Published : 02 Oct 2013 10:13 AM
Last Updated : 02 Oct 2013 10:13 AM

காந்தி சனாதனியா?

காந்தி வருணாசிரமத்தையும் சாதியையும் ஏற்றுக்கொண்டவர் என்று யாராவது வலியுறுத்திப் பேசும்போது எனக்கு புத்த பகவன் சொன்ன ‘யானையைப் பார்த்த குருடர்களின் கதை’தான் ஞாபகத்துக்கு வரும்.

காந்தி சனாதனியா? - இது உண்மையானால், ஏன் கோட்சே குழுவினர், சாவர்க்கர் உட்பட காந்தியைக் கொல்வதில் முனைப்புக் காட்டி, கடைசியில் தம் முயற்சியில் வெல்லவும் செய்தனர்? வாக்களித்தபடி பாகிஸ்தானுக்கு 50 கோடிகளைக் கொடுப்பதற்கு காந்தி அழுத்தம் கொடுத்ததற்காகத்தான் அவரைக் கொன்றதாக கோட்சே நீதிமன்றத்தில் சொன்னது உண்மையானால், நாட்டுப் பிரிவினை என்கிற பேச்சு எழும்பும் முன்னரே இதே குழுவினரும் இவர்களை ஒத்தவர்களும் அவரைக் குறைந்தபட்சம் ஐந்து முறை கொல்ல முயற்சித்தது ஏன்?

எப்படிப் பார்த்தாலும் இந்தக் கேள்விகளுக்கு நாம் இரு பதில்களைத்தான் சொல்ல முடியும். 1. சுதந்திர இந்தியா இந்து ராஷ்டிரமாக உருப்பெறுவதற்கு ஓர் வலுவான தடையாக காந்தி இருந்தார். காந்தி பல்வேறு சாதி, மதம், மொழி பேசும் மக்களின் தேசமாக இந்தியாவைக் கற்பிதம் செய்தார். சாவர்க்கரும் மற்றவர்களும் இந்தியாவை இந்துக்களின் தேசமாகக் கற்பிதம் செய்ய முயன்று, காந்தியின் மக்கள் செல்வாக்கின் முன் படுதோல்வி அடைந்தனர். காந்தியின் தேசியம் ஒரு உள்ளடக்கும் தேசியம் (inclusive nationalism). அவரை எதிர்த்தவர்களின் தேசியம், இந்துக்கள் தவிர மற்றவர்களை விலக்கும் தேசியம் (exclusive nationalism).

2. அவர் இந்து மதம் குறித்து முன்வைத்த வாசிப்புகள் முற்றிலும் சனாதனத்துக்கு எதிராக இருந்தன. குறிப்பாக, இந்து மதத்தில் தீண்டாமை கிடையாது என அவர் முன்வைத்த வலுவான கருத்துகளைச் சனாதனிகளால் ஏற்கவே இயலவில்லை. காந்தி ஆலயப் பிரவேச இயக்கத்தை முன்னெடுத்தபோது, அவரது தமிழக வருகையை எதிர்த்து “காந்தி, திரும்பிப் போ” எனச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. துண்டறிக்கைகள் வெளியிடப்பட்டன. சிதம்பரம் கோயில் மூடப்பட்டது. காந்தியை இழிவுபடுத்தி, ‘தீண்டாதார் ஆலயப் பிரவேச நிக்ரஹம்’என்றொரு நூல் தமிழகத்தில் வெளியிடப்பட்டது.

தீண்டத்தகாதவர்கள் பிரச்சினையில் காந்தி கொண்டிருந்த கருத்துகளில் நமக்கும் சில மாறுபாடுகள் உண்டு. ஆனாலும், பெரியார் உள்ளிட்ட சாதி ஒழிப்புப் போராளிகள் இந்தத் திசையில் பேசியவற்றையும் செய்தவற்றையும்கூடச் சகித்துக்கொண்டவர்கள், காந்தி அதைச் செய்தபோது ஏன் கொதித்தெழுந்தனர்? சாதி ஒழிப்புப் போராளிகள் பாதிக்கப்பட்ட மக்களிடம் சென்று அவர்களை எழுச்சிகொள்ளச் செய்தனர். காந்தியோ பாதிக்கப்பட்டவர்களோடு நில்லாமல், யார் பாதிப்புக்குக் காரணமாக இருந்தார்களோ அவர்களிடமும் பேசினார். அவர்களையும் களத்தில் இறக்கினார். சென்ற நூற்றாண்டில் ஆசியாவில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய மக்கள் இயக்கங்களில் ஒன்றாக காந்தியின் தலைமையிலான ஆலயப் பிரவேச இயக்கம் அமைந்தது என இன்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

காந்தி தீண்டாமைக்குக் காரணமானவர்களை நோக்கிப் பேசியதாலேயே அவரின் மொழி இதர சாதி ஒழிப்புப் போராளிகளின் மொழியிலிருந்து வேறுபட்டிருந்தது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவரது மொழி, தோற்றத்தில் மென்மையாக இருந்தபோதிலும் இந்து மதத்தின் அடிப்படைகளை அசைப்பதாகவும் இருந்ததைப் புரிந்துகொண்டதால்தான் அவரை சனாதனிகள் ‘வர்ண சம்ஹாரம்’செய்ய வந்தவராக எண்ணிப் பகைத்துக்கொண்டனர்.

தன்னுடைய வாழ்வின் ஆரம்ப நாட்களில், தென்னாப்பிரிக்க வீட்டில் ஒரு தலித் கிறிஸ்துவ ஊழியரின் அறையிலிருந்த கழிவு நீர்ப் பானையை கஸ்தூரிபாய் ஏணி வழியாகச் சுமந்து வந்து சுத்தம் செய்யத் தயங்கி, காந்தியையும் செய்யக் கூடாதென எதிர்த்தபோது, அவர் மனைவியை மூர்க்கமாக எதிர்த்த கதையை நாம் அறிவோம். இந்து மதத்தில் தீண்டாமை இல்லை என்று மட்டும் அவர் சொல்லவில்லை; ஆலய வழிபாடுகள், மதச் சடங்குகள், நேர்த்திக்கடன்கள் ஆகியவற்றையும் விலக்கி வாழ்ந்தவர் அவர். ஆலயங்களை விபச்சார விடுதிகள் என்கிற அளவுக்கு அவர் ஒப்பிட்டுப் பேசியபோதும் இந்தியத் துணைக் கண்டத்தில் ஏற்படும் இயற்கைச் சீரழிவுகள், தீண்டாமையை இந்து சமூகம் கடைப்பிடிப்பதன் விளைவுதான் என்று சொன்னபோதும் இங்கு ஏற்பட்ட சர்ச்சைகளும் கண்டனங்களும் நினைவுகூரத் தக்கன. வருணாசிரமம்குறித்த அவரது தொடக்க காலக் கருத்துகளும்கூட இறுதியில் பெரிய அளவில் மாறின.

ராமனை ஒரு லட்சிய மானுடனாகவும், ராம ராஜ்யம் என்பதை ஒரு லட்சிய அரசாகவும் மட்டுமே அவர் முன்வைத்தார். ராமாயணத்தை ஒரு வரலாற்றுக் காவியமாகவோ ராமனை ஒரு வரலாற்று நாயகனாகவோ முன்வைப்பதை அவர் மறுத்தார். வேறு சொற்களில் சொல்வதானால், காந்தியின் தர்க்கத்தில் ராமன் அயோத்தியில் பிறந்தான் என்பதற்கும் சேதுப் பாலத்தை அவன் அமைத்தான் என்பதற்கும் இடமில்லை.

காந்தி தன் அரசியலுக்கு வரலாற்றை என்றும் துணைகொண்டதில்லை. அதேபோல டால்ஸ்டாய், தோரோ ஆகியவர்களின் சிந்தனை வழி வந்த அவரிடம் ‘தேசபக்தி’என்கிற சொல்லாடலும் இருந்ததில்லை. காந்தி உயிருடன் இருந்த காலத்தில் அவருக்கு எதிராக சர் சங்கரன் நாயர் எழுதிய நூலின் தலைப்பு ‘காந்தியும் அராஜகமும்’(Gandhi and Anarchy).

திலகர், அரவிந்தர் முதலான காந்திக்கு முந்தைய தேசியப் போராட்ட வீரர்கள் எல்லோரும் பகவத் கீதையை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிரான தனி நபர்க் கொலை உள்ளிட்ட போர்த் தொழிலை முன்வைக்கும் புனித நூலாக வாசித்துக்கொண்டிருந்த நேரத்தில், காந்தி அதைச் சமாதானத்தின் சாத்தியங்களையும் அகிம்சைப் பாதையையும் வற்புறுத்தும் ஒரு நூலாக வாசித்து உரை எழுதினார்.

காந்தியின் இந்து மதம் குறித்த வாசிப்பில் நாம் காணும் சிக்கல்கள்கூட அவை எந்தப் புனித நம்பிக்கைகளின் (believes) அடிப்படையிலிருந்தும் உருவாகவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. மாறாக, அவை உடல் மற்றும் உளத் தூய்மை குறித்த அவரது கட்டுப்பெட்டித்தனமான கருத்துகளிலிருந்தே முகிழ்த்துள்ளன.

இந்து மதம் பிறவி அடிப்படையிலானது. ஒருவர் இந்துவாகப் பிறக்க மட்டுமே முடியும் என்பதை அதன் குறைபாடுகளில் ஒன்றாக முற்போக்காளர்கள் விமர்சிப்பது வழக்கம். ஆனால், காந்தியோ அதுவே இந்து மதத்தின் சகிப்புத் தன்மைக்கு எடுத்துக்காட்டு என்றார். அதாவது, மதம் மாற்றுவது என்பது பிற மதங்களின் இருப்பைச் சகித்துக்கொள்ளாததின் விளைவு என்பது அவர் கருத்து. கடைசிவரை மதமாற்றம் என்பதை அவர் ஏற்கவே இல்லை. ஆனால், சட்டம் இயற்றி மதமாற்றத்தைத் தடுப்பது என்கிற நிலை வந்தபோது அம்முயற்சியைக் கடுமையாக எதிர்த்தார். அதென்ன?

அதுதான் காந்தி!

அ.மார்க்ஸ், எழுத்தாளர், மனித உரிமைச் செயல்பாட்டாளர். தொடர்புக்கு: professormarx@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x