Published : 05 Aug 2016 11:42 AM
Last Updated : 05 Aug 2016 11:42 AM

எட்டுத் திக்கும்: தேசியத் துயரமும் மனசாட்சியின் குரலும்

தேசியத் துயரம்

கனடாவின் பூர்வகுடிப் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறது அந்நாட்டு அரசு. 1980 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் 1,181 பூர்வகுடிப் பெண்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 4,000-க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல்போயிருக்கிறார்கள். கனடாவின் ‘தேசியத் துயரம்’ என்றே குறிப்பிடப்படும் இந்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணை, வரும் செப்டம்பரில் தொடங்கி, 2018 இறுதியில் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மனசாட்சியின் குரல்

நியூசிலாந்தின் மவோரி பழங்குடியினத் தலைவரான டேம் இடியை, பயங்கரவாதி என்று முத்திரை குத்தி 2007-ல் கைதுசெய்தது அரசு. இது தவறான நடவடிக்கை என்று உணர்ந்த பெண் இயக்குநர் கிம் வெபி, டேம் இடியைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து ‘விட்னஸ் - என் இன்னொசெண்ட் வாரியர் அன்’ எனும் பெயரில் ஆவணப்படம் எடுக்கத் தொடங்கினார். பழங்குடியினருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் பதிவுசெய்தார். டேம் குற்றமற்றவர் என்று உணர்ந்த அரசு, 2013-ல் விடுதலை செய்தது. பழங்குடியினர் மீதான அடக்குமுறைக்கும் மன்னிப்பு கேட்டிருக்கிறது. தற்போது வெளியாகியிருக்கும் ஆவணப்படம், நியூசிலாந்துக்காரர்களின் மனசாட்சியை உலுக்கிவருகிறது.

ஆட்டோ ஓட்டும் ஒலிம்பிக் வீரர்

பாகிஸ்தானைச் சேர்ந்த ஒலிம்பிக் வீரர் முகம்மது ஆஷிக் தனது 81 வயதிலும் ஆட்டோ ஓட்டிப் பிழைப்பு நடத்துகிறார். இந்தச் செய்தி பத்திரிகைகளில் வெளிவர, “அவர் செத்துப்போய்விட்டார் என்றல்லவா நினைத்திருந்தோம்?” என்று ஆதங்கப்பட்டிருக்கிறார்கள் மக்கள். “1960 ரோம், 1964 டோக்கியோ ஒலிம்பிக்கில் சைக்கிள் போட்டியில் பங்கேற்றிருக்கிறேன். பிரதமர், ஜனாதிபதியுடன் கைகுலுக்கிய புகைப்படங்கள் பத்திரிகைகளில் வந்தன. எப்படி மக்கள் என்னை மறந்தார்கள் என்றே தெரியவில்லை” என்று பதிலுக்கு ஆஷிக்கும் ஆச்சரியப்பட்டிருக்கிறார்.

பரஸ்பரப் பிராயச்சித்தம்

அமெரிக்காவும் கியூபாவும் தங்கள் நீண்டகாலப் பகையை மறந்து கடந்த ஆண்டுதான் கைகுலுக்கிக்கொண்டன. தற்போது இருநாடுகளாலும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களைத் திரும்ப ஒப்படைப்பது, தங்கள் நடவடிக்கைகளுக்குப் பிராயச்சித்தமாக நஷ்டஈடு வழங்குவது போன்றவை குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன. இதுதொடர்பான புகார்களையும் ஆவணங்களையும் இருநாட்டு அரசுகளும் பரிமாறிக்கொள்கின்றன. இது கியூபாவின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் என்கிறார்கள் அமெரிக்கர்கள்.

வழக்குக்குத் தண்டனை

சீனாவில் அரசுக்கு எதிராகச் செயல்படுபவர்களுக்குச் சட்ட உதவி செய்துவந்த வழக்கறிஞர் ஜோ சிப்பெங்குக்கு அந்நாட்டு நீதிமன்றம் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்திருக்கிறது. சீனாவில் அரசுக்கு எதிராகப் பேசுவதும், செயல்படுவதும் கடுங்குற்றம். தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று அந்த வழக்கறிஞர் நீதிமன்றத்திலேயே அறிவித்துவிட்டார். நியாயம் கிடைக்க வாய்ப்பேயில்லை என்று உணர்ந்திருப்பார்போல!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x