Last Updated : 15 Sep, 2016 09:19 AM

 

Published : 15 Sep 2016 09:19 AM
Last Updated : 15 Sep 2016 09:19 AM

பிரச்சினை காவிரி இல்லை

இன்று பெங்களூருவின் அடையாளம் பூங்காக்களோ, மென்பொருள் நிறுவனங்களோ அல்ல; ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்தான்

‘நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரி நீர் தருவதில் எங்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. இங்கே வேண்டுமென்றே சிலர் காவிரியைப் பிடித்துக் கொண்டு அரசியல் செய்கிறார்கள். அவர்களுக்கும் எங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. அவர்கள் எங்களுடைய உணர்வுகளைப் பிரதிபலிக்கவும் இல்லை.’ இரண்டு வாரங்களுக்கு முன்பு பெங்களூருவில் நான் சந்தித்த ஒரு ஆட்டோ ஓட்டுநரின் கருத்து இது. ‘இங்குள்ள சாதாரண மக்களிடம் கேட்டுப் பாருங்கள். அவர்களும் இதையேதான் சொல்வார்கள்’ என்றார் அவர். இருக்கலாம். ஆனால், பெங்களூரு இவரைப் போன்ற சாதாரண மக்களின் நகரம் மட்டுமே அல்ல என்பதால், காவிரி மீண்டும் ஒரு பெரிய சிக்கலாக வெடித்திருக்கிறது.

அவர் சொன்னது உண்மைதான். பெங்களூருவைக் கவ்விப் பிடித்திருக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல் நிச்சயமாகக் காவிரி அல்ல. அந்நகரின் பிரதான ஐந்து பிரச்சினைகள் என்று பட்டியலிட்டால், அதில் காவிரி நிச்சயம் இருக்காது. இருந்தும் உணர்ச்சிபூர்வமான ஒரு விஷயமாகவும் கர்நாடகத்தின் அதிமுக்கிய பிரச்சினையாகவும் காவிரி அவ்வப்போது முன்னிறுத்தப்படுவதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும். ஆதாயமளிக்கும் ஓர் அரசியல் கருவியாக, வாக்குகள் பெற்றுத்தரும் ஒரு துருப்புச் சீட்டாக அது இன்னமும் அங்கே இருக்கிறது. நிஜத்தில், பெங்களூருவை உள்ளிருந்தே அரித்து வரும், அந்நகரைச் சிறிது சிறிதாகக் கொன்று தின்றுவரும் தலையாய பிரச்சினை வேறு. அது காவிரியைவிட பல மடங்கு பெரியது. ஒரு வகையில், அது இந்தியாவின் பிரச்சினையாகவும் சர்வதேசப் பிரச்சினையாகவும்கூட இருக்கிறது.

துரித நகரமயமாக்கல்

தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக பெங்களூருவுக்கு நான் தொடர்ச்சியாகச் சென்று வந்துகொண்டிருக்கிறேன். பெங்களூருவுக்கு வடக்கே அமைந்துள்ள ஒரு புறநகர் பகுதி, எலஹன்கா. இங்குள்ள ஹெரிடேஜ் எஸ்டேட் என்னும் அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுப்பில், சுமார் 1,000 குடும்பங்கள் வசித்துவருகின்றன. நீச்சல் குளம், உடற்பயிற்சி அரங்கம், நூலகம், பலசரக்குக் கடை, பூங்கா, விளையாட்டு மைதானம், வழிபாட்டு இடம், விழாக்கூடம் என்று அனைத்தையும் பெற்று, கிட்டத்தட்ட தன்னிறைவடைந்த ஒரு தனியுலகம் போல் பளிச்சென்று அந்த எஸ்டேட் கம்பீரமாக அமைந்திருக்கும். பெங்களூருவின் மற்ற பகுதிகளில் எல்லாம் வெயிலடித்தாலும், இங்கு மட்டும் மிதமான குளிர் எப்போதும் நிறைந்திருக்கும். அந்த அளவுக்குக் காடு போல் மரங்களும் செடிகளும் குடியிருப்புகளைச் சூழ்ந்திருக்கும்.

இதெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்பு. பிறகு இங்கும் வெயில் அடிக்க ஆரம்பித்தது. இங்கும் பெங்களூருவின் பிற பகுதிகளைப் போல் மரங்களும் செடிகளும் குறைய ஆரம்பித்தன. இங்கும் குப்பைகளும் கழிவுகளும் பெருகிப் போயின. மின்விசிறியை இயக்க வேண்டிய அவசியமே இல்லாதிருந்த நிலை மாறி, பல வீடுகளில் குளிர்சாதனப் பெட்டியை வாங்கி பொருத்தியிருக்கிறார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்றபோது, உள்ளே நூற்றுக்கணக்கில் தண்ணீர் லாரி டேங்கர்கள் வரிசையாக நின்றுகொண்டிருந்ததைக் கண்டேன். ‘எங்களுக்கும் தண்ணீர் பிரச்சினை வரும் என்று நாங்கள் நினைக்கவே இல்லை’ என்றார்கள் அங்கு வசித்த நண்பர்கள். வருத்தத்தைவிட, அதிர்ச்சியே அவர்களுடைய குரலில் அழுத்தமாக வெளிப்பட்டது.

ஆற்றலை இழந்த காந்தம்

பெங்களூரு என்னும் மாயை உடைந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சி அது. ஆனால், அவர்கள் நினைப்பதைப் போல் இது திடீர் விபத்து அல்ல. நியாயப்படி அவர்கள் இதனை முன்பே எதிர்பார்த்திருக்க வேண்டும். பூங்கா நகரம் என்று கொண்டாடப்பட்ட பெங்களூரு, தன் பொலிவையும் தனித்துவமான அடையாளத்தையும் மெல்ல மெல்ல இழந்துவந்ததை அவர்கள் கவனிக்கத் தவறிவிட்டார்கள். தென் இந்தியாவில் வேறெங்கும் வாய்க்கப்பெறாத அற்புதமான வானிலையைப் பெற்றிருந்ததால்தான், இந்நாட்டு நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு காந்தத் துண்டால் கவரப்படும் இரும்புத் துகள்களைப் போல் பெங்களூருவை உற்சாகமாகப் பற்றிக்கொண்டன.

இன்று காந்தம் தனது ஆற்றலை இழந்துவிட்டது. என்னுடைய ஒவ்வொரு பயணத்தின்போதும் பெங்களூருவின் ஒரு சிறு பகுதி தொலைந்துபோவதை அல்லது அச்சுறுத்தும் வகையில் அடியோடு உருமாறுவதைப் பார்த்துவருகிறேன். இன்று பெங்களூருவின் அடையாளம் பூங்காக்களோ, மென்பொருள் நிறுவனங்களோ, மயக்கும் குளிரோ அல்ல. ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்தான். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் சந்தித்த அமைதியான, அழகான எலஹன்கா இன்றில்லை. நாலாபுறமும் புதிது புதிதாக வணிக வளாகங்களும் உயரமான அடுக்குமாடிக் குடியிருப்புகளும் சோர்வடையச் செய்யும் ஷாப்பிங் மால்களும் முளைத்துக்கொண்டிருக்கின்றன. அடுத்தமுறை போகும்போது, இந்த அழகிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் பலவற்றில் தண்ணீர் லாரிகள் நிற்பதைப் பார்க்கமுடியும் என்று நம்புகிறேன்.

உண்மையான பிரச்சினைகள்

‘நீங்கள் பார்க்கும் பல கட்டிடங்கள் முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்டவை’ என்றார் பெலத்தூரில் வசிக்கும் ஒரு முதியவர். தெற்கில் உள்ள ஒரு சிறிய விவசாயக் கிராமமான பெலத்தூர் இன்று அடையாளம் தெரியாத வகையில் அபார்ட்மெண்ட் காடாக மாறியிருப்பதைச் சுட்டிக்காட்டி மீண்டும் மீண்டும் மாய்ந்துபோனார் அவர். மென்பொருள் நிறுவனங்கள் பெருகியிருக்கும் வொயிட்ஃபீல்ட் பகுதிக்கு அருகில் இருப்பதுதான் பெலத்தூர் செய்த ஒரே குற்றம். வொயிட்ஃபீல்டின் தேவைகளுக்கு ஈடுகொடுப்பதற்காக பெலத்தூரும் நான்கு கால் பாய்ச்சலில் அவசர அவசரமாக ‘வளரத் தொடங்கியது’. நீங்கள் இப்போது பார்க்கும் பெலத்தூர் ஒரு பொய்யான நகரம்; அதன் நிஜமுகம் எங்களைப் போன்ற சிலருக்குத்தான் தெரியும் என்றார் அந்த முதியவர்.

அதிகரிக்கும் மக்கள்தொகையும் பெருகும் இடப்பெயர்ச்சிகளும் பெங்களூருவின் முகத்தை நிரந்தரமாக மாற்றியிருக்கின்றன. துரிதமாகவும் திட்டமிடப்படாத முறையிலும் நடைபெற்றுவரும் நகரமயமாக்கல் பெங்களூருவைக் கிட்டத்தட்ட கோமா நிலைக்குக் கொண்டுசேர்த்துவிட்டன. நாளொன்றுக்கு 4,500 டன் கழிவை உற்பத்திசெய்யும் குப்பை மேடாக பெங்களூரு இன்று மாற்றப்பட்டிருக்கிறது. வானிலை மாறிவிட்டது. மழை அடிக்கடி பொய்க்கிறது. பெரும்பகுதி நீர்நிலைகள் சாக்கடைகளாகத் திரிந்துவிட்டன. சுற்றுச்சூழல் மட்டுமல்ல, சமூகமும் மாசடைந்து கிடப்பதைத் துரித நகரமயமாதலோடு இணைத்துதான் பார்க்க வேண்டியிருக்கிறது.

வெடிக்கக் காத்திருக்கும் பலூன்

இரு வாரங்களுக்கு முன்பு, பரப்பன அக்ரஹாரா பகுதியில் உள்ள ஒரு விருந்தினர் விடுதியில் தமிழகத்தைச் சேர்ந்த ஓர் இளம் பெண் கத்தி முனையில் மிரட்டப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். முறைப்படி அனுமதி பெறாத, பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதும் அற்ற இத்தகைய விடுதிகள் பெங்களூருவில் ஏராளமாகப் பரவியிருப்பதாக அங்கிருக்கும் நண்பர்கள் சொல்கிறார்கள். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்பையும் அவர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் உறவையும் தெரிந்துகொள்ள பெரிய துப்பறியும் திறமையெல்லாம் தேவைப்படாது. ‘உங்களிடம் பணம் இருந்தால் விதான் சௌதாவைக்கூட உங்கள் பெயருக்கு மாற்றித்தர ஆள் இருக்கிறது; அதற்கான ஆவணங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்’ என்றார் பெலத்தூர் முதியவர்.

வெடிக்கக் காத்திருக்கும் ஒரு பெரிய பலூன்போல் தவித்துக்கொண்டிருக்கிறது பெங்களூரு. தொலைந்து போன பசுமைக்கும் வீதிகளில் பெருகிவரும் குப்பைக்கும் நேரடித் தொடர்பிருக்கிறது. பூங்காக்கள் மறைந்து கான்கிரீட்டுகள் முளைப்பதற்கும் இந்த மாற்றத்தைச் சாத்தியப்படுத்தும் அதிகார முறைகேடுகளுக்கும் தொடர்பிருக்கிறது. பெங்களூரு முழுக்கத் தண்ணீர் லாரிகள் ஓடிக்கொண்டிருப்பதற்கும் இயற்கை வளம் சூறையாடப்படுவதற்கும் தொடர்பிருக்கிறது. பெருகும் ஏற்றத்தாழ்வுக்கும் அதிகரிக்கும் குற்றச் செயல்களுக்கும் தொடர்பிருக்கிறது. பெங்களூருவில் ஏன் குளிர் குறைந்துகொண்டிருக்கிறது என்பதற்கும் காவிரி ஏன் அனலாகக் கொதித்துக்கொண்டிருக்கிறது என்பதற்கும்கூடத் தொடர்பு இருக்கிறது.

சாதாரண கண்களுக்கு இந்தத் தொடர்புகள் மிகத் தெளிவாகத் தெரிகின்றன. ஆதாயம் தேடுபவர் களுக்குத்தான் இவை தெரிவதில்லை. அவர்கள் தெரிந்துகொள்ள விரும்புவதும் இல்லை.

மருதன், எழுத்தாளர். தொடர்புக்கு marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x