Published : 19 Apr 2017 08:55 AM
Last Updated : 19 Apr 2017 08:55 AM

அணு ஆயுத ஒழிப்பின் அடுத்த கட்டம்?

அணு ஆயுதங்களைத் தடைசெய்வது தொடர்பாக நியூயார்க்கில் நடந்துவரும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஐ.நா. உடன்பாட்டில் அணுசக்தி ஆற்றலைப் பெற்றிராத பெரும்பாலான நாடுகள், கலந்துபேசிவருகின்றன. அந்நாடுகள் மனித வாழ்வுக்கு அச்சுறுத்தலாக தொடர்ந்துகொண்டிருக்கும் கேள்வியின்மீது இதுவரை இல்லாத அளவுக்கு அறநெறிகளை வெளிக்காட்டிக்கொள்கின்றன. கணிப்பின்படி, பெருங்கேட்டினை விளைவிக்கும் அத்தகைய ஆயுதங்கள் தற்போது ஒன்பது நாடுகளிடம் இருக்கின்றன. மற்ற சில நாடுகள் ராணுவ நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கின்றன, அவற்றில் மிகச்சில நாடுகள் முதன்மை வகிக்கவும் செய்கின்றன.

இத்தகைய நாடுகள் மட்டுமே சமீபத்தில் தொடங்கிய பேச்சுவார்த்தைகளைப் புறக்கணித்துவருகின்றன. இருந்தாலும், இந்த நாடுகளால் மிகச்சிறிய அளவில் உடன்பாட்டில் தடைகளை உருவாக்க முடியும். அவர்களது குறைந்தபட்ச நோக்கம் என்னவென்றால் இன்னும் மிச்சமிருக்கும் பெருந்திரளான மக்களைக் கொன்றழிக்கக்கூடிய ஆயுதங்களின் வகைப்பாட்டில் அத்தியாவசியமான சட்டவிரோதச் செயல்களை முறைப்படுத்துவதுதான். முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்று அவர்கள் கூறினாலும்கூட, அது மழுப்பலாகத்தான் இருக்கும்.

உலகளாவிய விவாதம்

அணு ஆயுத ஒழிப்பைப் பற்றி கடந்த சில 10 ஆண்டுகளாக உலகளாவிய அளவில் விவாதம் நீடித்துவருகிறது. அவ்விவாதத்தின் முக்கிய திருப்பம், அணு ஆயுதங்களைச் சோதனை செய்வதாலும் வெடிக்கச் செய்வதாலும் ஏற்படக்கூடிய மனிதநேயமிக்க பின்விளைவுகளை வலியுறுத்துவதாகத் தோன்றுகிறது. புதிதாக உருவாகியுள்ள இந்தக் கவனம், வழக்கமான தேசிய இறையாண்மை மற்றும் பாதுகாப்பு பற்றிய விஷயங்களிலிருந்து விலகி, புதிய விஷயங்களின்மீது கவனம் செலுத்துகிறது. ஏற்கெனவே கவனத்தில் கொள்ளப்பட்ட அந்த விஷயங்கள் அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் அரசுகளிடையேயான ஆயுதப் போட்டிக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்குவதாகவும் தகுதியும் ஆர்வமும் உள்ள நாடுகளிடம் மேலாதிக்க விருப்பங்களைத் தூண்டிவிடுவதாகவும் இருந்தது.

அணு ஆயுதங்களின் உபயோகமானது மனிதநேயச் சட்டங்களுக்கு இணக்கமானதாக இருக்க வேண்டும் என்று 1996-ல் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த ஆலோசனையிலிருந்து தொடங்கி, முழுமையான தடையை நோக்கி மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தொடர் முயற்சிகளின் விளைவே தற்போது ஒருங்கிணைந்த உடன்பாட்டின் வழியாக நடந்துவரும் முயற்சிகள். எனினும், சட்டபூர்வத் தன்மையைப் பற்றியோ அல்லது உச்சபட்ச தற்காப்புச் சூழல்களில் அவற்றை உபயோகிப்பது பற்றியோ உறுதியாகக் கூற முடியாது என்று நீதிபதிகள் தங்களது மாறுபட்ட தீர்ப்புகளில் கூறியுள்ளனர்.

இழுபறி

பல்வேறு நாடுகளும் சமூக நலக் குழுக்களும் முழுமையான தடையைக் கோரி ஐ.நா. பாதுகாப்புச் சபையில் எண்ணற்ற வரைவு உடன்பாடுகளையும் தீர்மானங்களையும் கொண்டுவந்து ஐநாவின் ஆதரவைப் பெற்றதால் கிடைத்த முக்கியமான பலன் இது. அணு ஆயுதங்களின் மனிதநேய தாக்கங்களைப்பற்றி நடத்தப்பட்ட மூன்று மாநாடுகள் முக்கியமானவை. அவற்றில் கடைசி மாநாடு, வியன்னாவில் நடந்தது. அதில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளும் ஐ.நா.வும் கலந்துகொண்டன. அணு ஆயுதங்களால் மக்கள் தொகை மிகுந்துள்ள பகுதிகளைக் குறிவைப்பது, மனிதநேயச் சட்டங்களை மீறுவதாகும் என்ற கருத்தே எல்லாக் காலத்திலும் இழுபறியாக இருந்துவருகிறது. மேலும் ஐ.நா. பொதுச்சபையில் நிறை வேற்றப்பட்ட சில தீர்மானங்களும் அணு ஆயுதங்களை உபயோகப்படுத்துவது மனித இனத்தின் மீதான குற்றம் என்பதை உறுதிசெய்திருக்கின்றன.

தடை செய்ய வேண்டும்

இக்கருத்துக்களை வலுப்படுத்தும் வகையில் தற்போது செய்யப்பட்டுவரும் மற்றொரு அறிவார்ந்த முயற்சியானது, பெருந்திரளான மக்களைக் கொன்றழிக்கக்கூடிய அனைத்து வகையான ஆயுதங்களும் தடைசெய்யப்பட வேண்டும் என்ற இலக்கை நோக்கிப் பேச வேண்டிய அவசியமும் இருக்கிறது. அத்தகைய பணி, 1975-ல் உயிரி ஆயுதங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதிலிருந்து தொடங்கியது. ரசாயன ஆயுதங்கள், தனிநபர்களுக்கு எதிரான கண்ணிவெடிகள் மற்றும் கொத்தெறி குண்டுகள் ஆகியவை சமீப ஆண்டுகளில் சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளன.

வரும் ஜூன் மாதத்தில் நடத்தப்பட உள்ள அடுத்தகட்ட ஐ.நா. பேச்சுவார்த்தைகள், உடன்பாட்டின் பரவெல்லை மற்றும் அடைய வேண்டிய இலக்குகள், அவற்றை நடைமுறைப்படுத்தத் தேவையான ஒப்புதல்களின் எண்ணிக்கை ஆகியவற்றை வரையறை செய்வதில் உள்ள நடைமுறைப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கும். இந்த உடன்பாடு சட்டமாக மாறினால், அணு ஆயுதங்கள் தொடர்பான அவப்பெயருக்கு அஞ்சி, அரசுகள் தங்களுடைய ராணுவ பலத்தைத் தளர்த்தி, குறைத்தாக வேண்டும் என்பது உறுதி!

© ‘தி இந்து’ (ஆங்கிலம்) தமிழில்: புவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x