Published : 18 Jan 2017 09:43 AM
Last Updated : 18 Jan 2017 09:43 AM

இப்படிக்கு இவர்கள்: தரமான விமர்சன மரபு இன்றும் இருக்கிறது!

தரமான தமிழ் விமர்சன மரபு முன்பிருந்த சூழலைவிட, மேம்பட்ட நிலையில் கோட்பாடுகளின் அடிப்படையில் இன்று வளர்ந்திருக்கிறது. 80-களில் அமைப்பியலைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய தமிழவன், இன்று வரை மைக்ரோ நாவல்களையும் கோட்பாடுகள் சார்ந்த விமர்சனக் கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதிவருகிறார். 80-களில் ‘மேலும்’ எனும் சிறுபத்திரிகை மூலம் தரமான விமர்சன மரபைக் கல்விப்புலங்களில் பேசிய, ‘மேலும் சிவசு’ இன்றும் தன் கைக்காசில் ஒவ்வோர் ஆண்டும் தமிழின் சிறந்த விமர்சகருக்கான ‘மேலும் திறனாய்வாளர்’ விருதினை வழங்கிவருகிறார்.

தொல்காப்பியத் திணைக் கோட்பாட்டின் அடிப்படையில், துரை சீனிசாமி தொடர்ந்து விமர்சன மரபை முன்னெடுத்துவருகிறார். பஞ்சாங்கம் திறமான, தரமான விமர்சனக் கட்டுரைகளைத் தமிழுக்குத் தந்துவருகிறார். ஜமாலன், சண்முகம், மூபின் சாதிகா, நிதாஎழிலரசி போன்ற இளம் திறனாய்வாளர்கள் புதுமையாகப் படைப்பிலக்கியங்களை அணுகிவருகின்றனர். ரசனைமுறைத் திறனாய்வு குறித்த ஆதங்கம் பொருளற்றது, ரசனை இல்லாமல் ஒரு படைப்பை எழுதவோ விமர்சிக்கவோ இயலாது.

- சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி.



சிந்திக்க வைத்த கட்டுரை

எச்.பீர்முஹம்மது எழுதிய, ‘மதப் பண்டிகையா பொங்கல்?’ (ஜன.14) கட்டுரை, காலத்தின் தேவையறிந்த அற்புதமான கட்டுரை. மொழியால், பண்பாட்டால் பிணைக்கப்பட்டிருக்கும் தமிழ்நாட்டு முஸ்லிம்கள் எல்லோருமே தமிழர்கள்தான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அது எல்லோர் மனதிலும் பதிந்திருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். இப்போதும்கூட சிலர், தமிழர் திருநாளான பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதற்குத் தயங்குகிறார்கள். அவர்களைச் சிந்திக்க வைக்கும் வண்ணம் இருக்கிறது கட்டுரை.

- ரஞ்சனி பாசு, மின்னஞ்சல் வழியாக.



சரியான இடம்

பொங்கலன்று வெளியான, ‘தமிழர்கள் ஜல்லிக்கட்டு நடத்த சரியான இடம் எது?’ கட்டுரை ஜல்லிக்கட்டு குறித்த சரியான புரிதலுக்கு உதவியது. உணர்ச்சிவயப்படாமல், யதார்த்தமாக எழுதப்பட்டிருந்தது பாராட்டுக்குரியது. ஜல்லிக்கட்டு நடத்த சரியான இடம் தேர்தல் களம், குறிப்பாக நாடாளுமன்றம்தான் என்பதைக் காரண காரியத்தோடு விளக்குவதும், ஜல்லிக்கட்டுக்குத் தடை கோருவது அறியாமையும் மேட்டிமைவாதமும் கொண்ட இருவேறு குரல்களே என்பதும் 100% நிதர்சனமான உண்மை.

- ஜி.ராஜமோகன், உளவியல் பேராசிரியர், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x