Last Updated : 13 Jun, 2017 09:13 AM

 

Published : 13 Jun 2017 09:13 AM
Last Updated : 13 Jun 2017 09:13 AM

மரபணு மாற்றிய கடுகு வேண்டவே வேண்டாம்!

மரபணு மாற்றப்பட்ட (ஜி.எம்.) கடுகுப் பயிரை இந்தியாவில் சாகுபடி செய்யலாம் என்று ‘மரபணுப் பொறியியல் மதிப்பீட்டுக் குழு’(ஜி.இ.ஏ.சி.) அனுமதி வழங்கியிருப்பது அசாதாரணமானது. ‘ஜி.எம். விதைகள், விதைக்கப்படும் மண்ணுக்கு, சுற்றுச் சூழலுக்கு, அதை உண்ணும் மனிதர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளை நீண்டகால அடிப்படையில் ஆராயாமல், அறிவியல்ரீதியாகச் சோதிக்காமல், இந்தியாவில் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்’ என்று தேர்தல் அறிக்கையில் கூறிய பாஜக அரசு, இப்போது அனுமதித்திருப்பது அதன் தேர்தல் வாக்குறுதிகளையே கேலிக்கூத்தாக்கியிருக்கிறது.

‘அதிக விளைச்சல் தரும், பூச்சிக்கொல்லிகளைக் குறைவாகப் பயன்படுத்தினால் போதும்’ என்றெல்லாம் செய்த பிரச்சாரங்களை 1990-களில் ஜவுளித் துறைச் செயலாளராக இருந்த நான் உட்பட பல பேர் நம்பித்தான், ‘பீட்டா காட்டன்’ என்ற ஜி.எம். பருத்தி விதைகளை ஆதரித்தோம். ஆனால், உரப் பயன்பாட்டை அதிகரித்தும், தண்ணீரை அதிகம் பாய்ச்சியும் அதிக மகசூலைக் காண முடியவில்லை. இந்தியாவைவிட அதிகப் பருத்தி மகசூல் செய்யும் எந்த நாடும் ஜி.எம். பருத்தியைப் பயன்படுத்தவில்லை. எதிர்காலத்தில் இப்படி நடக்கும் என்று இம்மியளவு தெரிந்திருந்தால்கூட நான் அதை அனுமதித்திருக்க மாட்டேன்.

மீண்டும் ஏமாற்ற முயற்சி

ஜி.எம். கடுகைச் சாகுபடி செய்தால் மகசூல் அதிகரிக்கும் என்ற வாக்குறுதிகளை நம்பினால், நாம்தான் முட்டாளாவோம். கடுகு என்பது எல்லாருடைய வீட்டுச் சமையல்களிலும் இன்றியமையாதது. அனுமதி வழங்கப்பட்டிருக்கும் ஜி.எம். கடுகு லவலேசமும் நம்பிக்கைக்கு உரியது அல்ல. கடந்த 30 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட ஒட்டுப் பயிர்களுடன் அல்ல - சமீபத்திய உயர் ரக விளைச்சல் விதைகளுடன்கூட, இதை ஒப்பிட முடியாது. கடுகு சாகுபடியில் இப்போது முதல் ஐந்து இடங்களை வகிக்கும் பிரிட்டன், பிரான்ஸ், போலந்து, ஜெர்மனி, செக் குடியரசு என்ற எந்த நாட்டிலும் ஜி.எம். கடுகைச் சாகுபடி செய்வதில்லை. கடுகு விளைச்சலை விரைவாகவும் பாதுகாப்பாகவும் அதிகப்படுத்த வேண்டும் என்று நினைத்தால், உலக வங்கித் திட்டத்தின் கீழ், பிஹாரில் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்ட விதைகளைக் கொண்டு தீவிரச் சாகுபடியை மேற்கொள்ளலாம்.

ஜி.எம். கடுகை மதிப்பிடுவதில் பல குறைபாடுகள் இருக்கின்றன. நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய நோய்கள், சுற்றுச்சூழலுக்கு ஏற்படப்போகும் சேதங்கள், வேளாண்மைக்கு ஏற்படப்போகும் பாதிப்புகள் போன்றவை முறையாகக் கணக்கிடப்படவில்லை. ‘பீட்டா’ கத்தரிக்காய்க்கு நடந்த அளவில்கூட சோதனைகள் நடத்தப்படவில்லை. கத்தரிக்காயைவிட கடுகு அதிகப் பரப்பிலும் அதிக மாநிலங்களிலும் பயிரிடப்படுகிறது.

மருத்துவ வல்லுநர்களும் அறிவியல் அறிஞர்களும் ஜி.எம். ரகப் பயிர்களைக் கண்டிக்கின்றனர். ரசாயன களைக்கொல்லிகளின் பயன்பாட்டை அதிகரிக்கும் சூழலை ஜி.எம். பயிர்கள் ஏற்படுத்துவதால், இதை உண்போருக்குக் கடுமையான உடல் நலக்கேடு ஏற்படுத்துகிறது.

விளைவுகள் பற்றிய அக்கறையின்மை

களைக்கொல்லிகளால் ஏற்படும் பாதிப்பு அம்சத்தை ஜி.இ.ஏ.சி. ஆராயாமல் அப்படியே ஒதுக்கிவிட்டது. அதற்குப் பிறகு ஜி.எம். கடுகு பாதுகாப்பானதா என்று ‘ஆராய’ சிறு குழு நியமிக்கப்பட்டது. அந்தக் குழு என்ன ஆராய்ச்சிகளை மேற்கொண்டது, அது தந்த ஆய்வு முடிவுகள் என்ன என்பதெல்லாம் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. மத்தியத் தகவல் ஆணையம் காட்டமாக ஆணை பிறப்பித்த பிறகு, பொது ஆலோசனைகளை, வெறும் கண்துடைப்பாக நடத்தியது ஜி.இ.ஏ.சி.

மரபணு மாற்றப்பட்ட பயிர் ரகங்களைக் குதிரைப் பாய்ச்சலில் அமலுக்குக் கொண்டுவந்த நாடு அமெரிக்கா. இந்தப் பயிர்கள் சாகுபடிக்கும், இந்தப் பயிர்களுக்கான களைக்கொல்லிப் பயன்பாடுகளுக்கும் பிறகு கடந்த 20 ஆண்டுகளில் சிறுநீரகச் சேதம், நீரிழிவு, மன இறுக்கம், நினைவிழப்பு நோய், புற்று நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அங்கே அதிகரித்துக்கொண்டே வருகிறது.

உலகின் மிகவும் முன்னேறிய 20 நாடுகளில் 17 நாடுகள் ஜி.எம். பயிர்களைச் சாகுபடி செய்ய மறுத்துவிட்டன. ஜப்பான், ரஷ்யா, இஸ்ரேல், ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் இதில் அடக்கம். மனத் தடைகளை உடைப்பதற்காக இந்தியாவில் ‘சுதேசி’ மரபணு மாற்றப்பட்ட பயிரைக் கொண்டுவருவதாகக் கூறுகிறார்கள். சுதேசியோ, விதேசியோ மரபணு மாற்றப்பட்ட பயிர் என்றாலே அதன் தீய விளைவுகள் ஒன்றுதான்.

இழப்பும் தீய விளைவுகளும்

இதே ஜி.இ.ஏ.சி. அமைப்பு, 2002-ல் பேயர் நிறுவனம் அறிமுகப்படுத்த விரும்பிய ஜி.எம். கடுகை நிராகரித்தது. அதே காரணங்கள் இப்போதும் தொடர்கின்றன. களைக்கொல்லியைத் தாக்குப்பிடிக்கும் ரகங்கள் காலம் முழுக்க ஒரே களைக்கொல்லியையே சந்திக்கின்றன. இதனால் களைகள், அந்த களைக் கொல்லியை எதிர்க்கும் ஆற்றலை வளர்த்துக்கொண்டுவிடுகின்றன. களைகளுக்கு எதிரான கிளைபோசேட்டின் பயன்பாடு அமெரிக்காவில் கடந்த 16 ஆண்டுகளில் பத்து மடங்கு அதிகரித்துவிட்டது. ‘கிளைபோசேட்’ என்பது மனிதர்களில் புற்றுநோயை ஏற்படுத்தவல்லது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருக்கிறது.

‘உணவுக்கான உரிமை’ என்ற தலைப்பில் அறிக்கை தயாரித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அதிகாரி, வேளாண் துறையினர் மட்டுமல்ல மற்றவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு உண்மையைச் சுட்டிக்காட்டுகிறார். “சமீபத்திய நிறுவனங்களின் இணைப்புக்குப் பிறகு மன்சான்டோ - பேயர், டவ் - டுபான்ட், சின்ஜென்டா - கெம்சைனா என்ற மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் உருவெடுத்துள்ளன. உலகின் பூச்சிக்கொல்லி மருந்து சந்தையில் 65%-க்கும் மேல் அவற்றின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அவை மரபணு மாற்றப்பட்ட விதைகளின் சந்தையில் 61%-ஐத் தங்கள் வசம் வைத்துள்ளன. பூச்சிக்கொல்லித் தொழிலதிபர்கள் செல்வாக்கு மிக்கவர்கள். முடிவெடுக்கும் இடத்தில் இருக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகளை எளிதில் வளைத்துப்போட்டு சீர்திருத்தங்கள் நடைபெறாமல் தடுப்பதில் வல்லவர்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஜி.எம். கடுகு சாகுபடி செய்தால் விளைச்சல் பெருகும் என்ற முதல் கூற்றே பொய் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. இது கூடாது என்பதற்கான சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் காரணங்களும் வலுவாக இருக்கின்றன. இதைத் தடுக்கும் ஆற்றல் சுற்றுச்சூழல் துறை அமைச்சர், பிரதமர் ஆகியோர் கைகளிலும், உச்ச நீதிமன்றத்திடமும்தான் இருக்கின்றன. அன்றாடம் சாப்பிடும் கடுகு மூலம் இனி மீளவே முடியாத ஆபத்து ஏற்படுவதிலிருந்து விவசாயிகளையும் நுகர்வோரையும் அவர்கள்தான் காப்பாற்ற வேண்டும்.

டி.எஸ்.ஆர். சுப்ரமணியன், முன்னாள் மத்திய அமைச்சரவைச் செயலாளர்

© ‘தி இந்து’ ஆங்கிலம்.

சுருக்கமாகத் தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x