Published : 08 Nov 2013 00:00 am

Updated : 06 Jun 2017 14:12 pm

 

Published : 08 Nov 2013 12:00 AM
Last Updated : 06 Jun 2017 02:12 PM

வரலாற்றுக் காலம்தொட்டு நாம் இப்படித்தான்!

தமிழக சட்டப்பேரவையில் ‘சிறிய பேருந்து’களில் இரட்டை இலைச் சின்னம் வரையப்பட்டுள்ளதைப் பற்றி பலத்த சர்ச்சை (விவாதமல்ல) கிளம்பியது.பொது மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும் பேருந்தில் எப்படிக் கட்சியின் சின்னம் வரையலாம் என்பதே அந்த சர்ச்சை. எதிர்க் கட்சிகள் கேள்வி எழுப்பியவுடனே, ஆளும் கட்சியினர் பேருந்தில் வரையப்பட்டிருப்பது தங்கள் கட்சியின் சின்னமான “இரட்டை இலை இல்லை இது; இது வேறு”... என்று பிறந்த குழந்தையைச் சமாளிப்பதுபோல் சமாளித்துவிட்டார்கள். இதற்கு முன் அம்மா குடிநீரில் இருந்த இரட்டை இலைச் சின்னம். அதற்கு முன் ‘அம்மா உணவகம்’என்ற பெயர். அதற்கும் முன் ‘கருணா நெல்’. அதற்கும் முன் ‘அஞ்சுகம் பாசிப்பயறு’. அதற்கும் முன்… முன்... முன்... எவ்வளவோ இருக்கின்றன; சொல்ல.

அதிகாரத்தில் இருப்பவர்களை மகிழ்விப்பதற்கோ, அவர்களின் அருள் பார்வையைப் பெறுவதற்கோ உடன் இருப்பவர்களுக்கு எப்போதுமே புதிது புதிதான யோசனைகள் தோன்றுவது புதிதல்ல. நாம் ஜனநாயக ஆட்சி நடக்கும் மண்ணில்தான் வாழ்கிறோம் என்றாலும், நம் முன் நடக்கும் காட்சிகள் நம்மை மீண்டும் மீண்டும் மன்னராட்சிக் காலத்துக்கே அழைத்துச் செல்லக்கூடியவை.


முதலாம் பராந்தக சோழனின் மகன் வீரசோழன் என்கிற ராஜாதித்யன் தன் தந்தையிடம் செல்கிறான். நிலா என்கிற தன்னுடைய ஆன்மிகக் குருவின் வேண்டுகோளின்படி, தான் 150 பிராமணர்களுக்கு நில தானம் செய்ய விரும்புவதாகவும், அதற்கு அரசரின் அனுமதி வேண்டும் எனவும் கோரி நிற்கிறான் இளவரசன். அரசன் அனுமதி கொடுக்கிறான். நில தானம் வழங்கப்படுகிறது. வழங்கப்பட்ட அந்த நிலங்களை உள்ளடக்கிய ஓர் ஊர் உருவாகிறது. அதற்கு ‘பரகேசரிசதுர்வேதிமங்கலம்’ எனப் பெயரிடப்படுகிறது. பரகேசரி சோழ அரசனின் பெயர். ( பகைவர்களுக்குச் சிங்கம் போன்றவன் பரகேசரி என்றும், அரசர்களுக்குள் சிங்கம் போன்றவன் ராஜகேசரி என்றும் சோழ அரசர்கள் பட்டப் பெயர் வைத்துக்கொண்டனர். தந்தை ராஜகேசரி என்றால், மகன் பரகேசரி. சதுர்வேதி மங்கலம் பிராமணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட நிலம்).

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வரலாற்று முக்கியத்துவமும் அரசியல் முக்கியத்துவமும் வாய்ந்த ஊரின் பெயர் பூதப்பாண்டி. பூதப்பாண்டியன் என்ற மன்னன் பெயரால் திருநாமம் சூட்டப்பட்ட ஊர்.

ராஜராஜன் பேரரசனாகத் திகழ, பகைவர் பயமற்று ஆட்சியில் கவனம் செலுத்த முக்கியக் காரணமாக இருந்தவன் அவனுடைய மகன் ராஜேந்திர சோழன். மிகப் பெரிய வீரன். தனயனைப் பெருமை செய்ய நினைத்த ராஜராஜன் தான் வெளியிட்ட நாணயத்துக்கு ‘ராஜேந்திர சோழன் மாடை’ எனப் பெயரிட்டான். (மாடை-நாணயத்தின் பெயர்).

ஆங்கிலேய வியாபாரி ஃபிரான்சிஸ் டே - சூரத், மச்சிலிப்பட்டினத்தின் நெரிசலான வியாபார சந்தைகளைப் பார்த்துவிட்டு, மிகுந்த யோசனையோடு புதியதான ஒரு வியாபாரத் தளத்தைத் தேடி படகொன்றிலேயே கடற்கரையோரங்களைச் சுற்றி வந்தான். ஆளரவமற்று, ஆனால் கொழுத்த வியாபாரம் செய்வதற்கான வளங்களுடனும் வசதிகளுடனும் 10 கி.மீ. நீளத்துக்குப் பரந்து விரிந்துகிடந்த சென்னைக் கடற்கரையை வந்தடைகிறான் ஃப்ரான்சிஸ் டே. அன்று அவனுக்குத் தெரியாது, ஒரு சாம்ராஜ்யத்தின் தலைமைப் பீடமாக இருக்கப்போகிற இடத்தைத்தான் வந்தடைந்திருக்கிறோம் என்பது.

அந்த இடத்தின் அதிபதி யார் என்று கண்டறிந்து, மிகப் பெரிய முயற்சிகள் எதுவுமற்று 10 கி.மீ. பரப்பளவு கொண்ட சென்னைக் கடற்கரையை மானியமாகப் பெறுகிறான். அங்கு அவன் கட்டியதுதான் இன்றைக்கும் தலைமைச் செயலகமாக உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டை. (அந்த இடத்தை மானியமாகக் கொடுத்து அடிமைத்தனத்துக்கு உறுதியான துணை போன பெருமைக்கு உரியவர்கள் வந்தவாசிக்காரர்களான நாங்கள்தான். ஆம்.. விஜயநகரப் பேரரசின் ஆளுநராக இருந்த, வந்தவாசியைத் தலைமையிடமாகக்கொண்டு ஆட்சி செய்த தாமர்லா சகோதரர்களில் ஒருவரான வெங்கடாத்ரி நாயக் என்பவர்தான் அந்த நல்ல பணியைத் துவக்கி வைத்தவர்) இந்த அரும் பணிக்கு அவர்கள் கேட்ட கைம்மாறு ஒன்றே ஒன்றுதான்.. அந்த இடத்துக்குத் தங்களின் தந்தையின் நினைவாக சென்னப்பட்டணம் என்ற பெயர் வைக்க வேண்டும் என்பதே.

நம் பெருமையைப் பெயர் வைத்தலின் மூலம் நிலைநாட்டுதல் என்பது நம் ரத்தத்தில் கலந்த அடிப்படையான குணம் என்பதைத்தான் சொல்கின்றன வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த மேற்கூறிய உதாரணங்கள்.

“என்னைப் பற்றி நான் அரை மணி நேரம் பேசிவிட்டேன், என்னைப் பற்றி நீ ஒரு மணி நேரம் பேசு” என்பதுதானே நம்முடைய புகழ் பாரம்பரியம். அரசனைப் புகழ்தலும் அரசனின் வெற்றிகளைப் புகழ்தலும் நம் இலக்கியங்களில் ஏராளமாக உள்ளன.

அரசனின் அன்புக்குரியவன், நெருக்கமானவன் தான் எனக் காண்பித்துக்கொள்ள அன்றும் பலர் பலவிதமாக முயற்சித்து இருக்கிறார்கள். தங்களுக்குள் இருந்த உண்மையான அன்பின்பாற்பட்டோ, ஆளுகையின் பாற்பட்டோ ஆனால் நடந்திருக்கிறது. செப்பேடு எழுதிய ஓர் அதிகாரியின் பெயர் இறையிரவன் பல்லவராயன் என்ற மும்முடிச் சோழப் பேராசான். ஓர் ஆசாரியின் பெயர் வாசுதேவன் என்ற ராஜராஜ மகா ஆசாரியன். நில அளவைக்குப் பயன்படுத்தப்பட்ட கோல் அளவைக்கு ‘ராஜராஜன் கோல்’என்று பெயர் இருந்திருக்கிறது. அரசர்கள் காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களுக்கு அரச குடும்பத்தினரின் பெயர்கள் இருந்துள்ளன.

அரசர்கள் தங்களின் அரசச் சின்னங்களில் தாங்கள் வெற்றிகொண்ட பகை அரசர்களின் சின்னங்களை இணைத்துக்கொண்டுள்ளனர். எதிரி நாடும் தன் ஆளுகைக்கு உட்பட்டுள்ளது என்பதைக் காண்பிக்க, சோழ அரசச் சின்னத்தில் மீன் சின்னமும் பன்றியின் சின்னமும் பொறிக்கப்பட்டிருப்பது அவர்கள் பாண்டியர்களையும்,சாளுக்கியர்களையும் வென்றார்கள் என்பதைக் குறிக்கவே.

அரசர்களின் வெற்றியைப் புலவர்கள் எழுத்தாணி கொண்டு செதுக்கி வைத்திருந்தாலும், மன்னர்கள் புலவர்களின் எழுத்தின் பெருமையை விஞ்சி மக்களின் கண்களில் தங்கள் வெற்றிக் கொடி பறப்பதை விரும்பியுள்ளனர். இங்கிருந்து இமயம் சென்று தங்களின் விற் கொடியையும், மீன் சின்னத்தையும், புலிக் கொடியையும் பொறித்துவிட்டு வருவதை மூவேந்தர்களுமே தங்கள் வீரத்தின் உச்சமாகக் கருதியிருக்கிறார்கள். பாண்டிய மன்னன் அரிகேசரி அசமசமன் மாறவர்மன், சேர சோழர் இருவருமே தங்கள் ஆளுகைக்கு உட்பட்டிருக்கிறார்கள் என்பதைச் சொல்ல இமய மலைக்குச் சென்று, தன்னுடைய மீன் சின்னத்தோடு புலி, வில் சின்னங்களையும் பொறித்துவிட்டு வந்திருக்கிறான்.

இந்தியா முழுக்க பிரிட்டிஷ் ஆட்சியின் கட்டுப்பாட்டுக்கு வருவதற்கு முன்னால் வரை இந்தியாவில் ஒரே வகையான நாணயம் கிடையாது. நில அளவைகள் கிடையாது. வரிகள் வெவ்வேறு வகையானவை. ஓர் அரசன் வெளியிட்ட நாணயத்தை வெற்றிபெற்று வரும் அடுத்த அரசன் நிச்சயம் மாற்றிவிடுவான். ஆட்சி முறைகள் உட்பட இதுவே நமக்கு நியமிக்கப்பட்ட பொது விதி.

நடப்பவை எல்லாம் இறைவனின் (அரசன், அரசி) பெயராலே என்ற புரிதல் நமக்குப் பிறப்பிலேயே வந்திருக்க வேண்டும். நாம் கருவில் திருவுடையவர்கள் என்பதற்கு இன்னும் இவைபோல் ஆயிரம் சொல்லலாம். வேண்டாம் விட்டுவிடலாம். ஒன்று செய்யலாம். தினம் நம்மால் வணங்கப்படும் கடவுள்களின் முக ரிஷிமூலத்தை ஆராயலாம். கடவுள்களின் மாதிரிகள் நம் முந்தைய ஆட்சியாளர்களாக இருந்திருக்கக் கூடும்!

- அ.வெண்ணிலா, ஆசிரியை, எழுத்தாளர்.

தொடர்புக்கு: vandhainila@gmail.com


ஜனநாயக ஆட்சிமன்னராட்சிஇந்தியா

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x