Published : 22 Aug 2016 10:22 AM
Last Updated : 22 Aug 2016 10:22 AM

இந்தியா-பாகிஸ்தான் உறவு புத்துயிர் பெற வேண்டும்

டான் - பாகிஸ்தான் நாளிதழில் வெளியான தலையங்கம்

இது நம்பிக்கை ஒளிக் கீற்றா, பொய்யான தோற்றமா என்று தெரியவில்லை. பாகிஸ் தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடக்கிற வாதங்கள், எதிர்வாதங்கள், ஆரவாரப் பேச்சுகளுக்கு மத்தியிலும் மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க முடியுமா என்னும் கடிதங்களை இருநாடுகளும் பரிமாறிக்கொண்டன.

இருதரப்பும் பேசுவதற்கு வேறுபட்ட விஷயங்களை வைத் திருந்தாலும் அவற்றைத் தொடங்கும் முன்பாகவே பேச்சு வார்த்தைகள் முறிந்துவிடுகின்றன. உறவுகள் எவ்வளவு சிக்கலாகிக் கிடக்கின்றன என்பதன் அளவுகோல் இது!

இரு நாடுகளும் ஒன்றையொன்று சந்தேகத்தோடுதான் பார்க்கின்றன. இரு நாடுகளின் உள்நாட்டுக் கொள்கைகளின் வளர்ச்சிப்போக்கும் வெளியுறவுகளுக்கான ராஜதந்திரமும்தான் அவர்களின் பேச்சுவார்த்தைகளுக்கான அழைப்புகளாக வெளிப்படுகின்றன. பாகிஸ்தான் அரசு காஷ்மீர் பிரச்சினையை மையமாகக் கொண்ட பேச்சுவார்த்தைக்கு இந்திய அரசை அழைக்கிறது. அதன் மூலம் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் மக்களை அது மறந்துவிடவில்லை என்றும் இந்தியாவின் பிரதமர் மோடியை அது சவாலுக்கு இழுக்கிறது என்றும் தனது நாட்டு மக்களுக்குக் குறிப்பால் உணர்த்துகிறது.

பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானுக்கு நம்பிக்கை இருப்பதாக உலக நாடுகளிடமும் இதன் மூலம் காட்டிக்கொள்கிறது.

இந்திய அரசாங்கமும் இதே மாதிரிதான் பாகிஸ்தானைப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதன் மூலம் நடந்துகொள்கிறது. எல்லை தாண்டி வருகிற பயங்கரவாதத்தை மையமாக வைத்து இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று இந்தியா அழைத்தால், அது பாகிஸ்தானோடு கடுமையாக நடந்துகொள்ள வேண்டும் என்று இந்தியாவுக்குள் வலியுறுத்துபவர்களைத் திருப்திப்படுத்துகிறது. இவ்வாறு தங்களது உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கான கருவியாக இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துவதை எடுத்துக்கொள்கின்றன. இதற்கிடையே கடந்த சில வாரங்களாக நடைபெறும் நிகழ்வுகள், இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டுவதற்குப் பதிலாக, பேச்சுவார்த்தையை எப்படி நடத்துவது என்பது பற்றிப் பேசினால் சிறப்பாக இருக்கும் என்று சொல்லத் தோன்றுகிறது.

இரு நாடுகளும் ஒப்புக்கொண்டாலும் சரி, ஒப்புக்கொள்ளாவிட்டாலும் சரி; இந்தியா - பாகிஸ்தான் உறவில் ஒன்று மட்டும் மாறவேயில்லை. இந்தியாவிடமிருந்து பாகிஸ்தானுக்குத் தேவைப்படுவது காஷ்மீர் பிரச்சினை. பாகிஸ்தானிடம் இந்தியா மையமாக எதிர்பார்ப்பது பயங்கரவாதம் பற்றிய பிரச்சினை. ஒரு நாட்டின் கவலைக்குரிய ஒரு முக்கியமான விஷயத்தை இருதரப்பு பேச்சுவார்த்தையிலிருந்தும் எடுத்துவிட வேண்டும் என்று மற்றொரு நாடு முயலும்போது, அது அந்தந்த நாடுகள் கடைப்பிடிக்கும் மையமான கொள்கைகளிடம் போய்த்தான் நிற்கும்.

கடந்த வாரத்தில் குவெட்டா நகர் மருத்துவமனையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடைபெற்றது. அதற்குப் பிறகும் பலுசிஸ்தான் தொடர்பாக, பாகிஸ்தான் மீது சொற்போர் நடத்துவதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்பதை இந்திய அரசாங்கமும் யோசிக்க வேண்டும். பலுசிஸ்தான் தொடர்பான இந்தியாவின் அணுகுமுறை ஒரு அச்சுறுத்தலாகவோ, காஷ்மீரில் பிரச்சினையே கிடையாது என்று மறுப்பதற்கான முயற்சியாகவோதான் பார்க்கப்படும். எப்படியிருந்தாலும் அது பாகிஸ்தானில் இருக்கிற இந்திய எதிர்ப்பாளர்களின் கைகளைத்தான் பலப்படுத்தும்.

காஷ்மீர் தொடர்பான கொள்கையில் என்ன மாதிரியான முன்னேற்றத்தைச் சாதிக்க முடியும் என்று இதன் மூலம் இந்திய அரசாங்கம் நம்புகிறது? இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றையொன்று தாக்கிக்கொள்ளும்போது இரண்டு நாடுகளிலும் அமைதிக்காக வாதாடுபவர்கள் நம்பிக்கை இழந்துபோவார்கள். அமைதிக்கான சூழலும் எட்ட முடியாமல் விலகித்தான் போகும். ஆனால், மனித இனத்தின் ஐந்தில் ஒரு பாகம் மனிதர்கள் வாழ்கிற இந்த இரண்டு நாடுகளுக்கும் பேச்சுவார்த்தையும் அமைதியும்தான் அறிவார்ந்த வழிமுறைகள்.

- தமிழில்: த.நீதிராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x