Published : 07 Oct 2013 10:46 am

Updated : 06 Jun 2017 12:25 pm

 

Published : 07 Oct 2013 10:46 AM
Last Updated : 06 Jun 2017 12:25 PM

நமக்குத் தேவை டான் பிரவுன்கள்

சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே: சில குறிப்புகள்' 1981-ல் வெளிவந்தது. அதில் ஒரு வரி அக்காலத்தில் மிகவும் பிரபலம். வணிகக் கேளிக்கை எழுத்துகளை அவை தமிழில் இருப்பதனாலேயே பாராட்டுவதைப் பற்றி நாவலுக்குள் வந்து சுந்தர ராமசாமியே சொல்வதுபோல அவ்வரி வரும்: ‘வாந்திபேதியில் தமிழ் வாந்திபேதி என்றும் வேசைத்தனத்தில் தமிழ் வேசைத்தனம் என்றும் உண்டோ?’

வணிக எழுத்துக்கு எதிரான சாட்டைச் சொடுக்கல்களால் ஆனது 'ஜே.ஜே: சில குறிப்புகள்'. ஆச்சரியம் என்னவென்றால், இந்த நேரடியான தாக்குதல் காரணமாகவே 'ஜே.ஜே: சில குறிப்புகள்' அந்த வணிகக் கேளிக்கை எழுத்து வட்டாரத்தில் பிரபலமானது. விளைவாக தமிழில் அன்று வரை எந்த ஒரு தீவிர இலக்கியப் படைப்புக்கும் கிடைக்காத பரவலான வாசிப்பு அதற்குக் கிடைத்தது.


அன்றைய வாசிப்புச் சூழலை விவரித்தால்தான் இது புரியும். நவீன தமிழிலக்கியம் புதுமைப்பித்தன் கால கட்டத்தில் தீவிரமான வீச்சுடன் ஆரம்பித்தது. ஆனால், விரைவிலேயே அந்த அலை அணைந்தது. கல்கி பெருவாரியான வாசகர்களை ஈர்த்து ஒரு புதிய அலையைத் தொடங்கிவைத்தார். எளிமையான மொழியில் மனக்கிளர்ச்சியூட்டும் எழுத்து முறை தமிழில் வேரூன்றியது. அந்த வகை எழுத்து ஒரு வெற்றிகரமான வணிகமாக இருக்க முடியும் என நிரூபணமாகியது.

தமிழின் முக்கியமான வார இதழ்கள் உருவாகிவந்த காலகட்டம் அது. தொடர்கதை என்ற வடிவம் லட்சக் கணக்கானவர்களைச் சென்றடைந்தது. அகிலன், ஆர்.வி., எல்.ஆர்.வி. என்று ஓர் எழுத்தாளர் வரிசையே இருந்தது. அவர்களையே இலக்கியவாதிகளாக அன்றைய வாசகர்கள் மட்டுமல்ல; கல்வித் துறையினர்கூட நம்பினார்கள். விருதுகளும் அங்கீகாரங்களும் அவர்களுக்கே சென்றன.

அன்று தமிழில் உலகின் எந்த மொழியிலும் எழுதிய இலக்கிய மேதைகளுக்கு நிகரான படைப்பாளிகள் உருவாகியிருந்தனர். லா.ச.ரா.,கு.அழகிரிசாமி,ப.சிங்காரம், சுந்தர ராமசாமி, தி.ஜானகிராமன், அசோகமித்திரன் போன்றவர்களின் மகத்தான படைப்புகள் அப்போதுதான் வந்தன. அவை வாசகர்களைச் சென்றடையவே அன்று வழியில்லை. சில நூறு பிரதிகள் அச்சிடப்பட்ட சிற்றிதழ்களில் அவர்கள் எழுதினார்கள்.

அவர்களின் நூல்கள் ஐந்நூறு பிரதிகள் விற்க பத்து வருடங்களாயின. புகழ் இல்லை, பணம் இல்லை. எவ்வகையிலும் மரியாதை இல்லை. வாசகர்கள் இருக்கிறார்களா என்றே தெரியவில்லை. ஆனாலும், புயல் காற்றில் தீபத்தைக் கையால் பொத்திக்கொண்டு செல்வதுபோல அவர்கள் இலக்கியத்தை முன்னெடுத்தார்கள். மனைவியின் நகைகளை விற்றுச் சிற்றிதழ் நடத்தினார்கள். அவர்களுடைய எழுத்துகள் மட்டும்தான் காலம் கடந்து இன்றும் வாசிக்கப்படுகின்றன.

‘ஜே.ஜே: சில குறிப்பு’களை வாசித்து மன எழுச்சி அடைந்து, நான் சுந்தர ராமசாமியைச் சென்று சந்தித்தேன். 15 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்த நட்புறவாக அது அமைந்தது. அவர் வழியாக வணிக எழுத்தின் மீது மிகுந்த எதிர்ப்பு உணர்வை நானும் உருவாக்கிக்கொண்டேன். மிகச் சிறுபான்மையினர் மட்டும் வாசிக்கும் தீவிர இலக்கியத்தின் பக்கம் என்னை நிறுத்திக்கொண்டேன்.

1990-களில் திடீரென்று ஒரு மாற்றம் நிகழ்ந்தது. ஒன்று, தொலைக்காட்சி மிகப் பெரிய கேளிக்கை ஊடகமாக மலர்ச்சி அடைந்தது. அதுவரை தொடர்கதை வாசித்துக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் தொலைக்காட்சித் தொடர்கள் பார்க்க ஆரம்பித்தனர். வாசிப்பு ஒரு கேளிக்கையாக இல்லாமல் ஆகியது.

அந்தக் காலி இடத்தில் ஒரு சிறு பகுதியை இலக்கியம் நிரப்ப ஆரம்பித்தது. ‘தினமணி’, ‘இந்தியா டுடே’, ‘சுபமங்களா’போன்ற இதழ்கள் நல்ல இலக்கியத்தை மக்களிடையே கொண்டுசேர்த்தன. அத்துடன் அன்று ஆப்செட் அச்சகங்கள் பெருகின. கணிப்பொறித் தொழில்நுட்பத்தில் நூல்களை வெளியிட ஆரம்பித்தபோது நூல் தயாரிப்பு எளிமையாக ஆனது. ஏராளமான பதிப்பகங்கள் வந்தன. அவர்கள் புத்தகச் சந்தை என்ற விற்பனை முறையை உருவாக்கி, நூல்களை மக்களிடையே கொண்டுசென்றார்கள். இணையம் வந்தபோது நூல்களைப் பற்றிய தகவல்கள் மக்களிடம் சென்றுசேர்வதும் எளிதாகியது. இன்று எல்லா இலக்கியவாதிகளின் படைப்புகளும் மறுஅச்சாகிக் கிடைக்கின்றன. இலக்கிய வாசிப்பு பல மடங்கு வளர்ந்துள்ளது. க.நா.சு-வும் சுந்தர ராமசாமியும் கனவு கண்டது நிகழ்ந்துள்ளது.

ஆனால், இதற்கு ஒரு மறுபக்கம் உள்ளது என இப்போது படுகிறது. இன்று இலக்கியம் வாசிப்பவர்கள் சிறுவர்களாக இருந்தபோது அன்று புகழுடன் இருந்த வணிக எழுத்துகளை வாசித்து வாசிப்புப் பழக்கத்தை அடைந்தவர்கள். அந்த வாசிப்பு வழியாக முதிர்ந்து அவர்கள் தீவிர இலக்கியம் நோக்கி வருகிறார்கள். அதுவே இயல்பான பாதை. ஆனால், இன்றுள்ள இளைய தலைமுறைக்கு அந்தப் பாதை இருக்கிறதா?

தீவிர இலக்கியம்தான் ஒரு ஆரோக்கியமான பண்பாட்டின் வளர்ச்சிக்கு உதவக்கூடியது என்பதில் ஐயமே இல்லை. வாழ்க்கையை நுட்பமாக அணுகவும் அதை வரலாற்றில் வைத்துப் புரிந்துகொள்ளவும் உதவக்கூடியவை இலக்கியப் படைப்புகளே. ஆனால், அவை வாசிக்கும் பயிற்சி கொண்டவர்களுக்கு உரியவை. வாசிக்கும் பயிற்சியை அளிப்பதற்கு எளிமையான, விறுவிறுப்பான புனைகதைகள் தேவை.

இன்று அத்தகைய வணிகக் கேளிக்கை எழுத்து அநேகமாக அழிந்துவிட்டது. சென்ற தலைமுறையில் சுஜாதா, பாலகுமாரன், இந்துமதி, வாசந்தி, சிவசங்கரி போன்ற நட்சத்திர அந்தஸ்து கொண்ட வணிகக் கேளிக்கை எழுத்தாளர்கள் இருந்தனர். அவர்கள் வாசகர்களைக் கவர்ந்து வாசிப்புக்குள் கொண்டுவந்தனர். அவர்களின் வாசகர்களில் ஒரு சாரார் பின்னர் இலக்கிய வாசகர்களாக ஆனார்கள்.

இந்தத் தலைமுறையில் அப்படி எவருமே இல்லை. அவ்வாறு நவீன வணிக எழுத்து நிறைய வந்தால் மட்டும்தான் லட்சக் கணக்கானவர்கள் தமிழில் வாசிக்க ஆரம்பிப்பார்கள். வாசிப்பு ஒரு சமூக இயக்கமாக நிகழும். அவ்வாறு 10 லட்சம் பேர் தமிழில் எதையாவது வாசித்தால்தான் அதில் 10 ஆயிரம் பேர் தரமான இலக்கியத்துக்கு வருவார்கள்.

அத்தகைய வணிகக் கேளிக்கை எழுத்து தமிழில் இல்லை என்றால், இளம் வாசகர்கள் ஆங்கிலத்தில்தான் அவற்றை வாசிக்க ஆரம்பிப்பார்கள். இன்று சுஜாதா இல்லை. ஆகவே, நம் இளைய தலைமுறை டான் பிரவுனையும் சேத்தன் பகத்தையும் வாசிக்கிறது. அவர்களில் நுண்ணுணர்வு உள்ளவர்கள் பின்பு நேராக ஓரான் பாமுக்குக்கும் முரகாமிக்கும் சென்றுசேர்கிறார்கள்.

க.நா.சுப்ரமணியமும் சுந்தர ராமசாமியும் வணிக எழுத்தை அத்தனை ஆவேசமாக எதிர்த்தார்கள் என்றால், அதற்கான காரணம் அது இலக்கியத்தை மறைத்தது என்பதுதான்; இலக்கிய மேதைகளும் பேரிலக்கியப் படைப்புகளும் தமிழில் இருந்தும் வணிக எழுத்தாளர்களும் கேளிக்கைப் படைப்புகளும் கொண்டாடப்பட்டன என்பதுதான். ஆனால், இனிமேல் அப்படி வணிக எழுத்து இலக்கியத்தை மறைக்க முடியாது. இன்றைய உச்சக்கட்டத் தகவல்தொடர்புமுறை எல்லாவற்றையும் கொண்டுசென்று சேர்த்துவிடும்.

ஆகவே, தமிழில் நமக்கு இன்று தேவை டான் பிரவுன்போல, ஸ்டீபன் கிங்போல,சேத்தன் பகத்போல ஈர்ப்புள்ள வணிக எழுத்தாளர்கள். அவர்களை உருவாக்கிக் கொண்டுசேர்க்க பதிப்பாளர்கள் முயல வேண்டும். இல்லையேல், அடுத்த தலைமுறையில் தமிழில் வாசிக்க யாரும் இருக்க மாட்டார்கள்!

ஜெயமோகன், எழுத்தாளர் - தொடர்புக்கு: jeyamohan.novelist@gmail.com


டான் பிரவுன்எழுத்தாளர்கள்வாசிப்பு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x