Last Updated : 28 Jan, 2014 09:27 AM

 

Published : 28 Jan 2014 09:27 AM
Last Updated : 28 Jan 2014 09:27 AM

ஆண் மனதின் நோய்க்கூறுகள்!

தேசியப் பெண் குழந்தைகள் தினத்தன்று (ஜனவரி 24) வந்த அதிர்ச்சி அது. மேற்கு வங்கத்தில் ஒரு பெண்ணை அந்த ஊரின் ஆண்கள் அனைவரும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்க வேண்டும் என்று பஞ்சாயத்து ‘தீர்ப்பு’ அளித்தது. இந்தச் சம்பவத்தை இந்தியாவில் பெண்களின் நிலை குறித்த பீதியூட்டும் குறியீடு என்றே சொல்ல வேண்டும்.

இந்தச் சம்பவத்தை அடுத்து, இத்தகைய சம்பவங்களைத் தடுக்க ‘‘காவல் துறையை நவீனமாக்க வேண்டும்”; “கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும்” என்பதில் தொடங்கி “பஞ்சாயத்துகளை முடக்க வேண்டும்” என்பது வரையிலான யோசனைகள் வழக்கம் போல முன்வைக்கப்படுகின்றன. எல்லாம் கிளையை வெட்டும் யோசனைகள்தான். உண்மையில், பிரச்சினையின் வேர் சமூகத்தின் மன அமைப்பில் இருக்கிறது. சரியாகச் சொல்வதானால், அதிகாரத்தின் பெரும்பகுதியை இன்னமும் தன் கையில் வைத்திருக்கும் ஆண் சமூகத்தின் மன அமைப்பில் இருக்கிறது.

ஆணிவேர் எங்கே இருக்கிறது?

பாலியல் சார்ந்த ஒரு குற்றச்சாட்டு. அதற்கு ரூ. 25,000 அபராதம். அபராதத்தைச் செலுத்த வசதி இல்லாத நிலையில், கிராமத்து ஆண்கள் அனைவரும் அவளைப் பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும்… இதுதான் தீர்ப்பு. இப்படிப்பட்ட ஒரு சம்பவம் 21-ம் நூற்றாண்டில் இந்தியாவில் நடக்கிறது என்பதை நினைக்கும்போதே அவமானமும் தலைக்குனிவும் ஏற்படுகிறது. இத்தகைய தீர்ப்புக்குப் பின்னணி எது? எத்தகைய மனநிலை இந்தத் தீர்ப்பை வழங்குகிறது? எத்தகைய மனநிலை இந்தத் தீர்ப்பை ஏற்று அந்தப் பெண்ணைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்குகிறது? இந்த மனநிலைதான் பிரச்சினையின் வேர்.

பெண்ணை தெய்வமாகவும் தாயாகவும் வழிபடுவதாகச் சொல்லப்படும் ஒரு பண்பாட்டில், ஒரு சராசரி ஆணின் ஆழ்மனதில் உறைந்திருக்கும் பெண் உடல் சார்ந்த வேட்கையும் அதை ஆளுகை செலுத்துவதற்கான அரிப்பும்தான் இந்தச் செயலுக்குப் பின்னால் இருக்கின்றன. ஆண்களின் அந்தரங்க உலகில் புழங்கும் பழமொழிகளையும் சொலவடைகளையும் நினைவுகூர்ந்தால் பெண் உடல் சார்ந்த வேட்கை ஆணின் உளவியலின் மிக முக்கியமான பகுதியாக விளங்குவதைப் புரிந்துகொள்ள முடியும். பிரசுரிக்கவே இயலாத அந்தச் சொலவடைகளும் பழமொழிகளும் பெண்னின் உடலைத் தன் படுக்கையில் வீழ்த்தத் துடிக்கும் ஆண் மனதின் வெளிப்பாடுகள்.

எளிய பாலியல் சொற்களாகத் தோற்றம் தரும் ‘செம கட்டை’, ‘செம ஃபிகர்’, ‘குதிரை’முதலான சொற்களின் ஆழமான பொருளும் பெண் உடல் குறித்த ஆணின் தவிப்புதான். அந்த உடலைத் தன் வசமாக்கும் துடிப்பு, இந்தத் தவிப்பின் இன்னொரு முகம். இந்த முகத்தின் புற வடிவம்தான் இதுபோன்ற தீர்ப்புகளும் அவற்றைச் சிரமேற்கொண்டு செயல்படும் ஆண்களின் நடவடிக்கைகளும்.

சொல்லாடல்களின் போலித்தனம்

இந்த மனப்பான்மையின் வேர் பெண்களைப் பார்க்கும் விதத்தில் இருக்கிறது. தாய்மை என்றும் தெய்வீகம் என்றும் பேசும் சொல்லாடல்களின் போலித்தனத்தில் இருக்கிறது. பெண்குறித்து நம் பண்பாடு பீற்றிக்கொள்ளும் மனக்கூறுகள் அனைத்தும் அதிக நடமாட்டம் இல்லாத இடத்தில் ஒரு பெண்ணைத் தனியாகப் பார்க்கும்போது உதிர்ந்துபோகின்றன என்றால், அந்தக் கூறுகளை நோய்க் கூறுகள் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது? இதை உறுதிப்படுத்தும் பார்வைகளும் சொலவடைகளும் ஊடக அத்துமீறல்களும் அதற்குத் துணைபோகும் மனிதர்களும் சேர்ந்து செயல்படுத்தும் கூட்டுக் குற்றம் இது.

காவல் துறையை நவீனப்படுத்துதல், சட்டங்களைக் கடுமையாக்குதல், பஞ்சாயத்துகளின் அதிகாரத்தை முடக்குதல் போன்ற விஷயங்கள் மட்டுமே இந்தப் பிரச்சினையைத் தீர்ந்துவிடும் என்று நம்புவது ஆழமாக வேரோடிய புற்றுநோயின் வெளிப்புண்ணுக்குச் சுண்ணாம்பு தடவிவிட்டு ஆறுதல்பட்டுக்கொள்வதற்கு ஒப்பானது. இந்த நாட்டின் ஆண்களும் அதிகார பீடத்தில் இருப்பவர்களும் சமூகச் சிந்தனையாளர்களும் நீதி நிலைபெறும் கண்ணியமான பொது வாழ்வில் அக்கறை கொண்ட பிறரும் ஆணின் இந்த நோய்க்கூறுகுறித்தும் அதைப் போக்கும் வழிகள் குறித்தும் யோசிக்க வேண்டிய தருணம் இது!

அரவிந்தன் தொடர்புக்கு: aravindan.di@kslmedia.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x