Published : 10 Aug 2016 08:51 AM
Last Updated : 10 Aug 2016 08:51 AM

ஐயாயிரம் வயதுத் தொழிற்சாலை!

பல்பொருள் உற்பத்தி கிராமங்களிலும் நடைபெற்றதே சிந்துவெளி நாகரிகம்

ஹரப்பா அகழ்வு மையங்களில் இது தனித் தன்மையானது. வழக்கமான பாதுகாப்புச் சுவர்கள் இல்லை. நேரான தெருக்கள் இல்லை. கோட்டைகள் கிடையாது. கைவினைஞர்கள், வணிகர்களின் வீடுகளும் பொருட்களின் சேமிப்புக் கிடங்குகளும் உள்ள நகரமாகவும் இல்லை. அதற்குப் பதிலாக, இது கிராமப்புற தொழில் உற்பத்தி மையம்!

ராஜஸ்தானின் சூரத்கார் மாவட்டத்தில் பின்ஜோர் கிராமத்தில் தோண்டப்பட்ட மையம்தான் இது! 5,000 வருடங்களுக்கு முன்னால் மக்கள் பணியாற்றிய இடம் இது. ஆரம்பகால ஹரப்பா காலத்துக்கும்

(கி.மு 3000-2600) வளர்ந்த ஹரப்பா காலத்துக்கும் (கி.மு. 2600-1900) ஊடாக 1100 வருடங்களுக்கும் மேலாக இங்கே உற்பத்தி நடந்துள்ளது. கடைசிக்கால ஹரப்பா காலத்தின் (1900-1500) தடயங்கள் இங்கே இல்லை. இது ஹக்கர் ஆற்றின் இரண்டு கால்வாய்களுக்கு நடுவில் உள்ளது. வளர்ச்சியின் உச்சநிலையில் ஏன் ஹரப்பா மக்கள் இதைக் கைவிட்டனர் என்று தெரியவில்லை. வெள்ளம், வறட்சியால் இருக்கலாம்.

கிராமப்புற மையம்

சுற்றிலும் கோதுமை வயல்கள். ஜனவரி முதல் மார்ச் வரை இந்தியத் தொல்லியல் துறை 12 இடங்களைத் தோண்டியது. களிமண் செங்கற்களால் ஆன உலைக் களங்களும் அடுப்புகளும் கிடைத்தன. பல்வேறு வகையான பொருட்கள் தயாரான தொழிற்சாலை இது. உலைக் களங்களின் சாம்பல் 4,000 வருடங்களுக்குப் பிறகும் இன்னும் புத்தம் புதிதாக உள்ளது.

புதுமைத் திறனோடு ஒரு உலைக்களம். உட்காரும் கொல்லருக்கும் மேடை இருந்தது. மண்ணுக்குள் புதைத்துள்ள காற்று ஊதும் குழாயின் முனை உலைக்குள் இருந்தது. இதில் அமர்ந்து கைவினைஞர்கள் தாதுப்பொருட்களிலிருந்து தங்கம்,செம்பு உலோகங்களைப் பிரித்து, காய்ச்சி, கட்டிகளாக வார்த்துள்ளனர். அவற்றை அடித்து வளைக்கும் கருவி அடுத்த குழியில் இருந்தது.

வட்டமாகவும் முட்டை வடிவிலும் அடுப்புகள் இருந்தன. அவற்றில் அமர்ந்து வளையங்கள் உள்ளிட்ட காதணிகள், மணிகள், நெக்லஸ்கள், வளையல்கள், ஊசிகள், தூண்டி முள்கள், இழைப்பான்கள், ஈட்டி முனைகளை தயாரித்திருக்கின்றனர். செம்பு ஊசியின் ஒரு முனையில் தங்கத் தகடு சுற்றிய நுட்பமான கலைப்பொருட்களும் கிடைத்துள்ளன. வித்தியாசமான மணிகள். பல்வேறு வண்ணக் கற்கள். பல்வேறு வடிவங்களில் இங்கே தயாராகியிருக்கின்றன. கடற்பாசிகளாலும் சுடுமண்ணாலும் வளையல்களும் காது வளையங்களும் செய்யப்பட்டுள்ளன. பீங்கான், கண்ணாடிகளில் செய்யப்பட்ட குவளைகள் எனக் கற்பனைத்திறன் கொண்ட படைப்புகள் இவை. இங்கே தயாரான பெரும்பாலான பொருட்கள் மற்ற மையங்களுக்கு வணிகத்துக்காகக் கொண்டுசெல்லப்பட்டிருக்கலாம்.

“இது கிராமப்புறம். கிராமப்புற மையங்களை ஆராயாமல் ஹரப்பா காலகட்டத்தின் நகரமய வளர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியாது” என்கிறார் இந்த அகழ்வாய்வின் இயக்குநர் சஞ்சய் மன்சுல்.

நகை வடிவ முத்திரை

முன்னாள் இணை தலைமை இயக்குநர் ஆர்.எஸ்.பிஸ்த் 1990 முதல் 2005 வரை 13 அகழ்வாராய்ச்சிகளைச் செய்தவர். “இது ஒரு முழுமையான மையம்” என்கிறார்.

“ஏராளமான தொழிற்சாலைகள். ஹரப்பா அகழ்வுகளில் நான் முதன்முறையாக இவற்றைப் பார்க்கிறேன்” என்கிறார். அவரை மேலும் கவர்ந்தது பளிங்குக் கல், கடல் சிப்பிகள், மணல்கற்களைக் கொண்ட எட்டு எடைக்கற்கள். அவை 0.25, 0.46, 0.76, 2.26, 6.95, 13.68, 27.5 மற்றும் 52.10 கிராம்கள் எடை உள்ளவை. குஜராத்தின் தோலாவிரா அகழ்வாராய்ச்சி மையத்துக்குப் பிறகு, இங்குதான் கடல்சிப்பிகளாலான எடைக் கற்கள் கிடைத்தன என்கிறார் அவர்.

ஏராளமான எண்ணிக்கையில் சுடுமண் சிற்பங்களும் கடல்சிப்பி வளையல்களும் கிடைத்துள்ளன. இரட்டை வளையல்களும் கிடைத்தன. “இவை அடுப்புகளில் செய்யப்பட்டவை. இவற்றில் மூன்று முக்கியமானவை. அணிகலனாகவும் முத்திரையாகவும் உள்ளவை. இருபுறமும் மிருகங்கள் செதுக்கப்பட்டிருக்கும். ஹரப்பா நாகரிகத்தின் மூன்று சின்னங்கள் கொண்ட சுடுமண் சிற்பங்கள், அலகு போல மூக்கு, தலைமுடி, நகைகள் அணிந்த சுடுமண் சிற்பம். முத்திரை ஆரம்பகால ஹரப்பா கட்டம். அதில் தவளையும் மானும் ஒரு பக்கம் உள்ளன. மறுபக்கம் கீரிப்பிள்ளை, நாய், வெள்ளாடு. 2.3 x 2.2 செ.மீ அளவுள்ள ஒரு மெலிதான உலோகத்தை முத்திரையாகவும் நகையாகவும் செதுக்கிய கலைநேர்த்தியை வியக்காமல் இருக்க முடியாது. “உண்மையில் நகை வடிவத்தில் உள்ள, எழுத்து இல்லாத முத்திரை இது” என்கிறார் மன்சுல். “இத்தகைய ஒன்று வேறெங்கும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டிருப்பது சந்தேகம்” என்கிறார் பிஸ்த்.

ராணுவக் குப்பையில் புதையல்

கடந்த வருடம் நடந்த ஆய்வில் ஒரு பெண்ணின் எலும்புக்கூடு, தங்க நகை, ஆயிரக்கணக்கான மணிகள் உள்ளிட்டவை கிடைத்தன. இந்த வருடத்தில் நான்கு திசைகளிலும் அதிகமாகக் குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு நடந்துள்ளது. கடந்த ஆண்டில் இது தொழிற்சாலைப் பகுதி என்பது உணரப்பட்டது. தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது என்கிறார் மன்சுல்.

செங்கற்களாலான தண்ணீர் தொட்டியும் உள்ளது. அதற்குத் தண்ணீர் கொண்டு போக சிறு கால்வாய் உள்ளது. “மணிகளில் துளைகள் போடும்போது ஏற்படும் வெப்பத்தைத் தணிக்க அவற்றின்மீது தண்ணீர் விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது. சுடுமண் சிற்பங்களுக்கான களிமண்ணை வனையவும் தண்ணீர் பயன்பட்டுள்ளது என்கிறார் சுபா மசூம்தார். அடுப்புகளுக்கு இடையே பாதை உள்ளது. சில உலைக் களங்களுக்கு அருகில் வீடுகளும் உள்ளன” என்கிறார் சுபா.

நாட்டின் பிரிவினை நடந்த 1947-ல் ராணுவம் இங்கே குப்பைகளைப் போட்டு வைத்துள்ளது. அதன் பிறகு மக்களும் குப்பைகளைப் போட்டு வைத்துள்ளனர். அதனால்தான் இந்தப் பகுதி பல வருடங்களாகத் தப்பித்துள்ளது. ஆனால், விவசாயிகள் சுற்றுப்புறங்களில் உள்ள நிலத்தை அரித்துக்கொண்டு வந்திருக்கின்றனர்.

ஆய்வுக்காக வெட்டப்பட்ட குழிகளில் ஏழு அடுக்குகள் உள்ளன. இரண்டு அடுக்குகளில் குப்பைகள் உள்ளன. மூன்று, நான்காவது அடுக்கில் வளர்ந்த நிலை ஹரப்பா காலகட்டம் உள்ளது. ஆனால், பிற்கால ஹரப்பா காலகட்டம் இங்கே இல்லை என்கிறார் சுபா. ஐந்தாம் அடுக்கில் ஆரம்பகாலத்திலிருந்து வளர்ந்த காலத்துக்கு மாறும் கட்டம் இருக்கிறது. ஆறு, ஏழு அடுக்குகளில் ஆரம்பகால ஹரப்பா கட்டத்தின் அழிவுகள் உள்ளன என்கிறார்.

“ஆரம்பகால ஹரப்பா கட்டத்தைச் சேர்ந்த அடுக்குகளில் ஐந்து மீட்டர்கள் தடிமன் அளவுக்குப் பண்பாட்டுச் செல்வங்கள் குவிந்துகிடக்கின்றன” என்கிறார் மஞ்சுல். மேடு முடிகிற பகுதியிலிருந்து 30 மீட்டர்கள் அளவில்தான் முக்கியமான அகழ்வாய்வு மையம் உள்ளது. மேடு முழுவதையும் ஆய்வு செய்தால் மேலும் அதிகமான பொருட்கள் கிடைக்கும் என்கிறார் ஆய்வாளர்களில் ஒருவர்.

தொல்லியல் துறை மொத்தம் 11 அடுக்குகளைத் தோண்டியிருக்கிறது. அவற்றில் ராணுவமும் பகுதி மக்களும் ஆறு அடுக்குகளைச் சேதப்படுத்திவிட்டனர்.

எட்டு அடுக்குகளுக்குப் பிறகு அரிய பொருட்கள் கிடைத்தன. 10 மற்றும் 11-வது அடுக்குகளில் வெள்ளம் வந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. ஆற்றின் மண் அங்கே உள்ளது என்கிறார் யதீஷ்குமார் எனும் ஆய்வாளர். தாவரக் கழிவுகள் லக்னோவிலும் மிருகக் கழிவுகள் புணேயிலும் உள்ள ஆய்வகங்களில் ஆராயப்படுகின்றன. சிந்துவெளி நாகரிகம் நகர நாகரிகம் மட்டுமல்ல, பல்பொருள் உற்பத்தி கிராமங்களிலும் நடைபெற்ற நாகரிகம் என்கிறது இந்த அகழ்வாராய்ச்சி.

- ப்ரன்ட்லைன் இதழிலிருந்து

சுருக்கமாகத் தமிழில்: த.நீதிராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x