Last Updated : 14 Mar, 2017 10:21 AM

 

Published : 14 Mar 2017 10:21 AM
Last Updated : 14 Mar 2017 10:21 AM

சீனாவை எதிர்கொள்வது எப்படி?

இந்தியாவுக்கான அணுசக்தி விநியோகக் குழுவில் இந்தியா இடம்பெறுவதற்கான முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் நாடு என்று சீனா மீது இந்தியா குற்றம்சாட்டியது உட்பட பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும், இரு தரப்பு உறவை இரு நாடுகளும் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டி ருக்கின்றன. இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் சீனா சென்றுவந்திருக்கும் நிலையில், இரு தரப்பு உறவும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

அமெரிக்கத் தூதர் பதவியை ராஜினாமா செய்வதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர், ஜனவரி முதல் வாரத்தில், தனது இல்லத்தில் வழக்கத்துக்கு மாறான விருந்து ஒன்றை நடத்தினார் ரிச்சர்டு வர்மா. உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜுவையும், நாடு கடந்த திபெத் அரசை நடத்திவரும் தலைவர் சிக்யோங்கையும் அந்த விருந்துக்கு அழைத்திருந்தார். அது ஒரு சின்ன அளவிலான நிகழ்ச்சிதான். மேலும், தற்செயலான சந்திப்பு அல்ல என்பதும் தெளிவாகத் தெரிந்தது. அரசின் அனுமதி இல்லாமல் இதை அவர் செய்திருப்பார் என்று சொல்ல முடியாது. அந்த விருந்தைத் தொடர்ந்து, சமீப காலமாக இந்தியா - சீனா இடையிலான பிரச்சினைகளின் தொடர்ச்சியாக அமெரிக்க அதிகாரிகள் தலையிட்டுவருவதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

2016 அக்டோபரில் அருணாசல பிரதேசத்தின் தவாங் பகுதிக்கு ரிச்சர்டு வர்மா சென்றது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அந்தப் பகுதிக்கு அமெரிக்க அதிபர் செல்வது இதுதான் முதல் முறை. ‘மூன்றாவது நபர்கள்’தலையிடுகிறார்கள் என்று சீன வெளியுறவுத் துறை காட்டமாக விமர்சித்தது. அதைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதம் அருணாசல பிரதேசத்துக்குச் சென்ற அமெரிக்கத் தூதரக உயரதிகாரி கிரெய்க் ஹால், அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி என்று குறிப்பிட்டார். அந்தக் கருத்து துல்லியமானது. இந்தியத் தரப்புக்கு வலு சேர்க்கக் கூடியது. ஆனால், ராஜியரீதியில் என்று எடுத்துக்கொண்டால், வழக்கத்துக்கு மாறாக மிக வெளிப்படையானது.

தவறான நடவடிக்கை

ஏப்ரல் மாதத்திலேயே, சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணையத்தின் தலைவர் காத்ரினா லாண்டோஸ் ஸ்வெட், இமாசல பிரதேசத்தின் குளிர்காலத் தலைநகரான தர்மசாலாவில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. திபெத்தியர்கள், உய்குர்கள், ஃபாலுன் கோங் அமைப்பினர் உள்ளிட்ட சீன அதிருப்தியாளர்கள் கலந்துகொண்ட கருத்தரங்கம் அது. ஜூன் மாதம், அமெரிக்க வெளியுறவுத் துறைத் துணைச் செயலாளராக இருந்த தாமஸ் ஷேனன் டெல்லிக்கு வருகை தந்தார். அப்போது பேசிய அவர், தென் சீனக் கடலில் சீனாவின் நடவடிக்கைகள் பைத்தியக்காரத்தனமானவை என்றும், அதன் அடுத்த இலக்கு இந்தியப் பெருங்கடல்தான் என்றும் எச்சரித்தார்.

இதற்கு இந்தியத் தரப்பிலிருந்து மறுப்பு ஏதும் வராத நிலையில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பிரச்சினை கள் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவிப்பதற்கு இந்தியா அனுமதிக் கிறது; சொல்லப்போனால், அதை ஊக்கு விக்கிறது எனும் தோற்றம் உருவானது. பல பிரச்சினைகள் தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் இருந்துவந்த சூழலில், மூன்றாவது தரப்பு குரல் எழுப்புவது இந்தியாவின் வாதத்தை மட்டுப்படுத்துவதாகவே அமையும்.

இந்தச் சூழலில் தலையிட்டுக் கருத்துச் சொல்லும் நாடு அமெரிக்கா மட்டுமல்ல; ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடு களைச் சேர்ந்த நிபுணர்களும், இந்திய ஆலோசனைக் குழுக்களும் ‘மத்தியக் கூட்டணி’ ஒன்றை உருவாக்குவதன் அவசியம் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

தவறான முடிவு

முதலில் ஆஸ்திரேலியா, ஜப்பான் போல அமெரிக்காவுக்கு இந்தியா உடன்பாட்டு அடிப்படையிலான நட்பு நாடு அல்ல. மேலும், அப்படியான ஒரு கூட்டணி, கடல் பகுதியில் சீனாவின் மேலாதிக்கத்துக்கு எதிரான ஒரு கூட்டணியாகவே கருதப்படும்.

தென் சீனக் கடல் பகுதியில் இந்தியக் கடற்படை இருப்பது என்பது அந்தப் பகுதியின் காவலுக்கு வலு சேர்க்கும் என்றாலும், சீனாவுடனான இந்தியாவின் பிரச்சினைகளில் இந்தக் கூட்டணியின் பிற நாடுகள் இந்தியாவுக்கு உதவ முடியாது. சுருக்கமாகச் சொன்னால், இந்த மத்தியதர வல்லரசுகளை இந்தியாவுக்காகப் பேச அனுமதிப்பது என்பது வல்லரசு நாடு ஒன்றை இந்தியாவுக்காகப் பேச அனுமதிப்பதைப் போன்ற தவறான முடிவாகவே இருக்கும்.

‘மூன்றரை’ பிரச்சினைகள்

இன்றைக்கு, இந்தியாவுக்கும் சீனா வுக்கும் இடையில் மூன்றரை விஷயங் களில் பிணக்குகள் நிலவுகின்றன. முதலா வதாக நிலப் பகுதி. 1962-ல் இரு நாடுகளுக்கும் இடையில் மூண்ட போருக்குப் பின்னர், நில எல்லைகள் விஷயத்தில் பிரச்சினை நிலவுகிறது. அதேபோல், கடல் பகுதியில் சீனாவின் மேலாதிக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் கூட்டுக் காவல் நடவடிக்கை களில் இந்தியாவும் பங்கேற்க வேண்டும் என்று அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் விரும்புகின்றன. மூன்றாவ தாக, அண்டை நாடுகள் குறிப்பாக சீனா முதலீடு செய்துவரும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் - உடனான இரு தரப்பு உறவில் ஏற்படும் மாற்றம். இவை தவிர, திபெத் பிரச்சினை. இதை, பாதிப் பிரச்சினையாகவே கருதலாம்.

அணுசக்தி விநியோகக் குழுவில் இந்தியா இடம்பெறுவதற்கான முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் நாடு என்று சீனா மீது இந்தியா குற்றம்சாட்டியது உட்பட பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும், அதிர்ஷ்டவசமாக, இரு தரப்பு உறவை இரு நாடுகளும் தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டிருக்கின்றன. வியூக அடிப்படையிலான பேச்சுவார்த்தையில் பங்கேற்க இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் சீனா சென்றுவந்திருக்கும் நிலையில், இரு தரப்பு உறவு வலுவடையும். குறிப்பாக, அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்தின் தொடர்ச்சியாக உருவாகி யிருக்கும் நிச்சயமற்ற சூழலில், வெளியுறவுக் கொள்கை விஷயத்தில் முடிவெடுக்க இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைக்கும். ‘உண்மையான சக்தி மென்மையாகத்தான் பேசும்; குரல் உயர்த்திப் பேசத் தேவையில்லை’ எனும் காந்தியக் கொள்கையைப் பின்பற்றுவது கைகொடுக்கும். தீவிரமான பிரச்சினைகள் இருக்கும் நிலையில் பிற நாடுகளைத் தனக்காகப் பேச அனுமதிப்பதும், அற்பத் தனமான வழிமுறைகளைப் பயன் படுத்துவதும் பயன் தராது!

© ‘தி இந்து’ (ஆங்கிலம்)

தமிழில்: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x