Published : 07 Feb 2014 09:45 am

Updated : 06 Jun 2017 19:16 pm

 

Published : 07 Feb 2014 09:45 AM
Last Updated : 06 Jun 2017 07:16 PM

கெயிலின் அதிகாரத்தை ஒடுக்க வேண்டும்- பி. கந்தசாமி

எண்ணெய் எரிவாயு நிறுவனமான கெயில் கொச்சி முதல் பெங்களூரு வரை கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் வழியாக எரிவாயுக் குழாய்களைக் கொண்டுசெல்லத் துவங்கியது. நெடுஞ்சாலைகளில் கொண்டுசெல்ல வழியிருக்க, ‘‘பட்டா நிலங்கள் வழியாகத் தான் கொண்டுசெல்வோம்’’ என்ற கெயிலின் போக்கை விவசாயிகள் எதிர்க்க, தமிழக அரசும் இதில் உள்ள நியாயத்தை அலசி ஆராய்ந்து, விவசாயிகளுக்குத் துணையாக நிற்கிறது.

அது மட்டுமல்ல, தி.மு.க., கம்யூனிஸ்ட்டுகள், பா.ஜ.க., காங்கிரஸ், ம.தி.மு.க., கொ.மு.க., பா.ம.க. என எல்லாக் கட்சிகளும் விவசாயிகள் பக்கமே நிற்கிறன. என்றாலும் கூட, “பட்டா நிலங்களில் குழாய்களைப் பதித்தே தீருவோம்; அதற்கு எங்களுக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது” என்கிறது கெயில் நிறுவனம். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தால் தடையாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அந்தப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அனைத்துக் கட்சிகள் ஆதரவு, மாநில அரசுகளின் உறுதுணை போன்றவை இருப்பது விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் தற்காலிகப் பாதுகாப்பே ஒழிய, நிரந்தரமானது அல்ல.


தனியார் பங்குதான்!

தற்போது கெயில் நிறுவனம் பதிக்கவிருக்கும் எரிவாயுக் குழாய் அமைப்புத் திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தமிழக அரசு கையெழுத்திட்டுள்ளது. மூன்று மாநில அரசு நிறுவனங்கள் இதில் தலா எட்டு சதவீதம் என 24 சதவீதப் பங்குகளையும், கெயில் 26 சதவீதப் பங்குகளையும் கொண்டுள்ளதாகவும் மீதி 50 சதவீதப் பங்குகள் பொதுமக்களுக்கு என்றும் சொல்கிறார்கள். பொது மக்கள் பங்கு என்று சொல்லும்போதே, அது முழுக்க முழுக்கத் தனியார்வசம் என்றாகிவிடுகிறது. ஆக, இது பொதுநலன் கருதி பொதுமக்களுக்காக ஏற்படுத்தப்படும் திட்டம்தானா என்பது முதல் நிலையிலேயே கேள்விக் குறியாகிவிடுகிறது.

இவர்கள் இதற்கான நிலங்களைக் கையகப்படுத்து வதை 1962 பி.எம்.டி. சட்டத்தின்படி செய்கிறார்கள். “இதன்மூலம் குழாய்கள் பதிப்பதால் விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை; நிலம் விவசாயிகளுக்கே சொந்தம்; அனுபவப் பாத்தியதை மட்டும்தான் எங்களுக்கு; நில வழிகாட்டி மதிப்பீட்டில் 10% விவசாயிகளுக்குத் தொகை அளிக்கப்படுகிறது” என்பது கெயிலின் வாதம். விவசாயிகளோ, “அந்த நிறுவனத்தின் அனுபோகத்துக்குப் போகும் நிலம் எந்தத் தலைமுறையிலும் எங்களுக்குத் திரும்பி வரப்போவது இல்லை. தவிர, இவர்கள் 2012 திருத்தச் சட்டப்படி நிலத்தை எடுக்கும்போது அந்தச் சட்டம் என்ன சொல்கிறது என்றால், அந்த நிலத்தில் நாசவேலை நடந்தாலோ, பொருட்கள் திருடுபோனாலோ, விவசாயிகளே பொறுப்பு என்கிறது” என்கிறார்கள்.

பட்டா நிலங்கள்தான் வேண்டுமா?

இதுபோல் இன்னும் நிறைய கட்டுப்பாடுகள். எனவே தான், இயன்ற வரை நெடுஞ்சாலைகள் ஓரமாக, புறம் போக்கு அரசு நிலங்கள் வழியாகக் குழாய்களைப் பதிக்கவும், இயலாதபோது, பட்டா நிலங்களை எடுத்துக்கொள்ள வும் வேண்டும் என்று விவசாயிகள் தரப்பு சொல்கிறது. உச்ச நீதிமன்றமும் இதையேதான் அறிவுறுத்தியுள்ளது.

அதன் அடிப்படையில்தான், குஜராத் மாநிலத்தில் 280 கி.மீ. தூரம் எரிவாயுக் குழாய்கள் நெடுஞ்சாலைகள் வழியே கொண்டுசெல்லப்பட்டுள்ளன. மற்ற பல மாநிலங்களில் இந்த அளவு இல்லாவிட்டாலும், 60 முதல் 70 கி.மீ. தூரம் வரை நெடுஞ்சாலைகளில் கொண்டுசெல்லப்பட்டுள்ளன. ஆனால், இங்கே மட்டும்தான் கெயில் நிறுவனம் பட்டா நிலத்தில்தான் குழாய்களைப் பதிப்போம்; பட்டா நிலங்கள் இல்லாத பகுதிகளில்தான் நெடுஞ்சாலைகளில் கொண்டுசெல்வோம் என்கிறது. அதற்குச் சட்டம் உறுதுணையாக இருக்கிறது. அதை மாநில அரசுகள்கூட கட்டுப்படுத்த முடியாது. நாங்கள் எடுக்கும் நிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால், அதைத் தடுத்து பணி நடக்க உறுதுணையாக மாநில அரசு இருக்க வேண்டும் என்கிறது அந்த நிறுவனம்.

கைவிரித்த அமைச்சர்கள்

இதற்காக மத்திய அமைச்சர் ஜெயபால் ரெட்டியைச் சந்தித்து, எங்கள் மனுவை அளித்தோம். ஆனால், அவர் பதவி 15 நாளில் பறிக்கப்பட்டது. ஜி.கே.வாசனிடம் மனு அளித்தோம். பிறகு, வீரப்ப மொய்லியைச் சந்தித்தோம். அவர் கெயிலின் சட்ட வாதத்தையே முன்வைத்தார். அதன் பிறகுதான் மக்கள் போராட்டம் நடந்தது.

அடுத்தடுத்து பிறப்பிக்கப்பட்ட தடையாணைகளை உடைத்துக்கொண்டு திரும்பத்திரும்பத் தனது குறிக்கோளையே செயலாக்கப் பார்க்கிறது கெயில். அதற்கு உறுதுணையாக இருக்கும் சட்டத் திருத்தத்தை அடியோடு ரத்து செய்ய வேண்டும். அதற்கான அறிவிப்பை, அனைத் துக் கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையில் வெளியிட வேண்டும். இல்லாவிட்டால், கெயில் நிறுவனம்போலவே வேறு சில நிறுவனங்களும் இதேபோல் எண்ணெய்க் குழாய்கள் பதிக்கும் திட்டங்களைக் கைவசம் வைத் துள்ளன. ரிலையன்ஸ் எண்ணெய் நிறுவனமும் குழாய்கள் பதித்து பெட்ரோலியப் பொருட்களைக் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளன. அதற்கெல்லாம் இந்தச் சட்டமே துணையாக ஆகிவிடும் அபாயம் இருக்கிறது.

பி. கந்தசாமி, விவசாயிகள் சங்கம், மாநிலப் பொதுச் செயலாளர்


ி. கந்தசாமிவிவசாயிகள் சங்கம்மாநிலப் பொதுச் செயலாளர்கெயில்பட்டா நிலங்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x