Last Updated : 16 Jun, 2017 09:46 AM

 

Published : 16 Jun 2017 09:46 AM
Last Updated : 16 Jun 2017 09:46 AM

பிரம்மாண்டமான தரவுகள்.. பிரம்மாண்ட பிரச்சினைகள்!

ஆதார் அட்டை தொடர்பாக அந்தரங்கத் தகவல்களைக் கசியவிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கவனம் செலுத்திவரும் நேரத்தில், டிஜிட்டல் உலகத்தில் நம்மைப் பற்றிய தனிப்பட்ட தரவுகள் எப்படியெல்லாம் கசக்கி நுகரப்படுகின்றன என்று பார்க்கலாமா?

நீங்கள் வாங்க விரும்பாத பொருட்களை உங்களுக்கு விற்கக் காத்திருக்கும் பன்னாட்டுப் பெருநிறுவனங்களை நினையுங்கள்; எந்தெந்த நுகர்வோர் என்னென்ன பொருட்களை வாங்குகிறார் என்பதைக் கொண்டு, அவர்களுடைய நுகர்வுப் பழக்கத்தைக் கணிப்பதில் பெருநிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. ‘பிரம்மாண்டமான தரவுத் தொழில்நுட்பம்’(பிடிடி) என்பதன் சிறப்பு, அது கோடிக் கணக்கானவர்களுடைய எல்லா விவரங்களையும் நொடியில் தரவல்லது என்பதே. கூகுள் நிறுவனம் பல நூறு கோடிக் கணக்கானோரின் தரவுகளை அதிலும் குறிப்பாக, அவர்களுடைய இணைய மேய்ச்சல் பழக்கவழக்கங்களோடு சேர்த்துப் பதிந்து வைத்திருக்கிறது. அதே போல ஃபேஸ்புக், அமேசான் ஆகியவை சமூக வலைதளங்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்து வைத்துள்ளன. தங்களுடைய பொருட்கள் அல்லது சேவைகளை மேம்படுத்துவதற்கு மட்டுமின்றி, அதிக விலை கொடுக்கத் தயாராக இருக்கும் நிறுவனங்களுக்கும், தங்களுடைய நிறுவனம் அலுவலகம் வைத்துக்கொள்ள அனுமதிக்கும் நாடுகளுக்கும் விற்கின்றன.

காத்திருக்கும் ஆபத்துகள்

பெருமளவுக்குத் தரவுகளைத் திரட்டி, வெளிநாடுகளில் அதைச் சேமித்து வைப்பதில் உள்ள மிகப் பெரிய ஆபத்து என்னவெனில் அதன் உரிமையாளர்கள், தரவுகளுக்குச் சொந்தக்காரர்களான தனிநபர்களின் அந்தரங்கங்களை மீறுவதாகும். தரவுகளை முதலில் திரட்டும் முகமை இத்தகைய செயலில் ஈடுபடா விட்டாலும் அந்நிய நாடுகளோ, அத்துமீறிச் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களோ இதில் ஈடுபடலாம். இப்படிச் செய்து தரவுகளைச் சேமித்து வைக்கும் நாடுகளின் பொருளாதாரக் கொள்கைகளைக் கூட சேதப்படுத்திவிடலாம். இந்தத் தரவுகளே அதை வைத்திருப்பவர்களுக்கு போதையூட்டி அதைப் பணமாக்கும் வழிகளை யோசிக்க வைக்கலாம். பகை நாட்டின் கைக்குக் கிடைத்தால், அதைவிட வினையே வேண்டாம். இதனால் ஒரு நாட்டின் பொருளாதாரச் செல்வமே சுரண்டப்படலாம்.

‘பிடிடி’ எனப்படும் பிரம்மாண்ட தரவுத் தொழில்நுட்பம் புலியைப் போன்றது. அதில் ஏறிவிட்டு கீழே இறங்குவது எளிதல்ல. அதே வேளையில், சவாரி செய்யாமல் நின்றால் ஏற்படவுள்ள ஆபத்து அதைவிடப் பெரியது. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை இந்தியா செய்துகொண்டு, தனிப்பட்ட அந்தரங் கத்தையும் பாதுகாக்க வேண்டும். தேசியப் பாதுகாப்பை உறுதியும் செய்ய வேண்டும்.

இந்தியா என்ன செய்ய வேண்டும்?

இந்த இயக்கவியலை முன்கூட்டியே கணித்த சீனா பைடு, அலிபாபா போன்ற இணையதள நிறுவனங்கள் உள்நாட்டில் ஏற்பட ஊக்குவித்தது. சாதாரண வர்த்தகக் கட்டுப்பாட்டு விதிகள், ஏகபோக அனுமதி மறுப்புச் சட்டம் போன்றவற்றின் மூலம் கூகுள் போன்ற நிறுவனங்கள் சீனத்தில் செல்வாக்கு பெறாமல் தடுத்துவிட்டது. இதை இந்தியா வேறு மாதிரி தடுக்கலாம். இந்தியர் களைப் பற்றிய தரவுகளைத் திரட்டும் நிறுவனங்கள் அவற்றை இந்தியாவிலேயே சேமித்து வைக்க அந்த நிறுவனங்களுக்கு நிலம், மானிய விலையில் மின்சாரம், மலிவு விலையில் அலைவரிசை இணைப்பு போன்றவற்றை அளிக்கலாம். கூகுள், அமேசான் போன்ற நிறுவனங்களுக்குச் சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.

பெருந்தரவுத் தொழில்நுட்பத்தில் வளர்ச்சி, ஆராய்ச்சிகளைக் கல்வி நிலையங்களும் ஆய்வு நிறுவனங்களும் மேற்கொள்ள அரசு ஊக்குவிக்க வேண்டும். தரவுகளைக் கசிய விடாமல் தடுக்கும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

2019-க்குள் 2.5 லட்சம் கிராமங்களை இணையதளம் மூலம் இணைக்கும் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு அரசு ஒப்புதல் வழங்கிவிட்டது. 2.5 லட்சம் பள்ளிக்கூடங்கள், அனைத்துப் பல்கலைக்கழகங்கள், பெருநகரங்களின் பொது இடங்கள், பெரிய சுற்றுலா மையங்கள் ஆகியவற்றுடன் வைஃபை இணைப்புகளை அளிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது. டிஜிட்டல் திட்டத்தால் பக்க விளைவுகள் ஏற்பட்டுவிடாமல் உரிய கொள்கைகளை வகுத்துச் செயல்படாவிட்டால், இந்தியா மீண்டும் காலனியாக மாறிவிடுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது, இந்த முறை இணைய காலனியாக!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x