Published : 09 Jul 2016 10:34 AM
Last Updated : 09 Jul 2016 10:34 AM

நெய்வேலி புத்தகக் காட்சி: சில துளிகள்

எழுதுங்க மக்களே!

நெய்வேலி புத்தகக் காட்சியின் இன்னொரு சிறப்பம்சம் வாசகர்களுக்குள் இருக்கும் படைப்பாளிகளை வெளிக்கொணர வாய்ப்பளிக்கப்படுவது. சிறுகதைப் போட்டி, குறும்படப் போட்டி, உடனடி திறனறியும் போட்டி என்று வாசகர்களைக் குதூலகப்படுத்த விதவிதமான போட்டிகளை நடத்துவது புத்தகக் காட்சிக்குப் புது வண்ணம் சேர்க்கிறது.

நாலு கொழுக்கட்டை சூடா பார்சேல்!

பொதுவாக, புத்தகக் காட்சி உணவகங்கள் வழிப்பறிக் கூடங்களாகக் காட்சியளிப்பது தமிழகத்தின் சாபக்கேடுகளில் ஒன்று. நெய்வேலி விதிவிலக்கு. நியாயமான விலை; நயமான உணவு. வெங்காய ஊத்தாப்பம், காய்கறி தோசை, இடியாப்பம், அரிசிப் பொங்கல், ரவா கிச்சடி, சாம்பார் வடை, கீரை வடை, சுண்டல், குழிப் பணியாரம், அடை அவியல், கொழுக்கட்டை, உருளை போண்டா என்று பெரிய்ய்ய படையலே வைத்திருக்கிறார்கள்.

அட இட்லியில் எத்தனை வகை! ரவா இட்லி, காஞ்சிபுரம் இட்லி, மசால் இட்லி… அப்புறம் இந்தக் கொழுக்கட்டை… நல்லாருக்குங்க!

ஆறு ரூவாய்க்கும் புஸ்தகம்…ஒன்றரை லட்சத்துக்கும் புஸ்தகம்!

வெறும் ஆறு ரூபாய்க்குக்கூட நெய்வேலி புத்தகக் காட்சியில் புத்தகங்கள் கிடைக்கின்றன. ‘திருப்பாவை’, ‘திருவெம்பாவை’ போன்றவை. இதேபோல வெவ்வேறு தலைப்புகளில் குழந்தைகளுக்கான பொது அறிவுப் புத்தகங்கள் நிறைய ரூ.10 விலைக்கு விற்கப்படுகின்றன. கங்காணி பதிப்பகம், முல்லை பதிப்பகம், பாலகங்கை பதிப்பக அரங்குகளில் ரூ.10 விலைக்கு ஏராளமான புத்தகங்கள் தென்பட்டன. கண்காட்சியில் நம் கண்ணில் பட்டதிலேயே அதிக விலை கொண்ட புத்தகம் ‘பிரிட்டானிகா என்சைக்கிளோபீடியா’. 40 தொகுதிகள். விலை ரூ. 1.5 லட்சமாம். வெளியாகி நீண்ட காலம் ஆகிவிட்ட நிலையில், ரூ.25 ஆயிரத்துக்கு விற்கிறார்கள்.

குழந்தைகள் உலகம்!

நெய்வேலி புத்தகக் காட்சியின் சிறப்பு விருந்தினர்கள் குழந்தைகள்தான்! பள்ளி மாணவர்களுக்கு ராஜ உபசாரம் செய்கிறார்கள். கடலூர் மட்டுமின்றி திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி என்று சுற்றுவட்டாரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான பள்ளிகளுக்கு நேரடியாக அழைப்பு விடுத்திருந்திருக்கிறார்கள். இவர்களுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது. புத்தகக் காட்சியில் இவர்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் சுற்றி வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருப்பதுடன் சிற்றுண்டி, குடிநீர் போத்தல்களையும் என்.எல்.சி. நிர்வாகமே வழங்கிவிடுகிறது. புத்தகக் காட்சியில் சுற்றியதோடு, பொழுதுபோக்கிக்கொள்ளவும் உற்சாகமாகி ஊர் திரும்புவதற்கும் ஏதுவாக டோரா டோரா, ரங்கராட்டினம், பொம்மை ரயில் போன்ற என்று பொழுதுபோக்கு சமாச்சாரங்களையும் தனியே அமைத்திருக்கிறார்கள். பிள்ளைகள் குதூகலமாக புத்தகக் காட்சிக்கு வந்து செல்கிறார்கள்!

எழுத்தாளர்களுக்கு மரியாதை!

வாசகர் திருவிழா என்பது புத்தகம் விற்பதற்கான இடம் மட்டுமன்று, எழுத்தாளர்களும் வாசகர்களும் கூடி உறவாடும் இடமும்கூட. நெய்வேலி புத்தகக் காட்சியில் தினம் ஒரு எழுத்தாளரை அழைத்துக் கௌரவிக்கிறார்கள். இதன் பொருட்டு அங்கு வரவழைக்கப்படும் எழுத்தாளர், வாசகர்களுடன் உரையாடுவதற்கென்று சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

தொல்தமிழ் போற்றுவோம்!

சங்கத் தமிழ் உலகத்துக்குள் நுழைந்ததுபோல இருந்தது, கௌரா பதிப்பக அரங்கில் நுழைந்தபோது. ‘தொல்காப்பியம்’, ‘திரிகடுகம்’, ‘புறநானூறு’, ‘குறுந்தொகை’, ‘கலித்தொகை’, ‘பத்துப்பாட்டு’ என எங்கும் பழந்தமிழ் வாசம்!

என்ன வேண்டும் உங்களுக்கு?

20-ம் நூற்றாண்டின் முக்கியமான தத்துவ ஞானிகளில் ஒருவராக உலகம் முழுவதும் மதிக்கப்படுகிற ஜே.கிருஷ்ணமூர்த்தி எழுதிய பெரும்பாலான புத்தகங்கள் இங்கே கிடைப்பது நெய்வேலி புத்தகக் காட்சியின் வளமையை எளிமையாகச் சொல்லிவிடக் கூடியது. தமிழ் இலக்கியம், வரலாறு, தத்துவம், பொது அறிவு என்று அனைத்துத் தளங்களிலும் நம் தேடலை ஏமாற்றாத வகையில் பெரும்பான்மைப் பதிப்பகங்களை இங்கே கூட்டி வந்திருக்கிறார்கள். பெருநகரங்களைப் போல அல்லாமல், கொஞ்சம் நிதானமாகவே தேட முடிகிறது!

அடுத்த முறை யோசியுங்கள்!

நெய்வேலி நகரியத்துக்கு அவரவர் சொந்த வாகனங்களில் வெளியூர்களிலிருந்து வரும் வாசகர்கள் புத்தகக் காட்சி இடத்தை அடைய வழியில் தெளிவான வழிகாட்டிகள் இல்லை. ஆங்காங்கே அறிவிப்புப் பலகைகள் வைக்கலாம்.

நெய்வேலி பயணம் என்பது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருபவர்களுக்குப் பல வகைகளிலும் உவகை அளிக்கக் கூடியது. நெய்வேலியை நெருங்கும்போதே தென்பட ஆரம்பிக்கும் சுரங்கம், பார்ப்பவர்கள் கண்களை விரிய வைப்பது. புத்தகக் காட்சிக்கு வருபவர்களுக்கு சுரங்கத்தின் செயல்பாட்டை விளக்கும் வகையில் அமைக்கப்படும் அரங்கை மேலும் விரிவாகவும் நவீனமாகவும் திட்டமிடலாம்.

நெய்வேலி புத்தகக் காட்சிக்கு வருபவர்கள் கூடவே ஒரு சுற்றுவட்டாரத்திலுள்ள முக்கியமான சுற்றுலாத் தலங்களைப் பார்த்துச் செல்லும் வகையில் ஒரு சுற்றுலாத் திட்டத்தை அறிமுகப்படுத்தலாம். நெய்வேலிக்கு மிக அருகில் உள்ள இரு முக்கியமான இடங்கள் 1. வடலூர், 2. கங்கைகொண்டசோழபுரம். இது வட தமிழகத்தைத் தாண்டிய பெரும் வாசகர் கூட்டத்தை மேலும் உள்ளிழுக்கும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x