Last Updated : 07 Sep, 2016 09:15 AM

 

Published : 07 Sep 2016 09:15 AM
Last Updated : 07 Sep 2016 09:15 AM

வங்கம் கொண்டாடிய தமிழன்!

வங்க இலக்கிய உலகம் கிருஷ்ணமூர்த்தியின் திறனைப் போற்றிய அளவுக்குத் தமிழ் உலகில் அவர் கவனம் பெறவில்லை



புலம்பெயர்ந்த தமிழர்களில் மிகச் சிலரே, ‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!’ என்று பாரதி சொன்னதைச் செய்துவந்தனர். தமிழ் இலக்கிய அரங்கில் ‘கொல்கத்தா கிருஷ்ணமூர்த்தி’ என்று அறியப்பட்ட சு.கிருஷ்ணமூர்த்தி அவர்களில் குறிப்பிடத்தக்கவர். செப்டம்பர் 7, 2014-ல் நம்மிடமிருந்து மறைந்த அவர், பன்மொழி எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறுகதைகளையும் கட்டுரை களையும் படைத்தவர். எனினும் அவர் பெருமளவில் மொழிபெயர்ப்பாளர் என்ற வகையிலேயே அறியப்பட்டவர்.

புதுக்கோட்டைக்கு அருகேயுள்ள அன்னவாசல் கிராமத்தில் 18.11.1929-ல் பிறந்த கிருஷ்ணமூர்த்தி, ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ. பட்டம் பெற்ற பிறகு, கல்லூரி ஆசிரியராக வாழ்க்கையைத் துவங்கி, மத்திய அரசின் தணிக்கைத் துறையில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். வேலை நிமித்தம் 1955 ஆகஸ்ட் மாதம் கொல்கத்தா சென்ற அவர், தானாகவே விரும்பி அங்கு வங்க மொழியை முறையாகக் கற்று, ‘வங்க சாகித்ய ரத்னா’ என்ற பட்டமும் பெற்றவர். தாகூர், சரத் சந்திரர் ஆகியோர் உறுப்பினராக இருந்த ‘ரவிவாசர்’ (ஞாயிற்றுக்கிழமை) என்ற உயர்மட்ட வங்க இலக்கிய அமைப்பின் உறுப்பினராக இருந்தார். அதைவிட முக்கியமான விஷயம், அதன் செயற்குழு உறுப்பினராக இருந்த வங்காளி அல்லாத ஒரே நபர் அவர்தான் என்பதே வங்காளிகள் அவரின் மொழித் திறனை எப்படிப் போற்றினார்கள் என்பதற்கு ஓர் உதாரணம்.

ரவீந்திர புரஸ்கார் பரிசு

கொல்கத்தா செல்வதற்கு முன்பே சிறுகதைகளை எழுதத் துவங்கியிருந்த அவரது படைப்புகள் ‘கல்கி’, கலைமகள்’, ‘தீபம்’ போன்ற இதழ்களில் வெளியானதோடு, அவற்றில் சில சிறுகதைப் போட்டிகளிலும் பரிசு பெற்றவை. வங்க இலக்கியவாதிகளுடன் நெருங்கிய தொடர்புகொண்டிருந்த அவர், 1960-களில் உருவான வங்க இலக்கியங்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார். அவற்றில் அதீன் பந்தோபாத்யாயாவின் ‘நீலகண்டப் பறவையைத் தேடி’, மகாஸ்வேதா தேவியின் ‘1084-ன் அம்மா’, ‘காட்டின் உரிமை’ ஆகியவை குறிப்பிடத் தக்கவை.

அவரது ‘நஜ்ருல் என்றொரு மானுடன்’ நூல் தமிழில் இலக்கியச் சிந்தனை பரிசும், வங்காளத்தில் ரவீந்திர புரஸ்கார் பரிசும் பெற்ற ஒரே தமிழ் நூலாகும். (இந்த நூலை டாக்கா வங்காள அகாடமிக்காக நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வருகிறேன்) ‘சரத் சந்திரரின் வாழ்க்கை, அன்னதா சங்கர் ராயின் ‘கலை’ போன்றவை வங்க மொழியின் சிறப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவந்த முயற்சிகளாகும். மூன்று முறை ‘இலக்கியச் சிந்தனை’ பரிசு பெற்றவரும் அவரே.

கடந்துவந்த பாதை

மறுபுறம், தமிழிலிருந்து வங்க மொழியில் அவர் மொழிபெயர்த்த இந்திரா பார்த்தசாரதியின் ‘குருதிப்புனல்’ நாவலுக்காக சாகித்ய அகாடமியின் மொழி பெயர்ப்புக்கான பரிசையும் பெற்றார். கு.சின்னப்ப பாரதியின் ‘சங்கம்’, ‘தாகம்’, ‘சுரங்கம்’ மற்றும் அசோகமித்திரனின் ‘அப்பாவின் சிநேகிதர்’ என நீண்ட அவரது பங்களிப்பில் குறிப்பிடத்தக்கது, திருக்குறளை அதே ஈரடியில் வங்க மொழியில் மொழிபெயர்த்ததாகும். அதைப் போன்றே சிலப்பதிகாரத்தையும் அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில், சொந்த வாழ்க்கையில் பல்வேறு சோகங்களுக்கு இடையேயும் தமிழ் இலக்கியத்தைப் பிற மொழிகளுக்குக் கொண்டுசெல்வது; பிற மொழி இலக்கியங்களைத் தமிழுக்குக் கொண்டுவருவது என அவர் எடுத்த முயற்சிகளில் எதிர்கொண்ட சோதனைகளை அவரது ‘நான் கடந்து வந்த பாதை’ என்ற நூல் விரிவாகச் சித்தரித்திருந்தது. புலம்பெயர்ந்த தமிழராய், தன்னந்தனியாகத் தமிழ் இதழ்கள், பதிப்பாளர்கள், ஆசிரியர்களுடன் அவர் நடத்திய போராட்டம் இன்றும் கவனம்கொள்ளத் தக்கது. வங்க இலக்கிய உலகம் அவரது இலக்கியத் திறனைப் போற்றிய அளவுக்குத் தமிழ் இலக்கிய உலகில் அவர் கவனம் பெறவில்லை.

ஆதர்ச புருஷர்

சிறு வயதில் வங்க இலக்கியத்தை எனக்கு அறிமுகம் செய்தவர்கள் த.நா.சேனாபதி, த.நா.குமாரசாமி எனில், எனக்கு வங்க மொழி அறிமுகமான பிறகு, கல்கத்தாவில் நான் சந்தித்த முதல் தமிழர் கிருஷ்ணமூர்த்திதான். வங்க அரசின் கோப்புகளுக்கிடையே சண்டையிட்டுக்கொண்டிருந்த நான், அந்தப் பின்னணியில்தான் அவருக்கு அறிமுகம் ஆனேன். அவரே ஒருமுறை கூறியது போல ‘ஜோதிபாசுவை விட வங்க மொழியை நன்றாகப் பேசவும், படிக்கவும், எழுதவும் தெரிந்த’ ஒரு தமிழராய் இருந்த அவர், எனக்கு ஓர் ஆதர்ச புருஷராகவும் இருந்தார்.

2014 ஏப்ரல் 14 அன்று சென்னையில் நடந்த இலக்கியச் சிந்தனைக் கூட்டத்தில் அவரைச் சந்தித்தபோது, பணி ஓய்வுக்குப் பிறகு வங்க மொழியை இலக்கண பூர்வமாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எனது ஆர்வத்தைத் தெரிவித்தபோது, “எப்போது வேண்டுமானாலும் வாருங்கள்” என்றார். ஆனால், நான் ஓய்வுபெறும் முன்பே அவர் மறைந்த நிலையில், எனது முன்னோடியைச் சிறந்ததோர் ஆசிரியராக என்னால் பெற முடியாமல் போனதை இன்றும் பேரிழப்பாகவே கருதுகிறேன்.

‘கொல்கத்தா’சு.கிருஷ்ணமூர்த்தி தனது 84 வயதில் மறையும்வரை தொடர்ந்து எழுதிக்கொண்டேயிருந்தார். புலம்பெயர்ந்த தமிழர்களிலேயே தமிழுக்குப் புதிய படைப்புகளைப் பிற மொழிகளிலிருந்து அறிமுகம் செய்வதிலும், தமிழ்ப் படைப்புகளை வங்கம் உட்படப் பிற மொழிகளுக்குக் கொண்டுசெல்வதிலும் மிகச் சிறந்த வகையில் தீவிரமாகச் செயல்பட்ட அவரது பணியை நினைவுகூர்ந்து, அவரது நினைவைப் போற்றுவோம்.

- வீ.பா.கணேசன், எழுத்தாளர்.

தொடர்புக்கு : vbganesan@gmail.com

இன்று ‘கொல்கத்தா கிருஷ்ணமூர்த்தி’யின் நினைவு நாள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x