Published : 30 Oct 2013 09:08 AM
Last Updated : 30 Oct 2013 09:08 AM

வேண்டாம் வண்டலூர்!

சென்னை நெரிசலைக் குறைக்கவும் எதிர்காலப் போக்குவரத்தைச் சமாளிக்கவும் இன்னொரு பஸ் முனையத்துக்குத் தமிழக அரசு திட்டமிடுகிறது. காலத் தேவையை உணர்ந்து எடுக்கப்படும் சரியான முடிவு இது. ஆனால், கோயம்பேட்டுக்கு இணையாக, வண்டலூரில் அதை அமைக்கத் திட்டமிடுவது சரியல்ல.

ஒரு நாளில் இரண்டாயிரம் பஸ்கள், இரண்டு லட்சம் பயணிகளைக் கையாளும் திட்டத்துடன் கட்டப்பட்ட கோயம்பேடு பஸ் முனையம் 2002-ல் திறக்கப்பட்டபோது, ‘‘அடுத்த 25 ஆண்டுகளுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது’’ என்றனர் நம்முடைய அதிகாரிகள். திட்டமிட்டதுபோல இரண்டு மடங்குக்கும் மேலான பஸ்களையும் பயணிகளையும் கோயம்பேடு எதிர்கொள்ளும் நிலையிலும், 11 ஆண்டுகள்கூட நம்மால் சமாளிக்க முடியவில்லை. இத்தகைய சூழலில், புதிய பஸ் முனையத்தைக் கோயம்பேட்டின் பிரச்சினையைக் குறைக்கும் வகையில் மட்டும் திட்டமிடுவது தொலைநோக்கிலானதாக அமையாது. கோயம்பேடு பஸ் முனையத்தைப் போல மூன்று மடங்கு பஸ்களையும் பயணிகளையும் கையாளத் தக்க வகையில் நாம் திட்டமிட வேண்டும். அதையும் வண்டலூரில் அல்லாமல், மறைமலை நகருக்கு முன்பே அமைக்கத் திட்டமிடுவதே பொருத்தமானதாக இருக்கும்.

இந்த நேரத்தில் சூழலியல் சார்ந்து வண்டலூரின் முக்கியத்துவத்தை அரசு யோசிக்க வேண்டும். நாட்டிலேயே முதல்முறையாக உயிரியல் பூங்கா தொடங்கப்பட்ட நகரம் சென்னை. 1855-ல் மூர் மார்க்கெட் பகுதியில் தொடங்கப்பட்ட உயிரியல் பூங்காவை இட நெருக்கடி காரணமாக 1976-ல் மாற்ற யோசித்தபோது, வண்டலூர் தேர்ந்தெடுக்கப்பட்ட காரணம், அங்கு இருந்த இயற்கையான சூழல். மலைக் குன்றுகள், சுற்றிலும் காடு, ஏராளமான ஏரிகள் என விரிந்த வண்டலூரில் உயிரியல் பூங்கா அமைக்கப்பட்டது வன உயிரினங்களின் நலனுக்காக மட்டும் அல்ல; அங்கு பல்லுயிரியம் தழைக்கும்; மறைமுகமாகக் காடு பாதுகாக்கப்படும் - நகரம் விரியும்போது சுற்றுச்சூழல் கேடயமாக அது உள்வாங்கிக்கொள்ளும் என்ற நோக்கிலும்தான். காடு சூறையாடப்பட்டது; ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டன; தென்னிந்தியாவின் பரபரப்பான சாலைகளில் ஒன்றானது சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை; எவ்வளவோ மோசமான சூழலிலும் விரியும் புறநகர் சென்னையின் நுரையீரலாக இருக்கிறது வண்டலூர்.

சென்னை - படப்பை - காஞ்சிபுரம் சாலையை ஒட்டியுள்ள கிராமங்கள் ஒரு வகையில் சென்னையின் இயற்கைக் களஞ்சியங்கள். ஒரகடத்தில் தொழிற்பூங்கா அமைத்து, அந்தக் கிராமங்களில் வரிசையாகத் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதே சுற்றுச்சூழலுக்கு அரசு இழைக்கும் பெருந்தீங்கு. இப்போது அந்தச் சாலையின் நுழைவாயில்போல் அமைந்திருக்கும் வண்டலூரில் பஸ் முனையமும் அமைக்கப்பட்டால், அப்பகுதியின் பசுமையை ரியல் எஸ்டேட் சூறையாடும்; வன வளம் அழியும்.

சூழலைக் குலைக்கும் எந்த நடவடிக்கையும் புத்திசாலித்தனமாகாது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x