Last Updated : 01 Jul, 2016 10:12 AM

 

Published : 01 Jul 2016 10:12 AM
Last Updated : 01 Jul 2016 10:12 AM

பூதரமாவும் பொதுப்பணித் துறையும்

வாசனைக்காக முகத்தில் பூசிக்கொள்ளும் பொடியை அறுபது ஆண்டுகளுக்கு முன்பு பூதரமாவு என்பார்கள். தெரியும்படியாக ஒப்பனை செய்துகொள்வதில் அப்போது பெண்களுக்குச் சமமாக ஆண்களுக்கும் இருந்த கூச்சத்தைக் கிழித்துக்கொண்டு இந்த முகப்பூச்சு உள்ளே வந்திருந்தது. அப்போதும் ஒப்பனைக்கான சொற்கள் பாரிஸ் நகரில்தான் உற்பத்தியாயின. ‘பூதர’ என்பது பிரஞ்சு மொழிச் சொல். ‘பவுடர்’ என்ற ஆங்கிலச் சொல் அதற்கு ஈடாகும். வெறுமனே ‘பூதர’ என்றால் ஒருவருக்கும் தெரியாது. ‘மாவு’ என்று மட்டும் சொன்னால் எது என்று புரியாது. இரண்டுமே ஒரே பொருளைத்தான் குறிக்கும். இருந்தாலும் எதிரெதிரே வைத்த கண்ணாடிகளாக இருக்கட்டும் என்று இரண்டையுமே சேர்த்து ஒரே பெயராக வைத்துக்கொண்டார்கள். ‘ஒரு பொருள் பன்மொழி’ என்ற இலக்கணம் நமக்கு நினைவிருந்தால் இதைப் பாமரத்தனம் என்று சொல்லத் தயங்குவோம்.

கலப்புச் சொல்லும் கலப்பு மொழியும்

பாமரர்களின் மொழிபெயர்ப்பு ‘பூதரமாவு’. ‘பொதுப் பணித் துறை’, படித்தவர்களின் மொழிபெயர்ப்பு. பூதரமாவில் இருப்பதுபோல் பொதுப்பணித் துறையில் ஏதும் சிக்கல் இல்லை என்று நினைத்துவிடக் கூடாது. அறுபது ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணித் துறையை மராமத்து இலாகா என்பார்கள். அப்போது அது புரியாமல்கூட இருந்திருக்கலாம். ஆனால், ஐம்பது ஆண்டு காலப் புழக்கத்துக்குப் பின்பும் பொதுப்பணித் துறை பலருக்குப் புரிவதில்லை. பொதுப்பணித் துறை ஒரு மொழிபெயர்ப்பு இரவல். ‘பப்ளிக்’ என்ற சொல்லுக்கு ஈடு ‘பொது’. ‘வொர்க்ஸ்’ என்பதற்கு ஈடு ‘பணி’. இரண்டும் சேர்ந்தால் ‘அரசாங்கம் செய்யும் மராமத்து வேலைகள்’ என்ற பொருள் வர வேண்டும். ஆனால் அதன் ஆங்கிலப் பின்னணியோடு சேர்த்தால் மட்டுமே அந்தப் பொருள் சட்டென்று தோன்றுகிறது. பொருளின், கருத்தின் ஆங்கில வடிவம் அழிவதில்லை. ஆக, எழுத்தையும், ஒலியையும் சொற்களையும் முயன்று வெளியே நிறுத்திவைத்தாலும் ஆங்கிலம் அதன் மற்ற வடிவில் உள்ளே வந்துவிடும். கலப்பு மொழியைத் தமிழ்த்தோல் போர்த்தி மொழிபெயர்ப்பே உள்ளே கொண்டுவருகிறது.

புரிகிறதோ இல்லையோ கலப்புச் சொல் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது மொழிபெயர்ப்பின் ஒரு போக்கு. கலப்புச்சொல் இல்லாத தமிழிலும் வகைகள் உண்டு. இலக்கிய நயத்தின் ஈர்ப்போ, அறிவியலின் பகட்டான நுணுக்கமோ உள்ள வகைகள். இந்த வகைகளில்தான் மொழிபெயர்க்கத் தோன்றுகிறது. இது மொழிபெயர்ப்பின் இன்னொரு போக்கு. ‘ஆட்சிச்சொல்’ என்று அழைப்பவற்றில் இவற்றைப் பார்க்கலாம். அங்கே அலுவலர்களின் சங்கேத மொழி போன்று ஒரு தமிழ் இருக்கும். ஆறுகளின் குறுக்கே உள்ள மதகுகளை ‘சமநிலைப் பொறி’ என்பார்கள். ‘நீரொழுங்கி’ என்றும் சொல்வதுண்டு. ‘ரெகுலேட்டர்’ என்பது அதன் ஆங்கில மூலம். அறிவியல் நுணுக்கத்தின் பகட்டு ஒரு சொல்லில்; மற்றொன்றில் இலக்கியப் பழமையின் ஈர்ப்பு.

பாமரர்களுக்குப் புரியாத மொழியில் நடக்கும் நிர்வாகம் ஜனநாயகப் பண்புக்கு முரணானது. தங்களோடு இருக்கும் மூன்றாவது நபருக்குப் புரியாத மொழியில் இரண்டு பேர் பேசிக்கொள்வது இங்கிதமல்ல என்றால், சார்ந்திருக்கும் சமுதாயத்துக்கே புரியாத மொழியில் அலுவலர்கள் எழுதுவதை எப்படிச் சொல்வது?

அந்திக்கடை ஏன் கசக்கிறது?

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்து மரநிழலில் சிலர் அமர்ந்து பொதுமக்கள் சொல்லச் சொல்ல அதை மனுவாக அவர்களுக்கு எழுதித் தருவார்கள். எழுத்தறியாதவர்களுக்காக என்று இதைச் சுருக்கிவிடாதீர்கள். அந்நியர்கள் காலத்திலிருந்த துபாஷிகள்போல அவர்கள் ஒரு மொழிப் பாலம். அன்றாடத் தமிழில் சொல்வதை ஆட்சித் தமிழுக்கு மாற்றி எழுதுகிறார்கள். மனுதாரர்கள் வீட்டுக் குழந்தைகள் படித்தவர்களாக இருந்தாலும் இதைச் செய்ய முடியாது. நமது ஆட்சியர்களுக்கு எப்போதுமே துபாஷிகள் வேண்டியிருக்கும் வகையில்தான் அவர்களது மொழியும் நமது மொழிபெயர்ப்புகளும் இருக்கின்றன.

சென்னை நகரின் பாய்க்கடைப் பகுதியில் ஈவினிங் பஜார் என்று ஒரு கைகாட்டி இருந்தது. ‘மாலை அங்காடி’ என்று தமிழிலும் எழுதியிருந்தார்கள். நாகப்பட்டினம் கடைத் தெருவில் ‘அந்திக்கடை’ என்று ஒரு பழைய பகுதி. இரண்டையும் ஒரு மொழிபெயர்ப்பாளர் முன் வைத்தால் அவர் ‘மாலை அங்காடி’ தான் தன் வேலைக்குப் பொருத்தம் என்பார். பலசரக்குக் கடை இருக்கும்போது நமக்கு ஏன் ‘பல்பொருள் அங்காடி’ மட்டுமே உவக்கிறது என்பது இப்போது புரியும்.

தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் எதிர்பாராத வகையில் ஒரு நெருக்கம் வந்திருக்கிறது. நாம் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குச் செய்யும் மொழிபெயர்ப்புகளும் இதற்கு ஒரு காரணம். ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குத் தோலுரித்த சுளையாகக் கருத்து மட்டும் வருவதில்லை. கருத்து, அதன் மொழித்தோலோடுதான் வரும். சிந்தனையாளர்கள் தற்போது செந்தமிழிலேயே எழுதினாலும் அந்த எழுத்துக்கு ஆங்கிலத்திலிருந்து செய்த மொழிபெயர்ப்புபோல் ஒரு மொழியமைப்பு. ஆங்கிலத்துக்கு அதை மாற்ற வேண்டுமென்றால் அப்படியே இருந்தது இருந்தவாறே, எளிதாக மாற்றிவிடலாம். அந்த அளவுக்கு ஒரு நெருக்கம்.

இன்றைய தமிழ் உரைநடையைப் பற்றி பேராசிரியர் இ. அண்ணாமலை விரிவாகப் பேசியிருக்கிறார். தன்னை நவீனமாக்கிக்கொண்ட தமிழ்ச் சமுதாயம் நவீன தமிழ் ஒன்றை உருவாக்கியிருக்கிறது. நவீனத்தைச் சிந்திப்பதற்கும், பேசுவதற்கும் அது தேவை. புதிய சொற்கள், முன்பு காணாத வாக்கிய அமைப்பு, புதிய வடிவத்தில் சொல்லாடல், வேறு வேறு மொழிநடை இப்படி மொழியின் எல்லா மட்டங்களிலும் , அதன் கட்டமைப்பிலும்கூட , அண்ணாமலை மாற்றத்தைப் பார்க்கிறார். “கருத்துக்கு அந்தந்த மொழிக்குரிய உருவமுண்டு. ஆங்கிலத்தைப் பார்த்து வார்த்ததுபோல் தமிழிலும் கருத்து அதே உருவத்தை பெற்றுவிடுகிறது” என்பார். இரண்டு மொழிகளிலும் புழங்கும் சிந்தனையாளர்களின் பங்கு இதற்கு ஏராளம். தங்கள் மொழிகள் ஆங்கிலத்தோடு நெருங்கி, நெருங்கி உருவழிந்துபோகின்றன என்று ஐரோப்பியர்கள் வருந்துகிறார்கள். மொழிப் பயிற்சி என்றாலே அது ஆங்கில மொழிப் பயிற்சிதான் என்று இருக்கும் தமிழ்ச் சமுதாயத்தில் இந்த வருத்தம் இருக்காது.

கருத்தின் மொழி வடிவம்

பத்திரிகைகளில், “நாளை மேட்டூர் அணை திறப்பு” என்று எழுதுவார்கள். இதையே காவிரிப் படுகையில் , “என்றைக்குத் தண்ணீர் திறக்கிறார்கள்?” என்றுதான் இன்றைக்கும் கேட்கிறார்கள். சிந்தனையை எப்படிப் பற்றிக்கொண்டு அதை மொழியில் வடிவமைக்கிறோம்? அணை திறந்தால் என்ன வரும் என்பதைப் பற்றிக்கொண்டு தாங்கள் கருதுவதைக் காவிரிப் படுகையில் உருவமைக்கிறார்கள். திறப்பது என்றால் என்ன என்பதிலேயே நின்றுகொண்டு பத்திரிகைகளில் நாம் அதை வடிவமைக்கிறோம். செயலைக் கருத்துக்கு மட்டுமே எட்டுகின்ற பெயர்ச் சொல்லாக மாற்றி அதைப் பற்றிக்கொள்கிறோம். இப்படி, மனம் ஒன்றைப் பற்றும் விதமே ஆங்கில வழிக்குத் திரும்புகிறது. ‘கேட்கிறார்’ என்பதை இருமொழிப் பயிற்சியுள்ளவர்கள், ‘கேள்வியை எழுப்புகிறார்’ என்பார்கள். ‘இதற்கு மெனக்கெட வேண்டும்’ என்று எழுதுவதில்லை; ‘இது அரிய முயற்சியைக் கோருகிறது’ என்றுதானே எழுதுகிறோம்!

மொழிபெயர்ப்புக்கு ஒரு கொள்கை

எல்லாமே பாமரர்களின் பேச்சாக, பேச்சுவழக்காக இருக்க வேண்டும் என்பதல்ல. “நவீனமாகிவரும் தமிழ், கீழ்த்தட்டு மொழியிலிருந்து சொற்களைச் சேர்த்துக்கொள்வதில்லை. ஒருபக்கம் மொழிக் கலப்பைத் தவிர்க்கிறோம். ஆனால், நவீனமாகும் தமிழ் மறுபக்கம் ஆங்கிலத்தோடு நெருக்கத்தை உண்டாக்கிக்கொள்ளும் முரண் வருகிறது” என்கிறார் அண்ணாமலை. தெருப்பக்கமாக வரும் சொற்களை உள்ளே வராமல் நிறுத்திவிடுகிறோம். ஆங்கில இலக்கணமும், அந்த மொழியின் கருத்து வடிவமும் சந்தடியில்லாமல் கொல்லைப்புறமாக உள்ளே வந்துவிடுகின்றன. ஆட்சித் தமிழை வளப்படுத்த மொழிபெயர்ப்பவர்கள் இந்த முரணைக் கவனிக்க வேண்டும். மொழிக் கொள்கையானது எந்தத் தமிழில் மொழிபெயர்ப்பது என்பதையும் முடிவுசெய்யும் அளவுக்கு வளர வேண்டும். பூதரமாவுக்கும் பொதுப்பணித் துறைக்கும் உள்ள தொடர்பு அப்போது நம் கண்ணுக்குத் தென்படும்!

- தங்க. ஜெயராமன், ஆங்கிலப் பேராசிரியர், ஒமர் கய்யாமின் ‘ருபாயியத்’ புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவர், தொடர்புக்கு: profjayaraman@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x