Published : 24 Feb 2017 09:10 AM
Last Updated : 24 Feb 2017 09:10 AM

மக்கள் குழுக்களுக்குக் கிடைத்திருக்கும் மகத்தான வாய்ப்பு!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான முஸ்தீபுகள் தெரியத் தொடங்கியிருக்கின்றன. மே 14-க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்குமாறு மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்றம். இந்தியாவில் மத்திய - மாநில அரசுகளுக்கு அடுத்த நிலையிலுள்ள இணை அரசாங்கம், உள்ளாட்சி அமைப்பு. நாட்டில் 2,50,000 பஞ்சாயத்துகள் இருக்கின்றன. 32 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பிரதிநிதிகள் பணியாற்றுகிறார்கள்.

மத்திய - மாநில அரசுகளைப் போலவே மூன்றாவது அரசாங்கமான ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிரத்தியேகமான அதிகாரங்கள் இருக்கின்றன. எனினும், பல மாநில அரசாங்கங்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய அதிகாரங்களையும் நிதியையும் பகிர்ந்தளிப்பது இல்லை. இப்படி உள்ளாட்சி அமைப்புகளைப் பாரபட்சமாக நடத்தும் உரிய அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்காத மாநிலங்களில் ஒன்று, நம்முடைய தமிழ்நாடு. பக்கத்து மாநிலமான கேரளத்துடன் ஒப்பிட்டால் நாம் எவ்வளவு பின்தங்கியிருக்கிறோம் என்பதை உணர முடியும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை 12,524 கிராமப் பஞ்சாயத்துகள், 385 பஞ்சாயத்து ஒன்றியங்கள், 31 மாவட்டப் பஞ்சாயத்துகள், 528 பேரூராட்சிகள், 124 நகராட்சிகள், 12 மாநகராட்சிகள் இருக்கின்றன. ஊரக உள்ளாட்சியில் 1,19,399 மக்கள் பிரதிநிதிகளும், நகர உள்ளாட்சியில் 12,820 மக்கள் பிரதிநிதிகளும் பணியாற்றக் கூடிய விரிந்த களம் இது.

ஒரு கிராமத்தில் பாரம்பரிய ரகங்கள் பயிரிட வேண்டுமா; மரபணு மாற்றுப் பயிர் செய்ய வேண்டுமா என்று முடிவெடுப்பதில் தொடங்கி, நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பு அகற்றம், மரபுசாரா எரிசக்தி ஆதாரங்கள் உருவாக்கம், சமூகக் காடுகள், பண்ணைக் காடுகள் உருவாக்கம், கல்வி நிலையங்கள் - மருத்துவமனைகள் உருவாக்கம் என்று எவ்வளவோ விஷயங்களைச் செய்து பார்க்கக் கூடிய சாத்தியங்களும், அரசியலமைப்புச் சட்டம் தரக்கூடிய சட்டபூர்வ அதிகாரங்களையும் கொண்ட பதவி உள்ளாட்சிப் பிரதிநிதி பதவி. ஆனால், நடைமுறையில் இது தொடர்பிலான விழிப்புணர்வு அற்றவர்களாலும் இதையும் பிழைப்புக்கான ஒரு வாய்ப்பாக அணுகுபவர்களாலுமே அதிகம் அது நிர்வகிக்கப்படுகிறது.

சமகால அரசியல் மீது அதிருப்தியும் சமகால அரசியல்வாதிகள் மீது கோபமும் கொண்ட இளைய சமூகம், ஆக்கபூர்வமான அரசியல் நோக்கி அடியெடுத்து வைப்பதற்கான அருமையான களம் உள்ளாட்சி நிர்வாகம். இது ஒரு மகத்தான வாய்ப்பு. ஒரு மக்களவை அல்லது சட்டசபை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்போல விரிந்த, லட்சக்கணக்கான வாக்காளர்களைக் கொண்ட, கோடிக்கணக்கான பணச் செலவைக் கோரக் கூடியது அல்ல.

ஆகையால், சமூகத்தின் பல்வேறு விஷயங்களிலும் ஊடாடக் கூடிய குடிமைச் சமூகக் குழுக்கள் இதை ஒரு நல்வாய்ப்பாகவும் அரசியலில் அடியெடுத்து வைப்பதற்கான முதல் படியாகவும் அணுக முடியும். பொதுமக்களும் கட்சிசார் அரசியலுக்கு அப்பாற்பட்டு, சமூகத்துக்காக உழைக்கும் நல்ல மனிதர்களை வாரி அணைப்பதற்கான வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x