Last Updated : 14 Sep, 2016 09:48 AM

 

Published : 14 Sep 2016 09:48 AM
Last Updated : 14 Sep 2016 09:48 AM

தொலைந்து போனார்களா, தொலைத்துக் கட்டப்பட்டார்களா?

ஆண்டவர், காயினிடம், “உன் சகோதரன் ஆபேல் எங்கே?” என்று கேட்டார். அதற்கு அவன் “எனக்குத் தெரியாது. நான் என்ன என் சகோதரனுக்குக் காவலாளியோ?” என்றான். (விவிலியம், தொடக்க நூல் 4: 9)

காயினின் மறுமொழியை ஆண்டவர் ஏற்கவில்லை. “ஆபேலின் ரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து கதறிக்கொண்டி ருப்பதாக அவர் சொன்னார். காயின் ஆபேலைக் கொன்று புதைத்துவிட்டான் என்று அவருக்குத் தெரிந்திருந்தது.

ஆதாமும் ஏவாளும்தான் உலகின் ஆதி மனிதர்கள் என்பதை நம்புகிறவர்களுக்கு, காணாமல் போன முதல் மனிதன் ஆபேல் என்பதும் தெரிந்திருக்க வேண்டும். உண்மையில் அவன் காணாமல்போகவில்லை, காணா மலடிக்கப்பட்டான். தொலைந்து போகவில்லை, தொலைத்துக் கட்டப்பட்டான். ஆபேலின் மறைவுக்குப் பொறுப்புக் கூறும்படி ஆண்டவர், காயினைக் கேட்டார். நாமறிந்த முதல் ‘பொறுப்புக் கூறல்’ (ACCOUNTABILITY) கோரிக்கை இதுவே.

எங்கே.. எங்கே.. எங்கே..?

இப்போது... நம் காலத்தில்... நம் அருகில் உள்ள இலங்கையில் “என் கணவர் எழிலன் எங்கே?” என்று அனந்தி சசிதரன் கேட்கிறார். “என் மகன் எங்கே?” என்று பாலேந்திரன் ஜெயக்குமாரி கேட்கிறார். “என் கணவர் பிரகீத் எக்னலிகோடா எங்கே?” என்று சந்தியா கேட்கிறார். எங்கள் தலைவர்களும் தளபதிகளும் அரசியல் அறிஞர்களும் கலைஞர்களும் வீரர்களும் எங்கே.. எங்கே.. என்று ஈழத் தமிழ் மக்கள் கேட்கிறார்கள். இளங்குமரன் எங்கே? போர் முடிந்த பிறகும் உயிரோடு காணப்பட்ட பாலகுமாரனும் அவர் மகன் சூரியதீபனும் எங்கே? பாவலர் புதுவை இரத்தினதுரை எங்கே? யோகி எங்கே? - இந்தக் கேள்விகளுக்கு முடிவே இல்லை போலும். இவற்றில் ஒரே ஒரு கேள்விக்குக்கூட “ஓ, அவரா, இதோ இங்கே இருக்கிறார்” என்று விடை கிடைக்கவில்லை.

போன பொங்கலுக்கு யாழ்ப்பாணத்தில் தைத்திருநாள் கொண்டாடப் போயிருந்த நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே, “காணாமல் போனவர்களில் யாரும் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை” என்றார். அப்படியானால், அனைவரும் இறந்துவிட்டார்கள். அதாவது கொலை செய்யப்பட்டுவிட்டார்கள். கொலை செய்யப்பட்டார்கள் என்றால், கொலை செய்தவர்கள் யார்? அவர்கள் கொலை வழக்கில் கூண்டிலேற்றப்பட்டார்களா? சிறையில் அடைக்கப்பட்டார்களா? இதுவரை இல்லை என்றால், இனி எப்போது சட்டம் விழித்துக்கொள்ளப்போகிறது?

காணாமலடித்தலின் கூறு

ஒரு காலத்தில் ராணுவக் கொடுங்கோல் ஆட்சிகளின் வாடிக்கையான வழிமுறையாக இருந்த, ‘காணாமலடித்தல்’ உலகெங்கும் பல நாடுகளிலும் அரசுகளின் சட்டவிரோத அடக்குமுறையில் ஒரு முக்கியக் கூறாக வளர்ந்து, அனைத்துலகச் சிக்கலாயிற்று. 2010ல் ஐநாவில் சர்வதேசக் காணாமல் மறைதல்கள் உடன்படிக்கை (International Disappearances Convention) கையெழுத்தாகிப் பன்னாட்டுச் சட்டமாயிற்று.

காணாமலடித்தல், அரசுக்குத் தீராத் தொல்லை கொடுக்கும் ஒருசில தனிமனிதர்களை ஒழித்துக்கட்டுவது என்பதைவிடவும், பரந்துபட்ட சமூகத்தில் அச்சம் விதைக்கும் உத்தியாகவே கையாளப்படுகிறது. அதாவது, இது அரச பயங்கரவாதத்தின் கொடுங்கருவியாக, மக்களை அச்சுறுத்தி அடக்கி வைக்க உதவுகிறது. சமீப கால வரலாற்றில், மிக அதிகமானவர்களைக் காணாமலடித்த கொடுஞ்சாதனையில் இராக் முதலிடத்திலும், இலங்கை இரண்டாமிடத்திலும் உள்ளன என்பது 1999-ம் ஆண்டு வெளிவந்த ஐநா ஆய்வு மதிப்பீடு. இலங்கையில் உள்நாட்டுப் போர்க் காலத்தில் மட்டும் காணாமல் போனவர்கள் பற்றி 20,000 முறையீடுகள் வந்ததாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்தது.

காவு கொண்ட காலம்

சிலோனாக இருந்த இலங்கைத் தீவு 1972ல் லங்கா குடியரசான பிறகுதான் காணாமலடிக்கும் நடைமுறைகள் பரவலாயின. ஜனதா விமுக்தி பெரமுன (மக்கள் விடுதலை முன்னணி) என்ற பெயரில் ஆயுதப் புரட்சி நடத்த முற்பட்ட இளைஞர்களில் பலர், அரசுப் படைகளிடம் சிக்கிய பின் மாயமாய் மறைந்தனர். இவர்கள் பெரும்பாலும் சிங்களர்களே. ஜெயவர்த்தனேவும் பிரேமதாசாவும் பிரதமராகவும் அதிபராகவும் கோலோச்சிய காலம், தென்னிலங்கையில் பல்லாயிரம் சிங்கள இளைஞர்களைக் காணாமலடித்துக் காவு கொண்ட காலம் என்று வரலாறு குறித்து வைத்துள்ளது.

‘ஜனதா விமுக்தி பெரமுனா’வின் தலைவர் ரோகன விஜயவீராவை 1989 நவம்பரில் அரசுப் படையினர் சித்ரவதை செய்து கொன்றது பற்றி அப்படையைச் சேர்ந்த ஒருவரே வெளியிட்டுள்ள செய்தி அதிர்ச்சிக்குரியது: துன்புறுத்தப்பட்டு, காலில் சுடப்பட்டு வலி வேதனையால் முனகிக்கொண்டிருந்தபோதே உயிரோடு அவரை மின்தகனப் படுக்கையில் கிடத்தி எரித்துவிட்டார்களாம்!

தமிழர்களுக்கு எதிரான நீதி

1985-91 காலத்தில் தென்னிலங்கை எங்கும் சிங்கள இளைஞர்கள் காணாமலடிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, அந்தக் கொடுமைகளுக்கு எதிராக மனித உரிமைப் போராளிகள் குரல் கொடுத்தார்கள். சேர்ந்து நின்று குரல் கொடுத்த சுதந்திரக் கட்சி அரசியல்வாதிகள் சிலரில் முக்கிய மானவர் மகிந்த ராஜபக்ச!

ஆட்சிக்கு வந்ததும் அதே ராஜபக்ச, பயங்கரவாத ஒழிப்பின் பெயரால், ஈழத் தமிழ் மக்கள் மீது தொடுத்த இன அழிப்புப் போரில் காணாமலடித்தலும் ஒரு போர்முறை ஆயிற்று. இது பெரும்பாலும் தமிழர்களுக்கு எதிராகவே நடந்தாலும், நீதி நேர்மையின் பக்கம் நின்ற ஒருசில சிங்களர்களையும் விட்டுவைக்கவில்லை.

சிங்கள ஊடகரும், ஓவியரும், எழுத்தாளருமான பிரகீத் ரஞ்சன் எக்னலிகோடா 2010 ஜனவரி 24-ம் நாள் மாலை, ஒரு பழைய நண்பரைப் பார்க்கப்போவதாகச் சொல்லித் தன் அலுவலகத்தை விட்டுப்புறப்பட்டார். போனவர் போனவர்தான், திரும்பி வரவே இல்லை. மனைவி சந்தியாவும் உறவினர்களும் நண்பர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் எக்னலிகோடாவைக் கடத்திச் சென்றது ராஜபக்ச ஆட்கள்தான் என்று குற்றஞ்சாட்டினர். 2015 அதிபர் தேர்தலில் ராஜபக்ச தோற்று மைத்திரிபால சிறிசேனா அதிபரான பின், எக்னலிகோடா மாய மறைவு பற்றி உளவுத் துறைப் புலனாய்வு நடைபெற்றது. குற்றத்தில் தொடர்புடைய ராணுவ அதிகாரியைக் கைது செய்யும் நிலையும் ஏற்பட்டது. ஆனால், படைத் தலைமை அதை அனுமதிக்க மறுத்துவிட்டது.

வெள்ளை வேன் வரலாறு

போர்க் காலத்தில் தமிழர்களை ஒடுக்க ‘வெள்ளை வேன் கடத்தல்’ விரிவாகப் பயன்படுத்தப்பட்டது. வெள்ளை வேனில் கடத்திச் செல்லப்பட்ட யாரும் உயிரோடு மீண்டதில்லை. ராணுவத்திடம் சரணடைந்து, காணாமல்போன தன் மகனைத் தேடி பாலேந்திரன் ஜெயகுமாரி என்ற தாய் நடத்திவரும் போராட்டம் உலகறிந்த ஒன்று. ஜெயகுமாரியும் அவர் மகள் 13 வயதுச் சிறுமி விபுசிகாவும் மூன்று பிள்ளைகளின் படங்களோடு ஒவ்வொரு போராட்டத்திலும் காணப்பட்டார்கள். முன்னாள் பிரித்தானியப் பிரதமர் கேமரூன், மனித உரிமை உயர் ஆணையர் நவிப்பிள்ளை என்று சர்வதேசப் பிரமுகர் யார் வந்தாலும், நேரில் போய் முறையிட்டார்கள். விளைவு: ஒரு நாள் அவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இலங்கையில் கட்டாயக் காணமல் போதல் குற்றங்கள் நிகழ்ந்திருப்பதை அரசு அமைத்த பரணகாமா ஆணையமே உறுதிசெய்துள்ளது. ஐ.நா. சபை அறிக்கைகள் உறுதி செய்துள்ளன. இப்போதைய இலங்கை அரசும் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், பாதிப்புற்றவர்களுக்கு நீதி என்பது இன்னமும் எட்டாக் கனியாகவே இருந்துவருகிறது.

ஏராளமான ஓட்டைகள்

சர்வதேச அழுத்தத்தால் சமீபத்தில் இலங்கை இயற்றியுள்ள ‘காணாமல் போனோர் செயலகம்’ (OMP) அமைப்பதற்கான சட்டம் வெறும் கண்துடைப்பே என்று தமிழர் அமைப்புகள் கூறியுள்ளன. ஏனென்றால், இந்தச் செயலகத்தில் சர்வதேசப் பங்கேற்பு இல்லை. காணாமலடித்த குற்றம் புரிந்தோரைத் தண்டிக்க வழிவகை இல்லை. இப்படி ஏராளமான ஓட்டைகள்! இது ஐ.நா.சபையில் இலங்கை அளித்த உறுதிமொழிக்கு மாறானது.

காணாமல் போனவர்கள் தொடர்பான போராட்டம் தமிழீழ மக்கள் தொடர்ந்து நடத்திவரும் நீதிக்கான போராட்டத்தின் முக்கியக் கூறாக அமைந்துள்ளது. வருகிற செப்டம்பர் 24-ல், யாழ்ப்பாணத்தில் ‘பொங்கு தமிழ்ப் பேரணி’ நடக்கவிருக்கிறது. காணாமல் போனவர்கள், தம் அன்புக்குரியவர்களின் கைகளில் படங்களாக அணிவகுக்கப் போகிறார்கள். அவர்களது ரத்தத்தின் குரல் - ஆபேலின் ரத்தத்தின் குரலைப் போலவே - மண்ணிலிருந்து கதறும், உலகத்தின் உளச்சான்றுக்குச் செவி இருந்தால் அந்தக் குரல் கேட்கும். நீதி கிடைக்கும்!

- தியாகு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர். தொடர்புக்கு: thozharthiagu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x