Published : 05 Feb 2017 12:06 PM
Last Updated : 05 Feb 2017 12:06 PM

கசிவது கச்சா எண்ணெய் மட்டுமல்ல... சில உண்மைகளும்தான்!

சென்னை கிழக்குக் கடல்பரப்பு எதிர்கொண்டிருக்கும் ஆபத்துகளின் பட்டியலில் புதிதாக வந்து சேர்ந்திருக்கிறது பெட்ரோலியம் கச்சா எண்ணெய்க் கலப்பு. இதை இரு கப்பல்கள் மோதிய விபத்தாக மட்டும் எடுத்துக்கொள்ள இயலாது. இது பேரிடர். கடல் மற்றும் கடல் சார்ந்த உயிரினங்கள், மனிதர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பேரிடர். ஆனால், இத்தகையை பேரிடரைச் சமாளிக்க மக்களிடம் வெறும் வாளியைக் கையில் கொடுத்து வேடிக்கை பார்க்கிறது தமிழக அரசு.

உடல் முழுவதும் கச்சா எண்ணெயுடன் மாணவர்கள் கடலுக்குள் இறங்கி நிற்கும் காட்சிகள் உலகமெங்கும் உள்ள சுற்றுச்சூழலியலாளர்களை உறைய வைத்திருக்கிறது. ஆபத்து நிறைந்த குரோமியம், பாதரசம், நைட்ரஜன், சல்ஃபர் கலந்த ஆபத்தான ரசாயனங்களை முகத்தில் பூசிக்கொண்டு நிற்கிறார்கள் நம் குழந்தைகள். இதனையும் ‘மெரினா புரட்சி’யுடன் ஒப்பிட்டுப் பெருமிதம் பொங்கப் பார்த்துக்கொண்டிருக்கிறது நம் சமூகம். இது முழுக்க முழுக்க அரசுகளின் கையாலாகத்தனம்.

வாளிகள் மட்டுமே நம்மிடம்

கடந்த வெள்ளிக்கிழமை வரை 170 டன் மணல், தண்ணீர் கலந்த கச்சா எண்ணெய் வெறும் கைகளால் மட்டுமே அகற்றப்பட்டிருக்கிறது. இன்னமும் அள்ள வேண்டியிருக்கிறது. சுமார் 1,000 பேர் பணிபுரிகிறார்கள். கைகளால் அகற்றுவதால் மேலும் சில நாட்கள் ஆகலாம். ஆசியப் பணக்கார நாடுகளின் தர வரிசைப் பட்டியலில் இரண்டாவது இடத்திலிருக்கிறது இந்தியா. செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் வல்லரசுகளை மிரள வைக்கிறது இந்தியா. சென்னையைச் சுற்றியே தேசியக் கடல் ஆராய்ச்சி மையம் உட்பட, மத்திய அரசின் புவி அறிவியல் துறையின் கடல் ஆராய்ச்சி நிறுவனங்கள் இருக்கின்றன. ஆண்டுதோறும் அவற்றுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனாலும், இவ்வளவு பெரிய பேரிடரைச் சமாளிக்க நம்மிடம் வெறும் வாளிகள் மட்டுமே இருக்கின்றன.

கடலில் கொட்டிய கச்சா எண்ணெயை அகற்ற உலகம் முழுவதும் அநேக அறிவியல் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் ஒன்று, கடலில் பாத்திகட்டுவது (Oil booms). விபத்துக்குள்ளான கடலுக்குச் செய்யும் அவசர கால முதலுதவி இது. கடலில் கச்சா எண்ணெய் கொட்டிய உடனேயே ‘பிளாஸ்டிக் ரோப்’ மூலம் கச்சா எண்ணெய் கொட்டிய பகுதியிலிருந்து குறிப்பிட்ட தொலைவு வரை கரை கட்டுவார்கள். கடலில் கொட்டிய எண்ணெயின் அளவைப் பொறுத்து பாத்திகளின் எண்ணிக்கையும் அவற்றின் பரப்பளவும் நிர்ணயிக்கப்படும். இவ்வாறு கட்டப்பட்ட பாத்திகளின் கரையைத் தாண்டி கடல் பரப்பில் கச்சா எண்ணெய் கசியாது. பின்பு, அதன் உட்பகுதியில் இருக்கும் கச்சா எண்ணெயைப் படகுகளின் மூலம் அகற்றிவிடலாம்.

அரசின் தாமதம் இதைத் தவிர்த்து, ‘கடல் பஞ்சு’ போன்ற பிரத்தியேகப் போர்வையைக் கடல் மீது போர்த்துவார்கள் (sornbents). அது கச்சா எண்ணெயை உறிஞ்சிவிடும். கச்சா எண்ணெயை அகற்றுவதற்கு என்றே ‘நானோ மைக்ரோ பாக்டீரியா’க்கள் இருக்கின்றன. நாம் உட்கொள்ளும் தயிரில் இருக்கும் பாக்டீரியா போன்றதே இது. சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காது. ‘பவுடர்’ வடிவத்தில் இருக்கும் இதனைக் கடல் பரப்பில் தெளித்துவிட்டால், முதல் ஏழு நாட்களில் பாக்டீரியாக்கள் உற்பத்தியாகி அவை கச்சா எண்ணெயை உண்ணத் தொடங்கும். அடுத்த ஏழு நாட்களில் பாக்டீரியாக்கள் இறந்து மக்கிவிடும். மக்கிய பாக்டீரியாக்கள் கடல் வாழ் உயிரினங்களுக்கு உணவாகிவிடும். ரஷ்யக் கண்டுபிடிப்பான இது சென்னையிலும்கூட ‘எஸ்பிஇசட்’ (SPZ) என்கிற பெயரில் கிடைக்கிறது. மணலில் கொட்டிய கச்சா எண்ணெயையும் இதே முறையில் அகற்றலாம்.

மேற்கண்ட தொழில்நுட்பங்கள் அனைத்தும் பாதுகாப்பானவை. சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு விளைவிக்காதவை. இவை தவிர, உபகரணங்களை வைத்து சலித்து எடுத்தல், உயர் கொதிநிலையில் நீரை அதிகளவில் மிக வேகமாகப் பீய்ச்சி அடிப்பது, கடலுக்குத் தீ வைப்பது ஆகிய தொழில்நுட்பங்களும் இருக்கின்றன. இவற்றில் சுற்றுச்சூழல் கேடு, மனிதருக்குப் பாதிப்பு ஆகிய பக்க விளைவுகள் இருக்கின்றன. இதில் சில தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினோம் என்கிறது அரசுத் தரப்பு. எண்ணெய் கசிந்த சில மணி நேரங்களிலேயே செய்ய வேண்டிய பாத்தி கட்டுதல் முறையை மூன்று நாட்கள் கழித்து மேற்கொண்டது அரசு. அதற்குள் ஆழமான பகுதியிலிருந்து கரையை நோக்கி வந்துவிட்டது கச்சா எண்ணெய். ஆழம் குறைவு என்பதால், பாத்தி கட்டும் தொழில்நுட்பம் தோல்வியடைந்தது.

நீளும் பாதிப்புகள்

கச்சா எண்ணெய் கொட்டிய ஐந்து நாட்களுக்குப் பிறகே பாக்டீரியா தொழில்நுட்பத்தையும் அரைகுறையாகக் கையில் எடுத்திருக்கிறது கடலோரக் காவல் படை. அதனால், வாளிதான் ஒரே தீர்வு என்பதுபோல வாளியில் அள்ளிக்கொண்டிருக்கிறார்கள். சரி, அள்ளுவதுதான் அள்ளுகிறார்கள், இயந்திர வாளி தொழில் நுட்பத்தையாவது பயன்படுத்தலாம் இல்லையா. மனிதர்களை ஏன் வதைக்க வேண்டும்?

கச்சா எண்ணெயை அகற்றிவிட்டாலும் இதன் பாதிப்புகள் அகல நான்கு பருவ மழைக் காலம் பிடிக்கும் என்கிறார்கள் சுற்றுச்சூழலியாளர்கள். அதாவது, இரண்டு ஆண்டுகள். ஏற்கெனவே பழவேற்காடு தொடங்கி சென்னை மெரினா வரையிலும் நூற்றுக்கணக்கான ரசாயன ஆலைகளின் கழிவுகள் கடலில் கலந்துகொண்டிருக்கின்றன. சர்வதேச முக்கியத்துவம் பெற்ற மற்றும் கடற்கரை ஒழுங்கு அறிவிக்கை 1991-ன் பிரிவு 1-ன் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள எண்ணூர் முகத்துவாரத்தில் அனல் மின் நிலைய சாம்பல் கலப்பதால் மீன் வளம் குறைந்துவிட்டது. நெகமம், மீஞ்சூரில் கடல் நீரைச் சுத்திகரிப்பதால் பாலி அசரிலிக் அமிலம், நீர்த்த ஆல்கலைன் அமிலம், சோடியம் சல்பைடு ஆகியவை டன் கணக்கில் கடலில் கொட்டப்படுகிறது. கல்பாக்கத்தின் அணு மின் நிலையக் கழிவுகளும் கடலில்தான் அடைக்கலமாகின்றன. இவை தவிர, மொத்த நகரக் கழிவுகளும் கடலுக்கே அனுப்பப்படுகின்றன. இவ்வளவு இடர்ப்பாடுகளிடையேதான் பாடுவழித்துக்கொண்டிருக்கிறார்கள் மீனவர்கள்.

கடல் பூமியின் குப்பைத்தொட்டியா?

இது வடமேற்குப் பருவ மழைக் காலம். மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வங்கம், ஒடிசா, ஆந்திரம், சென்னை, இலங்கை வழியாக இந்தியப் பெருங்கடலுக்கு வலசை நகரும் காலகட்டம் இது. தற்போதைய கச்சா எண்ணெய் கலப்பால் வலசை வரும் மீன்களும் சென்னை கிழக்குக் கடலுக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை என்கிறார்கள் கடல் ஆராய்ச்சியாளர்கள். ஏற்கெனவே, நவம்பர் மாதத்திலிருந்து மெக்ஸிகோ, ஆஸ்திரேலியா, ஜப்பான், சீனா, பெரு ஆகிய நாடுகளிலிருந்து இனப்பெருக்கத்துக்காக சென்னை கிழக்குக் கடற்கரைக்கு வந்து சேர்ந்த ‘பங்குனி’ (Olive ridley) ஆமைகளும் பச்சை ஆமைகளும் இறந்து மிதக்கின்றன. கடலிலிருந்து நமக்கான ஆக்ஸிஜனை உருவாக்கி கரைக்கு அனுப்பும் சிப்பிக்களும் கடல் தாவரங்களும் உருக்குலைந்து கரை ஒதுங்குகின்றன.

இப்படியாக, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மீட்பு நடவடிக்கைகள் மட்டுமே தாமதம் அல்ல. விபத்து நடந்த பின்பு ஆறு நாட்கள் கழித்தே கப்பல்கள் மீது புகார் அளித்திருக்கிறது துறைமுக நிர்வாகம். வெள்ளிக்கிழமைதான் இரண்டு கப்பல்களின் மாலுமிகள் மீது மீஞ்சூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ‘பழைய கப்பலுக்குக் காப்பீடு பெறுவதற்கு இதுபோன்ற விபத்துகள் வேண்டுமென்றே நடத்தப்படும்’ என்றும்கூடச் சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன. கப்பலின் தாங்கு திறனை மீறி அதிக எடை ஏற்றுவதை முறைப்படுத்தும் ‘பிலிம்சோல் கோடு’ (Plimsoll mark) விதிமுறைகளை சரியாகப் பின்பற்றாமல் அதிக எடை ஏற்றினாலும், இதுபோன்ற விபத்துகள் நேரிடலாம். ‘விபத்து மனிதத் தவறு அல்ல; கடல் நீரோட்டத்தால் ஏற்பட்டது’ என்ற வாதத்தையும் கப்பல் நிறுவனங்கள் வைக்கக்கூடும். ஆனால், வடக்கே பர்மாவிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் ‘வன்னி’ நீரோட் டத்திலிருந்து சுமார் 15 கி.மீட்டர் தள்ளிதான் கப்பல் நின்றது என்பதை யும் கணக்கில்கொள்ள வேண்டும். இவற்றை எல்லாம் நமது காவல் துறை எப்படி கையாளப்போகிறது என்பதுதான் கேள்வி.

இறுதியாக ஒன்று, பூமியின் முக்கால் பாகத்தைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது கடல். அது ஒன்றும் பூமியின் குப்பைத் தொட்டி அல்ல. மேலும் மேலும் குப்பைகளைக் கொட்டினால் மீதமுள்ள பூமியையும் எடுத்துக்கொள்ளத் தயங்காது கடல். இது அறிவியல் உண்மை மட்டுமல்ல... வரலாறு சொல்லும் உண்மையும்கூட!

- டி.எல்.சஞ்சீவிகுமார், தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x