Published : 24 Jul 2016 12:39 PM
Last Updated : 24 Jul 2016 12:39 PM

இணையகளம்: சக மனிதரின் சாதி!

கல்லூரி நண்பர் ஒருவருடன் நீண்ட நாட்களுக்குப் பிறகு பேச நேர்ந்தது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருப்பதாகச் சொன்னார். நானும் அரசுத் தேர்வுகளுக்குப் படித்துக்கொண்டிருப்பதாகக் கூறினேன். உடனே அவர் சற்றும் யோசிக்காமல் "உனக்கென்ன, நீ எஸ்.சி. அதனால ஈசியா கெடச்சிடும்..." என்றார். இத்தனை வருடங்களுக்குப் பிறகும் என் சாதியை ஞாபகம் வைத்திருக்கிறார். எனக்கு நாளை அரசு வேலை கிடைத்தாலும் இதே புராணத்தைத்தான் பாடுவார். என்னவோ, படிக்காமல் இவர் வேலையைப் பிடுங்கிக்கொண்டது போல..

இதை போன்ற குத்தல் நிறைந்த வார்த்தைகளைப் பள்ளியில் இருந்தே கேட்டுக் கேட்டு வெறுத்துவிட்டது. பள்ளியில் இவர்களைப் போன்றவர்களுக்கு பயந்து கல்வி உதவித் தொகை விண்ணப்பப் படிவம் மற்றும் சாதிச் சான்றிதழை நோட்டுப் புத்தகத்தில் மறைத்து வைத்த தருணங்களை இப்போது நினைத்தால் சிரிப்புத்தான் வரும். இடஒதுக்கீடு பற்றியும் சாதி அமைப்பைப் பற்றியும் போதிய அறிவு அன்று எனக்கில்லை என்பதால் பட்டியல் இனத்தில் பிறந்தது பெரிய ‘தெய்வ குத்தம்’ என்பதுபோல் கூனிக்குறுகி நின்றிருக்கிறேன்.

பொறியியல் கல்லூரி சேர்ந்த பிறகும் இதே புலம்பல்கள். ஒவ்வொரு வருடமும் உதவித்தொகை வாங்கும்போது ‘ட்ரீட்’ கேட்பதில் தொடங்கி, "இந்த ‘ஸ்காலர்ஷிப்’பெல்லாம் மக்களோட வரிப் பணத்துலயா தர்றாங்க" எனும் நக்கல் கேள்விகளைக் கேட்கும் நபர்கள் வரை அனைத்துப் புலம்பல்களையும் கடந்துவிட்டேன். அடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி., படிப்பு. ஏற்கெனவே, பொறியியல் படிப்பே கல்விக் கடனில்தான் படித்தேன். எம்.எஸ்சி., கட்டணத்தை அம்மாவும் அண்ணாவும் எப்படி சமாளிக்கப் போகிறார்களோ என்று மனம் கலங்கிக் கொண்டிருந்த சமயத்தில், தாழ்த்தப்பட்ட/ பழங்குடியின மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தில் முழு விலக்கு என்னும் தமிழக அரசின் அறிவிப்பு நிம்மதி அளித்தது.

இதற்கான சுற்றறிக்கை வந்ததுதான் தாமதம். அன்று வரை ‘நண்பேன்டா’ என்று நட்புடன் பழகியவர்கள் எல்லாம் "இதென்ன அநியாயம்? உங்களுக்கு மட்டும் ஃபீஸ் எக்ஸெம்ப்ஷன்?" , "அதான் ஸ்காலர்ஷிப் தர்றாங்களே.. அப்புறம் என்ன?" என முகத்துக்கு முன்பும், முதுகுக்குப் பின்பும் பேசத் தொடங்கிவிட்டனர். இந்தப் புலம்பல்களையும் வயிற்றெரிச்சலையும் தாண்டி எப்படியோ படித்து ‘டிஸ்டிங்ஷ’னில் பட்டம் வாங்கிவிட்டேன். இப்போது அரசு வேலைக்குப் படித்துக் கொண்டிருக்கும்போதும் இதே புலம்பல்கள். இவர்களுக்கு எப்படித்தான் புரியவைப்பது இடஒதுக்கீடும் சலுகைகளும் என் உரிமை என்று?!

இன்னமும் என் மக்கள் சாக்கடை அள்ளிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதாவது இந்தப் ‘போராளி’களுக்குத் தெரியுமா??

ஒரு பேச்சுக்குக் கேட்கிறேன். என் பாட்டன் பூட்டன் அடிமைப்பட்டுச் செய்த வேலைகளையெல்லாம் இப்போது நீங்கள் செய்யுங்களேன். தீக் குளித்தாவது உங்களுக்கு இடஒதுக்கீடும் சலுகைகளும் கிடைக்க உங்களோடு போராடுகிறேன். இப்படி மற்றவர்களுக்குக் கிடைக்கிறதே என்று வயிற்றெரிச்சல் படாமல் வரலாற்றைப் புரட்டுங்கள் நண்பர்களே. உண்மை நிலை உறைக்கும்!

- அஸ்வினி சிவலிங்கம் (முகநூலிலிருந்து)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x