Last Updated : 29 Aug, 2016 08:47 AM

 

Published : 29 Aug 2016 08:47 AM
Last Updated : 29 Aug 2016 08:47 AM

அண்டை வீட்டுக்காரருக்கு உங்கள் பெயர் தெரியுமா?

அமெரிக்காவில் 18-ம் நூற்றாண்டில், காலனியச் சமூகமும் செவ்விந்தியர்களைக் கொண்ட பூர்வகுடி அமெரிக்கச் சமூகமும் அருகருகே வசித்தன. வணிகரீதியாக வளர்ந்துகொண்டிருந்தது காலனியச் சமூகம். செவ்விந்தியர்களோ கூட்டமாக வாழ்ந்த பழங்குடிகள். காலப்போக்கில் ஒரு விஷயத்தைக் கவனிக்கத் தொடங்கினார்கள் ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தவர்கள். செவ்விந்தியர்கள் யாரும் தங்கள் சமூகத்தைவிட்டு விலகி, காலனியச் சமூகத்துடன் இணைந்துகொள்ளவில்லை. ஆனால், வெள்ளையர்கள் பலர் செவ்விந்தியர்களுடன் கலந்து வசிக்கத் தொடங்கினார்கள்.

பலருக்கு இது ஆச்சரியமாக இருந்தது. காலனியச் சமூகம் செழிப்பான, முன்னேறிய சமூகம். ஆனாலும், அதிலிருந்து மக்கள் வெளியேறுவதில் விருப்பம் கொண்டிருந்தனர்.

ஈர்க்கும் வாழ்க்கை முறை

வெள்ளையர்கள் சில சமயம் செவ்விந்தியக் குழந்தை களைத் தங்களுடன் வசிக்க வருமாறு அழைத்தனர். எனினும், அவர்களைத் தங்களுடன் தங்க வைத்துக் கொள்ள முடியவில்லை. அமெரிக்காவின் நிறுவனத் தந்தைகளில் ஒருவரான பெஞ்சமின் பிராங்க்ளின் இந்த விஷயத்தை அவதானித்திருக்கிறார். “நம்முடன் ஒரு செவ்விந்தியக் குழந்தையை வளர்த்து, அவனுக்கு நம்முடைய மொழியையும் பழக்கவழக்கத்தையும் கற்றுக்கொடுக்கிறோம். ஒருவேளை தனது உறவினர்களைச் சந்திக்க அவன் செல்கிறான் என்று வைத்துக்கொள்வோம். செவ்விந்தியருடன் சேர்ந்து அவன் வெளியில் சுற்றக் கிளம்பிவிட்டால், அவனை நம்மிடம் திரும்பிவரச் செய்ய முடியவே முடியாது” என்று 1753-ல் அவர் எழுதியிருக்கிறார்.

செவ்விந்தியர்களுடனான போர்களின்போது, ஐரோப்பியக் குடியேறிகள் பலர் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். சில காலத்துக்குப் பின்னர், தப்பிச் செல்வதற்கு எத்தனையோ வாய்ப்புகள் இருந்தும் அவர்கள் திரும்பிச் செல்லவேயில்லை. சொல்லப்போனால், தங்களை மீட்க வந்த சக வெள்ளையர்களிடமிருந்து தப்பிச்சென்று ஒளிந்துகொண்டனர்.

ஒரு முறை, ஷாவானீஸ் செவ்விந்தியர்கள் தங்களுடன் வசித்த ஐரோப்பியப் பெண்களைத் திருப்பி அனுப்புவதற்காக அவர்களைக் கட்டிப்போட வேண்டியிருந்தது. ஆனால், அவர்கள் திரும்பிச் சென்ற பின்னர், காலனிய நகரங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த அந்தப் பெண்கள், அங்கிருந்து தப்பி செவ்விந்தியர்களிடமே வந்துசேர்ந்தனர்.

1782 வரைகூட இவ்விஷயம் மேலும் வலுவடைந்து கொண்டே வந்தது. “ஆயிரக்கணக்கான ஐரோப்பியர்கள் இப்போது செவ்விந்தியர்களாகிவிட்டனர். ஆனால், செவ்விந்தியர்களில் ஒருவருக்குக்கூட ஐரோப்பியராகும் விருப்பம் இல்லை” என்று எழுத்தாளர் ஹெக்டர் டி க்ரெவ்கூர் எழுதியிருக்கிறார்.

கூட்டு வாழ்வு

பல மாதங்களுக்கு முன்னர் இந்த வரலாற்றை, செபாஸ்டியன் ஜங்கர் எழுதிய ‘ட்ரைப்’ எனும் அற்புதமான புத்தகத்தில் முதன்முறையாகப் படித்தேன். அன்று முதல் என்னை ஆட்கொண்டுவிட்டது அந்த வரலாறு. மக்களை மகிழ்ச்சியாகவும், மனநிறைவுடனும் வைத்துக்கொள்ளும் விஷயத்தைப் பொறுத்தவரை, ஏதோ கோளாறின் அடிப்படையிலேயே நமது கலாச்சாரம் கட்டமைக்கப் பட்டிருக்கிறது என்பதற்கான சாத்தியங்களை அதிகரிக்கிறது இது.

பூர்வகுடிகளின் கலாச்சாரம் பெரும்பாலும் கூடிவாழும் கலாச்சாரமாகவே இருந்தது. “செவ்விந்தியர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமான உறவு கொண்டிருந்தார் கள். குழந்தைகள் பராமரிப்பில் ஈடுபட்டார்கள். ஒவ்வொரு விஷயத்தையும் பெரும்பாலும் மற்றவர்களுடன் இணைந்தே செய்தார்கள். ஒருபோதும் தனித்தே இருக்க மாட்டார்கள்” என்று ஜங்கர் எழுதியிருக்கிறார்.

காலனியக் கலாச்சாரமும் அதேபோல் இருந்திருந்தால், இன்றைக்கு அமெரிக்கக் கலாச்சாரம் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். இன்றைக்கு நாம் வளமடைந்திருக்கிறோம். நமது செல்வத்தைப் பயன்படுத்தி, பெரிய பெரிய வீடுகள், பிரத்யேகமான படுக்கையறைகள், சொந்த கார்கள் என்று வாங்கிப்போடுகிறோம். ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பமும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், சில சமயம் அதன் விளைவு மோசமாக இருப்பதாகவே தோன்றுகிறது. வளமான நாடுகளின் மக்கள், ஏழை நாடுகளைச் சேர்ந்த மக்களைவிட எட்டு மடங்கு அதிகமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

செல்வ வளம் பற்றிய தவறான புரிதலே நிலவுகிறது எனலாம். தனிப்பட்ட வாழ்வில் அந்தரங்கம் வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். ஆனால், இது வாழ்க்கையை மோசமானதாகவே ஆக்குகிறது.

சுதந்திர வாழ்வையும் சமுதாயத்தையும் எப்படிச் சமன்செய்துகொள்வது எனும் சவாலை ஒவ்வொரு தலைமுறையும் எதிர்கொள்கிறது. எனினும், 2000-களில் வாழும் தலைமுறை எதிர்கொள்வதுபோன்ற சவாலை எந்தத் தலைமுறையும் எதிர்கொண்டிருக்காது என்று உறுதியாகச் சொல்கிறேன்.

அமெரிக்கப் பாரம்பரியத்தில் 2000-களின் தலைமுறையினர், ஒரே சமயத்தில் இரண்டு விஷயங்களையும் சமாளிக்க முடியாதவர்களாகவே இருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர், ‘கான்ட் ஹோல்ட் அஸ்’ எனும் பாடலை ஹிப்-ஹாப் இசைக் கலைஞர்கள் மேக்கல்மோர் மற்றும் ரயான் லூயிஸ் இருவரும் வெளியிட்டிருக்கிறார்கள். அதில் வரும் வரிகள் இவை: “யாரும் கவனிக்காத வாழ்க்கை வாழவே இங்கு வந்தோம் / என் பின்னே என் நகரம் இருக்கிறது / நான் வீழ்ந்தால் அது என்னைத் தாங்கிக்கொள்ளும்”. பாடலின் முதல் வரியில், அவர்கள் முழுமையான சுதந்திர உணர்வை விரும்புகிறார்கள். இரண்டாவது வரியில், முழுமையான கூட்டுவாழ்க்கைக்கான அவர்களது விருப்பம் வெளிப்படுகிறது.

அதேசமயம், சுதந்திர வாழ்வு, கூட்டு வாழ்க்கை என்று இரண்டையுமே அதனதன் தூய்மையான வடிவங் களாக எடுத்துக்கொள்ள முடியாது. இப்போது புதிய தலை முறையினர், எதை நோக்கிப் பயணித்தாலும், அது கூட்டுவாழ்வை நோக்கியதாகவே இருக்கிறது. அரசியல் ரீதியாக, ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக இருந்த பெர்னீ சாண்டர்ஸுக்கு இந்தத் தலைமுறையினரின் ஆதரவு அமோகமாக இருந்தது. வெளிப்படையான நடவடிக்கைகள் இல்லாதவராகவும், சுதந்திர வாழ்வு முறை யின் ஆதரவாளராகவும் இருக்கும் ஹிலாரி கிளிண்டனுக்கு இளம் தலைமுறையினரிடம் வரவேற்பு இல்லை.

மாற்றத்துக்கான தருணம்

தொழில்சார் விஷயங்கள் என்று வரும்போது, வேலையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதில் பெயர் பெற்றவர்கள் புதிய தலைமுறையினர். நட்புறவுகள், சமுதாய நிகழ்வுகள் போன்றவற்றின் மையமாகத் தங்கள் அலுவலகத்தை மாற்றிக் கொள்கிறார்கள்.

ஜான் மெக்நைட்டும், பீட்டர் பிளாக்கும் இணைந்து எழுதிய ‘தி அபண்டன்ட் கம்யூனிட்டி’ எனும் நூலில் வெளிப் படும் மனப்பான்மையே நான் சந்திக்கும் புதிய தலை முறையினரிடம் தெரிகிறது. நுகர்வுமயத்துக்கு எதிரான கருத்து கொண்டவர்கள் இந்த இரு எழுத்தாளர்களும்.

நிறுவன மயத்தையும், அமைப்புகளையும் இவர்கள் எதிர்க்கிறார்கள். “நமது நிறுவனங்களால் சேவையைத்தான் வழங்க முடியும். அக்கறை காட்ட முடியாது. அக்கறை என்பது, ஒருவர் தனது மனதிலிருந்து மற்றவருக்கு அள்ளித் தருவது” என்கிறார்கள் இவர்கள்.

இந்தத் தலைமுறையினர், தேசிய அடையாளங்கள், எல்லையற்ற டிஜிட்டல் உலகத்தை விடவும், தங்கள் அருகமைச் சமூகம் மீது தற்போது கவனம் செலுத்துகிறார்கள். நாம் வாழும் பகுதியில்தானே தூங்குவதற்கும், வாழ்வதற்குமான நமது வசிப்பிடம் இருக்கிறது. உங்களது அண்டை வீட்டுக்காரர்களில் எத்தனை பேருக்கு உங்கள் பெயர் தெரியும்?

மிகப் பெரும் மாற்றத்தின் விளிம்பில் நாம் நிற்கிறோம் என்று தோன்றுகிறது. சுதந்திர வாழ்வு வாழ்ந்து கொண்டே மறுபுறம் சமுதாயம் பற்றி உதட்டளவில் பேசிக் கொண்டிருப்பதைவிட, தற்போதைய சூழலை உடைத்துக் கொண்டு அண்டைச் சமூகத்தின் செயல்பாடுகளில் தங்களை இணைத்துக்கொள்ளப் பலர் விரும்புகிறார்கள் என்றே நான் உணர்கிறேன். பலர் தங்கள் சுதந்திர வாழ்வு முறையை முடிவுக்குக் கொண்டுவரலாம். செவ்விந்திய வாழ்வு முறைக்கு நிகராகத் தங்கள் நவீன வாழ்க்கையைப் பலர் அமைத்துக்கொள்ளலாம். வரும் சில தசாப்தங்களில் இப்படியான மாற்றம் நிகழ்ந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்!

© ‘தி நியூயார்க் டைம்ஸ்’

தமிழில்: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x