Last Updated : 04 Oct, 2013 04:59 PM

 

Published : 04 Oct 2013 04:59 PM
Last Updated : 04 Oct 2013 04:59 PM

நீதி சொல்லும் சேதி - அல்ப ஆயுசில் போன அவசரச் சட்டம்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சட்டமியற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கும் மாநிலங்களில் சட்டப்பேரவைகளுக்கும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அந்த சபைகள் கூடாதபோது உடனடி நடவடிக்கை எடுக்க வும், அதற்கான சூழ்நிலை களைப் பற்றி திருப்தியடைந் தால் அவசரச் சட்டம் இயற்ற குடியரசுத் தலைவருக்கும், மாநிலங்களில் ஆளுநர்களுக் கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியரசுத் தலைவருக்கு சுயமாக செயல்பட அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இங்கு மத்திய அமைச்சரவையின் அறிவுரைப்படிதான் குடியரசுத் தலைவர் செயல்பட முடியும். ஏனெனில் நமது குடியாட்சி இங்கிலாந்து நாடாளுமன்ற அமைப்பையொத்தது. West Minster Model என்று அதை சொல்வார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவரே நாட்டின் பிரதமராக முடியும். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் தனது அமைச்சரவையை அமைத்துக் கொள்ளலாம். தேர்தலுக்குப் பிறகுதான் இங்கு பிரதமர் யார் என்ற கேள்விக்குப் பதில் காணமுடியும். நாடாளுமன்றத் தேர்தலில் நிற்கும் எவரையும் பிரதமராகவிருக்கும் வேட்பாளரென்று நிறுத்த முடியாது.

2 வருடத்துக்கு மேல் சிறைத் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் நிற்க முடியாது என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் கூறுகிறது. தண்டனைக்கு முன்னரே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், அவர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து 90 நாட்களில் மேல்முறையீடு செய்தால் அவர் தனது பதவியை இழக்க வேண்டாம் என்று ம.பி.சட்டப்பிரிவு 8(4) ல் கூறப்பட்டுள்ளது. இப்பிரிவு செல்லாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, அந்த உத்தரவின் சட்ட அடிப்படையை ரத்து செய்ய மசோதா கொண்டுவரப்பட்டது. அதை நிறைவேற்றுவதற்குள் கூட்டத்தொடர் முடிந்துவிட்டது. எனவே அவசரச் சட்டம் இயற்ற குடியரசுத் தலைவருக்கு அமைச்சரவை பரிந்துரைத்து, அவரும் கடந்த செப்டம்பர் 25ம் தேதி ஒப்புதல் கொடுத்துவிட்டார். அவசரச் சட்டம் இயற்றி 7 நாட்களுக்குள் திரும்பப் பெற்றது இதுவே முதல் முறை.

அமைச்சரவையில் இல்லாத ஒருவரின் Nonsense பேச்சுக்கு இவ்வளவு சக்தியா? கொடுத்த அழுத்தத்தில் சட்டமே திரும்பப் பெற்ற நிகழ்வால், ஆட்சிக் குதிரையின் கடிவாளம் அவரால் ஆட்டப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. அது ஆபத்து விளைவிக்கும் செயல்.

ராகுலின் பாட்டியான இந்திரா காந்தி அமைச்சரவையைக் கூட்டாமலேயே அன்றைய குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமதுக்கு நெருக்கடி நிலையை அமல்படுத்த ஆலோசனை கூறவும், கோப்பின் தன்மை தெரியாமல் அவர் கையெழுத்திட்டதை நீதிபதி ஷா விசாரணை கமிஷன் கடுமையாகக் கண்டித்தது. கார்ட்டூனிஸ்ட் அபு ஆப்ரகாம் இதுபற்றி கேலிச்சித்திரம் போட்டதற்கு அவரை கைது செய்யும் முற்சிகளும் நடந்தன. அப்போது அமைச்சரவை ஒப்புதல் இல்லாத ஆலோசனையில் பிறந்தது நெருக்கடி. இப்போது அமைச்சரவைக்கு வெளியே உள்ள நபரின் ஊடகப் பேட்டியில் இறந்தது ம.பி. சட்டத்திருத்தம். இரண்டு அதிகார மையங்களுக்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை.

அவசர சட்டத்தை 6 மாதத்துக்கு ஒருமுறை ஆளுநர் மூலம் புதுப்பித்து சட்டப்பேரவையையே சந்திக்காத பீகார் அரசை வாத்வா என்ற வழக்கில் குட்டிய உச்ச நீதிமன்றம் அவசர சட்டம் இயற்றுவதற்கான வரையறையையும் தனது தீர்ப்பில் வழங்கியது. மாநிலங்கள்தாம் அவசர சட்டங்கள் இயற்றி அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும், மத்திய அரசு இப்படிப்பட்ட தவறுகளை செய்ததில்லை என்றும் அத்தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. உச்ச நீதிமன்றம் கொடுத்த நற்சான்றிதழை தகர்த்துவிட்டது தற்போதைய மத்திய அரசின் செயல்பாடு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x