Last Updated : 25 Sep, 2016 09:37 AM

 

Published : 25 Sep 2016 09:37 AM
Last Updated : 25 Sep 2016 09:37 AM

காஷ்மீர்: நாம் செய்ய வேண்டியது என்ன?

போராட்டம், வன்முறை, அதிருப்தி, துயரம் என்று இப்போது இருப்பதைப் போலவே 2010-ம் ஆண்டிலும் (பின் கோடை - முன் இலையுதிர்) காஷ்மீர் பள்ளத்தாக்கு இருந்தது. போராட்டம் 3-வது மாதத்தை எட்டியது, இறப்பு எண்ணிக்கை 70-ஆக உயர்ந்தது; அனுபவம் மிக்க பத்திரிகையாளரும் காஷ்மீர் விவகாரத்தைத் தொடர்ந்து கவனித்து வருபவருமான சித்தார்த் வரதராஜன் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் இது தொடர்பாக ஒரு கட்டுரையை எழுதினார். “சாமானிய காஷ்மீரிகளின் துயரங்களைத் தீர்க்கத் தயாராக இருக்கிறோம் என்பதை நிரூபிக்கும் வகையில் துணிச்சலான நடவடிக்கைகளை எடுங்கள்” என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அதில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

“கடந்த சில வாரங்களாக ஏற்பட்டுவரும் உயிர்ப் பலி தொடர்பாகத் தயக்கம் ஏதுமின்றி வருத்தம் தெரிவிக்க வேண்டும்; இத்தனை ஆண்டுகளாக இந்திய அரசு நீதி வழங்கத் தவறியதை வெளிப்படையாகவும் பணிவுடனும் ஒப்புக்கொள்ள வேண்டும்; இப்போது விட்டால் மீண்டும் எப்போது இந்தக் குமுறல்கள் வெடிக்கும், அது நம்மை எங்கே கொண்டுசெல்லும் என்று கூற முடியாது” என்று எச்சரித்திருந்தார் சித்தார்த் வரதராஜன்.

மத்திய அரசு மீது அவநம்பிக்கை

2015 ஆகஸ்ட்டில் காஷ்மீருக்குச் சென்றேன். அங்கே பார்த்ததையும் கேட்டதையும் கட்டுரையில் எழுதினேன். மத்திய அரசின் மீதும் அதன் நோக்கங்கள் மீதும் பரவலாக அவநம்பிக்கை ஏற்பட்டிருந்தது. காஷ்மீர் மக்களுக்கு அளித்திருந்த பல வாக்குறுதிகளை நிறைவேற் றாமல் அரசு பின்வாங்கியிருந்தது. 2014-ல் ஏற்பட்ட பெருவெள்ளத்துக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட வர்களுக்கு நிவாரணமும் உதவிகளும் உடனடி யாக வழங்கப்படவில்லை என்ற அதிருப்தி பரவலாகத் தெரிந்தது. இந்த வெள்ளம் உத்தரப் பிரதேசத்திலோ, மோடியின் குஜராத்திலோ ஏற்பட்டிருந்தால் உதவிகள் கணிசமாகவும் விரைவாகவும் வழங்கப்பட்டிருக்கும் என்று அவர்களில் பலர் ஆதங்கப்பட்டனர்.

இந்திய ஊடகங்களில் தங்களுடைய போராட்டம் குறித்து ஒரு தரப்பான தகவல்கள் மட்டுமே தெரிவிக்கப்படுகின்றன என்று நான் சந்தித்த எல்லா காஷ்மீரிகளும் குற்றம் சாட்டினர். ‘காஷ்மீர் விவகாரம் என்றாலே, இந்திய ஊடகங்கள் வெளிப்படுத்தும் அதி தீவிர தேசியவாத உணர்வு மத்திய அரசின் முயற்சிகளுக்கு நாசத்தையே ஏற்படுத்திவருகின்றன’ என்று எழுதியிருந்தேன். இப்போதும் அதே நிலைதான் நீடிக்கிறது.

வரதராஜனோ, நானோ எங்களைத் தீர்க்கதரிசிகள் என்று கூறிக்கொள்ள விரும்ப மாட்டோம். நானோ அவரோ, நாங்கள் எழுதியபடியே நடந்துவிட்டது பார்த்தீர்களா என்று மார்தட்டிக்கொள்ள மாட்டோம். மத்தியில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசுகள் காஷ்மீரிகளை அலட்சியமாகவும் அவமதிப்பாகவும் நடத்தின என்பதை அப்பிராந்தியத்தின் வரலாற்றைப் படிக்கும் எந்த மாணவரும் உணர்வான். அப்படியிருந்தும் நாம், அடுத்து வரும் அரசு தவறுகளைத் திருத்திக்கொண்டுவிடும் என்று நம்புகிறோம், அப்படி நடப்பதில்லை.

முட்டாள்தனத்தின் உச்சம்

காஷ்மீரில் இப்போது நடந்துவரும் துயரகர மான மோதல்கள் குறித்து பாஜகவின் மூத்த தலைவரான விநய் சகஸ்ரபுத்தி, ‘இந்தியன் எக்ஸ் பிரஸ்’ நாளிதழுக்குப் பேட்டி அளித்துள்ளார். “காயத்துக்கு மருந்து, பேச்சுவார்த்தை, கனிவு காட்டல் என்பதெல்லாம் நல்ல வார்த்தைகள்; மக்களில் ஒரு பகுதியினர் தாங்களாகவே தொடர்ந்து காயப்படுத்திக்கொண்டால் அரசினால் எப்படி அதற்கு மருந்திட முடியும்?” என்று அதில் கேட்கிறார். காஷ்மீர் பிரச்சினை குறித்தும் காஷ் மீரிகள் குறித்தும் முட்டாள்தனமாக எத்தனையோ கருத்துகள் வெளிப்படுத்தப் பட்டுள்ளன. அதில் இது குன்றென உயர்ந்து நிற்கிறது!

காஷ்மீர் மக்களிடையே செல்வாக்கு பெற்ற தலைவரான ஷேக் அப்துல்லாவைச் சட்ட விரோதமாகக் கைதுசெய்து வீட்டுச் சிறையில் அடைத்து வைத்தது, அவருக்குப் பதிலாக ஊழல்வாதியும் சூழ்ச்சித் திறன் மிக்கவருமான பக் ஷி குலாம் முஹம்மதுவை முதல்வர் பதவியில் அமர்த்தியது, அடுத்தடுத்து நடந்த காஷ்மீர் சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல்களில் வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றியது, அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு அளித்த சிறப்பு அந்தஸ்தைச் சிறிது சிறிதாகக் கரைத்தது, இந்த 370-வது சட்டப் பிரிவு அறவே ரத்துசெய்யப்படும் என்று அவ்வப்போது எச்சரித்தது, பாலஸ்தீனத்தைப் போல, திபெத்தைப் போல, சொந்த மண்ணை வந்தேறிகளிடம் இழக்க நேரிடும் என்ற அச்சத்தை மண்ணின் மைந்தர்களுக்கு ஊட்டியது, கடந்த 25 ஆண்டுகளாக ‘வீட்டுக்குள் நுழைந்த யானை’யைப் போல ராணுவம் அசையாமல் நின்றிருப்பது, போலீஸ் - ராணுவ விசாரணைக்கு அழைத்துச் செல்லப் படும் அப்பாவிகள் உயிரிழப்பது, துப்பாக்கிச் சூட்டில் இறப்பது, காவலில் சித்ரவதைகள் செய்யப்படுவது, பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாவது, அப்படித் தவறிழைக்கும் ராணுவத்தினர் தண்டனை அடையாமல் தப்பிப்பது என்று பல்வேறு அம்சங்கள் இருக்கின்றனவே, இவற்றில் எதை காஷ்மீரிகள் சுயமாக விளைவித்துக்கொள்ளும் காயங்கள் என்று சகஸ்ர புத்தி கூறுகிறார்?

ஸ்வபன் தாஸ் குப்தாவின் பிதற்றல்

இந்தக் காயங்களில் பெரும்பாலானவற்றை காஷ்மீரி மக்கள் மீது பாஜக ஏற்படுத்தவில்லை என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். காஷ்மீரம் தொடர்பான தவறுகளுக்கு காங்கிரஸ் கட்சிதான் பெருமளவு பொறுப்பேற்க வேண்டும். ஆனால், பாஜகவோ தன் பங்குக்கு வெகு தீவிரமான காயங்களை காஷ்மீரிகளுக்கு ஏற்படுத்தத் தயாராகி வருகிறது. சகஸ்ரபுத்தியைப் போலவே கருத்துத் தெரிவித்திருக்கிறார் எழுத்தாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்வபன் தாஸ் குப்தா. ‘காஷ்மீரத்தில் நீங்கள் காணும் ஒடுக்குமுறையானது, மிகப் பெரிய அரவணைப்புக்குத் தயார் செய்வதற்குத்தான்’ என்று பிதற்றியிருக்கிறார்.

மத்திய அரசின் அன்பைப் பெறுவதற்கு முன்னால், காஷ்மீரிகள் எவ்வளவு ஒடுக்குமுறை யையும் கடுமையான நடவடிக்கைகளையும் இப்படிச் சந்தித்தாக வேண்டும்? இந்திய அரசியல் வாதிகளிடமிருந்தும் அரசிடமிருந்தும் சிறியதும் பெரியதுமான ஒடுக்குமுறைகளைத் தவிர, காஷ்மீரிகள் வேறு எதை அறிந்திருக்கிறார்கள்? எனக்குத் தெரிந்து அவர்கள் இரண்டே இரண்டு முறைதான் அவர்கள் உண்மையான அன்பை மிகச் சிறிய நேரத்துக்கு அனுபவித்திருக்கிறார்கள். 1947-ல் மகாத்மா காந்தி காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு வந்தபோது முதல் முறை. 2003-ல் அடல் பிஹாரி வாஜ்பாய் வந்தபோது இரண்டாவது முறை. அன்புக்கு முன்னால், கடுமையான செயல்கள்தான் இடம்பெற வேண்டும் என்பது அந்தக் காலத்தில் பள்ளிக்கூட ஆசிரியர்கள், ராணுவ அதிகாரிகள் கொண்டிருந்த மனநிலையாகும். இந்திய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஜனநாயகவாதிக்கு அப்படிப்பட்ட எண்ணம் ஏற்படக் கூடாது.

குழப்பமோ குழப்பம்

அந்தோ, இன்னும்கூட அவர்கள் குழப்பத்தி லேயே இருக்கிறார்களே? உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சமாதானக் குரலில் பேசுகிறார்; பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கரும் நிதி அமைச்சர் ஜேட்லியும் எல்லாவற்றுக்கும் பாகிஸ்தான்தான் காரணம் என்று பழியைப் போட்டுள்ளனர். பிரதமர் மோடியோ ஒருசமயம் சமாதானக் குரலிலும், மறுசமயம் மோதலுக்குத் தயார் என்ற குரலிலும் மாறி மாறிப் பேசுகிறார். இந்த வன் முறைக்கும் கல்வீச்சுகளுக்கும் பாகிஸ்தானால் உசுப்பிவிடப்பட்ட சக்திகள்தான் காரணம் என்பது ராம் மாதவின் கருத்து. இன்னொரு பேட்டியில் மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான தேசிய மாநாடுதான் இந்தக் கிளர்ச்சிகளுக்குப் பின்னணியிலிருந்து செயல்படுகிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆளும் கூட்டணிக் கட்சியின் மேல் நிலையில் உள்ள குழப்பத்தையே இது காட்டுகிறது. ஷேக் அப்துல்லா காலத்திலிருந்தே தேசிய மாநாட்டுக் கட்சி பாகிஸ்தானுக்கு எதிராகவே இருந்துவருகிறது. அப்படி இருக்கும்போது, அமைதி யின்மையைத் தூண்டிவிடுவதில் இரண்டு சக்தி களும் எப்படி ஒரே அணியில் இருக்க முடியும்?

ஆக்கபூர்வமான கருத்து

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக முட்டாள்தன மாகவும் எந்தவிதச் சிந்தனையும் இல்லாமலும் கூறப்பட்ட சில வாக்கியங்களை மேலே மேற்கோள் காட்டியிருந்தேன். மிகவும் நிதானத்துடனும் ஆக்கபூர்வமாகவும் கருத்துத் தெரிவித்திருப்பவர் மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பி.டி.பி.) மூத்த தலைவர் முசாஃபர் உசைன் பெக்.

ஹுரியத் மற்றும் இதர பிரிவினைவாதக் குழுக்களுடன் பேசுவதற்கு முன்னால் இந்திய அரசுடன் சேர்ந்தே இருப்பதில் உறுதியாக உள்ள மூன்று முக்கிய காஷ்மீரக் கட்சிகளைப் பிரதமர் மோடி சந்தித்து அவர்களுடைய ஆலோசனைகளைக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்திய பெக், அந்தக் கட்சிகள் தேசிய மாநாடு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் காஷ்மீர் மாநிலக் கிளை, மக்கள் ஜனநாயகக் கட்சி என்று சுட்டிக்காட்டியிருக்கிறார். இதை அவர் பல தொலைக்காட்சிப் பேட்டிகளிலும் வலியுறுத்தியிருக்கிறார்.

ஆனால், இந்தச் சந்திப்புக்கு மிகப் பெரிய தடையாக இருப்பது சங்கப் பரிவாரங்களில் தீவிரப்போக்கு உள்ள பிரிவுகள்தான்; காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை ரத்து செய்துவிட வேண்டும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்துக்களைக் குடியமர்த்த வேண்டும், மாட்டுக் கறி சாப்பிடத் தடை விதிக்க வேண்டும், காஷ்மீருக்கென்று தனிக் கொடி இருப்பதைத் தடை செய்ய வேண்டும் என்றெல்லாம் இவை வலியுறுத்துகின்றன.

இக்கருத்துகள் இயல்பாகவே காஷ்மீரிகளுக்கு அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இவற்றைத் தற்காலிகமாகக் கைவிட்டுப் பலன் இல்லை, ஒட்டுமொத்தமாகக் கைவிட வேண்டும். இல்லையென்றால் சந்தேகமும் அவநம்பிக்கையும் தொடரும். காஷ்மீருக்குத் தேவைப்படும் முழு சுயாட்சி உரிமையை பிரதமர் மோடியால் அளிக்க முடியும் என்று தேசிய மாநாட்டுக் கட்சியும் மக்கள் ஜனநாயகக் கட்சியும் முழுதாக நம்புகின்றன.

மன்னிப்பு கோர வேண்டும்

1947-ல் செய்ததைப் போல, தீய உள் நோக்கத்துடன் பாகிஸ்தான் இப்பிரச்சினையில் தலையிடுகிறது என்பது உண்மையே. காஷ்மீர் இதே நிலையில் இருக்கும்வரையில் பாகிஸ்தான் தொடர்ந்து இப்படித் தலையிட்டு சீண்டிக்கொண்டே இருக்கும். அதேசமயம், காஷ்மீரில் காணப்படும் அதிருப்தியானது ஆழமானது, பரவலானது, தொடர்ச்சியானது என்பதால் பாகிஸ்தான் மீது பழியைப் போடுவதால் மட்டும் எந்த நன்மையும் ஏற்பட்டுவிடப்போவதில்லை.

காஷ்மீரைப் பொறுத்தவரை மத்திய அரசு பல தவறுகளையும் கொடிய குற்றங்களையும் செய்திருக்கிறது. காஷ்மீர் மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற, தனது தவறுகளுக்காக, செயல்களுக்காக மத்திய அரசு முதலில் மக்களிடம் உளப்பூர்வமாக மன்னிப்புக் கோர வேண்டும். 2010-ல் மன்மோகன் சிங்குக்குக் கூறப்பட்ட அதே அறிவுரையை மோடி இப்போது ஏற்க வேண்டும். இந்தத் தவறுகளைத் திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பை அளிக்குமாறு காஷ்மீர் மக்களைக் கோர வேண்டும். அவர்களுக்கான நியாயமான தீர்வுகளை அளிக்க வேண்டும்!

தமிழில் சுருக்கமாக: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x