Published : 24 Apr 2017 09:03 AM
Last Updated : 24 Apr 2017 09:03 AM

இந்தித் திணிப்பு அபாயகரமான தாக்குதல்!

ஆட்சிமொழிக்கான நாடாளுமன்றக் குழு அளித்துள்ள பரிந்துரைகளும் அவற்றில் கணிசமானவற்றுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருப்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்தப் பரிந்துரைகள் இந்தி பேசாத மாநிலங்களின் தாய்மொழி மீதான கொடூரத் தாக்குதல் என்பது போக, இதுவரையில் இந்தி மொழி பேசாத மாநிலங்கள் ஆங்கிலத்தை இணைப்பு மொழியாகவும் பயிற்றுமொழியாகவும் பயன்படுத்தி வந்த உரிமையையும் இல்லாமலாக்கிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பரிந்துரைகளின்படி, ‘குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள் போன்ற நாட்டின் முக்கியப் பொறுப்பில் உள்ளவர்கள் இந்தியிலேயே உரையாற்றவும் அறிக்கை வெளியிடவும் வேண்டும். கேந்திரிய வித்தியாலயா மற்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளில் இந்தி மொழி கட்டாய பாடமாக்கப்பட வேண்டும். அரசு விளம்பரங்களிலும் இந்திக்கே முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.’ மத்திய அரசின் நடைமுறைகளிலும், மாநிலங்களுக்கு இடையிலான அரசு நடைமுறைகளிலும் ஆங்கிலத்தை அகற்றும் இத்தகைய முயற்சிகள் அந்த இடத்தில் இந்தியை அமர்த்துவதற்காகவே செய்யப்படுகின்றன. இந்தி பேசாத மாநிலங்கள் படிப்படியாக இந்தியை ஏற்றுக்கொண்டாக வேண்டிய கட்டாயத்தை நோக்கித் தள்ளப்படுகின்றன.

தாய் மொழியில் ஆரம்பக் கல்வி அளிப்பதே மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் என்று கல்வியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். ஆக முதல் மொழி தாய் மொழி, இரண்டாவது மொழி சர்வதேசத்துடனான இணைப்பு மொழியான ஆங்கிலம், அதற்கு அடுத்து வேண்டுமானால் இந்தி என்பதே சரியான முறையாக இருக்கும். ஆனால், பள்ளிக் கல்வியில் தொடங்கி உயர் கல்வியில் இந்திக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்பது வரையிலான இந்தப் பரிந்துரைகள், கல்வித் துறையை முழுவதும் இந்திமயப்படுத்தும் நோக்கத்தைப் பட்டவர்த்தனமாகக் கூறுகின்றன. இந்த நடவடிக்கைகள் கல்வித் துறை, வேலைவாய்ப்புடன் மிக நேரடியாகத் தொடர்புள்ளது. தாய் மொழியில் கல்வி கற்காத வாய்ப்பில்லாத மாணவர்கள் கற்கும் திறனில் பின்தங்குவதோடு மட்டுமின்றி, வேலைவாய்ப்பையும் இழக்க நேரிடுமோ என்ற அச்சத்தையும் இந்தப் பரிந்துரைகள் உருவாக்கியுள்ளன.

மத்திய அரசின் வேலைவாய்ப்புகளுக்கான தேர்வுகளில் இந்தி கட்டாயப் பாடமாக வைக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையைக் குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தாலும், அந்தப் பரிந்துரையின் பின்னுள்ள நோக்கம் புரிந்துகொள்ள முடியாதது அல்ல. இந்தி தெரியாதவர்களுக்கு இனிமேல் மத்திய அரசு வேலைவாய்ப்புகள் மறுக்கப்படும் என்ற எச்சரிக்கை மணிதான் அது. மொழியின் அடிப்படையில் கல்வியில், வேலைவாய்ப்பில் பாகுபாடு காட்டக் கூடாது என்பதே அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கொள்கை. அதற்கு எதிரான பாதையில்தான் இன்றைய இந்தியா சென்றுகொண்டிருக் கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

கல்வி, வேலைவாய்ப்பு, அரசு அலுவலக நடைமுறைகள், வங்கி, அஞ்சலகம் முதலான சேவைகள், போக்குவரத்து நிலையங்கள், ரயில்வே நிலையங்கள் போன்ற பொது இடங்கள், நாட்டின் தலையெழுத்தையே தீர்மானிக்கிற நாடாளுமன்றம் என்று எல்லா இடங்களிலும் ஒற்றை மொழியே முன்னிறுத்தப்படுவது நாட்டின் பெரும்பான்மை மக்களான இந்தி பேசாத மக்களின் மீது நிகழ்த்தப்படும் அரசியல் வன்முறை. இந்தியாவின் அடையாளம் அதன் மொழி, இன, சமய மற்றும் பண்பாட்டு பன்மைத்து வம்தான். அரசியல்ரீதியாக அதைப் பாதுகாப்பதே தலையாய பாதுகாப்புச் செயல்பாடு. அதற்கு மாறாக, எந்தவொரு ஒற்றை அடையாளத்தின் கீழாகவும் இந்தியாவைக் கொண்டுவருவதற்கான முயற்சி, நாட்டின் பன்மைத்து வத்தை அழிக்கக் கூடியது. இந்திய அரசு இந்தியை நோக்கி மக்களைத் தள்ளும் முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும். அனைத்து மொழி பேசுபவர்களின் உரிமைகளையும் உறுதிசெய்ய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x