Last Updated : 03 Dec, 2013 12:00 AM

 

Published : 03 Dec 2013 12:00 AM
Last Updated : 03 Dec 2013 12:00 AM

ராபின்ஸன் குரூசோவும் கைபேசிக் கட்டணமும்

ராபின்ஸன் குரூசோ கதைபற்றிப் பலருக்கும் தெரிந்திருக்கும். 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கில எழுத்தாளர் டேனியல் டீஃபோ எழுதிய கதையின் நாயகன் அவன். பிரிட்டனில் இருந்து செல்லும் கப்பலில் பயணிக்கும் குரூசோ, அந்தக் கப்பல் விபத்துக்குள்ளாகி மூழ்கத் தொடங்கியதும், எப்படியோ நீந்தி ஒரு தீவைச் சென்றுசேர்வான். பிரிட்டன் கப்பல் ஒன்று வரும் வரையில் அந்தத் தீவிலேயே கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் வாழ்வான். அங்கேயே பயிர்செய்து, மீன்களைச் சமைத்து ஆனந்தத் தனி வாழ்வு வாழ்வான். தனிமை விரும்பிகளின் விருப்பத்துக்குரியது இந்தக் கதை.

வாழ்க்கைப் போராட்டத்திலிருந்து தப்பி யாருமற்ற வனாந்திரத்துக்குள் தொலைந்துவிட வேண்டும் என்ற எண்ணம் நமக்கும் அவ்வப்போது தோன்றி மறையும். வெளிநாடுகளில் பணக்காரர்கள் தீவுகளை விலைக்கு வாங்கி, அங்கு சென்று ஆனந்தமாகப் பொழுதைக் கழிக்கும் செய்திகளை நாம் வயிற்றெரிச்சலுடன் வாசித்துவந்திருக்கிறோம். பிரான்ஸைச் சேர்ந்த தொழிலதிபரான டோல்மோன்ட்டுக்கும் அப்படி ஒரு ஆசை!

“மனுஷன் என்ன சம்பாதிச்சி என்ன பிரயோஜனம். ஒரு நாளாவது நிம்மதியா வாழ முடியுதா… இதே வேலையை யாரோட தொந்தரவும் இல்லாம ஒரு தனித்தீவுல ரசிச்சிச் செய்யப்போறேன்” என்று சொல்லிவிட்டு, ஒரு மடிக்கணினி, இரண்டு சேட்டிலைட் ஃபோன், கூடாரத் துணி என்று தேவையான பொருட்களை மூட்டைகட்டி எடுத்துக்கொண்டு, மனிதர் இந்தோனேஷியத் தீவு ஒன்றில் தஞ்சமடைந்தார். துணைக்கு ஒரு நாயைக் கொண்டுசென்றார். தீவில் வசிக்கும் ஜீவராசிகளை மிரட்டி விரட்டி, தன் எஜமானரை அந்த நாய் பார்த்துக்கொண்டது.

பதிப்பகத் தொழில் தொடர்பான தனது வேலைகளை அந்தத் தீவிலிருந்தே குறிப்பிட்ட காலத்துக்குள் செய்து அனுப்பினார் டோல்மோன்ட். அதில் அவருக்கு ஏகத் திருப்தி. கிட்டத்தட்ட ஒரு மாத காலம் அங்கே தங்கியிருந்தார். அரிசி, பாஸ்தா போன்ற உணவுப் பொருட்களை வைத்துச் சமாளித்த அவர், கைக்குக் கிடைக்கும் தாவரங்கள், மீன்களையும் உண்டு பசியாறினார். யாருமற்ற தீவு என்பதால், பிறந்தமேனியுடன் தீவை வலம்வந்து ராஜ வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்.

எவ்வளவு விலகிச் சென்றாலும், விதி விரட்டி வரத்தானே செய்யும்? டோல்மோன்ட் தங்கியிருந்த தீவில் பாம்புகளின் தொந்தரவு அதிகமாகிவிட்டது. கூடவே, பெருச்சாளிகள், சிலந்திகள் போன்ற தீவின் பூர்வகுடிகளின் அச்சுறுத்தல் வேறு. எல்லாவற்றையும் மீறி அவ்வப்போது தன் ஊழியர்களுடன் கைபேசி மூலமும் இணையம் மூலமும் தொடர்புகொண்டதில் கைபேசிக் கட்டணம் எகிறிவிட்டதாம். தனிமையாவது இனிமையாவது என்று தீவைக் கைவிட்டுவிட்டு, நெரிசலான நகர வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டார் டோல்மோன்ட். கூறாமல் சந்நியாசம் கொள்ளலாம்… சந்நியாசம் நம்மை ஏற்றுக்கொள்ள வேண்டுமே!

தொடர்புக்கு: chandramohan.v@kslmedia.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x