Published : 13 Jun 2016 09:20 AM
Last Updated : 13 Jun 2016 09:20 AM

நெஞ்சில் மூண்டெழுந்த தீ

வாழ்க்கையை மாற்றிய வாசிப்பு: பா.ஜீவசுந்தரி- எழுத்தாளர்

புத்தக வாசிப்பு எனும் வசீகர உலகத்தில் வாழ்ந்துகொண்டிருந்தவளைத் திடீரென்று அதிலிருந்து பிரித்தெடுத்து வெளியில் போட்டால் மனம் எப்படித் துடிக்கும்? என் வாழ்நாளில் சில ஆண்டுகள் அந்த வலியை அனுபவித்திருக்கிறேன். பெண் என்பதாலேயே புத்தகங்களைத் தொட எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தடைகளைத் தாண்டி மீண்டும் புத்தக உலகை அடைந்தபோது உணர்ந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.

இத்தனைக்கும் சிறு வயதிலிருந்தே வாசிப்பு எனக்குப் பழக்கமாகியிருந்தது. அப்பாவின் கண்ணாடி பீரோ மீது எனக்கு எப்போதும் ஒரு கண் உண்டு. அப்பா வாசிக்கும் கனமான புத்தகங்கள் அங்குதான் வைக்கப்பட்டிருந்தன. சிறுவர்களுக்கான புத்தகங்கள் எனக்கென வாங்கித் தரப்பட்டாலும், கண்ணாடி பீரோவில் உள்ள புத்தகங்களைத் தொட்டுப்பார்க்கும் நாளுக்காகக் காத்திருந்தேன்.

காலையில் அப்பாவுக்காக நாளிதழ்கள் வாங்கிவருவது தினசரி என் வேலை. ஒரு வழியாக அப்பாவின் கண்ணாடி பீரோவில் இருக்கும் புத்தகங்களையும் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பெரும்பாலும் மொழிபெயர்ப்புப் புத்தகங்கள். நாவல்களின் புரியாத பகுதிகளை அப்பா விளக்கிச் சொல்வார். தொடர்ந்து ரஷ்ய நாவல்களும் சிறுகதைகளும் என்னை வேறு உலகத்துக்கு அழைத்துச் சென்றன.

தொடர்ந்து இந்திய மொழிபெயர்ப்புகளில் கவனம் குவிந்தது. கேசவதேவ், தகழி, பஷீர், பிரேம்சந்த் என ஒவ்வொருவராக எனக்குள் குடிபுகுந்தனர்.

இளமையில் வறுமையைப் போலக் கொடியது நோய்த் தாக்குதல். அதை அனுபவித்தவள் நான். நோயால் பல ஆண்டுகளுக்கு வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தேன். அக்காலம் முழுவதும் என்னைக் காப்பாற்றியது சாகித்ய அகாடமி, என்.பி.டி. மொழிபெயர்ப்பு நூல்களே. பிறகு, அப்பாவின் அலமாரியை நானே குடைய ஆரம்பித்தேன். புதையல் போலப் புத்தகங்கள் அப்பாவின் கண்ணாடி அலமாரியில் இருந்து வந்துகொண்டே இருந்தன. புதுமைப்பித்தனும்

எம்.வி.வெங்கட்ராமும் சி.சு.செல்லப்பாவும், ஜீவானந்தமும் ஜெயகாந்தனும் அப்படித்தான் அறிமுகம் ஆனார்கள்.

இதே நான் வீட்டுச் சூழலில் இருந்து பிய்த்தெடுத்து கிராமத்தில் வாழ நேர்ந்த சூழலில் எதிர்கொண்ட அனுபவம் நேர்மாறானது. மக்கள் வாசிப்பையும் நூல்களையும் எப்படி வெறுக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொண்டேன். அதிலும் பெண் குழந்தை என்றால், புத்தகங்களைத் தொடக்கூட அனுமதிக்க மாட்டார்கள். இரண்டு ஆண்டுகள் எனது சொந்த கிராமத்தில் வாழ நேர்ந்தபோது இதை நன்றாகவே உணர்ந்தேன்.

அங்கு கொஞ்சம் வாசிப்புப் பழக்கம் கொண்டவர் என் மாமா. அவர் நூலகத்திலிருந்து கொண்டு வந்து தரும் நூல்களைப் படிப்பதற்கு பட்ட பாடுகள் சொல்லி மாளாதவை. வீட்டு வேலைகள் தவிர்த்து, வேறு எதையும் யோசிக்க அனுமதியில்லாத சூழல். வேலைகளை முடித்துவிட்டு வந்து பார்த்தால் புத்தகங்கள் வைத்த இடத்தில் இருக்காது.

எங்காவது ஒளித்து வைக்கப்பட்டோ, கிழித்தெறியப்பட்டோ இருக்கும். அப்படிப் பாதி படித்துக் கிழித்தெறியப்பட்ட நூல் எம்.வி.வெங்கட்ராமின் ‘வேள்வித்தீ’. அந்தத் தீ என் நெஞ்சிலும் மூண்டெழுந்து எரிந்தது. அந்த நேரத்தில் ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாடாகச் சமைத்து வைத்திருந்த சோற்றுப் பானையைத் தட்டிவிட்டதில், மனம் பெரும் ஆறுதல் கொண்டது. மீண்டும் பத்தாண்டுகளுக்குப் பின்னரே, அந்த நாவலின் மீதியை வாசிக்க வாய்த்தது.

மெதுமெதுவாக வெகுஜன இதழ்களின் படைப்புகள் என்னை ஆட்கொள்ள ஆரம்பித்தன. ‘குறிஞ்சிமலர்’ நாயகி பூரணியாகவே என்னைக் கற்பனை செய்து கொண்ட காலங்களும் உண்டு. நா.பார்த்தசாரதி, ஜெகசிற்பியன், கல்கி, சாண்டில்யன் என சரித்திர உலா போகத் துவங்கினேன். இந்துமதி, சிவசங்கரி, டபிள்யூ. ஆர்.ஸ்வர்ணலதா அனைவரும் என் மனவெளியில் உலவினார்கள்.

விந்தனின் ‘பாலும் பாவையும்’ புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’ என வாசிப்பு உலகம் சுத்தக் காற்றை சுவாசிக்க வைத்தது. அத்துடன் லஷ்மி, கிருஷ்ணா, அநுத்தமா, கோமகள், சி.என்.அண்ணாதுரை, வாசவன், மாயாவி என்று வேறு ஒரு கலவையான வழியையும் காட்டியது. ‘கல்பனா’ மாத நாவல்கள் இன்னும் என்னை மெருகேற்றின. இவர்களுடன் சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், அம்பை என்று வந்து இணைந்து மேலும் என் வாசிப்பு வெளியை விரிவுபடுத்தினர். தொடர்ந்து நவீன இலக்கியங்கள் அறிமுகமாயின.

நூலகங்களுக்குச் சென்று புத்தகங்கள் எடுத்து வாசித்த காலம் போய், நானே நண்பர்களுடன் இணைந்து ‘பாரதி நூலகம்’ என்று ஒரு நூலகம் நடத்தினேன். நடைமுறைச் சிக்கல்களால் அதைத் தொடர்ந்து நடத்த இயலாமல் போனது. இலக்கியம் தவிர்த்துப் பலவிதமான வாசிப்பு எனக்கு குழந்தைப் பருவம் முதலே சாத்தியமானது.

இன்று புத்தகங்கள் எழுதுவதற்கான அடிப்படைத் தகவல்களையும் அது தந்து கொண்டிருக்கிறது. மேலும் மேலும் தேடுதலைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது. இன்றைக்கு ஒரு எழுத்தாளராகநான் உருப்பெற்றிருப்பதற்கு, தடைகளைத் தாண்டிச் செல்லத் துடித்த மனமும், புத்தகத்தின் மீதான அளவற்ற காதலும்தான் காரணம்.

தொடர்புக்கு: asixjeeko@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x