார்த்தத்தைச் சமூகத்தின் பொதுப்புத்தியின் முகத்தில் அறைவதுபோலச் சொல்லியிருக்கிறார் திரைப்பட இயக்குநர் ராஜு முருகன்.

ராஜு முருகனின் இரண்டாவது படமான ‘ஜோக்கர்’ நடைமுறை சார்ந்த எல்லா அளவுகோல்களின்படியும் பைத்தியம் என்று சொல்லத் தகுந்த ஒரு மனிதனை மையப் பாத்திரமாகக் கொண்டது. அவர் தன்னைக் குடியரசுத் தலைவராக நினைத்துக்கொள்கிறார். உத்தரவுகள் பிறப்பிக்கிறார். நாம் கண்டும் காணாமல் இருக்கும் அநீதிகளுக்கு எதிராக அயராமல் குரல்கொடுக்கிறார். அதற்காகக் கேலிக்கும் பரிகாசத்துக்கும் தாக்குதலுக்கும் ஆளாகிறார். அவரை அடிப்பவர்களும் பைத்தியம் என்று சொல்லித்தான் தாக்குகிறார்கள். ஆனால், அந்தப் பைத்தியம் கேட்கும் கேள்விகளுக்கு யாரிடமும் பதில் இல்லை. அமைப்பும் பொதுமக்களும் அவரைக் கோமாளியாகவே நடத்தி அவரது கேள்விகளின் உக்கிரத்திலிருந்து தப்பித்துச் செல்கிறார்கள்.

நிஜ வாழ்விலும் இப்படிப் பல ‘கோமாளி’கள் இருக்கிறார்கள். அநீதிகளுக்கு எதிராக அவர்கள் தங்கள் பணம், சுக வாழ்வு, பாதுகாப்பு ஆகியவற்றைப் பணயம் வைத்துப் போராடுகிறார்கள். டிராஃபிக் ராமசாமி, சசிபெருமாள், ஜகன்னாதன், கிருஷ்ணம்மாள் எனப் பலரைச் சுட்டலாம். சமூகம் இவர்களையெல்லாம் பாராட்டும். எனினும், அதன் பொதுப் புத்தியின் அடிவாரத்தில் இவர்களைப் பற்றி ‘கிறுக்கு’ என்னும் பிம்பமே உறைந்திருக்கும்.

ஒரு விதத்தில் ‘கிறுக்’காக, ‘கோமாளி’யாக இருந்தால்தான் இன்று போராடவே முடியும் என்றுகூடச் சொல்லிவிடலாம். மாபெரும் போராட்டங்களில் ஈடுபட்ட சாமானிய மனிதர்கள் அனைவரும் ஏதோ ஒரு தருணத்தில் கோமாளிப் பட்டம் பெற்றவர்கள்தான். ஆனால், இந்தக் கோமாளிகள்தான் அமைப்பின் டைனோசர் தோலைச் சிறிதளவேனும் அசைத்துப் பார்க்கிறார்கள். சில மாற்றங்களையேனும் சாத்தியப்படுத்துகிறார்கள்.

மனசாட்சியின் குரல்

பிழைப்புவாதமும் பேரமைதியும் கோலோச்சும் ஒரு சூழலில் தேவையான சலனத்தை ராஜு முருகன் நிகழ்த்தியிருக்கிறார். சமூகம் ‘லூசு’, ‘கோமாளி’ எனக் கருதும் ஒரு அணுகுமுறையை இதுதான் இன்றைக்குத் தேவையான நாயகனின் குணம் என்று முன்னிறுத்துகிறார். 50-க்கும் மேற்பட்ட ரெளடிகளையும் அரசாங்கத்தையும் துப்பாக்கிகளையும் ஒண்டி ஆளாகத் துவம்சம் செய்து ‘தரும’த்தை நிலைநாட்டும் போலி நாயகப் பிம்பங்களை ஒரு கோமாளியை வைத்துப் பரிகசிக்கிறார். சமூக மனசாட்சியின் குரலாக அந்தக் கோமாளியின் குரலை மாற்றுகிறார். சமகாலத்தின் அதிமுக்கியமான பிரச்சினைகளில் ஒன்றான கழிப்பறைப் பிரச்சினையை ஒரு ‘கோமாளி’யை வைத்து அம்பலத்துக்குக் கொண்டுவருகிறார்.

குடியரசுத் தலைவருக்குப் பெரிய அதிகாரம் இருப்பதுபோன்ற பிழையான சித்தரிப்பு, ராணுவ ஆட்சிதான் சரிப்படும் என்னும் விபரீதமான பார்வை, அதிகார அமைப்பு இயங்கும் விதம் குறித்த சித்தரிப்புகளின் பலவீனம், காட்சியமைப்புகளின் நாடகத்தன்மை ஆகியவற்றை முன்வைத்து இந்தப் படத்தைக் கலை நோக்கிலும் திரைக்கதை சார்ந்தும் விமர்சிக்கலாம். ஆனால், செயற்கையான நாயக பிம்பங்கள் அருவருப்பு ஏற்படுத்தும் அளவுக்கு ஊதிப் பெருக்கப்படும் ஒரு காலகட்டத்தில், ஒரு ‘கோமாளி’யை நாயகனாக முன்னிறுத்தும் துணிச்சலுக்காகவும், அந்தக் ‘கோமாளி’யின் மூலம் அமைப்பின் நோய்களை அம்பலப்படுத்தும் அரசியலை முன்வைக்கும் நேர்மைக்காகவும் ராஜு முருகனைப் பாராட்டியாக வேண்டும்.

- தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x