Last Updated : 16 Jan, 2017 09:03 AM

 

Published : 16 Jan 2017 09:03 AM
Last Updated : 16 Jan 2017 09:03 AM

திமுக நிமிர்ந்தெழ ஸ்டாலின் என்ன செய்ய வேண்டும்?

1949-ல் ராபின்சன் பூங்காவில் தொடங்கிய திமுக எனும் தொடர் ஓட்டத்தின் குச்சி, அறிஞர் அண்ணாவிடமிருந்து 1969-ல் கருணாநிதியின் கைக்கு வந்தது. இரு பத்தாண்டுகள் அண்ணா உருவாக்கி வளர்த்தெடுத்த அதை, அடுத்த 47 ஆண்டுகளுக்குக் கையில் ஏந்தி வந்தார் கருணாநிதி. இப்போது ஸ்டாலினின் கைகளுக்கு அது மாறியிருக்கிறது. அடுத்து, என்ன செய்ய வேண்டும் ஸ்டாலின்?

1. எல்லோருக்குமான தலைவர் ஆகுங்கள்!

தலைவன் தொண்டன் என்ற போக்கை மறுத்து, தம்பி என்று அன்போடு அழைத்தார் அண்ணா. தன்னைக் காட்டிலும் மூத்தவர்களையும் வழிநடத்த வேண்டியதிருந்ததால், தம்பியையும் தவிர்த்துவிட்டு உடன்பிறப்பே என்றார் கருணாநிதி. “தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே, உங்களில் ஒருவன் எழுதும் அன்பு மடல்” என்று நீங்கள் கடிதம் எழுத ஆரம்பித்திருப்பது உள்ளபடியே நல்ல தொடக்கம். “வளைந்து குனிந்து தரையில் உருண்டு கால்நோக்கி கும்பிடு போடுபவர்களால் தமிழகம் பாழ்பட்டுக்கிடக்கிறது. நமக்கு அந்தப் பள்ளமான பாதை வேண்டாம். தலை நிமிர்வோம், தமிழகத்தை நிமிர்த்துவோம்” என்ற அறிக்கையும் நம்பிக்கை தருகிறது.

மாற்றுக்கட்சியினரிடம் ஆரோக்கியமான உறவைப் பராமரிக்கத் தொடங்கியிருக்கும் நீங்கள், சொந்தக் கட்சியிலும் முந்தைய அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும். இதுவரை கட்சிக்குள் ‘தலைவர் ஆள்’, ‘தளபதி ஆள்’, ‘அழகிரி ஆள்’ என்ற பேச்சுகள் இருந்ததும், இதில் ‘தளபதி ஆள்’ முத்திரையோடு, சட்டையில் உங்கள் படம் தெரிய வருபவர்களை மட்டுமே நீங்கள் அங்கீகரித்ததும் யாருக்கும் தெரியாதது அல்ல. இனி ஒட்டுமொத்த கட்சியுமே உங்கள் தலைமையின் கீழ் இருக்கிறது. அழகிரி, கனிமொழி ஆகியோரையும் அவர்களுடைய ஆதரவாளர்களையும் சேர்த்துதான். அதேபோல, நீங்கள் பதவியமர்த்தும் மாவட்டச் செயலர்களை எதிர்ப்பதும் விமர்சிப்பதும் உங்களையும் கட்சியையும் எதிர்ப்பது ஆகிவிடாது. கோ.சி.மணியும் மன்னை நாராயணசாமியும் எதிரெதிர் துருவங்கள். ஆனால், கருணாநிதியைப் பொருத்த அளவில் இருவருமே ஒன்றுதான். தஞ்சாவூர் பக்கம் போனால், இருவரையுமே தன் காரில் அமர்த்திச் செல்லும் வழக்கத்தை அவர் கடைப்பிடித்தது இதை உணர்த்தத்தான். டி.ஆர்.பாலுக்களையும், பழநிமாணிக்கங்களையும் ஒரே தட்டில் வைத்துப்பார்க்கிற பக்குவம் உங்களுக்கும் வேண்டும். கட்சிக்குள் பல தரப்புகளை அங்கீகரியுங்கள். அதுவே ஜனநாயகம். கருணாநிதி எப்படி கட்சிக்குள் எத்தனை கோஷ்டிகள் இருந்தாலும், அவரவருக்கு மதிப்பும் இடமும் அளித்து எல்லோரையும் ஒன்றாகப் பாவித்தாரோ அந்தப் பார்வை உங்களிடத்திலும் வேண்டும்!

2. சித்தாந்தத்தைக் கையில் எடுங்கள்!

உங்களைப் பற்றிய விமர்சனங்களிலேயே மிக முக்கியமானதும் நியாயமானதும் திருமாவளவன் கூறியது. “ஜெயலலிதாவைப் போல இந்துத்துவத்தை விமர்சிக்காமல், பெரியார் கொள்கைகளைத் தூக்கிப் பிடிக்காமல், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நிற்கிறோம் எனக் காட்டிக்கொள்ளாமல், ஒரு வெற்றியைப் பெற வேண்டும் என நினைக்கிறார் ஸ்டாலின். இத்தனை ஆண்டுகளில் பெரியார் கருத்துக்களைச் சிலாகித்துப் பேசியோ, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உரத்துக் குரல்கொடுத்தோ, ஈழத்துப் பிரச்னையில் கருணாநிதி காட்டிய வேகத்தையோ, செயலையோ அவரிடம் நான் பார்க்கவில்லை” என்று அவர் கூறியதில் என்ன தவறைக் காண முடியும்? இன்றைய அடுத்தகட்ட திமுக நிர்வாகிகளும் இதே பிரச்சினையில்தானே சிக்கியிருக்கிறார்கள்? காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட்டுகள்போலக் கட்சியில் சித்தாந்தப் பயிற்சி கொடுக்க ஒரு பிரிவைத் தொடங்கி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன் போன்றவர்களைக் கொண்டு கொள்கை விளக்க வகுப்பெடுங்கள். திமுக ஏன் இன்று வேண்டும் என்பது உண்மையில் திமுகவால் பயன் அடைந்த தலைமுறைக்கே இன்றைக்குத் தெரியாது. திமுக வரலாற்றைப் பேசுங்கள். தியாகங்களைச் சொல்லுங்கள். அதன் இன்றைய தேவையை உணர்த்துங்கள்.

3. வாசியுங்கள், பேச்சாளர்களை உருவாக்குங்கள்!

அண்ணாவைப் போலவோ, கருணாநிதியைப் போலவோ மேடைப்பேச்சு மீது உங்களுக்குக் காதல் இல்லை என்பது புரிகிறது. ஆனால், எல்லா மேடையிலும் ஒரே விஷயத்தைப் பேசுவதைத் தவிர்க்கலாம். ஒவ்வொரு மேடைக்கும் புதுப்புது விஷயங்களை யோசிக்கலாம். இதற்கு நீங்கள் இன்னும் நிறைய வாசிக்க வேண்டும். வாசிப்பவர்களை உங்கள் பக்கத்தில் அமர்த்திக்கொள்ள வேண்டும். பெரியார், அண்ணா முதல் கருணாநிதி வரை ஏன் எப்போதும் தன்னைச் சுற்றி ஒரு அறிவுஜீவிகளின் பட்டாளத்தை எப்போதும் பக்கத்தில் வைத்திருந்தார்கள் என்று யோசியுங்கள். உங்களைப் பார்த்துதான் கீழே உள்ள கட்சியினர் படிக்கவும், பேசவும் பயில வேண்டும்.

நிறைய அடுத்தகட்டப் பேச்சாளர்களை வளர்த்தெடுக்க வேண்டும். இன்னமும் பேச்சுதான் மக்களைக் கட்டிப்போடுகிறது என்பதற்கு நரேந்திர மோடி முதல் சீமான் வரை எவ்வளவு நீளப் பட்டியல் போடலாம்? பெரியார், அண்ணா, கருணாநிதி என்று உங்கள் முன்னோடிகள் பேசி, எழுதியவற்றை வாசியுங்கள். பேச்சின் வாயிலாக வரலாற்றை அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டுசெல்லுங்கள்.

4. முதியோருக்கு ஓய்வு; இளையோருக்கு வாய்ப்பு

திமுகவின் இளைஞரணி தலைவராக இருந்து நீங்கள் ஓய்வுபெற்றபோது, 63 வயது. புதிதாக அந்தப் பொறுப்புக்கு வந்தவரையாவது இளைஞராகப் போட்டிருக்கலாம். வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு 50 வயதுக்கு மேல் என்கிறார்கள். திமுக தொடங்கப்பட்ட காலத்தில் கருணாநிதியின் வயது 25, அன்பழகனுக்கு 27, நெடுஞ்செழியனுக்கு 30. கருணாநிதி முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினரானபோது அவரது வயது 33. இப்போது, திமுகவில் எத்தனை எம்எல்ஏக்கள் 33 வயதில் இருக்கிறார்கள்? அதுவாவது பரவாயில்லை, தான் படித்த பள்ளி, கல்லூரியின் பெயரையே மறந்துவிடும் வயதில் இருப்பவர்கள் தான் மாணவரணி நிர்வாகிகளாக இருக்கிறார்கள். ஒருகாலத்தில் துரைமுருகன், வைகோ, காளிமுத்து, எல்.கணேசன், பெ.சீனிவாசன் போன்ற தலைவர்களை உருவாக்கியது மாணவரணிதான். எனவேதான், மாணவரணியை ‘திமுகவின் நாற்றாங்கால்’ என்றழைத்தார் கருணாநிதி. இப்போது திமுக என்றாலே இளைஞர்கள் தலைதெறிக்க ஓடிவிடுகிறார்கள். நெல்லையில் ஜல்லிக்கட்டிற்கு ஆரவாக கல்லூரி மாவவர்களைத் திரட்டிப் போராடியிருக்கிறது ஏபிவிபி அமைப்பு. மாணவர்களை எப்படி அரசியலுக்குப் பயன்படுத்துவது என்று உலகிற்கே சொல்லிக்கொடுத்த திமுக இன்று யாரிடம் பாடம் படிக்க வேண்டியதிருக்கிறது பாருங்கள். இனியேனும் முதியோருக்கு ஓய்வு கொடுங்கள். மாவட்ட, நகர, ஒன்றிய அளவில் முழுக்க இளைஞர்களைக் களம் இறக்குங்கள். ஒதுங்க முடியாது என்று சொல்லும் மூத்த முன்னோடிகளுக்கு, மாநிலப் பொறுப்பு கொடுத்து தமிழகம் முழுவதும் சுற்றிவரச் சொல்லுங்கள்.

5. பணநாயகம் ஒழியட்டும்!

திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு என்று அறிவிக்கப்பட்டபோதெல்லாம், கட்சியோடு பெரிய தொடர்பில்லாத தொழில் அதிபர்கள், கல்லூரி நடத்துபவர்கள் போன்றோரே வேட்பாளர்களாகக் களம் இறக்கப்பட்டது நீங்கள் அறியாதது அல்ல. இன்றைக்குத் தேர்தலில் நிற்பவர்கள் நிர்வாகிகளுக்குப் பணம் கொடுத்துதான் தேர்தல் வேலையையே தொடங்க வேண்டியிருக்கிறது. இந்தக் கலாச்சாரத்துக்கு முடிவு கட்டுங்கள். இப்படிப் பணத்தை ஆதாரமாகக் கொண்டு உள்ளே நுழைபவர்கள்தான் கட்சியில் மக்கள் மத்தியிலிருந்து உருவாகிவருபவர்களைத் தேடித்தேடி நசுக்குகிறார்கள். அடுத்து, தங்கள் சகோதரர்கள், பிள்ளைகள் என்று குடும்ப, வாரிசு அரசியலை உள்ளே திணிக்கிறார்கள்.

அடிப்படையில் திமுக என்பது அடித்தட்டு மக்களை ஆட்சி அதிகாரத்தை நோக்கி நகர்த்திய கட்சி. இன்று அவர்களிடமிருந்து அது விலகிக்கொண்டே இருக்கிறது. கட்சிக்குள் பணநாயகத்தை ஒழித்து, முழு ஜனநாயகத்தைக் கொண்டுவாருங்கள்.

வாழ்த்துக்கள்!

கே.கே.மகேஷ், தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x