Last Updated : 27 Jun, 2017 09:20 AM

 

Published : 27 Jun 2017 09:20 AM
Last Updated : 27 Jun 2017 09:20 AM

ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் தொழில்நுட்பம்!

கொல்கத்தாவைச் சேர்ந்த 12 வயது ஜோதிகா மித்ராவுக்கு, எதிர்காலத்தில் மருத்துவராக வேண்டும் என்பது கனவு. அவளது குடும்பத்தில் முதல் தலைமுறையாகக் கல்வி பயிலும் நபர் அவள்தான். அப்பா கிடையாது. தன் மகளுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக, அவளது அம்மா மேற்கு வங்கத்தின் தொலைதூரக் கிராமம் ஒன்றிலிருந்து கொல்கத்தா வந்தவர். செவிலியர் உதவியாளராகப் பணியாற்றுபவர்.

“நான் வாழ்ந்த கிராமத்தில், ஏழை நோயாளிகளை மருத்துவர்கள் சரியாகக் கவனித்துக்கொள்ளவில்லை என்பதைப் பார்த்த பின்னர், மருத்துவராக வேண்டும் என்று முடிவுசெய்தேன்” என்கிறார் அவர். எனினும், ஆங்கிலம் பேசுவதிலும் எழுதுவதிலும் திறன் இல்லாத காரணத்தால் அவரால் மருத்துவம் படிக்க முடியாது என்றே அவருக்குச் சொல்லப்பட்டது.

தற்போது, ஜோதிகாவின் அம்மாவைப் போல், தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் சேர்த்துப் படிக்க வைக்க வசதியில்லாத பெற்றோர்களுக்குக் கைகொடுத்திருக்கிறது தொழில்நுட்பம். ‘இங்கிலீஷ்ஹெல்பர் அண்ட் ஐ.எல். எஃப்.எஸ். எஜுகேஷன்’ எனும் அமைப்பு தொடங்கிவைத்த ‘தி ரைட் டு ரீட்’ எனும் திட்டத்தின் மூலம் அது சாத்தியமாகியிருக்கிறது. அமெரிக்கா இந்தியா ஃபவுண்டேஷனும், அமெரிக்க அரசின் யூ.எஸ்.எய்டு எனும் நிறுவனமும் இத்திட்டத்துக் துணைநிற்கின்றன. ‘தி ரைட் டு ரீட்’ திட்டம் தற்போது 5,000 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் குழந்தைகள் இதனால் பயனடைகிறார்கள்.

வழக்கமான பாடப் புத்தகங்களுக்குப் பதிலாக, மேம்படுத்தப்பட்ட மென்பொருள் ஒன்றைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கிறார்கள். புரொஜெக்டர் மூலம் ஒரு திரையில் ஆங்கில வாசகங்கள் காண்பிக்கப்படுகின்றன. மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் இந்திய உச்சரிப்பிலேயே ஆங்கில வார்த்தைகள் வாசித்துக்காட்டப்படுகின்றன. பின்னர், ஒலியை முற்றிலும் குறைக்கும் ஆசிரியர், ஒவ்வொரு மாணவரையும் அந்த வார்த்தைகளைச் சத்தமாக வாசிக்கச் சொல்கிறார். கடினமான வார்த்தைகள் வந்தால், ‘பிக் ஷனரி’ மூலம் அந்த வார்த்தை களின் அர்த்தம் சொல்லித்தரப் படுகிறது. ஆங்கில வார்த்தைகள் பல முறை சத்தமாக வாசிக்கப்பட்டு, அவற்றின் சரியான உச்சரிப்பும், எழுத்துகளும் மாணவர் களுக்குச் சொல்லித்தரப்படுகின்றன. மாணவரின் தாய்மொழியில் வார்த்தைகளின் அர்த்தத்தையும் அந்த மென்பொருள் சொல்லித்தருகிறது. “என்னால் இப்போது முன்பைவிட சிறப்பாகப் படிக்க முடியும். எனது உச்சரிப்பும் மேம்பட்டிருக்கிறது” என்கிறாள் ஜோதிகா. தன்னால் தகவல் தொழில்நுட்பத் துறையில் சேர்ந்து பணிபுரியும் வகையில் நன்றாகத் திறன் பெற்றிருப்பதாக நம்பிக்கை தெரிவிக்கிறாள் ஜோதிகாவின் வகுப்புத் தோழி சோனாலி. இருவரும் கொல்கத்தாவின் ‘இந்திராணி மெமோரியல்’ மகளிர் உயர் நிலைப் பள்ளியில் படிக்கிறார்கள்.

கீழ் நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கும் கங்குர்கச்சி பகுதியில் இயங்கிவரும் அந்தப் பள்ளியில் கார் ஓட்டுநர்கள், வீட்டுப் பணியாளர்கள், ரிக் ஷா தொழிலாளர்கள், தினக் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்கிறார்கள். “பள்ளி ஆங்கில வகுப்புகளை எதிர்கொள்ள மாணவிகள் ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களது தன்னம்பிக்கை அதிகரித்திருக்கிறது” என்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியை அர்பிதா மொண்டல்.

அரசுப் பள்ளிகளில் ஆங்கில மொழித் திறன் குறைவு என்பதால், அந்தப் பள்ளிகளில்தான் இந்தத் திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்கிறார் ‘இங்கிலீஷ் ஹெல்பர்’அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி, சஞ்சய் குப்தா. பள்ளியின் பாடத்திட்டத்துக்குத் தொடர்புள்ள வகையிலேயே இந்த ஆங்கில வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

பாடங்களை நடத்துவதும் அந்தந்தப் பள்ளி ஆசிரியர்கள்தான். அதுதான் இந்தத் திட்டத்தின் வெற்றி என்கிறார் அவர். மேலும், இந்தத் திட்டத்துக்கு என்று பள்ளிகள் பெரிய அளவில் செலவும் செய்ய வேண்டியதில்லை. ஒரு மடிக்கணினி, ஒரு புரொஜக்டர் அல்லது தொலைக்காட்சிப் பெட்டி போதும். இணைய இணைப்பு இல்லாவிட்டால் ‘டிவிடி’ மூலமே பாடம் நடத்திக்கொள்ள முடியும் என்பது இன்னொரு வசதி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x