Last Updated : 02 Sep, 2016 10:06 AM

 

Published : 02 Sep 2016 10:06 AM
Last Updated : 02 Sep 2016 10:06 AM

குறைந்தபட்ச ஊதியச் சட்டம் தேவையா?

ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச மாத ஊதியத்தை ரூ.10,000 என்ற அளவுக்கு உயர்த்தப்போவதாக மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தார். இந்த உயர்வை நிர்வாக உத்தரவு மூலம் அமல் செய்யப்போவதாகவும் குறிப்பிட்டார். ஆனால், அவர் அறிவித்தபடி நிர்வாக உத்தரவு வரவேயில்லை. அவருடைய அந்த அறிவிப்புக்கு தொழில்துறை நிர்வாகிகளிடமிருந்து கடும் எதிர்ப்புகள்தான் ஜூலையில் வந்தன. உடனே, அந்த உத்தேச முடிவு கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்திந்திய அளவில் செப்டம்பர் 2-ல் பொது வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அனைத்துத் தொழிற்சங்கங்களும் கூட்டாக அறிவித்த பிறகு, குறைந்தபட்ச ஊதிய உயர்வு குறித்து மத்திய அரசு மீண்டும் ஒரு அறிவிப்பைச் செய்துள்ளது. இந்த அறிவிப்பு வேளாண்மை அல்லாத பிற துறைகளில் வேலை செய்யும் முறையான தொழில்திறன் பயிற்சி பெறாத தொழிலாளர்களுக்குப் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. அன்றாட குறைந்தபட்ச ஊதியம் ரூ.246-லிருந்து ரூ.350 அல்லது மாத ஊதியம் ரூ.9,100 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். சார்புள்ள பாரதிய மஸ்தூர் சங் (பி.எம்.எஸ்.) தவிர்த்த ஏனைய மத்திய தொழிற்சங்கங்கள் இந்த அறிவிப்பை ஏற்க முடியாது என்று நிராகரித்துவிட்டன.

எழும் பல கேள்விகள்

இந்தத் தொடர் நிகழ்வுகள் பல கேள்விகளை எழுப்புகின்றன. உரிய குறைந்தபட்ச ஊதியம் என்பது எது? அதை எப்படித் தீர்மானிக்கிறார்கள்? குறைந்தபட்ச ஊதியம் என்பதை நிர்ணயிக்க வேண்டிய நிலையில்தான் இந்தியா இன்னமும் இருக்கிறதா?

குறைந்தபட்ச ஊதியம் என்ற கொள்கையையே ரத்து செய்துவிட பல காரணங்களை முன்வைக்கின்றனர். அதில் முக்கியமானது தாராளமயம் என்ற கொள்கையைச் சார்ந்தது; தொழிலாளர்களின் ஊதியத்தை அரசு நிர்ணயிக்கக் கூடாது, சந்தைதான் நிர்ணயிக்க வேண்டும் என்பது அதில் தலையாயது. அப்படி இருந்தால்தான் தொழிலாளர்களிடத்தில் போட்டியும் திறமையும் இருக்கும் என்று கருதப்படுகிறது. தொழிற்சாலை நிர்வாகங்கள் இந்த வாதத்தை முன்வைத்தபோது அரசும் அதை ஏற்றுக்கொண்டது.

குறைந்தபட்ச ஊதியம் கூடாது என்பதற்குக் கூறும் இரண்டாவது காரணம், இது பாஜக கூட்டணி அரசு அறிவித்துள்ள ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற கொள்கை முழக்க அடிப்படையிலான தொழில் வளர்ச்சி முயற்சிகளுக்கு முரணாக இருக்கிறது என்பது. அந்நிய மூலதனம் இந்தியாவை நோக்கிப் பாய வேண்டும் என்றால், இந்தியத் தொழிலாளர்களின் ஊதியம் - அதாவது உற்பத்திச் செலவு - குறைவாக இருக்க வேண்டும். சீனம், வியட்நாம், கம்போடியா, வங்கதேசம் ஆகிய நாடுகளில் நிலவும் ஊதியத்தைவிட இந்தியாவில் குறைவாக இருந்தால்தான் இது சாத்தியம் என்கின்றனர்.

மூன்றாவது காரணம், பொருளாதாரச் சீர்திருத்தவாதிகளிடையே பிரபலமானதுதான். ஒரு கொள்கையைச் சரிவர அமல்படுத்த முடியவில்லை என்றால், அதைக் கைவிட்டுவிடு என்பதுதான். குறைந்தபட்ச ஊதியச் சட்டம் என்பது முழுமையாக, தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது என்று தொழிற்சாலை நிர்வாகங்கள், அரசு, தொழிற்சங்கங்கள் என்று எந்தத் தரப்பாலும் உறுதியாகக் கூற முடியாது. 1970-ல் ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் தொடர்பான 131-வது தீர்மானத்தை ஏற்று இந்தியா இன்னமும் அங்கீகாரம் வழங்காத நிலையில் அந்தச் சட்டம் குறித்து அவ்வப்போது அலட்டிக்கொள்வானேன் என்பதுதான் எதிர்ப்பாளர்களின் கேள்வியாக இருக்கிறது.

குறைந்தபட்ச ஊதியத்தின் அவசியம் என்ன?

இந்தியாவுக்கென்று தனி அரசியல் சட்டம் உருவாவதற்கு முன்னரே சுதந்திர இந்தியாவில் முதலில் இயற்றப்பட்ட சட்டம் குறைந்தபட்ச ஊதியம் பற்றியதுதான். அதை ஏன் நிறைவேற்றினார்கள்? அந்நாளில் மிகவும் செயல் துடிப்போடு இருந்த தொழிலாளர் வர்க்கத்துக்கும் தேசிய பூர்ஷ்வா வர்க்கத்துக்கும் இடையே சமாதானம் நிலவுவதற்காக இப்படியொரு சமரச சட்டத்தை நிறைவேற்ற வேண்டியிருந்தது. அதைத் தவிர, வேறு சில காரணங்களும் உண்டு. இந்தியா என்பது கோடிக்கணக்கான தொழிலாளர்களைக் கொண்ட ஏழை நாடு. அங்கே நிர்வாகத்தினருடன் பேரம் பேசி, தங்களுடைய ஊதியத்தைத் தீர்மானித்துக் கொள்ள முடியாத வேலைகள் பல அந்நாட்களில் இருந்தன. முதலாளிமார்களால் ஒப்புக்கு ஒரு ஊதியத்தைக் கொடுத்துவிட்டு வேறு எதற்கும் பொறுப்பு எடுத்துக்கொள்ளாமல் தப்பித்துவிடுவதற்கான சூழலே அன்றைக்கு இருந்தது. தொழிலாளர்கள் வறுமை, ஊட்டச்சத்துக் குறைவு, தீராத கடன் சுமை ஆகியவற்றால் பீடிக்கப்பட்டிருந்தார்கள். எனவே, கொத்தடிமைகளாகவும், குழந்தைத் தொழிலாளர்களாகவும் வேலை செய்தார்கள். நியாயமான ஊதியம் கொடுத்தால் இந்த நிலைமையிலிருந்து மீள முடியும் என்ற கருத்து அப்போது நிலவியது.

மூன்று நிலைகள்

நியாயமான ஊதியத்தை நிர்ணயிக்க முத்தரப்புக் குழு 1948-ல் நியமிக்கப்பட்டது. அந்தக் குழு மூன்று நிலைகளிலான ஊதியத்தை வரையறுத்தது. குறைந்தபட்ச வாழ்வாதாரத்துக்கான ஊதியம், நியாயமான ஊதியம், குறைந்தபட்ச ஊதியம் என்பவையே அவை. உண்ண உணவு, உடுக்க உடை, குடியிருக்க வீடு போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதுடன் நோயிலிருந்து பாதுகாப்பு, முதிய வயதில் பொருளாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான செலவுகளைச் சமாளிக்கும்படியான ஊதியமே வாழ்வாதாரத்துக்கான ஊதியம் என்று அழைக்கப்பட்டது.

நியாயமான ஊதியம் என்பது வாழ்வாதாரத்துக்கான ஊதியத்தைவிடச் சற்றே குறைவு என்பதுடன் தொழிலாளர்களுக்கு வேலை செய்வதற்கான திறமை அவசியம் என்ற நிர்வாகத்தின் கண்ணோட்டத்தின்படி நிர்ணயிக்கப்படுவதாகும். குறைந்தபட்ச ஊதியம் என்பது நியாயமான ஊதியத்தைவிடக் குறைந்தது, சட்டபூர்வ அங்கீகாரம் பெற்றது என்பது கூடுதலான இரண்டு அம்சங்கள்.

குறைந்தபட்ச வாழ்வாதார ஊதியம் அல்லது நியாயமான ஊதியம் என்பது குறித்துப் பேசுவதுகூட நகைப்புக்கிடமானது என்பதே இன்றைய தேசபக்தியுள்ள தொழிலதிபர்கள் மற்றும் தேசியக் கொள்கை வகுப்பாளர்களின் நிலையாக இருக்கிறது. எனவே, மிஞ்சுவது குறைந்தபட்ச ஊதியம் என்ற கொள்கைதான். அது எவ்வளவாக இருக்க வேண்டும்?

ஐந்து முக்கிய அம்சங்கள்

1957-ல் நடந்த 15-வது இந்தியத் தொழிலாளர் மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானமானது குறைந்தபட்ச ஊதியத்தைக் கணக்கிட ஐந்து முக்கிய அம்சங்களைக் கருத்தில் எடுத்துக்கொண்டது. முதலாவதாக, ஊதியமானது மூன்று நபர்களின் குறைந்தபட்சத் தேவைகளைப் பூர்த்திசெய்வதாக இருக்க வேண்டும். ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 2,700 கலோரி அளவுக்கு உணவு வாங்கக்கூடிய திறன் வேண்டும். ஒரு தொழிலாளியின் குடும்பம் 72 கஜம் துணி வாங்குவதற்கு முடிய வேண்டும். அரசு வழங்கும் மானிய வீடுகளின் பரப்பளவுள்ள இடத்தில் வாடகைக்குக் குடியேறும் வகையில் பணம் கிடைக்க வேண்டும். சமையல் செய்வதற்கான எரிபொருள், விளக்கெரிப்பதற்கான செலவு போன்றவற்றுக்குக் குறைந்தபட்ச ஊதியத்தில் 20% கூடுதலாகக் கிடைக்க வேண்டும். இந்த ஐந்து அம்சங்களைப் பூர்த்திசெய்வதாகக் குறைந்தபட்ச ஊதியம் இருக்க வேண்டும் என்று முதலில் வரையறுக்கப்பட்டது. 1991-ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குழந்தைகளின் படிப்புச் செலவு, மருத்துவச் செலவு ஆகியவற்றையும் இதில் சேர்த்துக்கொண்டு மேலும் 25% ஊதியத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று கூறியது.

இந்த வரையறைகளையெல்லாம் ஒரு சேர சேர்த்துப் பார்த்தால், குறைந்தபட்ச மாத ஊதியம் என்பது ரூ.26,000 ஆக இருக்க வேண்டும் என்று சில மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இதைத்தான் மத்திய அரசின் ஊழியர் சங்கங்கள் ஏழாவது நிதிக் குழுவிடம் வலியுறுத்தின.

சம ஊதியம் மூலம் குறைந்தபட்ச ஊதியம்

ரூ.26,000 என்பதோ ரூ.10,000 என்பதோ சில மாநிலங்களில் அதிகாரபூர்வமாக வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்துடன் ஒப்பிடும்போது வினோதமாகவே தெரிகிறது. புதுச்சேரியில் வேளாண் துறையில் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.1,650 என்று 2013 தகவல் தெரிவிக்கிறது. உண்மையில், சராசரி குறைந்தபட்ச ஊதியம் அங்கே ரூ.4,800 ஆக உள்ளது. அது தேசிய குறைந்தபட்ச ஊதியத்துக்கு நெருக்கமாக இருக்கிறது.

இந்த ஊதியம், இப்படி யாராலும் அதிக அக்கறையுடன் அமல்படுத்தப்படாவிட்டாலும்கூட, இதை அடியோடு ரத்து செய்ய யாருக்கும் துணிச்சல் இல்லை. குறைந்தபட்ச ஊதியம் என்று ஒன்றைப் பொருத்தமில்லாமல் நிர்ணயித்துவிட்டு அது அமலாகிறதா என்று பார்க்காமல் இருந்தாலும் இருக்கலாம், ரத்து செய்துவிடுவது நல்லதல்ல என்று அரசு கருதுகிறது.

தொழிற்சங்கத் தலைவர் கருத்து

‘‘ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நியாயமான உரிய ஊதியம் கிடைக்க வேண்டும் என்ற அக்கறை அரசுக்கு இருந்தால், குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தைத் திருத்த வேண்டும்; ஒரே மாதிரியான வேலையைச் செய்யும் நிரந்தரத் தொழிலாளர், ஒப்பந்தத் தொழிலாளர் இருவருக்கும் ஒரே மாதிரியாக ஊதியம் தரப்பட வேண்டும். இந்த அரசு அந்தரீதியில் சட்டத்தைத் தொடவேயில்லை” என்கிறார் இந்தியத் தொழிற்சங்க மையத்தைச் சேர்ந்த ஏ.கே. பத்மநாபன்.

தாராளமயத்துக்குப் பிந்தைய இந்தியாவில் நிரந்தரத் தொழிலாளர்களைவிட ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதியத்தைக் குறைத்தே கொடுக்க வேண்டும் என்று எந்தத் தொழில்துறை ஆதிக்க அமைப்பும் வெளிப்படையாக வாதிட முடியாது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்களவையில் பெரும்பான்மை வலு இருக்கிறது. மாநிலங்களவையிலும் இந்த அடிப்படையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டால் அதை எந்தக் கட்சியும் எதிர்க்காது. அனைவரும் கருத்தொற்றுமை அடிப்படையில் ஏற்கக்கூடிய தொழிலாளர் சட்டச் சீர்திருத்தம் ஒன்று இருக்குமானால், அது சம வேலைக்கு சம ஊதியத்தை நிரந்தரத் தொழிலாளர்களுக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் வழங்குவதாகத்தான் இருக்க முடியும். இந்த ஒரே திருத்தம் இரு வகைத் தொழிலாளர்களையும் சம நிலைக்குக் கொண்டுவந்துவிடும். இது ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணி நிரந்தரம், வரைமுறைப்படுத்தல் போன்றவற்றுக்கும் உதவியாக இருக்கும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் சரி, இப்போதுள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் சரி அத்தகைய சீர்திருத்தத்தில் உண்மையான ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்பதே உண்மை. இந்த ஊதிய வேறுபாட்டால் யார், எப்படி ஆதாயம் அடைகிறார்கள் என்பதை ஊகிப்பது ஒன்றும் கடினமான வேலையல்ல.

தமிழில்: ஷங்கர்

© ‘தி இந்து’ ஆங்கிலம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x